ஷௌர்யாவின் வார்த்தைகள் தந்த அதிர்ச்சியில் அப்படியே திகைத்து நின்றிருந்த அம்ரு அவளை மிரட்டுவதற்காகச் சும்மா சொல்வதாகவே முதலில் எண்ணினாள்.
ஆனால் அது அப்படி இல்லை என்பதை அடுத்த நாள் தன் ஒவ்வொரு அசைவிலும் அம்ருவுக்கு உணர்த்திக் கொண்டிருந்தான் ஷௌர்யா. எப்போதுமே தன் கை அசைவில் மட்டும் ஆட வைப்பதோடு கைக்குள்ளேயும் பிடித்து வைத்திருப்பவன் தான் என்றாலும் இது அதையும் கடந்து சற்று அளவுக்கு அதிகமான நெருக்கமாகவே இருந்தது.
அங்கிருந்தவர்களுக்கு இது எல்லாம் சாதரணமான ஒன்றாகத் தான் தெரிந்தது. புதிதாகத் திருமணம் முடித்து இருப்பவர்கள் என்பதோடு ஷௌர்யா வேறு அதைக் காதல் திருமணம் என்று அனைவரிடமும் கூறி இருந்ததால் அந்த நெருக்கத்தைப் பலர் சிரிப்போடு ரசிக்கவே செய்தனர்.
ஷௌர்யாவை அறிந்த இத்தனை நாளில் அவன் பல முறை தொட்டு இருந்தாலும் அதில் ஒரு ஒட்டா தன்மையை அம்ரு பலமுறை உணர்ந்து இருக்கிறாள். மற்றவர் பார்வைக்கு இருக்கும் நெருக்கம் உண்மையில் ஒரு விலகலை அவளுக்குப் பலமுறை பல இடங்களில் உணர்த்தி கொண்டே தான் இருந்தது.
ஆனால் இப்போது அந்த விலகலை அம்ருவை ஒரு துளியும் உணர விடா தொடுகையாக இருந்தது ஷௌர்யாவின் நெருக்கம். இத்தனை நபர்கள் கூடி இருக்கும் இடத்தில் நெளிந்து ஒதுங்கி எல்லாம் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்ப விரும்பாமலே பல்லை கடித்துக் கொண்டு இருந்தாள் அம்ரு.
ஆனால் அவளின் பொறுமையையும் சோதிக்கும் படி அன்று மாலை சங்கீத் நடைபெற்றது. மணமகளைச் சேர்ந்த உறவினர்கள் நண்பர்கள் எல்லாம் ஒரு பக்கமும் மணமகனை சேர்ந்தவர்கள் எல்லாம் மற்றொரு பக்கமுமாக நின்று கொண்டு தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு நடனங்களை அரங்கேற்றிக் கொண்டு இருந்தனர்.
அதுவரை உள்ளுக்குள் தவிப்போடும் வெளியில் புன்னகை முகமாகவும் அமர்ந்திருந்த அம்ருவுக்கு இயல்பாகவே அவளுக்குள் இருக்கும் நடனத்தின் மேல் உள்ள ஈர்ப்பினால் தன்னையும் மீறி மெல்ல மெல்ல அதில் லயிக்கத் தொடங்கினாள்.
ஒரு கட்டத்தில் போட்டி உச்ச கட்டத்தை எட்டவும், உற்சாக மிகுதியில் தன்னை மறந்து அதில் கவனமாகி யார் வெற்றி பெற போகிறார்கள் என்று சுற்றிலும் அமர்ந்திருந்த பெண்கள் தங்களுக்குள் பேசி கொண்டிருக்க.. அதில் ஒருத்தி அம்ருவிடம் திரும்பி அவளின் கருத்தையும் கேட்டாள்.
சாதாரணமாக மற்றவர்கள் போல் இவர்கள் ஆடியது இப்படி இருந்தது அதனால் இவர்கள் தான் வெற்றி பெறுவார்கள் என்று எதையாவது சொல்வாள் என எண்ணியே கேட்க, அம்ருவோ தன்னை மறந்து அதில் லயித்து இருந்ததால் எந்த இடத்தில் யார் தவறு செய்தது என்று தொடங்கி எந்த இடத்தில் யார் எதிர்பாராமல் கொடுத்த சிறு அசைவும் கூட அவர்களின் நடனத்தை வெகுவாக ரசிக்க வைத்தது என்பது வரை அக்குவேறு ஆணிவேராகப் பிரித்துக் குற்றால அருவி போன்ற கலகல பேச்சோடு கண்கள் பளபளக்க முகம் மலர கூறினாள்.
