All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

கையில் மிதக்கும் கன...
 
Notifications
Clear all

கையில் மிதக்கும் கனவா நீ..! (இரண்டாம் பாகம்) - Story Thread

Page 2 / 2
 

Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 11 months ago
Posts: 365
Topic starter  
கனவு – 9
 
 
நீரு மறுக்க மறுக்கச் சஞ்சய் அவளை அந்த வீதி முனையில் இருக்கும் பூங்காவுக்கு வாக்கிங் அழைத்துச் சென்றான். ஓரளவுக்கு மேல் நீருவுக்கும் மறுக்க மனம் இல்லாததோடு அவளுமே நடக்க வேண்டி இருப்பதால் சஞ்சய்யோடு சென்றாள்.
 
 
அங்கு அருகில் ஒருவன் இருக்கிறான் என்பது போலவே பாவிக்காமல் அவளாகவே நடந்து கொண்டிருந்தாள். ஆனால் சஞ்சய்யோ மெல்லிய மனதை மயக்கும் மெல்லிசையைத் தன் ஐபாடில் ஓட விட்டு அவளைக் கேக்க செய்தவாறே உடன் நடந்து கொண்டிருந்தான்.
 
 
அப்போது அங்கு இரண்டு வயதுடைய குழந்தை ஒன்று தன் தளிர் நடையில் நடந்து வருவதை கண்டு நின்ற நீரு அதை ஆசையுடன் பார்க்கவும், அதுவும் இவளை நிமிர்ந்து பார்த்துச் சிரித்தது.
 
 
அது காலை நேரம் என்பதாலும் பத்துமணியைக் கடந்து கொண்டிருந்ததாலும் அவ்வளவு குளிர் இல்லாமல் இருக்கவே, ஒரு சில பெண்கள் அதே பூங்காவில் நடை பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.
 
 
அனைவரும் அந்தக் குட்டியை தெரிந்தது போலவே நின்று பேசி கொஞ்சி விட்டு சென்றனர். அதுவும் அனைவரோடும் இயல்பாகப் பழகியது. பார்வையை அந்தக் குழந்தையின் மேலேயே வைத்தவாறு நீரு நடந்து கொண்டிருந்தாள்.
 
 
அதைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்த சஞ்சய், “என் பொண்ணும் இப்படித் தான் டி கியூட்டா இருப்பா...” என்றான். அதில் தன்னை அறியாமல் நீருவின் முகத்தில் ஒரு புன்னகை மலர்ந்தாலும் வீம்புக்காக முறைத்தவள், “என்னது பொண்ணா ஏன் சார் பையனா இருந்தா ஒத்துக்க மாட்டீங்களோ...?” என்றாள் கோபம் போலக் காண்பித்துக் கொண்டு.
 
 
“வழக்கமா இதைப் பெண் குழந்தைகளுக்குத் தானே கேப்பாங்க..?!” என்று யோசிப்பது போல சஞ்சய் நடிக்கவும், “நான் பையனுக்கும் கேப்பேன்...” என்றாள் முகத்தைச் சுழித்து.
 
 
“கேட்டுக்கோ... எனக்கு என்ன, ஆனா எனக்குப் பொண்ணு தான் டி வேணும்... உன்னைப் போல அழகா, கியூட்டா, என் மேலே உயிரா.. என்னையே சுத்தி சுத்தி வரது மாதிரி..” என்று சிறு கொஞ்சல் குரலில் கூறிக் கொண்டு இருந்தவனின் வார்த்தைகளில் லயித்து இருந்தவள், அவன் மீது இருந்த கோபம் எல்லாம் நினைவே இல்லாமல் தன்னை மறந்து “அதே ஆசை எனக்கும் இருக்காதா...?! எனக்கு உன்னைப் போலவே ஒரு பையன் தான் வேணும்...” என்றிருந்தாள்.
 
 
அதில் சஞ்சயின் கண்களில் ஒரு மின்னல் வந்து போக... அதைக் கண்ட பிறகே தன் தவறு புரிந்து முகத்தைத் திருப்பிக் கொண்டு வேகமாக நகர முயன்றாள்.
 
 
அதே நேரம் அவளின் அருகில் வேகமாக அந்தக் குழந்தை ஓடி வரவும் நிதானித்தவள், இத்தனை அருகில் வந்தவளை அள்ளி கொஞ்ச நினைத்து நீரு முட்டியிட்டு அமர, “ஐஷு..” என்று அழைத்துக் கொண்டு ஒருவன் அவர்கள் அருகில் வந்து நின்றான்.
 
 
அவனைக் கண்டு குழந்தை மாட்டி கொண்ட பாவனையில் தன் கையால் முகத்தை மறைத்துக் கொண்டு சிரிக்க, “இப்படிச் சிரிச்சே என்னை மயக்கிடு...” என்று கண்டிப்புடன் கூற முயன்றாலும் புன்னகை குரலிலேயே கூறினான் அவன்.
 
 
“என்ன கல்யாண்... ஓடி வந்துட்டாளா...?”
 
 
“சாப்பிட ஏமாத்திட்டு ஓடி வராளா...?”
 
 
“கல்யாண் இன்னைக்கு எவ்வளவு நேரமா இந்த விடா முயற்சி நடக்குது...?”
 
 
என்றெல்லாம் அந்தப் பக்கமாகச் சென்றவர்கள் அந்தப் புதியவனிடம் கேள்வி கேட்டுக் கொண்டே நிற்காமல் சென்றதில் அனைவருக்கும் சிரிப்புடன் கூடிய பதிலை அளித்துக் கொண்டிருந்தவனைப் பார்க்கும் போது இது தினசரி நிகழ்வு போல என்றே தோன்றியது.
 
 
பின் பார்வையைக் குழந்தையின் பக்கம் திருப்பியவன், சஞ்சய் மற்றும் நீருவை கண்டு சிநேகமாகப் புன்னகைக்க... பதிலுக்கு இவர்களும் புன்னகைத்தனர்.
 
 
“உங்க பேரு என்ன குட்டி...?” என்று நீரு கேட்கவும், அது பதில் அளிக்கத் தயங்கி தன் தந்தையின் முகம் பார்த்தது. “சொல்லு...” என்று அவன் கூறவும் தான் “ஐத்து...” என்றது தன் மழலையில் அழகாகப் பச்சரிசி பற்களைக் காண்பித்துக் கொண்டே.
 
 
“ஹை... ஐஷு குட்டியா நீங்க...” என்றதும் ‘ஆம்’ எனத் தலையசைத்து புன்னகைக்க... “ஏன் சாப்பிடாம ஓடி வந்தீங்க...?” என்றாள் நீரு. அதற்குப் பதில் அளிக்காமல் குழந்தை விழிக்கவும், “அவளுக்கு எப்பவுமே சாப்பிடணும்னா கஷ்டம் தான்...” என்று புன்னகைத்தவன், தன்னைக் கல்யாண் என்று அறிமுகம் செய்து கொண்டான்.
 
 
பரஸ்பரம் இவர்களும் அறிமுகம் செய்து கொள்ள... சற்று நேரம் ஐஷுவோடு கழிந்தது நீருவின் நேரம். இதற்கிடையில் விளையாட்டு போலவே குழந்தைக்கு ஊட்டி முடித்து இருந்தான் கல்யாண். பின் இவர்கள் விடை பெற்று கிளம்பிய பிறகும் அவர்கள் இருவரும் அங்கேயே அமர்ந்து விளையாடி கொண்டு இருந்தனர்.
 
 
அன்று மாலையும் இவர்கள் வாக்கிங் சென்ற போது அவர்களை வழியில் காண நேர்ந்தது. இப்படியே இரு தினம் செல்ல... மூன்றாம் நாள் மதியம் பன்னிரண்டு மணியளவில் இவர்கள் தங்கி இருந்த வீட்டுக்கு அடுத்து இருந்த வீட்டில் ஒரு பரபரப்புத் தெரிந்தது.
 
 
தோட்டத்தில் அமர்ந்திருந்த சபா, நீரு மற்றும் ராணி என்னவென்று புரியாமலே இதைப் பார்த்துக் கொண்டிருக்க... சற்று நேரத்திற்குப் பிறகு காவலாளியை அழைத்து விவரம் கேட்டார் சபா.
 
 
“பக்கத்து வீட்டு குழந்தை சார்... ரொம்பச் சின்னக் குழந்தை சார், ஒரு இரண்டு வயசு தான் இருக்கும்... இந்த ஏரியாவுக்கே செல்லம் சார் அது... இப்போ காணோமாம் சார்...” என்று வருத்தம் தோய்ந்த குரலில் அவர் கூறவும், மனம் தாளாமல் எழுந்து வாசல் கேட்டின் அருகில் சென்று நின்றனர் ராணியும் நீருவும்.
 
 
அங்குப் போலீஸ் வந்து இருக்க... ஒரு சிலர் வாசல் அருகில் குழுமி இருந்தனர். அவர்களோடு வருத்தம் தோய்ந்த முகத்தோடு ஏதோ பேசி கொண்டு நின்றிருந்தான் கல்யாண்.
 
 
அதைக் கண்டதும் துணுக்குற்ற நீரு, “அவரு கல்யாண் தானே... இங்கே என்ன செய்யறாரு...?” என்றாள் காவலாளியிடம். “ஆமா மா... அவரை உங்களுக்குத் தெரியுமா...?! அவர் வீடு தான் மா அது.. அவர் குழந்தையைத் தான் காணோம்... பேரு ஐஷு, அவ்வளவு சுட்டி...” என்றவரை கண்டு திடுக்கிட்டவள், திரும்பி கல்யானை பார்க்க... வெளியில் காண்பித்துக் கொள்ளவில்லை என்றாலும் அவனின் உடல் மொழியில் ஒரு தகப்பனின் தவிப்புத் தெரிந்தது.
 
 
நொடியும் தாமதிக்காமல் வீட்டிற்குள் வேகமாகச் சென்றவள் நேராகச் சென்று நின்றது சஞ்சய்யின் முன்பு தான். ஏதோ தீவிரமாக அலைபேசியில் யாருடனோ பேசி கொண்டு இருந்தவன், மூச்சு வாங்க தன் முன் வந்து நின்றவளை கேள்வியாகப் பார்த்தது ஒரு நொடி தான்.
 
 
அடுத்த நொடி அவளின் உடல் மொழியில் இருந்த அவசரம் புரிய, “நான் அப்பறம் கூப்பிடறேன் ஆனந்த்...” என்று அலைபேசியை அணைத்தவன், நீருவிடம் விவரம் கேட்க... பதட்டத்தோடு அனைத்தையும் கூறியவள், “ஐயோ எவ்வளவு அழகான குழந்தை அது... எதாவது செய்யேன்..” என்றாள் தவிப்போடு சஞ்சயின் சட்டையைப் பற்றி உலுக்கி...
 