இதில் அருகில் இருந்தவர்கள் அனைவரும் அவளைத் திரும்பி வியப்பாகப் பார்க்க.. அதிலேயே தன் செய்கை புரிய, வெட்கத்தோடு தலை குனிந்தவளுக்கு அவளின் மறுபுறம் அமர்ந்திருந்தவனும் தன் இந்த ஆர்வத்தையும் புன்னகையையும் கவனித்துக் கொண்டிருக்கிறான் என அப்போது தெரியவில்லை பாவம்.
அந்தப் போட்டிக்கான பரிசை அம்ரு சொன்ன நபருக்கே சரியாகக் கொடுத்து இருந்தார் மிசஸ் ஜெயின். இத்தனைக்கும் அவர் அம்ரு பேசியதை கேட்க வாய்ப்பே இல்லை. அவர் அமர்ந்திருந்த இடத்திற்கு நேரெதிராகச் சற்று தொலைவிலேயே இவர்கள் அமர்ந்திருந்தது.
அப்படி இருந்தும் அங்குக் குழுவாக இணைந்து இருந்தவர்கள் சேர்ந்து அம்ருவின் கூற்றே சரி என்பது போலத் தேர்வு செய்யவும், அருகிலிருந்தவர்கள் எல்லாம் திரும்பி அம்ருவை பாராட்ட துவங்கினர். அதற்கு அவள் வெட்க புன்னகையோடு பதிலளிக்கத் துவங்கும் முன் ஒரு சிறு இடைவெளி கொடுத்திருந்த கம்பளிபூச்சிக்கு மீண்டும் வேலை கொடுத்திருந்தான் ஷௌர்யா.
அதில் திடுக்கிட்டு அம்ரு திரும்பி ஷௌர்யாவை பார்க்க.. “ஒரு முக்கியமான கால் ஹனி.. சீக்கிரம் வந்துடறேன்..” என்று கொஞ்சலான குரலில் சொல்லிவிட்டு எழுந்தவனுக்கு மனதுக்குள் திடுக்திடுக்கென்று மத்தளச் சத்தம் கேட்க துவங்கியதையும் மீறிச் சம்மதமாகத் தலையசைப்பதே அவளின் நிலையாக இருந்தது.
“அவ்வ்வ்.. செம்ம லவ், பய்யா இப்படி எல்லாம் ஒரு இடத்தில் உட்கார்ந்து நாங்க எல்லாம் இதுவரை பார்த்ததே இல்லை.. எவ்வளவு முக்கியமான பங்ஷனா இருந்தாலும் வந்த வேகத்துலேயே கிளம்பி போயிடுவாங்க.. ஆனா இப்போ மூணு நாள்.. இவ்வளவு அமைதியா ஒரே இடத்தில் இருக்காங்கனா அது உங்களால மட்டும் தான்.. இதோ இப்போ கூட எழுந்து போகப் பர்மிஷன் வாங்கற அளவுக்கு உங்க அன்புல பய்யாவை கட்டி வெச்சு இருக்கீங்க.. இது தான் லவ் செய்யும் மேஜிக் இல்லை..” என்றெல்லாம் அங்கிருந்த இளம் பெண்கள் மாற்றி மாற்றி அம்ருவை புகழ்ந்து கொண்டிருந்தனர்.
அதற்கெல்லாம் தன் வழக்கம் போலவே மென் புன்னகையை முகத்தில் பூசிக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தவளுக்குத் தானே தெரியும் அந்த நெருக்கத்திற்கும் இழைவுக்கும் பின்னால் மறைந்து இருக்கும் இறுக்கம்.
அடுத்து டிஜே ஒவ்வொரு பாடலாக மாற்றி மாற்றிப் போட, அதற்கு அங்கிருப்பவர்களில் இருவர் ஜோடியாக முன்னால் வந்து ஆட வேண்டும். அந்தப் பாடல் மாற்றும் சிறு இடைவெளியில் ஜோடிகள் மாறி இருப்பர். இப்படியாகக் கொண்டாட்டமும் குதுகலமுமாக ஆட்டம் கலை கட்டிக் கொண்டு இருந்தது.
சுற்றிலும் ஆட்கள் அமர்ந்து ஆரவாரித்துக் கொண்டிருக்க, அடுத்து ஆட நின்று இருந்தவர்களில் இருந்து எந்த ஜோடி மேடை ஏற போகிறது என்ற எந்தக் குறிப்பும் இல்லாமல் திடீரென ஒரு ஜோடி அடுத்தப் பாட்டு ஒலிக்கத் துவங்கும் முன் அங்குச் சென்று இருப்பர்.
இதில் யார் அடுத்து ஆட போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் அவர்கள் வந்து நின்றதும் ஆரவாரமும் அவர்கள் ஆட துவங்கியதும் கைதட்டலுடன் தொடரும் உற்சாகக் கொண்டாட்டமுமாக நகர்ந்து கொண்டிருந்தது நிமிடங்கள்.
அப்போது ஒரு பாடல் முடிந்து அடுத்தப் பாடல் துவங்க இருந்த நிலையில் யாரும் எதிர்பாரா வண்ணம் அம்ருவோடு ஆடுவதற்காக நடுவில் வந்து நின்றிருந்தான் ஷௌர்யா.
இதைக் கொஞ்சமும் எதிர்பாராதவர்கள் வழக்கத்தை விடக் கூச்சலை அதிர விட்டார்கள். அந்தக் கப்பலின் மேல் தளத்தில் திறந்த வெளியில் அலைகடலின் இரைச்சலை எல்லாம் ஒன்றுமில்லாமல் செய்து கொண்டிருந்தது அவர்களின் ஆர்பாட்ட சத்தம்.
இந்தக் கூச்சலையும் ஆரவாரத்தையும் கண்ட டிஜே அவன் போட எண்ணி இருந்த படலை மாற்றி விட்டு இளம் காதல் ஜோடிகள் என எண்ணி,
தேரி மேரி மேரி தேரி
ப்ரேம் கஹானி ஹே முஷ்கில்
தோ லபூஜூன் மெய்ன் ஹே
பயானா ஹோ பாயே
என்று ஒலிக்கவிட, “ஓ” என்ற ஆரவார கூச்சலுக்கு இடையே திடீரென இழுத்து வரபட்டதால் ஏற்பட்ட அதிர்வே மாறாமல் நின்றிருந்தவளின் இடையில் கை கொடுத்து தன்னோடு சேர்த்துப் பின்னால் இருந்து இறுக அணைத்தப்படி ஆடியவன், அடுத்து தன் கை பொம்மை போல் அவளைப் பாவித்து மேலே தூக்கி கீழே இறக்கி சுற்றி சுழற்றி என்று ஆடியதில் இன்னமும் அதிர்வு அதிகரித்து உறைந்து இருந்தாள் அம்ரு.
அவளின் அந்த அசைவற்ற நிலை இன்னும் அவனுக்குச் சாதகமாகப் போக, தன் விருப்பத்துக்கு அவளை வளைத்துக் கொண்டிருந்தான் ஷௌர்யா. மிக நெருக்கமான அணைப்புகளும் வெகு அழகான நடன அசைவுக்களுமாகப் பாடலின் வரிகளுக்கும் இசைக்குமேற்ப ஆடல் நீண்டு கொண்டே செல்ல.. சூழ்ந்திருந்த கூட்டத்தினரோடு சேர்ந்து டிஜேவும் பாடலை நிறுத்தவும் மாற்றவும் மறந்து இருந்தான்.
எனவே சில வரிகளும் இசையுமே ஒலிக்க வேண்டிய இடத்தில் முழுப் பாடலும் ஒலித்துக் கொண்டிருந்தது. பாடல் முடியவும், அம்ருவை தன் மேல் முழுவதாகச் சாய்த்து தூக்கி பிடித்துச் சுற்றி நிறுத்தினான் ஷௌர்யா. அதில் சுற்றி இருந்தவர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி ஆர்பரித்தனர்.
“வாவ் எஸ்வி உங்களுக்குள்ளே இப்படி ஒரு காதல் மன்னனா..?!”
“எஸ்வி என்ன லவ்..? என்ன ரொமான்ஸ்..? வாரேவாவ்..”
“மிசஸ் எஸ்வி.. இதுவரை இப்படி ஒரு எஸ்வியை நாங்க பார்த்தே இல்லை..”
என்பது போன்று பற்பல பாராட்டுதல்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் வந்து கொண்டே இருந்தன. ஷௌர்யா அவற்றிற்கு எல்லாம் எப்போதும் போல் பெரிதாகப் பதில் அளிக்கவோ புன்னகையோடு நின்று அவர்களின் புகழாரங்களை ஏற்றுக் கொள்ளவோ எல்லாம் இல்லை.
தன் வழமை போலவே விறுவிறுவென அங்கிருந்து நகர்ந்துவிட்டான். அங்கிருந்து வெளியேறும் வழியில் நின்றிருந்த சஷாங்கின் மேல் ஷௌர்யாவின் பார்வை கூர்மையாகப் பதிந்து விலகும் முன் ஷௌர்யாவின் இதழ்கள் ஒரு இகழ்ச்சியான கேலி புன்னகையை அவனை நோக்கி சிந்தின.
அடுத்து சற்று தள்ளி நின்றிருந்த ஜாஷாவின் பக்கம் பார்வையைத் திருப்பியவனின் கண்கள் சிவந்து ஆத்திரத்தோடு சேர்த்து வெறுப்பையும் உமிழ்ந்தன. அதில் மெல்ல அங்கிருந்தவர்களின் பின் அவள் தன்னை மறைத்து கொண்டாள்.