 
நீருவின் நிலை சரியாகப் புரிய, அவளின் உடல் நிலையை மனதில் கொண்டு குடிக்க நீர் கொடுத்து சற்று அவளை அமைதிபடுத்தி அமர வைத்து தான் பார்த்துக் கொள்வதாகக் கூறி விட்டு அங்குச் சென்றான்.
 
 
தன் மேல் எவ்வளவு கோபம் என்று காண்பித்துக் கொண்டாலும் இக்கட்டான சூழ்நிலை என்று வரும் போது தன் நினைவும் தன்னால் தான் அதைச் சரி செய்ய முடியுமென்ற நம்பிக்கையும் அவளுக்கு இருப்பதாலேயே தன்னை நாடி வந்திருக்கிறாள் என்பதை அவள் அறிந்திருக்கக் கூட வாய்ப்பில்லை என்ற எண்ணத்தோடே பக்கத்து வீட்டுக்குச் சென்றான்.
 
 
அங்கு சஞ்சய்யை கண்டதும் கல்யாண், குழந்தை பற்றி எதுவும் விவரம் சொல்ல வந்து இருப்பானோ என்ற எதிர்பார்ப்போடு “பாப்பாவை எங்கேயாவது பார்த்தீங்களா..?” என்றான் பரபரப்போடு. “இல்ல.. சாரி, நான் இங்கே பக்கத்து வீட்டுல தான் தங்கி இருக்கேன்... இப்போ தான் விஷயம் தெரிய வந்தது... என்ன ஆச்சு... எப்படி ஆச்சு...?” என்றான்.
 
 
சஞ்சய்யின் பதிலில் முகம் சோர்ந்தவன், “இங்கே வீட்டில் தான்... அதான் என்ன எப்படின்னு ஒண்ணுமே புரியலை..” என்று கவலை குரலில் சொல்லவும், “இதையே தான் ரொம்ப நேரமா சொல்லிட்டு இருக்கே... உன்னை நம்பி விட்டுட்டுப் போனது என் தப்பு தான்..” என்று அழுதாள் கல்யாணுக்கு சற்றுத் தொலைவில் நின்றிருந்த பெண்.
 
 
அது கல்யாணின் மனைவி என்பது சொல்லாமலே தெரிந்தது. சஞ்சய் அனைத்தையும் கவனமாகப் பார்த்துக் கொண்டு இருக்க... தனக்குக் கீழ் இருக்கும் காவலர்களுக்குச் சில பல உத்தரவுகளைப் பிறப்பித்து விட்டு வெளியில் வந்த இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் சஞ்சய்யை கண்டதும் மிகுந்த மரியாதையோடு வந்து சல்யூட் வைத்தார்.
 
 
“நீங்க எங்கே சார்...?” என்று ஆச்சர்யமாக வினவியவருக்கு “பக்கத்து வீட்டில் தான் இருக்கேன்... ஹாலிடே டிரிப், இந்தப் பாப்பாவை தெரியும் அதான் என்ன ஆச்சு...?” என்று பேசிக் கொண்டே அவரோடு நகர்ந்தவனுக்கு ஆறுமுகம் அனைத்தையும் கூறினார்.
 
 
கல்யாண் மிகப் பெரிய தொழில் குடும்பத்தின் தாமதமாகப் பிறந்த இரண்டாவது வாரிசு. ஆனால் தொழில் பணம் என்று அதன் பின்னாலேயே ஓடியவர்கள் பிள்ளையைப் பற்றி யோசிக்க மறந்து போனதின் விளைவாகப் பாசத்துக்கு ஏங்கி வளர்ந்தவன் இவன்.
 
 
சிறு வயதில் இருந்தே பணம் தான் தனக்கு நியாமாகக் கிடைக்க வேண்டிய அனைத்து சந்தோஷங்களையும் பறித்தது என்பதால் அதன் மேல் எப்போதும் ஒரு ஆர்வம் இருந்தது இல்லை.
 
 
இந்நிலையில் அன்புக்கு ஏங்கி கொண்டிருந்தவனுக்கு அவன் தேடிய அன்போடு சேர்த்து காதலையும் கொடுக்க வந்தவள் தான் சித்ரா. ஒரு பிராஜெக்ட் சம்பந்தமாகக் கம்பெனியின் எம்டியான கல்யாணை சந்திக்க வந்தவள், அவன் மனதில் இடம் பிடித்து அவனையே கரமும் பிடித்து இருந்தாள்.
 
 
இந்தத் திருமணத்தில் கல்யாணின் குடும்பாத்தாருக்கு விருப்பமே இல்லை. தங்கள் தகுதிக்கு கொஞ்சமும் ஒத்துவராதவளை மணந்ததால் சொத்தில் எதுவும் கிடையாது என்று மிரட்டியும் அதைப் பற்றிக் கவலையே படாமல் சித்ராவை மனது இருந்தான் கல்யாண்.
 
 
அவன் பெயரில் சிறு வயதில் கல்யாணின் தாத்தா எழுதி வைத்து விட்டு சென்றதை மட்டும் பெரிய மனது செய்து கொடுத்துக் கை கழுவி இருந்தனர் பெற்றவர்கள்.
 
 
அதன்படி இந்த வீடும் கொஞ்சம் நிலமும் கல்யாணுக்கு கொடுக்கப்பட... நிலத்தை விற்று ஒரு தொழிலை துவங்கியவன் தன் மனைவியோடு இங்குக் குடியேறி இருந்தான்.
 
 
தன்னால் ராஜாவாக வாழ வேண்டியவன் அனைத்தையும் இழந்து வந்தது சித்ராவை நெகிழ செய்து இருக்க... அவனைக் காதலோடு தாங்கினாள். அவன் ஏங்கிய அன்பை வாரி வழங்கிய மனையாளை கல்யாணும் தரையில் விடாமல் தாங்கினான்.
 
 
மனைவி, குழந்தை, அவர்களைக் கவனிப்பது அவர்களுக்குத் தேவையானதை செய்வது என்று மட்டுமே இருந்தவனின் கவனம் தொழிலில் இல்லாமல் போனதில் ஏகப்பட்ட நஷ்டம் தொழிலில். அதைச் சரி செய்ய முயன்று மீதமுள்ள பணத்தை எல்லாம் மீண்டும் போட்ட போதும் பெரும் நஷ்டமே வந்தது.
 
 
இதில் மீண்டும் முதலீடு செய்யப் பணம் இல்லாமல் போனதில் தொழில் இழுத்து மூடப்பட்டது. இப்போது வேறு வழி இல்லாமல் சித்ரா வேலைக்குச் செல்ல வேண்டி வந்தது.
 
 
வீட்டில் இருந்து குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பைத் தானே முன் வந்து மனமுவந்து கல்யாண் ஏற்றுக் கொண்டான். தினசரி குழந்தையின் அனைத்து தேவைகளையும் கவனிப்பது எல்லாம் அவனே.
 
 
அதன்படி தினசரி வழக்கம் போல இன்றும் குழந்தையை அழைத்துக் கொண்டு பார்க் சென்று இருந்தவன், காலை உணவை அங்கு உண்ண வைத்து சிறிது நேரம் விளையாட வைத்து வீட்டிற்கு அழைத்து வந்தான்.
 
 
பதினோரு மணிக்கு வருபவர்கள், மதியம் ஒண்ணரை மணியளவில் மதிய உணவை சாப்பிட்டு விட்டு உறங்குவது தான் இருவரின் வழக்கம். இந்த இடைப்பட்ட நேரத்தில் பிள்ளைக்குத் தேவையானதை சமைப்பது, புதிதாகத் தோன்றி இருக்கும் எண்ணத்தின்படி வீட்டில் இருந்தே கதை எழுதி புத்தகமாகப் போடுவது என்ற எண்ணத்தில் அதற்குத் தேவையானதை செய்வது என்று நேரம் கழியும்.
 
 
மீண்டும் மாலை நாலு மணியளவில் குழந்தைக்குத் தேவையானதை கொடுத்து உடை மாற்றிப் பூங்கா கடைவீதி என்று சென்று இருவரும் திரும்பும் போது சித்ரா வீடு திரும்பி இருப்பாள்.
 
 
இரவு உணவை சித்ரா செய்வது வழக்கமென்பதால் இருவரும் பேசியவாறே அதைச் செய்து முடிப்பர். இது தான் அவர்களின் தினசரி வாடிக்கை. இன்றும் அதே போலத் தான் பூங்காவில் இருந்து திரும்பி கை கால்களைச் சுத்தம் செய்து குழந்தையைப் பொம்மைகளோடு விளையாட விட்டு சமையலை முடித்த கல்யாண், தன் கதை குறித்துத் தோன்றிய குறிப்புகளை எல்லாம் வழக்கம் போலக் குறித்து வைத்துக் கொண்டு அதை ஒரே புள்ளியில் கொண்டு வரும் யோசனையில் ஆழந்தான்.
 
 
எப்போதுமே தன் கண் பார்வையில் தான் உள் அறையில் குழந்தையை விளையாட விடுவான். இன்றும் அதே போலத் தான் செய்தான். குழந்தை பெரிய பந்தை வைத்து விளையாடி கொண்டு இருந்ததில் அது அறைக்கு வெளியே ஓடுவதும் இவள் ஓடி சென்று எடுத்து வருவதுமாக இருந்தாள்.
 
 
அப்படி ஒரு முறை சென்றவள் மீண்டும் பத்து நிமிடங்கள் ஆகியும் திரும்பி வராமலே போகவும் தான் கல்யாண் அவளைத் தேடி வெளியில் வந்தது. ஆனால் முன் அறையிலோ ஹாலிலோ கூட அவள் இல்லாமல் போகவும் சமையல் அறை முதல் ஒவ்வொரு இடமாகச் சென்று பார்த்தவனுக்கு எங்குமே அவள் இருப்பதற்கான அறிகுறியே இல்லை.
 
 
“ஐஷு பாப்பா எங்கே காணோம்..?” என்று எப்போதுமே அவள் ஒளிந்து கொள்ளும் நேரங்களில் கல்யாண் குரல் கொடுத்தால், ஒளிந்த இடத்திலிருந்தே “ஐத்துப் பாப்பா காணோம்...” என்ற குரல் கொடுப்பாள்.
 