சாதாரணமாக இருவரும் அவர்கள் அறையை நோக்கி வேகமாகச் செல்வது போல் இருந்தாலும் அம்ருவை கிட்டத்தட்ட இழுத்து சென்று கொண்டிருந்தான் ஷௌர்யா.
வார்த்தையில் சொல்ல முடியாத அளவுக்கு அம்ருவின் மேல் ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்தான் ஷௌர்யா. அவன் தன் போன் காலை முடித்துக் கொண்டு திரும்பிய போது அனைவரின் கவனமும் ஆடலின் மீதே இருக்க.. கூட்டமாக உற்சாகக் குரல் எழுப்பியாவாறே அனைவரும் நெருங்கி நின்று இருந்தனர்.
அம்ருவை நோக்கி சென்று கொண்டிருந்தவனின் பார்வையில் ஜாஷா ஏதோ சஷாங்கிடம் சைகையில் கூறுவதும் அவன் சிறிது சிறிதாக அம்ருவை நோக்கி முன்னேறுவதும் தெரிந்தது.
இவர்கள் நோக்கம் என்ன என்று கூர்மையான பார்வையோடு ஷௌர்யா அவர்களை அளந்தவாறே முன்னேறும் போது தான் சஷாங் அடுத்ததாக ஆடுவதற்காக அம்ருவை சட்டென இழுத்துக் கொண்டு செல்ல எண்ணி நெருங்குவது புரிந்தது.
அதிலும் ஜாஷாவின் கண்களில் தெரிந்த விஷமம் இதில் வேறு எதுவோ ஒளிந்து இருப்பதை ஷௌர்யாவுக்கு உணர்த்தியது. அதே நேரம் சஷாங் அம்ருவின் இடையில் கை கொடுத்து அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்தது போல் பிடிக்க முயன்றவாறு அம்ருவை நெருங்கினான்.
ஆனால் இவை எதையுமே கவனிக்காமல் ஆட்டத்தின் மேல் மட்டுமே கவனமாக நின்று இருந்தாள் அம்ரு. தன்னைச் சுற்றி நடப்பது கூடத் தெரியாமல் அந்த அளவுக்கு ஆட்டத்தின் மேல் என்ன மயக்கம் என்று அம்ருவின் மேல் எழுந்த எரிச்சலே அவனை அவளே இந்த ஆட்டத்தை வெறுக்கும் அளவுக்குச் செய்ய வேண்டும் என்ற ஆத்திரத்தை உண்டு செய்ததில் சஷாங்கை நொடி பொழுதில் முந்திக் கொண்டு அவளை இழுத்துக் கொண்டு அங்குச் சென்று இருந்தான்.
அம்ருவின் மேல் தன்னவள் என்ற என்னமோ உரிமையோ இல்லை என்றாலும் தன் மனைவி என்று அனைவரிடமும் அறிமுகபடுத்தபட்டு இருப்பவளை கொண்டு யாரோ தங்களுக்குச் சாதகமான திட்டங்கள் தீட்டுவதும் அதற்கு இடமளிப்பது போல் இவளும் இருப்பதையும் கண்டே இப்படி நடந்து கொண்டிருந்தான் ஷௌர்யா.
இப்போது அம்ரு அவர்களைக் கவனிக்காமல் நடந்தது மட்டுமில்லாமல் தானும் தன் தரத்தில் இருந்து இறங்கி இது போல மற்றவர்களின் முன் காட்சி பொருள் போல் ஆடுவதற்கும் காரணமாகிவிடவும் அவளின் மேல் கொலைவெறியோடு இழுத்து சென்று கொண்டிருந்தான் ஷௌர்யா.
அறைக்குள் நுழைந்து ஷௌர்யா அமிலமாகத் தன் வார்த்தைகளை அவள் மேல் கொட்டுவதற்கு முன், கண்ணீரோடு அவனைக் கையெடுத்து கும்பிட்டவள், “உங்களைக் கையெடுத்து கும்பிடறேன்.. இதுவரை வார்த்தையில் வதைத்தது போலவோ இல்லை கண்ணாடி சில்லுல நடக்கவிட்டது போலவோ இல்லை அதை விடப் பல மடங்கு வலி கொடுக்கக் கூடிய தண்டனையா எதை வேணாலும் கூட கொடுங்க.. ஆனா இப்போ.. இது.. இப்படி.. எல்லாம் வேணாம் பிளீஸ், இது.. இது என்னால முடியலை..” என்று மன்றாடினாள்.
அதில் கொட்டி கவிழ்க்க இருந்த வார்ததைகளை அப்படியே தனக்குள் நிறுத்தி கொண்டு அம்ருவை ஒரு ஏளன பார்வையில் அணுஅணுவாக அளந்தவன், “வலிக்குதா..?! வலிக்கட்டும்.. நல்லாஆஆஆ வலிக்கட்டும்ம்ம்ம்.. அப்போ எனக்கு இது தான் வேணும்..” என்று கண்கள் பளபளக்க கூறி, “இனி இது இப்படியே திவ்யமா தொடரும் மை டியர் போண்டா டீ.. கெட் ரெடி பார், கம்பளி, பல்லி, பூரான் அட்டாக்ஸ்..” என்று அம்ருவை பார்த்துக் கண் சிமிட்டி விட்டு வெளியேற முயன்றான்.
“உங்களுக்கு என்ன தான் பிரெச்சனை..?! ஏன் என்னை இப்படி அணுஅணுவா கொல்றீங்க..?!” என வெகு நாளைக்குப் பிறகு வெடித்தாள் அம்ரு. “என் பிரச்சனையைச் சொன்னா தீர்த்து வைக்கற அளவுக்கு நீ பெரிய ஆளும் இல்லை.. ஆறுதல் சொல்ல எனக்கு நெருக்கமானவளும் இல்லை.. ஆனா தெரிஞ்சுகிட்டே தான் ஆகணும்னு நீ விரும்பினா நல்லா கேட்டுக்கோ இப்போதைக்கு என்னோட ஒரே பிரச்சனை நீ.. நீ தான்..” என்றான் முகம் சிவக்க ஆத்திரத்தில் நரம்புகள் புடைக்கும் அளவுக்குக் கோபத்தின் உச்சத்தில்.
இவ்வளவு இவன் ஆத்திரப்படும் அளவுக்குத் தன் மேல் என்ன கோபம் எனப் புரியாமல் அம்ரு விக்கித்து நின்றிருந்தாள். “உன்னை ஒவ்வொரு முறையும் பார்க்கும் போதும், அதுவும் என் வீட்டில் என் கூட நீ இருக்கறதை பார்க்கும் போதும், அப்படியே உன்னை அணுஅணுவா சித்ரவதை செஞ்சு.. துடிதுடிக்க வைக்கணும்னு தான் தோணுது.. அதுக்காக எந்த எல்லைக்கும் போகணும்னு கூடத் தோணுது.. ஆனா எனக்குன்னு ஒரு தகுதி இருக்கே அதான் இத்தனை நாள் அதெல்லாம் வேணாம்னு தள்ளி நின்னேன்.. எப்போ நான் என் தரத்தில் இருந்து கீழே இறங்கி மத்தவங்களுக்குக் காட்சி பொருளாக நீ காரணமா இருந்தியோ இனி..” என்று சொல்லி நிறுத்தியவன், தலையும் புரியாமல் வாலும் புரியாமல் விழித்துக் கொண்டு நின்றிருந்தவளை ஒரு வேகத்தோடு நெருங்க.. அதில் திடுக்கிட்டுப் பின்னால் நகர்ந்தாள் அம்ரு.
“இனி ஒவ்வொரு நாளும் நீ ஏன்டா வாழறோம்னு நினைக்கணும்.. நினைக்கப் போறே.. நினைக்க வைப்பேன்..” என்று பல்லை கடித்துக் கொண்டு எச்சரிக்கையா..?! அபாய அறிகுறியா..?! எனப் பிரித்தறிய முடியா குரலில் விரல் நீட்டி எச்சரித்தவன், “அதெல்லாம் வேணாம்னு நீ நினைச்சா..” என்று ஒரு மாதிரியான குரலில் கூறி மீண்டும் சிறு இடைவெளிவிட்டு, “நீயாவே தற்கொலை செஞ்சுக்கோ..” என்று இலகுவாகத் தோள்களைக் குலுக்கியவாறு கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.
கதவிற்கு வெளியே கால் எடுத்து வைத்தவனின் காதில் “நான் ஏன் தற்கொலை செஞ்சுக்கணும்..” என்று வேகமாக வந்து மோதியது அம்ருவின் குரல்.
அதில் மீண்டும் திரும்பி உள்ளே ஷௌர்யா வரவும், “இப்போ நடக்கற நடந்துட்டு இருக்க எதுக்குமே நேரடியா நான் காரணம் இல்லைன்னு எனக்கு நூறு சதவீதம் நல்லாவே தெரியும்.. இதுக்கு முன்னே உங்களை நான் பார்த்ததும் இல்லை, பழகினதும் இல்லை.. நல்லவேளை இப்படி ஒரு ஆளை இதுக்கு முன்னே என் வாழ்க்கையில் சந்திக்கவே இல்லைன்னு இந்த இடைப்பட்ட நாளில் எத்தனை முறை நினைச்சு இருக்கேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்.. அதனால என்னால தைரியமா சொல்ல முடியும் உங்களுக்கு எந்தப் பிரச்சனையோ பாதிப்போ என் மூலமா வந்து இருக்கவும் வாய்ப்பே இல்லை.. அப்படி இருந்தும் உங்க வீட்டில் உங்க அத்தனை குத்தல்களையும் கொடுமைகளையும் தாங்கிட்டு இன்னும் இருக்கேன்னா அதுக்கு ஒரே காரணம் என் அண்ணன் தான்..” என்று ஆவேசமாகப் பேசி கொண்டு இருந்தவளை கேலியான புருவ உயர்வோடு பார்த்தவாறே தன் இரு பேண்ட் பாக்கெட்டிலும் கை விட்டுக் கொண்டு அனைத்தையும் கேட்டுக் கொண்டே நின்று இருந்தவன், “இல்லைனா மேடம் என்ன செஞ்சு இருப்பீங்க..?!” எனக் கேட்டவாறே அழுத்தமான கால் அடிகளோடு அம்ருவை நெருங்கினான்.