 
அதையும் கூட முயன்று பார்த்து விட்டான். ஆனால் பலனோ பூஜ்யம் தான். அதன் பின்னே சற்று பரபரப்போடு தேடியவனுக்கு முதலில் எங்காவது படுத்து தூங்கிவிட்டாளோ என்றே தோன்ற, படுக்கைக்குக் கீழே, சோபாவுக்குப் பின்னே, மறைவான இடம் என்று எங்கும் விடாமல் தேடி பார்த்து விட்டான்.
 
 
எங்குமே இல்லை என்றவுடன் தான் ஒரு பயம் உண்டானது. எப்போதுமே வாசல் தாண்டி செல்பவள் இல்லை என்பதால் உள்ளேயே இதுவரை தேடியவன் அடுத்து வெளியில் சென்று தேட... குழந்தை விளையாடி கொண்டிருந்த பால் காம்பவுண்ட் சுவர் ஓரம் இருந்தது.
 
 
ஒருவேளை பால் வெளியில் வந்து இருக்குமோ அதை எடுக்கக் குழந்தை வந்து இருப்பாளோ என்று என்ன அவசியமே இல்லாத அளவுக்கு அவள் விளையாடிய அறையில் இருந்து எவ்வளவு வேகமாக அடித்தாலுமே இங்கு உருண்டு வர வாய்ப்பே இல்லை.
 
 
வீட்டின் அமைப்பு அப்படி இருந்தது. இத்தனை வளைவுகளைக் கடந்து வெளியில் வந்திருக்க வாய்ப்பில்லை எனும் போது பால் வீதியில் இருக்க ஒரே வாய்ப்பு குழந்தையை யாரோ தூக்கி செல்லும் போது அவளின் கையில் இருந்தது கீழே விழுந்து இருக்கலாம்..’ என்று தோன்றியவுடன் சற்றும் தாமதிக்காமல் போலீஸை அழைத்து இருந்தான்.
 
 
சித்ராவுக்கும் தகவல் தெரிவிக்கபடவும், அடுத்த இருபது நிமிடத்தில் வீட்டிற்கு அழுதவாறே வந்துவிட்டாள். இதோ இரண்டு மணி நேரங்கள் கடந்த நிலையில் இன்னும் குழந்தையைப் பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
 
 
அனைத்தையும் பொறுமையாகக் கேட்ட சஞ்சய், வீட்டுகுள்ளேயே வந்து தூக்கிட்டு போய் இருக்காங்கனா... இவங்களை நல்லா தெரிஞ்ச யாராவதா தான் இருப்பாங்க... அந்தக் கோணத்தில் விசாரிச்சீங்களா..?” என்றான்.
 
 
“ஆமா சார்... விசாரிச்சிட்டு இருக்கோம்...?” என்றார் பவ்யமான குரலில். “ஹ்ம்ம்... குழந்தை அவங்க தூக்கிட்டு போகும் போது அழுகலை... அப்போ குழந்தைக்கும் நல்லா தெரிஞ்சவங்களா தான் இருக்கும்..” என்று யோசனையோடு கூறியவன்,
 
 
“பாப்பா இங்கே யார் கூட எல்லாம் கிளோசா பழகுவா...?” என்றான் கல்யாணை பார்த்து. “அவ இங்கே எல்லாருக்குமே செல்லம் தான் ஆபிசர்... அவளைத் தெரியாதவங்க இங்கே யாரும் இல்லை...” என்ற கல்யாணின் வார்த்தைகள் எந்த அளவுக்கு உண்மை என்பது தான் அவனுக்கே தெரியுமே...!!
 
 
“ஆறுமுகம்... நீங்க முதலில் இந்த வீதியில் இருக்கவங்களை விசாரிங்க... வீட்டுகுள்ளேயே வந்து தூக்கிட்டு போகற அளவுக்கு நெருக்கமானவங்களா தான் இருப்பாங்க... அப்படி யாரெல்லாம் இருக்காங்க..? முதலில் அவங்களை விசாரிங்க...” என்றவன், விவரம் சொல்லு என்பது போலக் கல்யாணை பார்த்தான்.
 
 
“இல்ல ஆபிசர்... வீட்டுக்குள்ளே எல்லாம் யாரும் வரும் அளவுக்குப் பழக்கம் இல்லை...” என்றவனைக் குழப்பமாகப் பார்த்தான். “இல்ல மிஸ்டர் கல்யாண் நல்லா யோசிச்சு சொல்லுங்க... குழந்தை எளிதா எல்லார் கூடவும் பழகக் கூடியவதான் ஆனாலும் தெரியாதவங்ககிட்ட பழகும் முன் உங்க அனுமதிக்கு காத்திருப்பா... நாங்க பேர் கேட்ட போதே இதை நான் பார்த்தேன்... சோ இது அவளுக்கு நல்லா தெரிஞ்ச யாரோ தான்...” என்றான் சஞ்சய்.
 
 
“இல்ல ஆபிசர்... இங்கே இருக்க எல்லார் கூடவும் பார்க்கும் போது பேசுவதோடு சரி... வீட்டிற்கு வரும் அளவுக்கு யாரும் இல்லை...” என்று மீண்டும் அழுத்தமாகக் கல்யாண் கூறினான்.
 
 
இப்போது குழம்புவது சஞ்சய்யின் முறையானது, காவலர்கள் விசாரித்துப் பார்த்தவரை, யாருமே குழந்தையோடு சென்றதையோ இல்லை அழும் குழந்தையைத் தூக்கி செல்வதையோ பார்த்திருக்கவில்லை.
 
 
அதே போல அது மதிய நேரம் என்பதால் அந்தப் பகுதியில் வெளியே யாரும் அப்போது இல்லை என்ற பதிலே கிடைத்தது. அப்போது வீட்டிற்குச் சென்று தூக்கி செல்லும் அளவுக்கும் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும், அதேநேரம் கல்யாணின் தினசரி நடவடிக்கையை அறிந்தவர்களாகவும் இருக்க வேண்டும்... இல்லையென்றால் அந்த இடைவெளியை சரியாகப் பயன்படுத்திக் குழந்தையைத் தூக்கி சென்று இருக்க வாய்ப்பே இல்லை.
 
 
குழந்தை தானாக வெளியில் சென்று இருக்குமோ என்ற சந்தேகம் வராத அளவுக்கு இருந்தது அந்த வீதியில் இருந்தவர்களின் வாக்குமூலம்... இதுவரை கல்யாண் கூட மட்டுமே பிள்ளை வெளியே வந்து பார்த்திருப்பதாகக் கூறியவர்கள், அத்தனை கவனமாகக் குழந்தையைக் கல்யாண் கவனித்துக் கொள்வதாகவும் கூறினர்.
 
 
அதே போல இந்த வீதி மலை பகுதி சற்று மேல் நோக்கி இருந்தது, இரண்டு வயது பிள்ளை எத்தனை வேகமாக நடந்தாலும் அந்த வீதியை பத்து நிமிடத்தில் கடக்க முடியாது என்பதும் புரிந்தது.
 
 
இதையெல்லாம் யோசித்தவன், “கல்யாண் எனக்கு என்னவோ இது உங்களுக்கு நல்லா தெரிஞ்ச யாரோ தான் செஞ்சு இருக்கணும்னு தோணுது.. முதல் விஷயம் குழந்தை தூக்கினதும் அழமா கூடப் போய் இருக்கா... அடுத்து வீட்டிற்குள் வரும் அளவு அவங்க நெருக்கமானவங்களா தான் இருக்கணும்... இன்னொன்னு இது பணத்துக்காகச் செய்யப்பட்டது போலத் தெரியலை, ஏன்னா கடத்தப்படு கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் கடந்தாச்சு... இன்னும் மிரட்டியோ பணம் கேட்டோ எந்த அழைப்பும் வரலை... அப்போ இது அந்தக் காரணங்களுக்காக நடந்த கடத்தல் இல்லை, உங்களின் தினசரி வாடிக்கை தெரிஞ்ச யாரோ தான் இது... அவங்களை எல்லாம் ஒரு முறை நினைவுப்படுத்திச் சொல்லுங்க...” என்ற சஞ்சய்யின் வார்த்தைகள் கல்யாணை யோசிக்க வைத்தது.
 
 
“இங்கே வந்த பிறகு இந்த இரண்டு வருஷமா ஒரு சிலரோடு தான் நெருக்கமா பழகி இருக்கேன்... என்று தொடங்கி அவர்களின் தகவல்களைக் கல்யாண் பகிரவும் காவலர்கள் துரிதமாகச் செயல்பட்டு அவர்களை விசாரிக்க முனைந்தனர்.
 
 
அடுத்தப் பத்து நிமிடங்களில் கல்யாணின் அலைபேசிக்கு ஒரு புது எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. பிள்ளை அவர்களிடம் இருப்பதாகவும், இன்னும் ஒரு மணி நேரத்தில் நாற்பது லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்றும் போலீஸ் இதில் தலையிடவோ இவர்களைத் தேடவோ கூடாது என்றும் நிபந்தனை விதித்தவன், மீண்டும் பத்து நிமிடங்களில் அழைப்பதாகவும் அதற்குள் யோசித்துச் சொல்லுமாறும் கூறி அழைப்பை துண்டித்தான்.
 
 
“கல்யாண் இந்தக் குரல் உங்களுக்கு இதுக்கு முன்னே கேட்ட குரலா...?” என்று ஆறுமுகம் விசாரிக்கவும், “நோ ஆறுமுகம்.. அவன் குரலை மாற்றிப் போனில் துணி போட்டு மறைத்து பேசி இருக்கான்...” என்று கல்யாண் பதிலளிப்பதற்கு முன் சஞ்சய் சொல்லி இருந்தான்.
 
 
“ம்ம்.. எனக்கும் வாய்ஸ் கேட்டது போல இல்லை...” என்றான் கல்யாண். “சரி நெக்ஸ்ட் மூவ் என்ன...?” என்று சஞ்சய் துவங்கவும் அதுவரை அழுது கொண்டிருந்த சித்ரா, “பணத்தைக் கொடுத்துடலாம்... சரின்னு சொல்லுங்க கல்யாண்..” என்று படபடத்தாள்.
 
 
விசாரித்து அறிந்து கொண்ட வரையில் கல்யாணின் இன்றைய நிலைக்கு உடனடியாக ஐந்து லட்சம் என்பதே முடியாத காரியம் என்று சஞ்சய்க்கு புரிய... கல்யாணின் முகம் பார்த்தான்.
 
 
“எனக்கு மட்டும் மறுக்கத் தோணுமா சித்து... ஆனா நாம இந்த வீட்டை விக்கணும்னா கூட அதுக்கு அவகாசம் வேணுமே...” என்றான் கவலை தோய்ந்த குரலில்.
 