“என்ன வேணா செஞ்சு இருப்பேன்.. அது அந்த நேரத்து நிகழ்வை பொறுத்தது..” என்று கொஞ்சமும் அவனைக் கண்டு பயப்படாமல் அம்ருவும் பதில் கொடுத்தாள்.
“ம்ஹும்.. ஓ, தாங்கள் சொல்ல வருவதை வைத்து பார்த்தால் நான் உங்களைத் தொட்டா மேடம் கண்ணகி, என்னை அப்படியே எரிச்சுடுவீங்க.. அதானே..” என்றான் அப்பட்டமாகக் கிண்டல் வழியும் குரலில்.
“தேவைபட்டா அதையும் செய்வேன்..” என்று அம்ரு கூறி முடித்த அடுத்த நொடி ஷௌர்யாவின் கை சிறையில் இருந்தாள் அவள். ஒரு இன்ச் கூட அசைய முடியாத அளவுக்கான அழுத்தமான அணைப்பை அவனின் ஒற்றைக் கையிலேயே சாத்தியமாக்கி இருந்தான் ஷௌர்யா.
“எங்கே எரிக்கவே இல்லை..” என்று அம்ருவின் காதில் தன் ஹஸ்கி வாய்சில் கேட்டவன், “ஒருவேளை.. இதுக்கு எல்லாம் மேடம் எரிக்க மாட்டீங்களோ, இதுக்கும் மேலே போகணுமோ..” என்று சீண்டல் குரலில் கேட்டவனின் கைகள் அவளிடம் தன் அத்துமீறலை தொடங்கி இருந்தது.
அதில் அழுகையும் ஆத்திரமுமாக அவனிடமிருந்து விலக அம்ரு எடுத்த எந்த முயற்சியுமே ஷௌர்யாவிடம் பலிக்கவில்லை. ஒற்றைக் கை சிறையே அவளுக்கு அத்தனை இரும்பு பிடியாக இருந்தது.
ஆனாலும் தன் முயற்சியை விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தவளை விஷமமாகப் பார்த்தவாறே தன் மற்றொரு கையில் அலைபேசியை எடுத்தவன், யாருக்கோ அழைக்க, அது முதல் ரிங்கிலேயே எடுக்கப்பட்டது. “ம்ம்.. அந்த சூர்ய நாராயணமூர்த்தி எங்கே என்ன செஞ்சுட்டு இருக்கார் ஹரி..?!” என்று ஷௌர்யாவின் கேலி கலந்த குரலில் அதுவரை விடுப்பட முயன்று கொண்டிருந்த தன் முயற்சியைக் கை விட்ட அம்ரு கலக்கத்தோடு அவனைத் திரும்பி பார்த்தாள்.
முகத்தோடு முகம் உரசி கொள்ளும் நெருக்கத்தில் இருந்தவளின் கலக்கம் சுமந்த விழிகளைக் கேலியான விழிகளோடு எதிர் கொண்டவன், அம்ருவை பார்த்துக் கொண்டே அந்தப் பக்கம் காத்திருந்தவனிடம், “ஓஹோ.. கொஞ்சமா போர் அடிக்குது ஹரி.. லைட்டா விளையாடி பார்ப்போமா..?!” என்றான்.
அதில் அம்ருவுக்கு மனம் படபடவென அடித்துக் கொள்ளத் துவங்கவும், “நோ நோ.. கன் ஷூட் எல்லாம் வேணாம், சின்னதா ஏதாவது ஒரு ஆக்ஸிடெண்ட்..” என்று யோசிப்பது போல இழுத்து நிறுத்தியவனைப் பயமும் பதட்டமுமாகப் பார்த்த அம்ரு மறுப்பான தலையசைப்போடு எதையோ சொல்ல முயன்றாள்.
ஆனால் அதைக் கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் அலைபேசியில் கவனத்தைத் திருப்பிய ஷௌர்யா, “ஓ.. மாமனும் மச்சானும் ஆல்வேஸ் ஜோடியா தான் சுத்தறானுங்களா..!! இரண்டு பேருக்கும் சேர்த்தே பொங்கலை போட்டுடுவோமா..?!” என்று யோசிப்பது போல அவனுக்குள்ளேயே கேட்டுக் கொண்டான்.
“போதும்.. போதும்ம்ம்..” என்று அதற்கு மேலும் இவற்றை எல்லாம் கேட்க முடியாமல் காதை மூடி கொண்டு கதறிய அம்ரு, “இப்போ என்ன நீங்க என்ன வேணாலும் செய்வீங்க.. நான் உணர்வே இல்லாத ஜடம் போல இருக்கணும்.. அதானே.. அப்படியே இருக்கேன்.. பிளீஸ், எனக்கு உறவுன்னு சொல்லிக்க வேற யாருமே இல்லை.. இதையெல்லாம் நிறுத்திடுங்க..” என்று கெஞ்ச துவங்கினாள்.
அம்ரு பேச துவங்கிய போதே தன் அலைபேசியை அணைத்து இருந்தவன், “அண்ணனை பத்தி பேசும் போது கூட வராத எமோஷன் கண்ணனை பத்தி பேசும் போது ஹெவியா வருதுனா.. அந்த அளவுக்கு தெய்வீக காதல்.. ஹ்ம்ம்.. அது என்ன மண்ணா வேணா இருந்துட்டு போகட்டும்.. எனக்கு நான் நினைக்கறது மட்டும் தான் நடக்கணும்.. புரியுதா, இந்த ஸ்டேஜ்ல ஆடற நியாபகத்துல புரட்சி செய்யறேன்.. புண்ணாக்கு செய்யறேன்னு எதையாவது செய்யணும்னு கூட இல்லை.. செய்ய நினைச்சாவே அங்கே ஒருத்தனை தூக்கிடுவேன்.. அது யாரா.. யாராஆஆ வேணாலும் இருக்கலாம்..” என்றவன் அதுவரை அணைத்து பிடித்து நின்று இருந்தவளை உதறித் தள்ளினான்.
அதில் தடுமாறி விழ போனவள், தன்னை நிலைபடுத்திக் கொண்டு நின்று, “நான் இனி எதுவும் சொல்லலை..” என்றாள். “ஹா ஹா.. சொன்னாலும் எந்தப் பயனும் இல்லைன்னு உனக்கே இதுக்குள்ள புரிஞ்சு இருக்கும்.. இருந்தாலும் ஒண்ணு சொல்றேன்.. ஏற்கனவே உன் மேலே கொலைவெறியில் என்ன செய்யலாம் எப்படிச் செய்யாலாம்னு இருந்த என்னைச் சீண்டி வேற விட்டு இருக்க.. இது உனக்குக் கொஞ்சமும் நல்லதே இல்லை.. என் அதிரடியை உன்னால தாங்கவே முடியாது.. பெட்டர் நீ வேணா தற்கொலை செஞ்சுக்கோயேன், அதுக்கு என்ன ஹெல்ப் வேணும்னாலும் நான் செய்யறேன்..” என்றான்.
“உங்களுக்கு நான் எதிர்ப்பை காட்டக் கூடாது.. அவ்வளவு தானே, அதைச் செய்ய மாட்டேன்.. ஆனா தற்கொலை எல்லாம் நான் செஞ்சுக்க மாட்டேன்.. எந்தப் பிரெச்சனைக்கும் தற்கொலை ஒரு தீர்வு இல்லை.. அப்படி இருக்கும் போது நடக்கும் எந்த விஷயத்திலும் என் மேல் தப்பே இல்லைனும் போது நான் ஏன் சாகணும்.. எப்படி நம்ம பிறப்புக்கு நாம காரணம் இல்லையோ அதே போல நம்ம இறப்புக்கும் நாம காரணமா இருக்கக் கூடாதுன்னு நினைக்கறவ நான்.. உங்களுக்கு அவ்வளவு அக்கறை இருந்தா நீங்களே என்னைக் கொன்னுடுங்களேன்..” என இத்தனைக்கும் பிறகும் தைரியமாகப் பேசி இருந்தாள் அம்ரு.
கேலியாக அம்ருவை பார்த்து பேசி விட்டு திரும்பி செல்ல முயன்றவனின் கால்கள் அவளின் வார்த்தைகளில் அப்படியே நின்றன. அத்தனை நேரம் இருந்த பார்வை எல்லாம் மாறி ஒரு பொருள் விளங்கா பார்வையில் புருவம் சுருங்க முகவாயை தேய்த்தவாறே சில நொடிகள் அம்ருவை பார்த்தவன் எதுவும் பேசாமல் வெளியேறி இருந்தான்.