 
“எஸ்... மிசஸ் கல்யாண், அவங்க இப்போ...” என்று சஞ்சய் விளக்க தொடங்கும் போதே மீண்டும் அதே எண்ணிலிருந்து கல்யாண் அலைபேசிக்கு அழைப்பு வந்தது. இதில் அனைவரையும் அமைதியாக்கிய சஞ்சய் கல்யாணை எடுத்துப் பேசுமாறு கூறினான்.
 
 
கல்யாண் எடுத்ததும், “என்ன முடிவு செஞ்சிட்டீங்களா...? குழந்தை வேணுமா..? வேண்டாமா...?” என்று அவன் மிரட்டுவது போனை ஸ்பீக்கரில் போட்டு கேட்டுக் கொண்டிருந்த அனைவருக்குமே கேட்டது.
 
 
உடனேயே தாவி கல்யாணின் சட்டையைப் பற்றிய சித்ரா, “சரின்னு சொல்லு...” என்று மன்றாட... “ஒகே...” என்று வேறு வழியில்லாமல் மனைவியைக் குழப்பத்தோடு பார்த்தவாறே பதிலளித்து இருந்தான் அவன்.
 
 
“அப்போ ஒரு மணி நேரம் உங்களுக்கு டைம்.. பணத்தை ஏற்பாடு செய்ங்க, மறுபடி கூப்பிடறேன்...” என்று வைத்துவிட்டான் அவன். “என்ன சித்து இது... விளையாட்டு விஷயமா...? இப்போ ஒரு மணி நேரத்தில் எப்படி ஏற்பாடு செய்யமுடியும்...” என்று அவ்வளவு நேரத்தில் முதல் முறையாகத் தன் பொறுமையைக் கைவிட்டு கோப முகம் காட்டினான் கல்யாண்.
 
 
‘எஸ் மிசஸ் கல்யாண்... நீங்க அவசரபட்டுட்டீங்க, ஒரு மணி நேரத்தில் அவ்வளவு பணத்தை ஏற்பாடு செய்யறது எல்லாம் வாய்ப்பே இல்லை... நீங்க கொஞ்சம் அமைதியா இருந்து இருந்தா டிராக் செஞ்சு இருக்கலாம்... இன்னும் கொஞ்ச நேரம் அவன் பேசி இருந்தா போதும்...” என்று அந்த அழைப்பை ரெக்கார்ட் செய்து டிராக் செய்ய முயன்று கொண்டிருந்தவர்களைப் பார்த்தவாறே கூறினான் சஞ்சய்.
 
 
“இல்ல... இல்ல.. முடியும், என்னால் முடியும்... கல்யாண் உங்களுக்கு நியாபகம் இல்லையா, என்னோட பிக்ஸட் அமௌன்ட் இருக்கே...” என்றாள் சித்ரா. அப்போதே அவனுக்கும் அது நினைவு வரவும் “ஓ ஆமா..” என்று முகம் பிரகாசம் அடைந்தவன், “ஏற்பாடு செஞ்சுடலாம் ஆபிசர்...” என்றான் சஞ்சய்யிடம்.
 
 
அதே நேரம் விவரம் அறிந்து வேகமாக அங்கு வந்து சேர்ந்தான் சித்ராவின் தம்பி சுகுமார். அவனைக் கண்டதும் சித்ரா மேலும் அழுக துவங்கவும் ஒருவாறு அவளைத் தேற்றி காவலர்களிடம் விவரம் அறிந்தவன், கல்யாணை இங்கு இருந்து பார்த்துக் கொள்ளுமாறு கூறி, சித்ராவோடு சேர்ந்து பணம் எடுத்து வர கிளம்பினான்.
 
 
அவர்கள் சென்ற பிறகு, அது என்ன பணம் என்று சஞ்சய் விசாரிக்க... “அது சிறு வயதில் சித்ராவின் தந்தை இறந்து விட, அவரின் பெயரில் இருந்த வீட்டை விற்று இரு பிள்ளைகளின் பெயரில் பிக்ஸட்டில் போட்டு வைத்த அவர்களின் அத்தை இவர்களை ஒரு ஹாஸ்டலில் சேர்த்து விட்டு படிக்கவும் ஏற்பாடு செஞ்சு அதுக்கும் ஒரு தொகையைப் போட்டு வெச்சாங்க... அவங்களுக்கு இவங்களைக் கூடக் கூட்டிட்டு போக முடியாத சூழ்நிலை, அங்கேயே தான் இவங்க இரண்டு பேரும் படிச்சு வளர்ந்தாங்க... அந்தப் பணம் தான் இப்போ இவ்வளவு ஆகி இருக்கு... போன வாரம் தான் அது மெச்சுர்ட் ஆகி வந்தது... மறுபடி பிக்ஸட்லேயே போடலாமா இல்லை வேற ஏதாவது செய்யலாமான்னு யோசிச்சிட்டு இருந்தோம்...” என்று விளக்கினான்.
 
 
“போன வாரம் எடுத்த பணத்தோட நியாபகம் உங்களுக்கு வரவே இல்லையா...?” என்றான் சஞ்சய். “எப்போவுமே பணம் பத்தி நான் அதிகம் கவலைப்பட மாட்டேன்... அதிலும் இது அவளோட பணம், நான் அதை எப்படி யோசிக்க முடியும்...” என்றான்.
 
 
கல்யாணையே யோசனையாகப் பார்த்தாலும் சஞ்சய் அப்போது எதுவும் பேசவில்லை. அடுத்த அரைமணி நேரத்தில் சித்ராவும் சுகுமாரும் பணம் கொண்டு வந்துவிட, அடுத்து யார் இதை எடுத்து செல்வது என்ற விவாதம் துவங்கியது.
 
 
குழந்தையைக் காப்பாற்றுவது தான் முக்கியம் என்று கூறி தானே செல்வதாகச் சித்ரா சொல்லவும், அதை மறுத்த கல்யாண் அவன் செல்வதாகக் கூறினான். இதைப் பற்றிய பேச்சு வார்த்தை நடைபெறும் போதே கடத்தல்காரனிடம் இருந்து அழைப்பு வந்தது.
 
 
“என்ன பணம் ரெடியா...?” என்றவன், அதை எடுத்துட்டு **** கிட்ட வந்துடுங்க... உங்க குடும்பத்தில் இருந்து யாராவது ஒருத்தர் தனியா தான் வரணும்... பின்னாடி போலீஸ் பாலோ செஞ்சுது உங்க குழந்தை உயிருக்கு நான் கியாரண்ட்டி இல்லை...” என்றதோடு தொடர்பு துண்டிக்கப்பட...
 
 
“நீங்க இரண்டு பேரு தான் வரணும்னு அவன் சொல்லலை... சோ எங்க ஆளு யாராவது போகட்டும்...” என்று சஞ்சய் துவங்கவுமே, இடையிட்ட சித்ரா “பிளீஸ் வேண்டாம்... நான் இதில் ரிஸ்க் எடுக்க விரும்பலை.. நானே போய்ப் பணத்தைக் கொடுத்து குழந்தையை வாங்கிட்டு வந்துடறேன்...” என்று கையெடுத்து கும்பிட்டாள்.
 
 
“புரியாமா பேசாதீங்க மிசஸ் கல்யாண்... அப்படி எல்லாம் உங்களை அவனை நம்பி அனுப்ப முடியாது... வீடு புகுந்து குழந்தையைக் கடத்தி இருக்கான்... அதுவும் வீட்டில் ஆள் இருக்கும் போதே, அவன் கேட்ட பணமும் சரியா உங்ககிட்ட இருக்கத் தொகை... அப்போ உங்களைப் பத்தி எல்லாம் தெரிஞ்ச யாரோ தான் இதையெல்லாம் செய்யறாங்க... இது பணத்துக்காக மட்டும்னா பரவாயில்லை... ஆனா இதோடு முடியாம போனா... ஒருவேளை உங்களில் யாரையாவது பழி வாங்கவோ இல்லை கஷ்டபடுத்தவோ நினைச்சா...” என்று சஞ்சய் இத்தனை நேரம் இருந்த இலகு தன்மை போய்ச் சற்று கடின குரலில் பேசவும் மிரண்டு போனாள் சித்ரா.
 
 
“இல்ல அது...” என்று மேலும் ஏதோ கூற முயன்றவளை, “ஒருவேளை பணத்தையும் வாங்கிட்டு உங்களையும் பிடிச்சு வெச்சுகிட்டா என்ன செய்வீங்க...?’ என்று இடையிட்டு சஞ்சய் கேட்டு இருக்க... அமைதியாகி போனாள் அவள்.
 
 

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 11 months ago
Posts: 365
Topic starter  
கனவு – 10
 
 
அனைத்தையும் கவனித்துக் கொண்டு இருந்த கல்யாண், “பிளீஸ் ஆபிசர்... உங்க ஆளுங்க யாரும் பின் தொடர வேணாம்... அவனுங்களை மடக்கி பிடிக்கறதை விட எனக்குக் குழந்தை தான் முக்கியம்... அதுமட்டுமில்லை அவனால் எனக்கு ஏதாவது பிரச்சனை வந்தாலும் அதை என்னாலேயே சமாளிச்சிக்க முடியும்...” என்று கூறவும், யோசனையோடு சம்மதித்தான் சஞ்சய்.
 
 
“இல்ல கல்யாண், சார் சொல்றதை பார்த்தா எனக்குப் பயமா இருக்கு... ஒருவேளை யாராவது உங்களுக்கு வேண்டாதவங்க இதைச் செஞ்சு இருந்தா...! உங்களைச் சேர்த்து அவங்ககிட்ட சிக்க வைக்க நான் விரும்பலை... சுகு போகட்டும்...” என்றாள் சித்ரா.
 
 
அவனும் அதற்குச் சம்மதிக்கவே, உடனடியாகப் பணம் ஒரு பையில் அடுக்கப்பட்டது. அதை எடுத்துக் கொண்டு சுகுமார் கிளம்பவும், பூஜை அறையில் சென்று தஞ்சமானாள் சித்ரா.
 
 
கவலையான முகத்தோடு உணவு மேசையில் கல்யாண் அமர்ந்துவிட... பல்வேறு யோசனைகளோடு அங்கு நடை பயின்று கொண்டிருந்தான் சஞ்சய். அப்போது நீருவிடமிருந்து அழைப்பு வரவும், இங்கு நடப்பதை பற்றி அவளுக்கு விளக்கியவன் தான் பார்த்துக் கொள்வதாகக் கூறினான். சஞ்சய் இங்கே வந்ததிலிருந்து ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் அழைத்து அப்போதைய நிலவரத்தை நீரு தெரிந்து கொண்டு தான் இருக்கிறாள்.
 
 
விட்டால் இங்கேயே ஓடி வந்து விடுவாள், ஆனால் நீரு இங்கு வரவே கூடாது என்று தன் கண்டிப்பான குரலில் கூறிவிட்டே சஞ்சய் வந்திருப்பதால் அங்கேயே இருந்தாள்.
 
 
ஆறுமுகத்தை அழைத்தவன், “கல்யாண் பேரண்ட்ஸ் பத்தி விசாரிங்க... இவங்க லைப்ல ஆம்பத்தில் இருந்தே அவங்க தான் பிரச்சனை..” என்று விட, அதற்கான முயற்சிகள் துவங்கப்பட்டன.
 
 
ஆனால் அடுத்தப் பத்து நிமிடத்தில் அவர்கள் அமெரிக்கச் சென்று ஒரு மாதம் ஆகிறது என்ற தகவல் தான் கிடைத்தது. ஒருவேளை தங்கள் மேல் சந்தேகம் வர கூடாது என்று இந்தச் சந்தர்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்களோ என்ற சந்தேகம் எழ... அவர்களைப் பற்றிய முழுத் தகவலையும் திரட்ட சொன்னான்.
 
 
மதுரையில் பெயர் பெற்ற தொழில் குடும்பம் அவர்களுடையது. கல்யாணை கை கழுவிய பிறகு அவர்கள் மறந்தும் இவனைத் திரும்பியும் பார்க்கவில்லை என்பது பல சாட்சிகளோடு நிருபணமாகியது.
 
 
பதட்டத்தோடு அனைவரும் காத்திருக்க... “சார்... சுகுமாரனோட போன் சுவிட்ச் ஆப் சார்...” என்றார் அங்கு அலைபேசியின் மூலம் அவர்கள் இருக்கும் இடத்தை அறிய முயன்று கொண்டிருந்தவர், அவரைப் பார்த்து சஞ்சய் ‘சரி’ என்ற தலையசைப்போடு கண்ணசைக்கவும் அவரும் புரிந்தது என்பது போலத் தலையசைத்தார்.
 
 
அப்போது வேகமாக வந்த ஆறுமுகம், “ஏன் டா நாயே... நீயே எல்லாம் செஞ்சுட்டு நடிச்சு டிராமா போடறீயா...? எங்கே டா குழந்தை...?” என்று கேட்டவாறே சரமாரியாகக் கல்யாணை அடிக்கத் துவங்கவும், இடையில் புகுந்து தடுத்த சஞ்சய், “என்ன விஷயம் ஆறுமுகம்...” என்றான்.
 
 
“ஆரம்பத்துல இருந்தே எனக்கு இவன் மேலே சந்தேகம் தான் சார்... இவன் அந்தப் புள்ளைக்கு அப்பன் இல்லையாம், அந்த அம்மாவோட இரண்டாவது புருஷனாம்... அந்தப் புள்ளையோட அப்பா அது வயித்துல இருக்கும் போதே செத்து போயிட்டானாம்...” என்றார்.
 
 
“வாட்...”
 
 
“ஆமா சார், எனக்கு இவன் சொன்னது எல்லாமே சந்தேகமா தான் இருந்தது... அந்த அம்மாகிட்ட இருந்த தவிப்பும் அழுகையும் இவன்கிட்ட இல்ல பாருங்க... அதிலும் பணத்தைப் பத்தி பேசும் போது நாம எப்படி அவ்வளவு பணம் ஏற்பாடு செய்ய முடியும்னு அசால்ட்டா சொல்றான், கேட்டா அந்தப் பணம் இருக்கறதே நியாபகம் இல்லையாம்... சாரு அவ்வளவு நல்லவராம்... அப்போ தான் நீங்க சொன்ன வார்த்தை என்னை யோசிக்க வெச்சுது சார், சரியா இவங்ககிட்ட இருக்கப் பணம் எவ்வளவுன்னு தெரிஞ்சு எப்படி அவன் கேட்டானு... அதான் இவனைப் பத்தி முழுசா விசாரிக்கச் சொன்னேன்... அப்போ தான் இந்த விவரம் தெரிஞ்சது...” என்று கூறியவாறே மேலும் இரண்டு அடிகள் போட்டார்.
 
 
“ஆறுமுகம்.. இருங்க அவசரப்படாதீங்க, முதலில் குழந்தை பத்திரமா வீட்டுக்கு வரட்டும்...” என்று சஞ்சய் தடுக்கவும், “நாலு தட்டு தட்டினா இவனே சொல்லிடுவான் சார்... பணத்துக்கு ஆசைப்பட்டுக் குழந்தையைக் கடத்தி இருக்கான்... பெத்தவனா இருந்தா அருமை தெரியும், வேலை வெட்டி இல்லாம இருக்கான் இல்ல.. அதான் கிடைச்ச வரை சுருட்டிக்கப் பார்த்து இருக்கான்...” என்றார் கோபமாகவே.
 
 
“சார்.. அவ பிறப்புக்கு வேணா நான் காரணம் இல்லாம இருக்கலாம்... ஆனா அவளை என் குழந்தை இல்லைன்னு சொல்லாதீங்க பிளீஸ்... ஐஷு என் பொண்ணு தான்...” என்றான் அடி விழுந்ததில் ரத்தம் கசிந்து வீங்கி இருந்த வாயோடு.
 
 
“ஏதாவது பேசினா வாய்யை உடைச்சிடுவேன் ராஸ்கல்...” என்று எச்சரித்தவர், மேலே எதுவோ சொல்ல வர, “சார்.. நீங்க கல்யாணை சந்தேகபடறது கொஞ்சமும் சரியில்லை... ஐஷு பிறந்ததில் இருந்து அவர் தான் தரையில் விடாம தாங்கறாரு...” என்று இடையில் வந்து நின்றிருந்தாள் சித்ரா.
 
 
அப்போது மீண்டும் டிராக் செய்து கொண்டிருந்தவன், “சார் அந்தப் போனும் ஸ்விட்ச் ஆப் சார்...” என்று குரல் கொடுக்கவும், “ஓ ஷிட்..” என்று கைகளை மடக்கி காற்றில் குத்தினான் சஞ்சய்.
 
 
“பார்த்தீங்களா சார்... நாம இங்கே போடற பிளான் எல்லாம் எப்படி அவனுக்குப் போகுது.. இவன் தான் சார்... இவன் தான்...” என்று ஆத்திரப்பட்ட ஆறுமுகம், இவனைத் தூக்கி உள்ளே வெச்சு நம்ம பாணியில் கவனிச்சா போதும் சார்... அடுத்த அரைமணி நேரத்தில் எல்லாத்தையும் கக்கிடுவான்...” என்றார் அவனின் சட்டை பற்றி இழுத்தவாறே.
 
 
“இருங்க ஆறுமுகம்...” என்று சஞ்சய் தடுக்கவும், “சார் பிளீஸ்... நீங்க எதுவும் செய்ய வேண்டாம்... அது அவங்களுக்குக் கோபத்தைத் தூண்டினா என் குழந்தைக்குத் தான் பிரச்சனை...” என்று சித்ரா கெஞ்சவும்,
 
 
“கவலைபடாதீங்க நாங்க பார்த்துக்கறோம்...” என்று சஞ்சய் கூறவும், “இல்ல சார்.. எனக்குப் பயமா இருக்கு, நீங்க எதுவும் பண்ண வேணாம்... தம்பி பணம் எடுத்துட்டு போய் இருக்கான் இல்லை... அவங்க விட்டுடுவாங்க, நாம ஏதாவது செய்யறோம்னு தெரிஞ்சா தான் ஏதாவது செய்யும் ஆபத்து இருக்கு...” என்றாள் கெஞ்சல் குரலில்.
 
 
“அப்படி எல்லாம் நீங்க வானா வரதுக்கும் போனா போறதுக்கும் நாங்க உங்க வீட்டு வேலைகாரங்க இல்லை... இந்தக் கேஸ் போலீஸ்கிட்ட வந்தாச்சு இனி நாங்க பார்த்துக்கறோம்..” என்று சஞ்சய் எரிந்து விழவும், “இப்போவும் எப்படிக் கல்லு மாதிரி நிக்கறான் பாருங்க சார்...” என்று அப்போதும் அமைதியாக நின்ற கல்யாணின் மேல் அடிக்கப் பாய்ந்தார் ஆறுமுகம்.
 
 
அவரைத் தடுத்து சஞ்சய் நிறுத்தும் முன் ஆறுமுகத்தின் கை கல்யாணின் மூக்கை பதம் பார்த்து இருக்க... ரத்தம் வேகமாகக் கொட்டியது. ஆனால் அதைப் பற்றிய கவலை கொஞ்சமும் இல்லாமல், “****** இந்த நம்பரை டிராக் செய்யச் சொல்லுங்க சார்...” என்றான் கல்யாண் ரத்தத்தைத் துடைத்தவாறே சஞ்சய்யை பார்த்து.
 
 
உடனே அது டிராக் செய்யப்படவும், சஞ்சய் கேள்வியாகக் கல்யாணை பார்க்க... “அது என்னோட இன்னொரு நம்பர் சார்... நான் எப்போவும் இரண்டு போன் வெச்சு இருப்பேன் சார்... ஒண்ணு குடும்பத்துக்கு, அதில் எப்...” என்று பேசி கொண்டு இருந்தவன்,
 
 
“சார்ர்ர்ரர்ர்ர்...” என்று திடீரென அலறினான். “என்ன ஆச்சு கல்யாண்...?” என்று சஞ்சய் புரியாமல் பார்க்கவும், “சார் நான் எப்பவும் இரண்டு போன் வெச்சு இருப்பேன் சார்... ஒண்ணு குடும்பத்துக்கு அவங்க தான் எனக்கு எல்லாமே... ரொம்ப நெருங்கிய வட்டத்துக்கு மட்டும் தான் இந்த நம்பரே தெரியும்... அதில் சேவ் ஆகி இருக்க நம்பர் கூடப் பார்த்தீங்கனா மொத்தமே பதினைந்து தான்... இன்னொன்னு பிசினஸ்க்கு, இதைத் தான் எல்லாருக்கும் கொடுப்பேன்... அந்த... அந்தக் கடத்தல்காரன் பேசினது... என் பெர்சனல் போன்ல சார்... அப்போ இருந்த பதட்டத்துல நான் அதைக் கவனிக்கவே இல்லை சார்... இவ்வளவு பணம் கொடுக்கறோம், குழந்தையை மீட்க முடியாம போயிடுச்சுனா அதான் எதுக்கும் அவன் எங்கே இருக்கானாவது தெரிஞ்ச அடுத்த முயற்சி எடுக்க ஈசியா இருக்குமேன்னு இதை வெச்சேன்...” என்றவன், “பணம் அடுக்கும் போது உள்ளே வெச்சு இருக்கேன், சைலண்டில் போட்டு இருக்கேன்... அதனால் ப்ரச்சனை இல்லை...” என்றான்.
 
 
“என் பர்சனல் நம்பருக்கு கூப்பிட்டு இருக்கானா நீங்க சொன்னது போல இது எனக்கு நல்லா தெரிஞ்ச யாரோ தான் சார்... பிளீஸ் சார், எப்படியாவது அது யாருன்னு கண்டு பிடிச்சு என் குழந்தையை எப்படியாவது மீட்டு கொடுங்க... அவ பசி தாங்க மாட்ட சார்... சாப்பிட அடம் பிடிச்சாலும் பசி வந்தா அழ ஆரம்பிச்சிடுவா... மதியமும் சாப்பிடறதுக்கு முன்னேயே தூக்கிட்டு போய்ட்டாங்க... இப்போவும் இவ்வளவு நேரம் ஆச்சு, ஏதாவது கொடுத்தாங்களோ என்னவோ...!! பிளீஸ் சார் என் குழந்தையைக் காப்பாத்தி கொடுங்க...” என்று அவ்வளவு நேரம் கட்டுப்படுத்திக் கொண்டு இருந்த அழுகையை இனி உள்ளுக்குள் புதைக்க முடியாமல் வெடித்துக் கதறினான்.
 
 
அவளைப் பிறந்ததிலிருந்து எப்படிப் பார்த்து பார்த்துக் கவனித்துக் கொண்டிருப்பான் என்பதை அவனின் இந்தத் தாய்மையுடனான தவிப்பே சொல்லியது. “ஹப்பா... இவரு பெரிய சிவாஜி, விழுந்து புரண்டு அழுது நடிக்கறாரு...” என்று அப்போதும் ஆறுமுகம் எரிச்சல் குரலில் கூறினாலும் சஞ்சய்யின் ஓரு பார்வைக்குக் கட்டுப்பட்டுக் கல்யாண் மேல் கை வைக்காமல் இருந்தார்.
 
 
கல்யாணை ஒரு பார்வை பார்த்த சஞ்சய், “மிசஸ் கல்யாண்... உங்க கணவருக்கு முதலுதவி செய்ங்க...” என்றான். அவளும் கண்கள் கலங்கி இருக்க ஒரு தலையசைப்போடு சென்று அதை எடுத்துக் கொண்டு வந்தாள்.
 
 
ஆறுமுகம் தான் பொறுமை இன்றித் தவித்துக் கொண்டு இருந்தார். அவரைப் பொறுத்தவரை இவனையெல்லாம் இவ்வளவு பொறுமையாக நடத்தவே கூடாது. இதுவே சஞ்சய் உள்ளே வராமல் இருந்து இருந்தால் வேறு மாதிரி இந்தக் கேசை கையாண்டு இருப்பார்.
 
 
இப்போது அவன் மேல் உள்ள மரியாதையில் கையைக் கட்டிக் கொண்டு நிற்க வேண்டி இருந்தது. அவரின் முகத்தில் இருந்தே அனைத்தையும் அறிந்துக் கொண்டவன், ‘இன்னும் கொஞ்ச நேரம் தான்... வெயிட் செய்ங்க...” என்றான்.
 
 
அவர் சம்மதமாகத் தலையசைக்கவும், சஞ்சய்க்கு ஒரு அழைப்பு வரவும் சரியாக இருந்தது. அதை எடுத்து இரண்டு வார்த்தைகள் பேசியவனின் முகம் ஒரு புன்னகையைத் தத்தெடுக்க... “நான் சொல்லல... இன்னும் சில நிமிடங்கள் தான்...” என்றான்.
 
 
அதுவரை இருந்த யோசனைகள் எல்லாம் விடை பெற்று சென்று இருக்க... படு சாவகாசமாக அங்கிருந்த இருக்கையைத் திருப்பி வாசலுக்கு நேரெதிரே போட்டு கொண்டவன், அதில் அமர்ந்தான்.
 
 
“நீங்களும் உட்காருங்க...” என்று மற்றொரு இருக்கையை ஆறுமுகத்திற்குக் காண்பித்தான். அவரும் அதில் அமர்ந்த பத்தாவது நிமிடம் குழந்தையோடு உள்ளே நுழைந்தான் சுகுமார்.
 
 
பிள்ளையைக் கண்டதும் பெற்றவர்கள் தாவி சென்று அணைத்துக் கொள்ள... அதுவோ உறங்கி கொண்டிருந்தது. தவிப்போடு தன் கைகளில் எடுத்து மார்பில் போட்டுத் தடவி கொடுத்து என்று சித்ரா உணர்ச்சிவசப்பட... கல்யாணோ கண்மூடி குழந்தையின் தலையில் கை வைத்து அந்த நிமிடத்தை உள்வாங்கிக் கொண்டிருந்தான் அமைதியாக.
 
 
குழந்தையை நொடியும் விலக மாட்டேன் என்பது போல சித்ரா பிடித்திருந்த விதம் ஆறுமுகத்தின் சினத்தை உயர்த்த போதுமானதாக இருக்க... ‘இவன் பிள்ளையா இருந்தா இப்படிச் செஞ்சு இருப்பானா..?! அவன் புள்ளையை வெச்சுப் பணம் சம்பாதிக்க நம்ம நேரத்தையும் வீணாக்கிஈஈஈ..’ என்று பல்லை கடித்தவர், அவனை அடிக்கப் பாயும் முன் அவரின் உடல் மொழியிலேயே அதை உணர்ந்த சஞ்சய் அவரின் கையைப் பற்றித் தடுத்து நிறுத்தி இருந்தான்.
 
 
அவர் திரும்பி சஞ்சய்யை பார்க்க... அவனோ சுகுமாரிடம் தன் விசாரணையைத் தொடங்கி இருந்தான். “சுகுமார் என்ன ஆச்சு... நீங்க இங்கே இருந்து போனதில் இருந்து சொல்லுங்க... குழந்தை சேப் தானே..?” என்றான்.
 
 
“ஆமா சார்... இங்கே இருந்து அவங்க சொன்ன இடத்துக்குப் போனதும் மறுபடியும் அதே நம்பரில் இருந்து போன் வந்தது... என் கையில் இருக்கும் மாமா போன் தவிர வேற என்கிட்ட இருக்கப் போனை சுவிட்ச் ஆப் செய்யச் சொன்னாங்க, அடுத்த வார்த்தை கூட என்னைப் பேச விடாம, நான் அப்படிச் செய்யலைனா பாப்பாவை மறந்துட சொன்னாங்க... நான் உடனே என் போனை ஆப் பண்ணிட்டேன்...
 
 
அங்கே இருந்து இன்னும் பதினைந்து நிமிஷ தொலைவில் இருக்க ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு வர சொன்னாங்க... அது பேசி முடித்ததும் அதையும் ஆப் செய்யச் சொன்னாங்க, அதையும் செஞ்சேன்... அங்கே போனதும் ஒரு கருப்பு டிரஸ் போட்டு முகம் முழுக்க மாஸ்க் போட்டிருந்த ஒருத்தன் மரத்துக்குப் பின்னால் இருந்து வந்தான், என்கிட்ட எதுவும் பேசலை, பணத்தைக் கேட்டான்.. நானும் பையைக் கொடுத்தேன்.. உடனே உள்ளே கையை விட்டு உள்ளே இருந்து ஒரு போனை எடுத்து என்னை முறைச்சிட்டே அதையும் ஆப் செஞ்சு தூக்கி போட்டான்...
 
 
அஞ்சு நிமிஷம் இங்கேயே நில்லுன்னு சைகையிலேயே சொல்லிட்டு மறுபடி மரத்துக்குப் பின்ன போனான், அவன் தனியா இருக்கானா இல்லை கூட யாராவது இருக்காங்களான்னு எனக்குத் தெரியலை சார்... அதான் நான் அவனை அடிக்கவோ வேறு எதுக்கோ எந்த முயற்சியும் செய்யலை.. அதுவே நம்ம குழந்தைக்கு ஆபத்தாகிட கூடாதேன்னு நினைச்சேன்...
 
 
மறுபடியும் அவனே குழந்தையைத் தூக்கிட்டு வந்தான், பாப்பா இப்படி இருக்கவும் பயந்தேன், ஆனா அது தூங்குதுன்னு மட்டும் சொல்லிட்டு உடனே வேகமா போயிட்டான்... அந்தச் சரிவுல ஒரு கார் கிளம்பின சத்தம் மட்டும் கேட்டுது, பாப்பா நம்ம கைக்கு வந்த பிறகு வேற எது எப்படிப் போனா என்னன்னு நான் அங்கே இருந்து கிளம்பிட்டேன் சார்..” என்று விளக்கமாகப் பதிலளித்தான்.
 
 
அனைத்தையும் எந்த முகப் பாவமும் இல்லாத ஒரு தலையசைப்போடு கேட்டுக் கொண்டு இருந்த சஞ்சய் “இப்போ புரியுதா ஆறுமுகம்... நீங்க அரஸ்ட் செய்ய வேண்டியது யாருன்னு..” என்றான் அவரைத் திரும்பி பார்த்து.
 
 
அதில் லேசான திடுக்கிடலோடு “இவனா சார் எல்லாத்துக்கும் காரணம்..?” என்றார் சுகுமாரை பார்த்துக் கொண்டே. அதைக் கேட்டு சுகுமாரும் சித்ராவும் ஒரே நேரத்தில் பதறி அதை மறுத்தனர். “நோ ஆபிசர்... சுகு அப்படிச் செஞ்சு இருக்க வாய்ப்பே இல்லை...” என அதற்குக் கொஞ்சமும் குறையாத மறுப்புக் கல்யாணிடம் இருந்தும் அழுத்தமான குரலில் வந்தது.
 
 
“ஹே, இருங்க இருங்க... நான் எப்போ சுகுமார் தான் இதைச் செஞ்சதுன்னு சொன்னேன்...” என்ற சஞ்சய்யை அனைவரும் புரியாமல் திரும்பி பார்க்க... அங்கே சட்டென ஒரு அமைதி நிலவியது.
 
 
அனைவரையும் ஒரு பார்வை பார்த்த சஞ்சய், ஒரு சிறு புன்னகையோடு ஆறுமுகத்தின் பக்கம் திரும்பி “இப்போ நீங்க அரஸ்ட் செய்ய வேண்டியது கல்யாணையோ சுகுமாரையோ இல்லை... சித்ராவை..” என்றான்.
 
 
இதில் அவர்கள் மட்டுமல்ல ஆறுமுகமுமே அதிர்ந்து சஞ்சய்யை பார்க்க.. “நோ.. என்ன உளறல் இது ஆபிசர்..?” என்று கல்யாண் கோபத்தோடு கேள்வி எழுப்ப...
 
 
“எங்களைப் பார்த்தா உளறதுக்காக வேற வேலை வெட்டி இல்லாம இங்கே வந்து உட்கார்ந்து இருக்க மாதிரியா இருக்கு கல்யாண்... இப்போ நடந்தது முழுக்க முழுக்க உங்க மனைவியோட பிளான்...” என்றான் சஞ்சய் சற்று அழுத்தமான குரலில்.
 
 
“அவ குழந்தையை அவளே கடத்த வேண்டிய அவசியம் என்ன சார்.. நீங்களும் பார்த்தீங்க தானே, அவளோட அழுகையையும் பிரார்த்தனையையும்... பூஜை அறையேன்னு கிடந்தா தானே..” என்று சஞ்சய்யின் வார்த்தைகளைத் துளியும் நம்பாமல் கல்யாண் வாதிட்டான்.
 
 
“இவ்வளவு சொன்ன நான் அதைச் சொல்ல மாட்டேனா..?! வெய்ட், இது முழுக்க முழுக்க உங்க மனைவியோட பிளான் தான்... உங்க தினசரி வழக்கம் நடவடிக்கை தெரிஞ்ச யாரோ தான் இதைச் செய்யறாங்கன்னு ஆரம்பத்தில் இருந்தே எனக்குச் சந்தேகம் தான்... நீங்க ஓய்வெடுக்கற அந்தச் சின்னக் கேப்பை அழகா பயன்படுத்தி இருக்காங்கன்னும் போது முதலில் எனக்கு உங்க மேல கூடச் சந்தேகம் இருந்தது... அடுத்து குழந்தையைப் பணத்துக்காகக் கடத்தலைன்னு நான் சொன்ன அடுத்தச் சில நிமிடத்தில் பணம் கேட்டு போன் வந்தது, அதுவும் உங்ககிட்ட இருக்கச் சரியான தொகையைக் கேட்டு... இப்போ தான் என் சந்தேகம் முழுமையா உங்க மேலே திரும்புச்சு... நான் முதலில் உங்களைத் தான் இந்த விஷயத்தில் சந்தேகப் பட்டேன் கல்யாண்... ஆனா அது வெகு சீக்கிரமா உங்க மனைவி மேலே திரும்பிடுச்சு.. அதுக்குக் காரணம் அவங்க தான்.. அவ்வளவு பதட்டமான மனநிலையில் இருக்க ஒரு தாய் இவ்வளவு பெரிய தொகையை எடுக்கக் கிளம்பும் போது உங்களைத் தவிர்த்தாங்க... கூடப் பிறந்த தம்பியையும் கூட அழைச்சுகிட்டாலும் இது போல நேரத்தில் பெண்கள் மனம் கணவனின் துணையைத் தான் தேடும்... அப்போவே இவங்க என் கண்காணிப்பு வளையத்துகுள்ளே வந்தாச்சு..” என்று சொல்லி கொண்டு சென்றவனைப் பதட்டமாக இடையிட்ட சித்ரா “அது.. அது.. மறுபடி ஏதாவது போன் வருமோன்னு தான்..” என்றாள்.
 
 
‘ம்ம், அதுவும் சரி தான் ஆனா மதியம் 3.30 மணிக்கு உங்களுக்கு எந்தப் பேங்க் திறந்து வெச்சு மணி வித்டிரா செய்யறாங்கனு கொஞ்சம் சொல்லுங்களேன்.. எங்களுக்கும் அது அவசர தேவைக்கு உதவும்...” என்றவனின் குரலில் அத்தனை எள்ளல் வழிந்தது.
 
 
“அ.. து..” எனச் சித்ராவின் குரல் இப்போது தடுமாறியது.
 
 
“அதுவும் நீங்க வருவீங்கன்னு தெரிஞ்ச எண்ணி எடுத்து வெச்சது போல உள்ளே போன பத்து நிமிஷத்துல வெளியே பணத்தோட வந்து இருக்கீங்கனா.. இது பெரிய விஷயம் இல்லையா..!” என்று முழுவதுமாக உடைத்துப் பேசாமல் பூடகமாக சஞ்சய் கூறவும், சித்ராவுக்கு இப்போது பலமாக வேர்க்க தொடங்கியது.
 
 
சஞ்சய்யின் பேச்சு புரியவில்லை என்றாலும் கல்யாணின் கண்கள் யோசனையாக இடுங்கியது. மெல்ல கன்னத்தைத் தேய்த்தவாறே ஊன்றி கவனிக்கத் தொடங்கினான்.
 
 
“இங்கே தான் என் சந்தேகம் கூடப் போன சுகுமார் மேலே ஸ்ட்ரோங் ஆச்சு..” என்று சஞ்சய் தொடர முயலவும் பதறிக் கொண்டு இடையிட்டான் சுகுமார்.
 
 
“ஐயோ சார்... அது அக்கா தான் இவ்வளவு பெரிய தொகையை உடனே வித்ட்ரா செய்யறது எல்லாம் அவ்வளவு ஈசி இல்லை... நான் என் ஆபிஸ்ல எம் டி நிரஞ்சன்கிட்ட பேசி பணத்துக்கு ஏற்பாடு செய்யறேன், பாப்பா கைக்கு வந்ததும் வித்ட்ரா செஞ்சு அங்கே கொடுத்துடறேன்.. ஒரு நாள் தானே அவங்க ஹெல்ப் செய்வாங்கன்னு சொன்னா.. அதான் எனக்குத் தெரியும், நான் ஆபிஸ் உள்ளே கூடப் போகலை.. அவ தான் போனா...” என்றான்.
 
 
“எஸ் ஐ நோ... பட் சந்தேகம் இருந்தது... நீங்க குழந்தையோட திரும்ப வீட்டுக்கு வர வரைக்கும்... அவங்க தான் செய்யறாங்கன்னு எப்போவோ கன்பார்ம் ஆகிட்டாலும் நீங்களும் உடந்தையோன்னு நினைச்சேன்..” என்றான் சஞ்சய்.
 
 
“ஆனா இதெல்லாம் எதுக்கு ஆபிசர்..?” என்று கூர்மையான பார்வையோடு சஞ்சய்யை பார்த்து கேட்டான் கல்யாண்.
 
 
“அவங்களுக்குப் புதுசா வந்து இருக்கக் காதல், அவரைக் கல்யாணம் செஞ்சுக்க இருந்த அவசரம்..” என்று சிம்பிளாகச் சஞ்சய் முடித்துக் கொள்ள... கல்யாணின் பார்வை ஒரு திடுக்கிடலோடு சித்ராவின் மேல் படிந்து விலகியது.
 
 
“உங்களுக்குப் பணத்தைத் துரத்துவது எப்படி விருப்பம் இல்லையோ அதே போல அவங்களுக்குப் பணம் இல்லாம இருப்பதில் விருப்பம் இல்லை மிஸ்டர் கல்யாண்.. நீங்க குடும்பம் குழந்தைன்னு அதுக்கு முக்கியத்துவம் கொடுத்து தொழிலை பத்தி கவலைப்படாம இருந்தது அவங்களுக்குப் பிடிக்கலை... அந்தக் கசப்பான மனநிலையில் இருந்தவங்க மனசை தான் அவங்க எம் டி அவர் பக்கம் திருப்பி இருக்கார்.. இவங்ககிட்ட இருக்கப் பணமும் அதுக்கு ஒரு காரணம், அது அவங்களுக்குத் தெரியலை பாவம்...
 
 
சோ உங்களை விட்டு பிரிஞ்சு அவரைக் கல்யாணம் செஞ்சு அந்தக் கம்பெனிக்கு முதலாளியாகப் போட்ட திட்டம் தான் இது.. பிரியவும் டிவோர்ஸ் வாங்கவும் காரணம் வேணுமே.. அதான் பிள்ளை காணாம போனதாகவும் உங்களால் அவளைக் கூடச் சரியா பார்த்துக்க முடியலைன்னும் சொல்லி பிரிஞ்சு போய்ப் பின் அதையே காரணமா வெச்சு டிவோர்ஸ் வாங்கி நிரஞ்சனை கல்யாணம் செஞ்சுக்கத் திட்டம் போட்டாங்க...
 
 
உங்க அத்தனை நடவடிக்கையும் தெரிஞ்சவங்க தானே அதான் எல்லாமே ரொம்ப ஈசியா அவங்க எதிர்பார்த்ததை விடச் சுலபமா முடிஞ்சுது... ஆனா இதில் அவங்க கொஞ்சமும் எதிர்பார்க்காதது உள்ளே போலீஸ் நுழைந்ததைத் தான், முதலில் நீங்க அவங்களுக்குத் தான் கூப்பிடுவீங்கன்னு அவங்க நினைக்க...
 
 
உண்மையிலேயே குழந்தை மேலே பாசம் வெச்சு இருந்த நீங்க குழந்தை கிடைக்கறது தான் முக்கியம்னு எங்ககிட்ட வந்துட்டீங்க, இதுலேயே அவங்க கொஞ்சம் பயந்துட்டாங்க, இரண்டு பேருக்குமே இது புது அனுபவம் அதான் அடுத்து என்னன்னு தெரியாம தடுமாறிட்டாங்க...
 
 
அப்பறம் நான் சொன்ன பண விஷயத்தை உள்ளே வெச்சு இன்னும் அழுத்தமா உங்க மேலே கோபம் பண இழப்புன்னு காரணம் கிடைக்கவே அதை விடாம பிடிச்சுக்க நினைச்ச திட்டம் தான் இது... அவசரமா போட்ட திட்டம்ன்றதால பல விஷயங்களைக் கவனிக்கமா சீக்கிரம் குழந்தையை வீட்டுக்குக் கொண்டு வந்துட்டு எங்களை எல்லாம் இங்கே இருந்து விரட்டணும்னு மட்டும் யோசிச்சவங்க நேரத்தையும் நாங்க அவங்களைக் கண்காணிப்போம்னும் சுத்தமா நினைக்கவே இல்லை, அடுத்தது அதுக்கு அப்பறமா அவங்க செஞ்சது அத்தனையும் சொதப்பல் தான்...
 
 
பணத்தோடு வந்த சுகுமாரும் நிரஞ்சன் கொடுத்ததைப் பத்தி எதுவும் பேசாததும் சேரவே அவரும் அக்காவுக்கு உடந்தையோன்னும் நினைச்சேன், அதோட இங்கே இருந்து அவர் பணத்தோடு கிளம்பினதுல இருந்து அவரின் போன் வெச்சு டிராக் செய்யத் தொடங்கினாம், அதையும் இவங்க அங்கே சொன்னதின் விளைவு தான் முதல் போன சுவிட்ச் ஆப், அடுத்து உங்களுக்குக் கால் வந்த நம்பர் வெச்சு டிரை செஞ்சோம், அதுவும் சீக்கிரமே ஆப் ஆச்சு... இதில் நாங்களே எதிர்பார்க்காதது நீங்க பணத்துக்குள்ள வெச்சு இருந்த உங்க இன்னொரு போன், ஆனா அதுவும் அடுத்தச் சில நிமிடங்களில் ஆப் ஆச்சு... உங்களுக்குப் புரியுதா..?” என்று கல்யாணின் முகம் பார்க்க எந்த உணர்வுகளும் இல்லாத ஒரு முகத்தோடு ‘ஆம்’ என்று தலையசைத்தான்.
 
 
ஆனாலும் அந்த அமைதி எல்லாம் சுகுமாருக்கு இல்லாமல் போக, “இப்படி ஒரு மனுஷன் இந்த உலகம் முழுக்கத் தேடினாலும் கிடைக்க மாட்டார், நீ ச்சீ..” எனக் கோபமும் வேகமுமாக அவளை அடிக்கப் பாய்ந்து விட்டான். கல்யாண் தான் அவனை ஒரே பார்வையிலும் அதட்டலிலும் தடுத்து நிறுத்தினான். மேலே சொல்லுங்க என்பது அதே உணர்வில்லாத முகபாவத்தோடு மீண்டும் சஞ்சய்யின் முகம் பார்த்தான்.
 
 
“கொஞ்ச நேரம் முன்னே சொன்னீங்களே பூஜை அறையிலேயே இருந்தாங்கன்னு, நாம எல்லாம் இங்கே இருக்க அவங்களுக்கு யார் தொந்தரவும் இல்லாம மெசேஜ் செய்ய அந்த இடம் தான் வசதியா இருந்தது... ஏன்னா கால் செய்ய முடியாது பாருங்க, ஆனா அவங்க முதல் முறை செய்யும் போதே அது என் கண்ணுல விழுந்ததையும் இவங்க பார்வையும் படபடப்பும் தான் அதைக் காட்டி கொடுத்ததுன்னும் அவங்களுக்குத் தெரியலை... இதில் இவங்க போனை ஆப் செஞ்சுட்டா இவங்ககளைக் கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைச்சுட்டாங்க, இது தான் அனுபவம் இல்லாததுனால வந்த பிரச்சனை, நாங்க சுகுமாரை பாலோ செஞ்சுட்டு தான் இருந்தோம்... இப்போ நிரஞ்சன் எங்க கஸ்டடில தான் இருக்காரு.. சிறப்பாகக் கவனிக்க வேண்டிய அவசியமே இல்லாம எல்லாத்தையும் சில அடி வாங்கினதுமே சொல்லி எங்க வேலையைக் குறைச்சிட்டாரு... இவங்க பிக்ஸட் அமௌன்ட் இத்தனை நாளா அவர்கிட்ட தான் இருந்து இருக்கு... நீங்க இவ்வளவு அப்பாவியா இருந்து இருக்க வேணாம் மிஸ்டர் கல்யாண்.. அதுக்காகச் சந்தேகப்படச் சொல்லலை.. ஆனா நம்மைச் சார்ந்தவங்களுக்கு அன்பும் அக்கறையும் எவ்வளவு முக்கியமோ அதே அளவு நம் பார்வை வளையமும் ரொம்ப முக்கியம்..” என்று சஞ்சய் முடித்துக் கொண்டான்.
 
 
ஒரு இறுக்கமான அமைதி அந்த இடத்தைச் சூழ, சில நொடிகளுக்குப் பிறகு மெல்ல திரும்பி சித்ராவை பார்த்தான் கல்யாண். “பாப்பா ஏன் இவ்வளவு நேரம் தூங்கறா..?” என்றான் அமைதியான குரலில்.
 
 
இப்படிக் கையும் களவுமாகப் பிடிப்பட்டதோடு தன் ஒட்டு மொத்த திட்டத்தையும் சஞ்சய் நேரில் இருந்து பார்த்தது போலப் புட்டு புட்டு வைக்கவும், உடல் பதறி நின்றிருந்தவள், அடுத்து சுகுமாரின் ஆத்திரம், கல்யாணின் அமைதி, நிரஞ்சனின் வாக்குமூலம் என்று அரண்டு தான் போய் இருந்தாள்.
 
 
சஞ்சய்யே சொன்னது போல இதெல்லாம் அவள் கொஞ்சமும் எதிர்பாராதது. கல்யாணை விட்டு விலக ஒரு காரணமாக இதை வைத்து பிரிந்து சென்று அவனால் வருமானமும் இல்லை குழந்தையைப் பார்த்துக்கவும் தகுதி இல்லை என்று குற்றம் சாட்டி விவாகரத்து கேட்டு வசதியில் உயர்ந்து நிற்கும் நிரஞ்சனை மணந்து கொண்டு செட்டில் ஆவதே அவளின் திட்டம்.
 
 
போலீஸ் தலையிட்டதே ஒரு பதட்டம் என்றால் இவர்கள் திட்டப்படி நாளை காலை குழந்தையைப் பார்க்கில் யாருமறியாமல் இறக்கி விட்டு விட்டால் அங்கு வருபவர்கள் யாராவது பார்த்து வீட்டில் கொண்டு வந்து சேர்த்துவிடுவார்கள் என்ற திட்டம் அப்படியே தடைப்பட்டது...
 
 
அடுத்து என்ன எப்படி என்ற கேள்வி வேறு பெரிதாக மனதில் எழுந்த நேரம் தான் சஞ்சய் யாரும் பணம் கேட்டு மிரட்டவில்லை என்றது, அதையே தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தன்னிடம் உள்ள சேமிப்பை இழக்கவும் இவன் தான் காரணம் என்று சொல்லி இன்னும் குற்றம் சுமத்தியது போலவும் ஆகும், குழந்தையை எளிதாக மீட்டது போலவும் ஆகும் என்று எண்ணி பதட்டத்தில் செயல்பட்டதால் தான் சஞ்சய் கூறியது போல அத்தனை ஓட்டைகள் இதில்.
 
 
இதனால் கல்யாணின் கேள்விக்கு எந்தப் பதிலும் அளிக்காமல் தலை குனிந்து நின்றிருந்தவளை சற்று நெருங்கிய கல்யாண், “ஆன்சர் மீ..” என்றான் அழுத்தமான குரலில்.
 
 
இதுவரை கல்யாணிடம் இப்படி ஒரு குரலை கேட்டிறாதவள் உடல் பதற, “அது.. அது... அவ அழாம இருக்க, கொஞ்சமா ஸ்லீப்பிங் பில்ஸ்..” என்று முழுமையாகச் சொல்லி கூட முடிக்கவில்லை. “பளார்” என்று கல்யாண் விட்ட அறையில் தூர போய்ச் சுருண்டு விழுந்து இருந்தாள் சித்ரா.
 
 
தன்னை அநியாயமாக ஏமாற்றி முட்டாளாக்க பார்த்திருக்கிறாள் என்றறிந்த போது கூட இவ்வளவு கோபம் கொள்ளாத கல்யாணின் இந்தச் சீற்றமே அவன் பிள்ளையின் மேல் கொண்ட பாசத்துக்குச் சாட்சியாக இருக்க... அவனின் அந்த அன்பை வியந்தே பார்த்தனர் அனைவரும்.
 
 
“இன்னும் மதியானத்துல இருந்து அவ எதுவும் சாப்பிட்டு கூட இருக்க மாட்டா... இதுல ஸ்லீப்பிங் பில்ஸ் வேறயா, இரண்டு வயசு குழந்தை டி அவ, தாயாடி நீ..? ச்சீ... உனக்கு அவனைக் கல்யாணம் செஞ்சுக்கணும்னா அதை என்கிட்ட நேராவே சொல்லி இருக்கலாமே நான் என்ன தடுக்கவா போறேன்... அது ஏன் குழந்தையை வெச்சு இப்படி ஒரு சீப் டிராமா... உன் பணத்துக்கு ஆசைப்படுவேன்னு நினைச்சியா, அது மேல் ஆசை இல்லாம இருந்ததுனால தான் இன்னைக்கு எனக்கு இந்த நிலைமை... உனக்கு டிவோர்ஸ் தானே வேணும் எத்தனை கையெழுத்து வேணும்னாலும் கேளு எங்கே வேணும்னாலும் போட்டு தரேன், பதிலுக்கு என் செல்லத்தை என்கிட்டே கொடுத்துட்டு போ... நீ யாரையும் கல்யாணம் செஞ்சுக்கோ என்ன வேணா பண்ணிக்கோ...” என்று ஆத்திரத்தோடு துவங்கி மன்றாடும் குரலில் முடித்தான்.
 
 
அவனை அந்த நிலையில் காண இவர்களுக்கே பாவமாகத் தான் இருந்தது. ஆனால் இதில் இவர்கள் செய்யக் கூடியது எதுவும் இல்லையே, “குழந்தையை நீங்க தான் பார்த்துக்கணும் மிஸ்டர் கல்யாண்... இவங்க இரண்டு பேரும் தான் பிஸியா கம்பி எண்ணுவாங்களே..” என்று சஞ்சய் சற்று இலகுவான குரலிலேயே பதிலளித்தான்.
 
 
“அதெல்லாம் வேண்டாம் ஆபிசர்... கேஸ் எதுவும் வேண்டாம்..” என்று அப்போதும் கூடப் பதறி அவர்களுக்காவே தான் பேசினான். “எங்களைப் பார்த்தா வேலை வெட்டி இல்லாதவங்க மாதிரியா இருக்கு... காலையில் இருந்து இங்கே தான் இருக்கோம்...” என்று கோபத்தோடு ஆறுமுகம் பதிலளிக்க.. இதற்கு மேல் தனக்கு இங்கு என்ன வேலை என்பது போல வெளியேறிய சஞ்சய் அங்கு அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்த நீருவை கண்டு திகைத்தான்.
 
 

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 11 months ago
Posts: 365
Topic starter  

ஹாய் பிரெண்ட்ஸ்..

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

KMKN (2) - 9 & 10

https://kavichandranovels.com/community/topicid/628/

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் 

கவி சந்திரா 


   
ReplyQuote
Page 2 / 2

You cannot copy content of this page