அடுத்த நாள் நடந்த திருமணக் கோலாகலத்தில் ஷௌர்யா தான் சொன்னது போலவே அவளைக் கைக்குள் வைத்து படுத்தி எடுத்துக் கொண்டிருந்தான். வழக்கம் போலவே ஏற்கவும் முடியாமல் எதிர்க்கவும் முடியாமல் தன் உடன் பிறந்தவனை மட்டுமே மனதில் நிறுத்தி உள்ளுக்குள் தவித்துக் கொண்டும் வெளியில் சிரித்துக் கொண்டும் இருந்தாள் அம்ரு.
அன்று மாலை ஷௌர்யா குளியலறையில் இருந்த போது அவனின் அலைபேசி விடாமல் ஒலிக்கத் தொடங்கியது. அதன் அழைப்பொலியில் இருந்தே அழைப்பது யார் என அறிந்து வேகமாக வந்து எடுத்து இருந்தான் ஷௌர்யா.
“தாதி..”
“ஓ.. தாதி.. பரவாயில்லையே இன்னும் நான் கூட உன் நியாபகத்தில் இருக்கேனே..!!” என்று அந்தப் பக்கமிருந்து கோபம் கலந்த கிண்டலோடு கம்பீரமாக ஒலித்தது குரல். (உரையாடல் முழுவதும் ஹிந்தியில் நடைபெறுவதால் நாம் தமிழில் பார்ப்போம்)
“கியா தாதி.. உங்களை நான் மறப்பேனா.. இல்லை மறக்க தான் முடியுமா..” என்று வழக்கத்திற்கு மாறாக இறங்கி ஒலித்தது ஷௌர்யாவின் குரல்.
“நீ செஞ்சு இருக்கக் காரியத்துக்கும் உன் வார்த்தைக்கும் கொஞ்சமும் சம்பந்தமே இல்லையே ஷௌரி..”
“என்ன.. எதைப் பத்தி.. பேசறீங்க தாதி..?!” என்று கேட்ட ஷௌர்யாவின் குரலில் லேசான தடுமாற்றம் தெரிந்தது. அதுவரை தன் உடைகளை எல்லாம் மடித்து வைத்துக் கொண்டிருந்த அம்ரு அவர்களின் பேச்சு புரியவில்லை என்றாலும் இத்தனை நாளில் முதல் முறையாக ஷௌர்யாவின் குரல் தடுமாறுவதைக் கண்டு நிமிர்ந்து பார்த்தாள்.
“இப்போ தான் நியூஸ்ல மிஸ்டர் ஜெயின் வீட்டுக் கல்யாணத்தைப் பார்த்தேன்..” என்று அவர் சொன்னதை வைத்தே எதைப் பற்றிப் பேசுகிறார் என்று புரிந்துக் கொண்டவன், “அது.. தாதி..” என்று தொடங்கவும், “உன்னோட ஷாதி நியாயமா எனக்குச் சந்தோஷத்தை கொடுத்து இருக்கணும்.. ஆனா இப்போ..” என்று நிறுத்தியவர், “என்கிட்ட சொல்லணும்னு தோணலையா.. இல்லை, இப்படி ஒருத்தி இருக்கான்னே மறந்து போச்சா..” என்றார்.
“ஓ.. நோ தாதி.. உங்ககிட்ட மறைக்கணும்னு நான் ஏன் நினைக்கப் போறேன்..” என்று சமாதனம் செய்ய ஷௌர்யா முயல, “அப்போ உன் காதல் மனைவி அதைச் செய்யச் சொன்னாளோ..?!” என்று அழுத்தத்தோடு ஒலித்தது ராணி மதுமிதா வர்மாவின் குரல்.
“அப்படி.. அப்படி.. எல்லாம் எதுவும் இல்லை தாதி..” என ஷௌர்யா இடையிடவும், “ஓஹோ.. உங்க சகதர்மனியை பத்தி நான் எதுவும் சொல்லவே கூடாதோ.. டிகே.. இன்னைக்கே நீ இங்கே வந்தாகணும்..” என்றவர், அடுத்து ஷௌர்யாவின் வார்த்தையைக் கேட்பதற்குக் கூட இணைப்பில் இல்லை.
அலைபேசியையே சில நொடிகள் பார்த்தவன், அடுத்தச் சில நிமிடங்களில் தனி விமானம் மூலம் தன் பிறந்த ஊரை நோக்கி அம்ருவோடு சென்று கொண்டிருந்தான்.
இங்கிருந்து கிளம்பிய பிறகு செய்வதற்கென்றே அம்ருவை பழி தீர்க்க சில திட்டங்களை ஷௌர்யா வைத்திருந்தான். இப்போது முற்றிலும் அவனின் பயணத் திட்டம் மாறியதில் அம்ருவுக்கு அங்கு என்ன வைத்து காத்திருக்கிறதோ..?!!
தொடரும்..
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா