All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

உன்னை அமுதவிஷமென்பத...
 
Notifications
Clear all

உன்னை அமுதவிஷமென்பதா..!! (முதல் பாகம்) - Story Thread

Page 2 / 3
 

Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 month ago
Posts: 104
Topic starter  

ஹாய் டியர்ஸ்

"உன்னை அமுதவிஷமென்பதா..!!" கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

UAV - 7

https://kavichandranovels.com/community/comments-and-discussions/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%85%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%ae%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%be-comment-thread/

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா

This post was modified 2 weeks ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 month ago
Posts: 104
Topic starter  
விஷம் – 8
 
ஷௌர்யா தன்னைக் கொஞ்சமும் மனித தன்மையே இல்லாமல் வேடிக்கை பார்ப்பதை கண்டு எழுந்த ஆத்திரத்தோடு முகத்தைத் திருப்பிக் கொண்டவள், கண்ணாடியில் தெரிந்த தன்னைச் சேர்ந்தவர்களின் உருவத்தை விரலால் தொட்டு வருடி உணர முயன்றாள்.
 
 
உதடு பிதுங்க “அண்ணா” என மெல்லிய முணுமுணுப்போடு விரல்களால் அங்குத் தெரிந்த உருவத்தை வருடி கொண்டிருந்தவளை கேலியாகப் பார்த்தவன், “ஹப்பா.. இப்போ விட்டா அப்படியே ஓடி போய் உன் கண்ணனை கட்டிப்பிடிச்சு, உன்னைப் பார்க்கற வரை என் உயிர் என்கிட்டே இல்ல தெரியுமான்னு அடிச்சுவிடுவே இல்லை..” என்று கிண்டல் செய்தவனை அம்ரு புருவம் சுருங்க திரும்பி பார்த்தாள்.
 
 
“என்ன..?! ஓ.. அதுக்கும் மேலே போய் அப்படியே இச்இச்ன்னு எதவாது... ஒகே ஒகே இப்போ புரியுது..” எனக் கொஞ்சமும் இடைவெளியே இல்லாமல் அவளின் துக்கத்தைக் கூட நிம்மதியாகக் கடைபிடிக்க விடாமல் முடிந்தவரை அம்ருவை குத்தி கிழித்துக் கொண்டே இருந்தான்.
 
 
“என்ன தான் உங்க பிரச்சனை..? ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கறீங்க..? இதுல உங்களுக்கு என்ன கிடைக்குது..? உங்களுக்கு என்ன தான் வேணும்..?” என்று பொங்கி வந்த ஆத்திரத்தோடு கண்ணீரை துடைத்துக் கொண்டு அவன் முன் வந்து நின்றவளை எகத்தாளமாகப் பார்த்தான் ஷௌர்யா.
 
 
“நான் ஏன் செய்யறேன்.. எதுக்குச் செய்யறேன்னு எல்லாம் உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.. அண்ட் எனக்கு வேண்டியதை தர அளவுக்கு நீ ஆளும் இல்லை..” என்று முகத்தில் அடித்தது போல் அவனிடமிருந்து பதில் வந்தது.
 
 
“எந்த வகையிலும் உங்க தகுதிக்கு நான் இல்லைன்னு தெரியுது இல்ல.. அப்பறம் எதுக்கு சார் இதெல்லாம், உங்களுக்கும் எனக்கும் என்ன பிரச்சனைன்னு கூட இப்போ வரை எனக்குப் புரியலை.. எதுக்கு நான் இவ்வளவு கஷ்டபடணும்னும் தெரியலை.. உங்களுக்கு யாரோட பிரச்சனையோ அவங்ககிட்ட உங்க கோபத்தைக் காட்ட வேண்டியது தானே..” எனத் தன்னைப் பார்த்த நாள் முதல் தொடர்ந்து உதாசீனபடுத்துபவனைக் கோபமாகக் கேள்வி கேட்டாள் அம்ரு.
 
 
“ஒரு சேயிங் இருக்கு தெரியுமா... பெக்கர்ஸ் ஆர் நாட் சுச்சர்ஸ்னு சொல்லுவாங்க.. அதே போலத் தான் ஸ்லேவ்ஸ் ஷுட் நாட் பி கொஸ்டின்ட்..” என்று தோள்களைக் குலுக்கி கொண்டு பின்னால் சாய்ந்தமர்ந்தான்.
 
 
அந்த வார்த்தையும் அதில் தொனித்த திமிரும் அதுவரை பொறுமையைக் கடைபிடித்த அம்ருவை கொதித்தெழ செய்ய.. ஆத்திரத்தோடு ஏதோ பேச முயன்றவளை ஒற்றை விழியை உயர்த்தி நக்கல் கலந்த ஆச்சர்யத்தோடு பார்த்தவன், “ஓ.. கண்ணனும் அண்ணனும் கண் முன் இருக்கும் தைரியமோ..!!” என்று நாடக பாணியில் கேட்டவன், உடனே தன் தொலைபேசியை எடுத்து பிரபுவுக்கு அழைத்து அதை ஸ்பீக்கரில் போட்டான்.
 
 
ஷௌர்யாவின் செயல்களைப் புரியாமல் அம்ரு பார்த்துக் கொண்டு இருக்கும் போதே, “பிரபு வெளியே இருக்க இரண்டு பேர் யாரு..?” என்றான். அவர்கள் யார் என்பது முதல் இங்கு வந்திருக்கும் காரணம் வரை நன்கு அறிந்தவன் தன்னைக் கூப்பிட்டு விசாரிப்பதில் இருந்தே இதில் வேறு ஏதோ இருக்கிறது என்று உணர்தவன், “அவங்க சூர்ய நாராயணன் அப்பறம் முகுந்தன் சார்..” என்றான் பணிவான குரலில்.
 
 
“லாஸ்ட் அஞ்சு நாள் அவங்க ஷெட்யூல் என்னன்னு சொல்லு..” என்றவன் சிறு இடைவெளிக்குப் பின் “அவங்களோடது மட்டும்” என்றான். அதற்குள் இருந்த மறைமுகக் குறிப்பை சரியாகப் பிடித்த பிரபு, சூர்யா முதல் மூன்று நாட்கள் கொல்கத்தாவில் இருந்த இடம் தொடங்கி அனைத்தையும் கூறியவன் அவனோடு உடன் இருந்தவளை பற்றி எதுவும் கூறவில்லை.
 
 
அடுத்து அவன் ஏறிய பிளைட் மற்றும் அது புறப்பட்ட நேரம் முதற்கொண்டு கூறியவன், இங்கு வந்து இறங்கியது முதல் இன்று இங்கு வந்தது வரை அனைத்தையும் ஒப்புவித்தான்.
 
 
இதற்கே அம்ரு மலைத்து போய் விழி கூட அசைக்காமல் ஷௌர்யாவை பார்த்துக் கொண்டிருக்க.. “ரைட்.. நெக்ஸ்ட்..” என்றிருந்தான் அவன். அதற்காகவே காத்திருந்தது போல் பிரபு, அடுத்து முகுந்த் இந்த ஐந்து நாட்களாக அம்ருவை கண்டுபிடிக்க எடுத்த முயற்சிகள் அனைத்தையும் பட்டியலிட்டு இறுதியாகக் கமிஷனரையும் சென்று சந்தித்ததோடு சேர்த்து கூறி முடித்தான்.
 
 
முகுந்தின் அத்தனை முயற்சிகளையும் கேட்டு திகைத்தவள், தனக்காக அவன் துடிப்பதை எண்ணி கண் கலங்கிய அதே நேரம், ‘கமிஷ்னரா..?! அவர் தானே இவனுக்கு ரூட் கிளியர் செஞ்சது.. அப்பறம் எப்படி அவர் உதவி கிடைக்கும்..?!!’ என்று எண்ணினாள்.
 
 
அதே நேரம், “அச்சச்சோ.. இவ்வளவு அலைஞ்சும் அவங்களால கண்டுபிடிக்க முடியலையா..? அட்லாஸ்ட் கேஸ் கூட யாரும் எடுக்கலையா..?! ச்சுச்சு.. ஏன் என்னாச்சு..?” என்று பரிதாப குரலில் ஷௌர்யா கேட்கவும், நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் அம்ரு.
 
 
“நாம எடுக்கவிடலை சார்..” என்று அதற்கும் அந்தப் பக்கமிருந்து மிகப் பணிவான குரலில் பதில் வந்தது. அதில் ஏளனமான ஒரு பார்வையை அம்ருவின் மேல் பதித்தவன், “பத்து நிமிஷத்துக்கு அப்பறம் கார்ட்ஸ் கூடக் கால் கனெக்ட் செய்..” என்று பிரபுவுக்குக் கட்டளையிட்டவன் தொடர்பை துண்டித்தான்.
 
 
தன் காதில் விழுந்த அனைத்திலும் ஒரு ஸ்தம்பித்த நிலையிலேயே இருந்தாள் அம்ரு. தான் மட்டுமல்ல தன்னைச் சார்ந்தவர்களும் கூட இவன் பிடியிலேயே இருப்பது புரிய.. அடுத்து என்ன என்று அவளால் சிந்திக்கக் கூட முடியவில்லை.
 
 
அப்போது “ஹலோ.. ஹலோ..” என்று பரபரப்போடு ஒலித்த சூர்யாவின் குரலில் யோசனை கலைந்தவள், திடுக்கிட்டு நிமிர.. அம்ருவின் போனில் இருந்து தான் சூர்யாவுக்கு அழைத்து இருந்தான் ஷௌர்யா.
 
 
அதில் உண்டான ஆர்வமும் இவ்வளவு நேரம் இது தனக்குத் தோன்றவில்லையே என்ற வருத்தமும் போட்டி போட ஆவலோடு அலைபேசியைப் பறிக்க முயன்றவளிடமிருந்து அதை உயர்த்திப் பிடித்து அணைத்து விட்டு வெற்றி புன்னகையைச் சிந்தினான் ஷௌர்யா.
 
 
அதற்குள் சூர்யாவிடமிருந்து அழைப்பு வந்து இருக்க.. சற்று தள்ளி நிறுத்தி கையில் உள்ள அலைபேசியையே கொரூர புன்னகையும் இமைக்கா விழிகளுமாக ஷௌர்யா பார்த்திருக்க.. அதைப் பறித்துப் பேசிவிட அம்ரு முயன்றதெல்லாம் வீணாகப் போனது.
 
 
அவளைத் தடுக்கப் பெரிய முயற்சிகள் எதையும் எடுக்கவில்லை அவன். அவள் நெருங்கி வந்து எடுக்க நினைக்கும் போதெல்லாம் அசால்ட்டாக உட்கார்ந்த இடத்திலிருந்தே கைக்குக் கை மாற்றி ஆட்டம் மட்டுமே காண்பித்துக் கொண்டு அது அம்ருவின் கைக்குக் கிடைக்காமல் செய்து கொண்டிருந்தான் அவன்.
 
 
“நீங்க செய்யறது கொஞ்சமும் நியாயமே இல்லை.. அஞ்சு நாளா அவங்க வீட்டுப் பொண்ணைக் காணாம எவ்வளவு தவிச்சு போய் இருப்பாங்க.. இப்படி அவளுக்கு என்ன ஆச்சு எங்கே போனான்னு கூடத் தெரியாம தவிக்கற நேரத்துல அவ போனில் இருந்தே கூப்பிட்டு அதுல பேசாம வேற இருந்தா எப்படிப் பதறுவாங்க.. கொஞ்சமாவது புரிஞ்சுக்கோங்க..” என்று கோபமாகத் துவங்கி அழுகையில் முடித்தாள் அம்ரு.
 
 
“ஓஹோ.. அதுக்கு என்ன செய்யலாம்ன்னு மேடம் சொல்றீங்க..?” என்று எகத்தாள குரலில் ஷௌர்யா கேட்கவும், “உங்களுக்கு என்ன என்னைக் கொடுமை படுத்தணும் அவ்வளவு தானே.. ஒரே ஒரு போன் மட்டும் நான் அவங்களுக்குச் செஞ்சுக்கறேன்.. இனி என்னைத் தேடி அலைய வேண்டாம், நான் பத்தரமா தான் இருக்கேன்னு மட்டும் சொல்லிக்கறேன்.. எங்கே இருக்கேன்னு கூடச் சொல்ல மாட்டேன்.. இனியாவது அவங்க கொஞ்சம் நிம்மதியா இருப்பாங்க.. பிளீஸ்..” என்று கையெடுத்து கும்பிட்டே கெஞ்சினாள்.
 
 
அதில் மிகப் பெரிய ஹாஸ்யத்தைக் கேட்டது போல “ஹாஹாஹா..” என்று வாய் விட்டு சிரித்தவன், “எப்படி எப்படி மேடம் எங்கே இருக்க என்னன்னு சொல்லாம விஷயத்தை மட்டும் சொல்லி என்னை உங்க அண்ணன்கிட்ட இருந்தும் அந்தக் கண்ணன்கிட்ட இருந்தும் அவங்க கோபத்தில் இருந்தும் காப்பாத்த போறீங்க.. அப்படிதானே.. ஹாஹாஹா.. ஏன் சொல்லி தான் பாருங்களேன்..” என்றவன்,
“அவனுங்களுக்கான தண்டனையே அது தான்.. நீ எங்கே இருக்க எப்படி இருக்கேன்னு தெரியாம தவிக்கணும்.. அதையே அவ்வளவு ஈசியா விட்டுடுன்னு சொல்றே..?!” என்றான் கேலி குரலில்.
 
 
இதற்குள் ஷௌர்யாவின் கையில் இருந்த அவளின் அலைபேசி பலமுறை அடித்து ஓய்ந்து இருந்தது. “உங்களுக்கு எல்லாம் ஈவு இரக்கமே கிடையாதா..?! வலி அவங்க அவங்களுக்கு வந்தா தான் தெரியும்.. வீட்டு பொண்ணு காணாம போனா எப்படித் துடிப்பாங்க.. ச்சீ நீங்க எல்லாம் மனுஷனே இல்லை..” என்றாள் சீற்றத்தோடு.
 
 
“நான் மனுஷன்னு எப்போ சொன்னேன்.. நீ தான் பார்த்த உடனேயே நான் டீமன்னு கண்டு பிடிச்சுட்டீயே.. அப்பறம் ஏன் என்கிட்டே போய் மனுஷ தன்மையை எதிர்பார்க்கற..?!” என ஏகத்தாளமாகவே கேட்டான்.
 
 
இவனிடம் பேசி புரிய வைக்க முயல்வது எல்லாம் வீண் என்று புரியவும், வேகமாக ஜன்னலை நெருங்கினாள் அம்ரு. அங்குப் பரபரப்பாகச் சூர்யா அவன் அலைபேசியில் மீண்டும் மீண்டும் முயன்றவாறே நடந்து கொண்டிருக்க.. அருகில் அதற்குக் கொஞ்சமும் குறையாத பரபரப்போடு நின்றிருந்தான் முகுந்த்.
 
 
அவர்களை அந்நிலையில் காண முடியாமல் மனம் கனத்துப் போனது. இவர்களின் இந்தத் தேடலும் தவிப்பும் தனக்கானது என்று புரியவும் அதற்காகச் சந்தோஷிக்க முடியாத சூழ்நிலையில் நின்றிருந்தவள், எப்படியாவது அவர்களுக்கு இந்தத் தவிப்பிலிருந்து ஆறுதல் அளிக்க வேண்டும் என்றே எண்ணினாள்.
 
 
இதே யோசனையோடு பார்வையைத் திருப்பியவளுக்கு அப்போதே சற்று முன் பிரபு கூறியது அனைத்தும் நினைவு வர, அவர்களும் இவர்களின் கண்காணிப்பில் இருப்பது புரிய திகைத்து போய் நிமிர்ந்தாள்.
 
 
இப்போது அம்ருவை ஒரு அளவிடும் பார்வை பார்த்தவன், “இப்போ புரிஞ்சு இருக்குமே.. நீ மட்டும் இல்லை அவங்களும் என் கைக்குள்ள வந்து அஞ்சு நாள் ஆகுது.. வீடுவரை அவங்க வந்துட்டதாலேயே அப்படியே உன்னை இங்கே இருந்து கூட்டிட்டு போய்டுவாங்கன்னு மனகணக்கு எல்லாம் போடாதே.. இந்த வர்மனை கடந்து அதெல்லாம் நடக்கவே நடக்காது.. இப்போ கூட நான் அனுமதிச்சதுனால தான் என் வாசல் வரை வந்து இருக்காங்க.. காட் இட்..” என்றான் எச்சரிக்கும் குரலில்.
 
 
இப்போது ஓரளவு அனைத்துமே அம்ருவுக்குத் தெளிவாகியது. தன்னையே பார்த்து கொண்டிருப்பவன் தன் பதிலுக்குக் காத்துக் கொண்டிருப்பது புரிய, ‘ஆம்’ என்பது போல மெல்ல தலையசைத்தாள்.
 
 
அதற்கு மெச்சுதலாக இதழை வளைத்தவன் விழியாலேயே ஜன்னலை அம்ருவுக்குக் காண்பிக்க.. என்னவென்று புரியாவிட்டாலும் குழப்பமும் தயக்கமுமாக ஜன்னலை நெருங்கினாள் அம்ரு.
 
 
“அவங்களுக்குப் பின்னாடி நிக்கற கார்ட்டோட வலது கையில் பாரு..” என்று கட்டளையாக ஷௌர்யாவின் குரல் கேட்கவும், அதுவரை அவர்களை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்தவளின் பார்வை அவர்களின் பின்னால் இருந்தவனின் மேல் படிந்தது.
 
 
மரியாதையாகப் பின்னால் கையைக் கட்டி நின்று இருப்பது போன்ற தோற்றத்தில் சமமான இடைவெளிவிட்டு சுற்றிலும் ஆட்கள் ஒரே நிற சீருடையில் நின்றிருந்தனர். அதில் இவர்கள் இருவரின் நேர் பின்னால் நின்றிருந்தவனின் வலது கையில் சிறிய ரகப் பிஸ்டல் இருப்பது தெரிந்தது.
 
 
அதில் திகைத்து போனவள் தான் கண்டது நிஜம் தானா..?! என்று நம்ப முடியாமல் மீண்டும் ஊன்றி கவனித்தாள். பின்னால் கையைக் கட்டி இருப்பது போன்ற தோற்றத்திலேயே அவனும் நின்று இருந்தாலும் வலது கை மட்டும் சற்று முன்னோக்கி வளைந்து பிஸ்டலை பிடித்து இருந்தது.
 
 
இதில் வேகமாக ஷௌர்யாவை நெருங்கியவள், “பிளீஸ் அவங்களை எதுவும் செஞ்சுடாதீங்க..” என்றாள் கண்ணீர் வழிய கெஞ்சுதலோடு. “அது என் கையில் இல்லை.. உன் கையில் தான் இருக்கு..” என்றவனைக் குழப்பமாக ஏறிட்டாள் அம்ரு.
 
 
இன்னைக்கு மட்டுமில்லை.. கடந்த அஞ்சு நாளாவே என் ஆள் ஒருத்தன் அவங்க பின்னாலே இப்படித் தான் என் கட்டளைக்குத் தயாரா காத்திருக்கான்.. இதுவரை அதுக்கு அவசியம் வரலை.. இனியும் இப்படித் தான் இருப்பான், அவசியம் வருமா வராதான்னு நீ தான் முடிவு செய்யணும்...” என்றான்.
 
 
இப்போதும் ஷௌர்யா சொல்லவருவது என்ன என்று அம்ருவுக்குச் சுத்தமாகப் புரியவில்லை. அந்த அளவு அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவங்களின் தாக்கத்தில் குழம்பி போய் இருந்தாள். அவளின் முகத்தில் இருந்தே அம்ருவின் மனநிலையை அறிந்தவன், “இந்த அஞ்சு நாள்ல நீ தப்பிச்சு போக டிரை செஞ்சு இருந்தா அது வெடிச்சு இருக்கும்.. இப்போ புரியுதா..?” என்றான்.
 
 
இப்போது நிஜமாகவே பயத்தில் சாசர் போல விரிந்தது அம்ருவின் கண்கள். “பெரிய புத்திசாலிதனமா இங்கே இருந்து தப்பிக்க வாய்ப்பு கிடைக்கும்னு ஒரு பிளான் போட்டு இருக்கீயே.. அதை இப்போவே தூக்கி தூர போட்டுடு.. அப்படி ஒரு முயற்சி நீ செஞ்சாலும் சேதாரம் உனக்கு இல்லை.. அவங்களுக்குத் தான்.. புரிஞ்சுதா..?!!” என்று அழுத்தத்தோடு கேட்டவனின் குரலில் உடல் பயத்தில் தூக்கி போட அவசரமாக அவள் அனுமதி இல்லாமலேயே ‘சரி’ என்று தலை வேகமாக அசைந்தது.
 
 
“எனக்குத் தெரியாம என் ஆட்களைக் கடந்து நீ வெளியே போகறதே முடியாத ஒண்ணுதான்னாலும்.. கதவே திறந்து இருந்தாலும் உனக்கு அப்படி ஒரு எண்ணம் வாழ்க்கை முழுமைக்கும் வரவே கூடாது..” என்றான் மீண்டும் அழுத்தம் திருத்தமாக.
 
 
இதில் அம்ரு தன் ஒட்டு மொத்த சக்தியும் வடிந்தது போல ஷௌர்யாவின் காலருகிலேயே மடங்கி அமர்ந்தாள். வெளிப்படையாகத் திட்டமிடாத போதும் மனதில் எண்ணியதை கூடப் பிசகாமல் சொல்லுபவனை எந்தக் கணக்கில் சேர்ப்பது என்று புரியாமல் இனி தான் செய்ய எதுவும் இல்லை என்ற மனநிலையோடு அமர்ந்து விட்டாள் அம்ரு.
 
 
அப்போது “ஹலோ” என்று ஷௌர்யாவின் குரல் கேட்கவும் சோர்வாகத் தலையை நிமிர்த்தினாள். “கார்ட் லைன்ல இருக்கார் சார்..” என்று பிரபு கூறினான். “நீங்களே பேசிடுங்க பிரபு..” என்று ஷௌர்யா முடித்துக் கொள்ள.. அதன் அர்த்தம் உணர்ந்தவன், இணைப்பை துண்டிக்காமல் அந்தப் பக்கம் காத்திருந்தவனிடம் “அவங்ககிட்ட கொடுங்க..” என்றான்.
 
 
அங்கு யாரிடம் கொடுக்கப்படப் போகிறது என்று புரிய, அலைபேசியிலேயே கவனமாக இருந்தாள் அம்ரு. சில நொடிகளில் “ஹலோ” என்று சூர்யாவின் குரல் பரபரப்பாகக் கேட்கவும், ஆழ்ந்த மூச்சை எடுத்துத் தன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்து சற்றும் உணர்ச்சிவச படாமல் இருக்க முயன்றாள் அம்ரு. அவளின் ஒவ்வொரு செயல்களையும் நிதானமாகப் பார்வையிட்டுக் கொண்டிருந்தான் ஷௌர்யா.
 
 
“சார் இன்னைக்கு ரொம்பப் பிஸி.. நீங்க வெயிட் செய்யறீங்கன்னு சொன்னேன்.. யாரு என்னன்னு கேக்கறார், பர்சனல்னு சொன்னா.. அவங்களுக்கும் எனக்கும் என்ன பர்சனல் இருக்க முடியும்னு என்னைத் திட்டறார்.. இப்படி அப்பாயின்மென்ட் இல்லாம வந்து ஏன் சார் எங்க நேரத்தை வீணாக்கறீங்க..?!” என்று எரிந்து விழுந்தான் பிரபு.
 
 
“அது இல்லை சார்.. கொஞ்சம் பர்சனலா பேசணும்..” என்று தயங்கி சூர்யா பதிலளிக்கவும், “இதைச் சொல்லி தான் உங்களால நான் திட்டு வாங்கிட்டு வந்து இருக்கேன்.. நீங்க பேசினதை வெச்சு சாருக்கும் உங்களைத் தெரியும் போலன்னு நினைச்சு தான் அங்கே வெயிட் செய்யச் சொன்னேன்.. அவர் இருக்கப் பிஸிக்கு எப்போ வருவாரு எப்போ போவாருன்னு யாருக்குமே தெரியாது, அப்பாயின்மென்ட் வாங்கினவங்களே கியூல காத்திருக்காங்க.. இதுல எங்கிருந்தோ வந்து குதிச்சிட்டு உடனே பார்க்கணுமாம்.. கிளம்புங்க முதல்ல, நிஜமாவே பார்க்கணும்னா பிராப்பரா அப்பாயின்மென்ட் வாங்கிட்டு வாங்க..” என்று முடித்துக் கொண்டான்.
 
 
அதற்கு மேல் பேச சூர்யாவுக்கு அங்கே வாய்ப்பே இல்லை, சோர்வோடு இணைப்பை துண்டித்து இருந்தான். ஒருவழியாக இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று அம்ருவுக்குப் புரியவும், வேகமாக எழுந்து ஜன்னலை நோக்கி ஓடினாள்.
 
 
அங்கு மனமும் உடலும் சோர்ந்து போக.. வாயிலை நோக்கி சூர்யா செல்வதும் இவ்வளவு நேரம் காத்திருந்தும் பயனில்லாமல் போனதை எண்ணி ஏதோ பேசியவாறே முகுந்த் பின் தொடர்வதும் தெரிந்தது. கண் கலங்க அவர்களையே அம்ரு பார்த்துக் கொண்டிருக்க.. வாயிலை கடந்து வெளியேறி இருந்தனர் இருவரும்.
 
 
என்னோடு பேச மட்டுமில்லை என் வீட்டிற்குள் நுழைய கூட உங்களுக்குத் தகுதி இல்லை என்பதை அவர்களுக்கு வார்த்தைகளிலின்றிச் செய்கையில் காண்பித்து இருந்தான் ஷௌர்யா. அப்படியே சாய்ந்து அம்ருவின் அத்தனை செய்கைகளையும் இகழ்ச்சியான இதழ் சுழிப்போடு ஷௌர்யா கவனித்துக் கொண்டு அமர்ந்து இருந்தான்.
 
 
அவர்கள் சென்ற பிறகும் கூட அங்கிருந்த அசைய மறுத்து வாயிலையே ஏக்கத்தோடு பார்த்து கொண்டிருந்தவளை கண்டு அலட்சியமான தோள் குலுக்கலோடு எழுந்த ஷௌர்யா அறையிலிருந்து வெளியேற முயல, “அப்போ எங்க அண்ணா கூடத் தான் உங்களுக்குப் பிரச்சனையா..?!” என்று அவளின் கணிப்பை கேட்டு இருந்தாள் அம்ரு.
 
 
அதில் அறையின் வாயிலை நெருங்கியவன், தலையை மட்டும் திருப்பி அம்ருவை பார்த்து, “எனக்கு எதிரியா இருக்கக் கூட ஒரு தகுதி வேணும்..” என்றுவிட்டு வெளியேறி இருந்தான்.
 
 
இப்போது மறுபடியும் ஆரம்பம் போலவே ஒன்றும் புரியாமல் திகைத்து விழிப்பது அம்ருவின் முறையானது. ஷௌர்யா வெளியேறவும் அவன் பின்னேயே ஷடோவும் சென்று இருக்க.. அந்தச் சந்தர்பத்தைப் பயன்படுத்தித் தன் அறைக்கு விரைய கூட அவளுக்குத் தோன்றவில்லை.
 
 
ஆனால் சென்ற வேகத்திலேயே திரும்பி வந்த ஷௌர்யா, “அண்ணனோட வாய்ஸை மட்டும் கேட்டோமே கண்ணனோட வாய்ஸை கேக்கலையேன்னு ஏதாவது பிலீங்கா இருக்கா..?!” என்றதும் இவன் என்ன சம்பந்தமில்லாமல் பேசுகிறான் என்பது போல அம்ரு திருதிருக்க..
 
 
“அதான் ஷியாம்கிட்ட உருகி சொன்னீயே, என் முகுந்த் யார் வம்பு தும்புக்கும் போகாதவர் தான்னு அதான் ஒருமுறை கூட வாய்ஸ் கேக்கலைன்னு வருத்தமான்னு கேக்கலாம்னு வந்தேன்..” என்றதில் திகைத்து விழித்தவளுக்கு அப்போதே ஷியாமோடு பேசியதை கூடக் கேட்டு இருக்கிறான் என்று புரிய திடுக்கிட்டாள்.
 
 
“இதுக்கே ஷாக் ஆனா எப்படி..? ஷியாமை வெச்சு அவன் ஹெல்ப் வாங்கி நீ எஸ்ஸாகப் போட்ட பிளான் கூடத் தெரியும்.. ஆனா நீ ஒண்ணைத் தெரிஞ்சுக்க, ஒரு பாபியா உனக்கு எல்லா விஷயத்திலும் துணையா இருப்பானே தவிர, என்னை எதிர்த்து சுண்டு விரலை கூட அசைக்க மாட்டான்.. அவன் மட்டுமில்லை பிரபுவும் அப்படித் தான்.. சோ வேஸ்ட்டா டிரை செஞ்சு மொக்க வாங்காதே.. இனி அதுக்கெல்லாம் டிரை செய்ய மாட்டேன்னு நினைக்கறேன்.. அப்படித் தானே..” என்றான்.
 
 
‘ஆம்’ என்று அம்ருவின் தலை சம்மதமாக அசைந்ததும் ஒரு கூர் பார்வையில் அவளைப் பார்த்தவன், அங்கிருந்து நகர்ந்தான். அதற்கடுத்து வந்த இரண்டு நாட்களும் எந்தக் கேள்விகளும் இல்லாமல் எந்தச் சிந்தனைகளும் இல்லாமல் சிலை போல நடமாடிக் கொண்டிருந்தாள் அம்ரு.
 
 
என்ன சிலை போல் ஒரே இடத்தில் இருக்க முடியாமல் அவளுக்கெனப் பட்டியலிடப்பட்டு இருந்த அத்தனை வேலைகளையும் செய்து கொண்டிருந்தாள். இனி இங்கிருந்து தப்பிப்பது என்பது கனவிலும் நடக்காத ஒன்று என்று தெளிவான பிறகு அதைப் பற்றின எண்ணமே அம்ருவுக்கு அற்றுப் போனது.
 
 
ஷௌர்யா சொல்லி இருந்தபடி ஷியாம் நிஜமாகவே அவளுக்கு என்ன வேணுமானாலும் செய்யத் தயாராகத் தான் இருந்தான். ஆனாலும் அது ஷௌர்யா என்ற ஒன்றை தொடாதவரை என்பது அவன் வார்த்தைகளில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லாமல் ஒவ்வொரு அசைவிலும் புரிய வைத்துக் கொண்டிருந்தான்.
 
 
அப்படியே இருந்தாலும் ஷியாமோடு பேசுவது அம்ருவுக்குப் பிடித்தமான ஒன்றாகவே இருந்தது. இருவருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது தான், மாத கணக்கில் தான் வித்தியாசம் இருந்தது என்பதால் எப்போதும் நண்பர்களோடு கலகலத்துக் கொண்டு இருப்பவளுக்கு இங்கிருந்த தனிமையையும் வெறுமையையும் போக்குவதற்கு மட்டுமல்லாமல் நிஜமாகவே உண்மையான உள்ளார்ந்த அன்போடும் மரியாதையோடும் பேசுபவனை ரொம்பவே பிடித்துப் போனது.
 
 
ஷியாம் கடைசி வருடம் டாக்டருக்குப் படித்துக் கொண்டு இருப்பவன் என்பதால் அவனின் படிக்கும் நேரம் போக.. மற்ற நேரங்களில் அவனாகத் தேடி வந்து பேசும் பொழுதுகளில் அவனோடு கலகலப்பாள். மற்ற நேரங்களில் அவளுண்டு அவள் வேலை உண்டு என்று நின்று கொண்டாள்.
 
 
அம்ரு அப்படி முடிவெடுத்து இருந்தால் ஷௌர்யா அப்படி எல்லாம் ஒதுங்கி இருக்க விட்டு விடுவானா என்ன?!! சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் வார்த்தைகளிலும் முடிந்தவரை வேறு வகையிலும் அம்ருவை நோகடித்துக் கொண்டே தான் இருந்தான்.
 
 
மறுநாள் காலை அம்ருவுக்கு இருக்கும் பிரச்சனைகள் எல்லாம் போதாது என்று ஓரு வில்லங்கம் வீடு தேடி வந்தது. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஷௌர்யா ரிலாக்ஸாக அமர்ந்து தன் மடிகணினியோடு வேலையில் மூழ்கி இருந்தான். ஷியாம் வெளியில் எங்கோ சென்று இருந்தான்.
 
 
“பேபிஈஈஈ... வர்மா பேபிஈஈஈ...” என்ற ஆர்ப்பாட்டமான அழைப்புடன் உள்ளே நுழைந்தவளை தன் மடியில் இருந்த மடிக்கணினியில் வேலை செய்து கொண்டிருந்தவன் பார்வையை மட்டும் உயர்த்திப் பார்க்க...
 
 
“எப்போ ஜெர்மன்ல இருந்து வந்தீங்க, எனக்கு நீங்க ஒரு போன் கூடப் பண்ணலை... இப்போ அண்ணா சொல்லி தான் நீங்க வந்த விஷயமே எனக்குத் தெரியும்...” என ஒரு செல்ல சிணுங்கள் சிணுங்கியவாறே அவன் அமர்ந்திருந்த ஒற்றைச் சோபாவின் கைப்பிடியில் ஷௌர்யாவை மொத்தமாக உரசிக் கொண்டு அமர்ந்தவளை ஒரு வித எரிச்சலோடு பார்த்தவன், “ஜாஷா...” என்று தொடங்கி ஏதோ கூற வரவும், அம்ரு ஷௌர்யாவுக்கு ஜூஸ் எடுத்துக் கொண்டு வரவும் சரியாக இருந்தது.
 
 
அம்ருவை ஒரு பார்வை பார்த்தவன் “ஜாஷா, மீட் மை ஓய்ப் அமிர்தவர்ஷினி... எனக்கு மட்டும் அ(ஹ)னி...” என்று காதல் கணவனாக மாறி குரலில் காதலும் கொஞ்சலும் வழிய கூறினான்.
 
 
அவனின் இந்தத் திடீர் அவதாரம் இன்று எதற்கு என்பது போலப் புரியாமல் அம்ரு விழித்துக் கொண்டு நின்றிருக்க... ஜாஷாவோ சத்தம் போட்டு கைகொட்டி விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள்.
 
 
“இவ... உங்க... வைஃப், ஹாஹா... உங்க... வைஃப்... யாரு இவ...” என்று அதையே வேறு வேறு விதமாக மாற்றி மாற்றிப் போட்டு கேட்டு ஒவ்வொரு வார்த்தைக்கும் தாங்க முடியாத நகைச்சுவையைக் கேட்டது போல விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தவளையும் அவளின் சிரிப்பையும் ஷௌர்யா இழுத்துப் பிடித்த பொறுமையோடு எந்த உணர்வுகளும் பிரதிபலிக்காத கண்களோடும் பார்த்துக் கொண்டிருக்க, இவள் ஏன் இப்படிச் சிரிக்கிறாள் என்பது போன்ற பார்வையோடு நின்றிருந்தாள் அம்ரு.
 
 
“ஓ நோ பேபி... அவளும் அவள் மூஞ்சியும், அவ டிரஸ்ஸும் ஹாஹா இவளெல்லாம் உங்க வீட்ல வேலைகாரியா வர கூடச் செட்டாக மாட்டா... இதுல நீங்க இவளை கல்யாணம், ஸ்டாப் கிட்டிங் மீ பேபி...” என்று ஷௌர்யாவைப் பார்த்து கூறியவள் அம்ருவின் பக்கம் தன் பார்வையைத் திருப்பி “எனக்கு ஒரு ஸ்ட்ராபரி மில்க் ஷேக், வித் எக்ஸ்ட்ரா ஐஸ் கியூப்...” என்று அவள் வேலைகாரி தான் என்ற முடிவோடு ஆணையிடும் குரலில் கூறினாள்.
 
 
ஜாஷா பேச பேச அம்ருவின் மேல் பார்வையைப் பதித்தான் ஷௌர்யா. சாதாரண இளம் பச்சை நிற சல்வாரில் ஒப்பனை என்பதே துளியும் இல்லாமல் நெற்றியில் போட்டாகக் குங்குமத்தையே வைத்துக் கொண்டு தளர பின்னலிட்டு நின்றிருந்தவளின் மேல் இருந்து பார்வையை விளக்காமலேயே “ஏன் இவ டிரஸ்ஸுக்கும் ஆளுக்கும் என்ன குறை.. வீட்டில் வேற எப்படி இருக்கணும்னு எதிர்பார்க்கற..?” என்று வீம்புக்காகக் கேட்டவனுக்கும் அவளின் உடை முதல் ஒப்பனைவரை எதுவும் ரசிக்கவில்லை.
 
 
“ஓ நோ... தி கிரேட் ஷௌர்ய வர்மனோட ஒய்ப் இப்படித் தான் இருப்பாளா.. ஹாஹா.. விதவிதமா டிரஸ் செஞ்சு எப்பவும் கெத்தா இருக்க வேண்டாம்..” என்றாள் கண்களில் பல கனவுகள் மின்ன...
“அது அவங்கவங்க மனசை பொறுத்த ஒண்ணு.. வீட்டில் சிம்பிளா இருந்தா தான் அவளுக்குப் பிடிக்கும்.. எனக்கு அவ எப்படி இருந்தாலும் பிடிக்கும்..” என்றான் வார்த்தைகளில் தேன் தடவி ஜாஷா நம்பும்படியாக.
 
 
“ம்க்கும்.. இது என்ன தேவை இல்லாத பேச்சு டார்லிங்.. நான் உங்களைப் பார்க்க எவ்வளவு ஆசையா ஓடி வந்தேன் தெரியுமா.. எனக்கு இந்தப் பேச்சுக் கொஞ்சம் கூடப் பிடிக்கலை...” என்று சிணுங்கியவள் அங்கேயே நின்றிருந்த அம்ருவை ஆத்திரமாக முறைத்து, “இன்னும் நீ இங்கே இருந்து போகலையா..?!” என்றாள்.
 
 
“உங்களுக்குத் தான் எல்லாத்துக்கும் நான் இருக்கேனே பேபி... வொய்புக்கு வொய்பா... கேர்ள் ஃப்ரெண்ட்க்கு கேர்ள் பிரண்டா...” என்று பேசிக் கொண்டே இருந்த இடத்திலிருந்து வளைந்து நெளிந்து அமர்ந்திருந்த ஷௌர்யாவின் மேல் சாய முயல, அதை உணர்ந்து கடைசி நொடியில் அங்கிருந்து நகர முயன்ற அம்ருவின் விரல்களைச் சுண்டி இழுத்து தன் மேல் சரித்திருந்தான் ஷௌர்யா.
 
 
இதைக் கொஞ்சமும் எதிர்பாராமல் அவன் மேல் நிலைகுலைந்து விழுந்திருந்தவள் சுதாரித்துக் கொண்டு எழ முயல, காற்று கூடப் புக முடியாத அளவுக்கு அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்து இருந்தவன் “அந்தப் போஸ்ட்டுக்கு ஆல்ரெடி ஆள் எடுத்தாச்சு ஜாஷா... வேற போஸ்ட் எதுவும் காலியா இருந்தா சொல்றேன்...” என்று படு நக்கலாகக் கூறினான்.
 
 
பின் தன் அருகில் ஜாஷா என்ற ஒருத்தி இருக்கிறாள் என்பது போன்ற எண்ணமே இல்லாமல் இந்தப் பக்கம் திரும்பி காதல் மன்னனாக மாறி தன் மேல் சரிந்திருந்த மனைவியிடம் பார்வையாலேயே காதல் மொழி பேசி சரசம் செய்து கொண்டிருக்க...
 
 
நிமிடத்திற்கு நிமிடம் மாறும் அவனின் குணாதிசயத்திலும் செயலிலும் ஏற்கனவே துடித்துத் துவண்டு கொண்டிருந்தவள், அடுத்து அவனின் இந்த நடவடிக்கைகள் எதற்கான அறிகுறியோ எனத் தெரியாமல் மிரட்சியோடு அவனை ஏறிட்டுப் பார்க்கவும் தயங்கி, அவனிடமிருந்து நகர முயன்று கொண்டிருந்தாள்.
 
 
ஷௌர்யாவின் பதிலில் எழுந்த கோபத்தோடு முறைத்தபடி ஜாஷா ஏதோ பதில் கூற முயலுகையில் ஷௌர்யாவின் கவனம் தன் மேல் இல்லை என்று புரிந்து அவர்களின் அந்த அன்னியோன்யத்தைக் கண் கொண்டு பார்க்க முடியாமல் வெறுப்பான பார்வையோடு அம்ருவை முறைத்துக் கொண்டே அவள் அங்கிருந்து வெளியேறிய அடுத்த நொடி அம்ரு தரையில் கிடந்தாள்.
 
தொடரும்..
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா 

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 month ago
Posts: 104
Topic starter  

ஹாய் டியர்ஸ்

"உன்னை அமுதவிஷமென்பதா..!!" கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

UAV - 8

https://kavichandranovels.com/community/comments-and-discussions/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%85%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%ae%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%be-comment-thread/

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா

This post was modified 2 weeks ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 month ago
Posts: 104
Topic starter  
விஷம் – 9        
 
தன் பல வருட திட்டம் கனவு எல்லாம் வீணாய் போனதை கண் முன் கண்டத்தில் எரிமலையை ஒத்த மனநிலையில் இருந்தாள் ஜாஷா. அத்தனை எளிதாக அவளால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
 
 
மனதின் கோபமும் குமுறலும் ஆத்திரமும் வெளிப்பட வேகமாக வெளியேறியவள், தன் ஒட்டு மொத்த கோபத்தையும் காரை ஒட்டுவதில் காண்பித்தாள்.
 
 
ஜாஷாவின் வெளிநடப்பை அம்ரு தான் இருந்த உச்சபட்ச அதிர்வில் கவனிக்காமல் போய் இருந்தாலும் அதைச் சரியாகக் கவனித்த ஷௌர்யா அடுத்த நொடி தன் மேல் இருந்தவளை இழுத்து கீழே தள்ளி இருந்தான்.
 
 
இதைக் கொஞ்சமும் எதிர்பாராமல் நிலைகுலைந்து கீழே விழுந்தவள், வலியும் அதிர்வுமாக நிமிர்ந்து ஷௌர்யாவை பார்க்க.. அவனோ “கேம் ஓவர்” என்ற தோள் குலுக்களோடு திரும்பிக் கொண்டான்.
 
 
‘கேம் ஓவர்’ என்ற அந்த ஒற்றை வாக்கியம் அம்ருவை மேலும் வலிக்கச் செய்தது. ‘இவனுக்கு விளையாட்டு பொம்மையா நான்..!!’ என்று பொங்கி எழுந்த கோபத்தைத் தன் சூழ்நிலை கருதி வெளியில் வராமல் தனக்குள்ளேயே புதைத்து கொண்டவள், வேகமாக எழுந்து சென்றுவிட்டாள்.
 
 
அடுத்த அரைமணி நேரத்தில் ஷௌர்யா எதிர்பார்த்து இருந்தது போலவே சந்தீப்பிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தது. “ஷௌ.. வர்மா.. என்ன இதெல்லாம் ஜாஷா என்னென்னமோ சொல்றா..?” என்றவனின் குரலில் அதீத அதிர்வும் பதட்டமும் தொக்கி நின்றது.
 
 
“அவ என்னென்னமோ சொல்றதுக்கு எல்லாம் என்கிட்ட விளக்கம் கேட்டா எப்படிச் சந்தீப்..? என்ன சொன்னான்னு உனக்குத் தானே தெரியும்..!” என்று மிகச் சாதாரணமாக அதை எதிர் கொண்டான் ஷௌர்யா.
 
 
“விளையாடாதே வர்மா.. அவ இங்கே வந்து உனக்கு ஏதோ கல்.. கல்யாணம் ஆகிடுச்சுன்னு உளறிட்டு இருக்கா..” என்றவனின் குரலில் ஷௌர்யாவின் பதிலை எதிர்பார்க்கும் ஆவல் தெரிந்தது.
 
 
“விளையாட எல்லாம் எனக்கு நேரம் இல்லை சந்தீப்..” என்று அழுத்தமாகப் பதில் அளித்தவன் அடுத்து “ஆனா அவ சொன்னது உண்மை தான்..” என்றான் இலகுவான குரலில்.
 
 
“வர்மா என்ன சொல்றே..?!” என்றவனிடம் அதிகபட்ச அதிர்வு தெரிந்தது. “உனக்குக் காதுல ஏதாவது பிரச்சனையா..?!” என்று அதற்கும் அலட்டி கொள்ளாமல் கேட்டான் ஷௌர்யா.
 
 
“இது.. இது எப்போ எப்படி..?” என்று காதில் விழுந்த செய்தியை நம்ப முடியாத அதிர்வில் வார்த்தை கிடைக்காமல் தடுமாறியவனுக்கு ஷௌர்யா அவன் வார்த்தைகளால் ஆமோதிக்கும் வரை அது உண்மையாக இருக்காது ஜாஷாதான் ஏதோ தவறாகப் புரிந்து கொண்டிருப்பாள் என்ற திடமான நம்பிக்கை இருந்தது.
 
 
“ஒரு வாரம் ஆகுது..” என்றதோடு சுருக்கமாக முடித்துக் கொண்டவனை எண்ணி அந்தப் பக்கம் இருந்தவனால் பல்லை மட்டுமே கடிக்க முடிந்தது. ஆனால் அதை அவனிடம் காண்பிக்கக் கூட முடியாத ஒரு நிலையில் இழுத்துப் பிடித்துப் பொறுமை காத்தவன், “என்ன இது திடீர்னு வர்மா..?” என்றான் அமைதியான குரலிலேயே.
 
 
“எனக்கு யாருக்கும் விளக்கம் கொடுத்து பழக்கமில்லை சந்தீப்..” என்ற அழுத்தமான பதிலே அடுத்தக் கேள்வியைக் கேட்கும் தைரியத்தைச் சந்தீப்புக்கு தரவில்லை. இருந்தும் அப்படியே விட்டுவிட முடியாமல் தன் தோளில் சாய்ந்து அழுது கொண்டிருக்கும் தங்கையைக் கண்டவன்,
மீண்டும் “அவ.. ம்ஹ்கும்.. அவங்க பேரு அமிர்தவர்ஷினின்னு ஜாஷா சொன்னா.. அப்படினா அது சூர்ய நாராயணன் தங்கச்சியா..?!” என்றான் இந்தத் திடீர் திருமணத்தின் பின்னே இருப்பது என்ன என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவலில்.
 
 
“எஸ்” என்பதோடு மீண்டும் ஷௌர்யா முடித்துக் கொள்ள.. “அப்போ இது.. இதெல்லாம் பழி வாங்கவா வர்மா..?” என்றான் சந்தீப் பரபரப்பான குரலில். “அப்படித் தான் இருக்கணுமா என்ன..?” என்று அதற்கும் எதிர்கேள்வியையே கேட்டவனிடமிருந்து பதிலை வாங்குவது என்பது பிரம்ம பிரயத்தனம் என்று இத்தனை வருட பழக்கத்தில் சந்தீப் அறியாததா என்ன..?!!
 
 
கோபத்தில் தூக்கி போட இருந்த அலைபேசியைத் தங்கையின் இத்தனை வருட காத்திருப்பையும் ஆசையையும் மட்டுமே மனதில் கொண்டு இதில் வேறு ஏதாவது காரணமிருந்து மீண்டும் ஜாஷாவுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்க வழி இருக்குமோ என்றே அமைதி காத்தான்.
 
 
“இந்தத் திடீர் கல்யாணத்துக்குப் பின்னாலே வேற என்ன காரணம் இருக்க முடியும் வர்மா..?!” என்றவனுக்கு “ஏன் கண்டதும் காதலா இருக்கக் கூடாதா..?!” என்று நக்கலோடு பதில் வந்தது.
அதில் சந்தீப் சற்று பொறுமையை இழந்தாலும் “ஏன் இருக்கக் கூடாது இருக்கலாமே.. ஆனா அதுக்கு ஏன் இவ்வளவு அவசரமா கல்யாணம் செய்யணும்..” என்றான் விடாமல்.
 
 
“அவளை விட்டு இருக்க முடியாதுன்னு அர்த்தம் சந்தீப்.. லவ் செஞ்சு பாரு மேன் அப்போ தான் இதெல்லாம் உனக்குப் புரியும்..” என்ற கேலி குரலோடு ஷௌர்யா ஒரு எள்ளல் சிரிப்பு வழிய அழைப்பை துண்டித்து இருந்தான்.
 
 
இவை அனைத்தையும் சந்தீப்பின் அருகில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த அவனின் தங்கை ஜாஷாவும் தம்பி சஷாங்கும் கோபத்தின் உச்சியில் இருந்தார்கள்.
 
 
“எவ்வளவு திமிரா பேசறான் பாருங்க.. நீங்க தான் பிரண்ட் பிரண்ட்னு ஒவ்வொரு முறையும் இறங்கி போறீங்க.. அவன் ஒரு முறையாவது உங்களையும் எங்களையும் அப்படிப் பார்த்து இருப்பானா.. ஏன் ஜாஷா மனசுல என்ன இருக்குன்னு அவனுக்குத் தெரியாதா..?! உங்களுக்கும் அந்த ஆசை இருக்குன்னு புரிஞ்சுக்க முடியாத பச்சை மண்ணா அவன்..” என்று கோபத்தில் படபடத்தான் சஷாங்.
 
 
“எவ்வளவு ஆசையோடவும் கனவோடவும் நான் இத்தனை வருஷமா காத்துட்டு இருந்தேன்.. என் பிரண்ட்ஸ்கிட்ட எல்லாம் எப்படி எல்லாம் சீன் போட்டு இருக்கேன் தெரியுமா..? இனி எப்படி அவங்க முகத்துல நான் முழிப்பேன், என்னைக் கிண்டல் செஞ்சே கொன்னுடுவாங்க..” என்று சிணுங்கியவளிடம் தெரிந்ததெல்லாம் இத்தனை சொத்துக்கும் வர்மனின் சாம்ராஜ்யத்துக்கும் சொந்தம் கொண்டாட முடியவில்லையே என்பதே.
 
 
“நான் அப்போவே சொன்னேன் அவன் கொஞ்சமும் என்னைக் கண்டுக்கவே மாட்டேங்கிறான்.. நீயே பேசி சீக்கிரம் கல்யாணத்தை முடின்னு எத்தனை முறை சொன்னேன் கேட்டீயா..?!” என்று திடுமெனச் சந்தீப்பின் பக்கம் திரும்பி கத்தியவளை எந்தப் பதட்டமும் இல்லாமல் பார்த்தவன், “அப்படி எல்லாம் நாம நினைக்கறதை அவனைச் செய்ய வைக்கறது அவ்வளவு ஈசின்னு நினைக்கறீங்களா நீங்க.. அவன் போக்குல போய்த் தான் அவனைச் சம்மதிக்க வைக்கணும்.. அதுக்காகத் தான் நான் பொறுமையா இருந்தேன்..” என்றான்.
 
 
“ஆமா நீ இப்படித் தான் எப்பவும் எதையாவது சொல்லிட்டே இருப்பே..” என்று எரிந்து விழுந்த சஷாங் “இப்போ மொத்தமா எல்லாம் போச்சு..” என்றான் ஆத்திரத்தோடு.
 
 
“இன்னும் குழந்தை தனமாவே யோசிக்கறதை கொஞ்சம் நிறுத்தறீங்களா..!? அவனுக்கு விருப்பம் இல்லாத ஒண்ணைச் செய்ய வைக்கறது எல்லாம் நம்மால மட்டும் இல்லை, யாராலேயும் முடியாது.. அவனுக்குக் கல்யாணம் செய்யறதுல கொஞ்சமும் விருப்பம் கிடையாது.. அது எனக்கு நல்லா தெரியும், அதான் நான் அவசரப்பட்டு எதையும் செய்யலை.. வர்மாவை பகைச்சுக்கறது நமக்கு எப்பவுமே நல்லதில்லை.. புரியுதா..!!” என்றான்.
 
 
“இப்படி எல்லாம் யோசிச்சு என்ன பிரயோஜனம்.. அதான் இப்போ எதுக்கும் வகையில்லாம போச்சே..! இப்போ மட்டும் திடீர்னு எங்கே இருந்து வந்தது விருப்பம்..?” என்று ஜாஷா எரிந்து விழவும் சஷாங்கும் அவளோடு இணைந்து கொண்டான்.
 
 
இதில் இருவரையும் முறைத்த சந்தீப் “இந்த உங்க அவசரம் தான் நடக்கற அத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம்.. வர்மா கல்யாணம் செஞ்சு இருக்கறது சூர்யா நாராயணன் தங்கச்சியை.. இதுவே சொல்லலையா இதுக்கெல்லாம் யார் காரணம்னு.. இதில் வேற எதுவோ இருக்கு.. அவன் அப்படி எல்லாம் ஒரு பொண்ணைப் பார்த்ததும் மயங்கறவன் கிடையாது, காலேஜ் டைம்ல இருந்து அவன் பின்னே சுத்தாத பெண்களா..?! இப்போ இப்படிச் செஞ்சு இருக்கான்னா அது எதுக்காகன்னு தான் நாம யோசிக்கணும்..” என்றான்.
 
 
“ஆமா அவன் சொல்றது போல இதுல காதல் இருக்கும்னு எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை.. இத்தனை வருஷமா அவன் பின்னாடி சுத்தி இருக்கேன், என்னையே அவன் கொஞ்சமும் கண்டுக்கலை.. இதுல கண்டதும் அவ மேலே காதலாம்.. அவளும் அவ மூஞ்சியும்..” என்று முகத்தைச் சுழித்தாள்.
 
 
“ஏன் ஜாஷ் சப்பை பிகரா..?!” என்று சஷாங் இடை புகவும், “எனக்கு அப்படிச் சொல்ல தெரியலை சஷ்.. ஆனா அவ்வளவு பெரிய வர்மா எம்பையர்ல இருக்கறவ மாதிரியே இல்லை.. சம்திங் ராங்.. மே பி சந்தீப் இஸ் ரைட்.. இதுல காதலும் இல்லை கத்திரிக்காயும் இல்ல.. வேற ஏதோ காரணம் இருக்கு..” என்றாள் உறுதியான குரலில்.
 
 
“எனக்கும் அதே சந்தேகம் தான்.. இல்லைனா இப்படி ஒரு சிசுவேஷன்ல அந்தப் பொண்ணை ஏன் உடனே கல்யாணம் செய்யணும்..” என்றவன் திரும்பி சஷாங்கை உக்கிரமாக முறைத்து “இதுக்கெல்லாம் காரணம் உன்னோட அவசர புத்தி..” என்றான்.
 
 
சட்டென அங்கு ஒரு அமைதி சூழ்ந்தது. “எனக்குத் தெரியாம நீயா முடிவெடுத்து செஞ்ச ஒரே ஒரு விஷயம் தான் இப்போ நடக்கற அத்தனை பிரச்சனைக்கும் காரணம்..” என்றான் ஆத்திரத்தோடு. அதற்குப் பதில் அளிக்க முடியாமல் சஷாங் தலைகுனிந்தான்.
 
 
“உன் வாழ்க்கையைக் கெடுத்தது இல்லாம என் வாழ்க்கையையும் கெடுத்துட்டீயே..” என்று ஜாஷாவும் இணைந்து கொள்ளச் சஷாங்கால் உடனே பதில் அளிக்க முடியாமல் போனது.
 
 
**********
 
 
அதே நேரம் இங்கு அம்ருவின் அறைக்குள் வேகமாக நுழைந்தான் ஷௌர்யா. அவளின் அறையைச் சுத்தம் செய்து கொண்டிருந்தவள் அவனின் வேகத்தைக் கண்டு ‘இப்போது என்ன..?’ என்பது போல் மிரண்டு நிற்க.. “இன்னைக்கு ஈவ்னிங் இங்கே சில கெஸ்ட் வருவாங்க.. கிராண்ட்டா இருக்கணும் உன் லுக்.. இந்தக் கோமாளி வேஷம் எல்லாம் வேண்டாம்.. அதுக்காக அன்னைக்குப் போட்டு இருந்தீயே அந்தக் கூத்தாடி வேஷமும் இருக்கக் கூடாது..” என்று அவளையும் அவளின் உடைகளையும் சுட்டி காண்பித்து விட்டு திரும்பி நடந்தான்.
 
 
படபடவென வந்த வேகத்தில் ஷௌர்யா பேசியதை கேட்டு அப்படியே திகைப்பில் நின்று இருந்தவள், “என்கிட்ட இந்த நாலு டிரஸ் மட்டும் தான் இருக்கு..” என்றாள்.
 
 
அதில் அறையின் வாயிலில் நடையை நிறுத்தியவன் திரும்பி ஒரு பார்வையை அவள் மேல் பதித்து விட்டு சென்றுவிட்டான். ஷௌர்யா மேலே இருந்து படியில் இறங்கவும் மீண்டும் அவனின் அலைபேசி தன் இருப்பைத் தெரிவித்தது.
 
 
‘இதை நான் எதிர்பார்த்தே இருந்தேன்’ என்பது போன்ற நக்கல் புன்னகையோடு அதை எடுத்து இருந்தான் ஷௌர்யா. “வர்மா இன்னைக்கு ஈவ்னிங் நீ ப்ரீயா..?” என்று சந்தீப்பின் குரல் கேட்க.. “நான் எப்போவும் ரொம்பக் காஸ்ட்லி சந்தீப்..” என்றிருந்தான் கேலி குரலில் ஷௌர்யா.
 
 
அந்தப் பக்கம் வழக்கம் போலச் சந்தீப்பால் பல்லை கடிக்க மட்டுமே முடிந்தது. “ஹா ஹா.. நான் அதைக் கேட்கலை வர்மா.. நீயும் உன் நேரமும் எவ்வளவு காஸ்ட்லின்னு எனக்குத் தெரியாதா..! அதுக்காகத் தான் ஈவ்னிங் உன்னைப் பார்க்க நாங்க வரலாமான்னு கேட்டேன்..” என்று மனதை மறைத்துக் கொண்டு தழைந்தே பதில் அளித்தான்.
 
 
“வீட்டுக்கா என்ன விஷயம் சந்தீப்..?” என்று தெரியாதது போல் ஷௌர்யா கேட்கவும், “நீதான் யாருக்கும் தெரியாம கல்யாணம் செஞ்சுகிட்ட.. நானும் அப்படியே இருந்துட முடியுமா வர்மா.. நான் என் தங்கையைப் பார்க்க வேணாமா..?” என்றான்.
 
 
“உன் தங்கை ஏன் இங்கே இருக்கப் போறா சந்தீப்.. அவ உன் வீட்டில் தான் எப்பவும் இருப்பா..” என உன் எண்ணம் என்னிடமெல்லாம் பலிக்காது என்பது போல அந்தப் பேச்சை கத்தரித்து இருந்தான் ஷௌர்யா.
 
 
“ஓ கமான் வர்மா.. உன் மனைவியைத் தான் என் தங்கைன்னு சொன்னேன்..” என்று முகத்தில் அடித்தது போல ஷௌர்யா பேசியிருந்தாலும் வலிக்காத மாதிரியே சமாளித்து இருந்தான் சந்தீப்.
 
 
“உனக்கே தெரியும் எனக்கு இந்தப் பார்மாலிட்டில எல்லாம் பெருசா நம்பிக்கை கிடையாது.. உனக்கு வரணும்னு தோணினா தாராளாம வா, ஆனா என் பிரண்டா மட்டும்.. இந்தத் தேவை இல்லாத புது உறவு எல்லாம் வேண்டாம்.. ஐ டோன்ட் லைக் தட்..” என்று கறார் குரலில் கூறினான் ஷௌர்யா.
 
 
“ஓகே.. நண்பனின் மனைவி நமக்குத் தங்கை மாதிரி தானே அதான் அப்படிச் சொல்லிட்டேன்.. உனக்குப் பிடிக்கலைனா அப்படிச் சொல்லமாட்டேன்.. நாங்க ஈவ்னிங் ஆறு மணிக்கு வரோம் வர்மா..” என்றதோடு அழைப்பை துண்டித்துக் கொண்டான் சந்தீப்.
 
 
அவனருகில் அமர்ந்து இருந்த ஜாஷா “அது தான் நம்ம திட்டமெல்லாம் பாழா போச்சே.. இன்னும் ஏன் அவன்கிட்ட வளைஞ்சு குழைஞ்சு நிக்கற.. எப்படி எல்லாம் பேசறான்னு பார்த்தே தானே, நீயும் திருப்பிப் பேசறதுக்கு என்ன.. இப்போ எதுக்கு அங்கே போகணும்..?” என்றாள் வெறுப்பைச் சுமந்த குரலில்.
 
 
“இதைத் தான் சொல்றேன், உங்க இரண்டு பேருக்குமே பொறுமைனா என்னன்னே தெரியலை.. அது எனக்குத் தெரியாதா..!? பப்பா ஸ்ட்ரோக் வந்து படுத்த அப்பறம் தொழிலில் நாம ஓரளவு லாபம் பார்க்கறோம்னா அது வர்மாவால மட்டும் தான்.. உங்க கனவு தான் பலிக்காம போச்சு.. நீங்க சொல்றது போலச் செஞ்சா அடுத்து நம்மளை எழுந்துக்க விடாம அடிப்பான்.. அப்பறம் என்ன செய்யலாம், ஆளுக்கு ஒரு தட்டை எடுத்துட்டுப் போய்க் கோவில் வாசலில் தான் உட்காரணும்.. நீங்க ரெடினா சொல்லுங்க உங்களை மாதிரியே அவசரபட்டு நானும் பேசிடறேன்..” என்றவன்,
 
 
“உனக்குப் பல தடவை சொல்லி இருக்கேன் அவன் மேலே போய் விழாதேன்னு கேட்டீயா.. உன் மனசுல இப்படி ஒரு ஆசை இருக்குன்னு சொன்னதும் அதை நான் பார்த்துக்கறேன்னு தானே சொன்னே.. நீ மட்டும் கொஞ்சம் என் பேச்சை கேட்டு இருந்தா எல்லாமே சுமுகமா அவன் போக்கில்லேயே போய் முடிச்சு இருப்பேன்.. அதைக் கெடுத்தது நீ தான்.. ஆனா எனக்கு இப்போவும் அந்தக் கல்யாணத்துல முழு நம்பிக்கை வரலை.. நீ சொல்றதை மட்டும் வெச்சு எந்த ஒரு முடிவுக்கும் வர முடியாது.. நான் நேரில் பார்த்தா தான் இது நிஜமாவே கல்யாணம் தானா.. இல்லை அவன் பழி வாங்க செய்யறான்னு தெரியணும்.. அப்படிப் பழி வாங்க தான்னு உறுதி ஆச்சுன்னா நாம இன்னும் கவனமா இருக்கணும்.. விஷயம் வெளியே போக ஏதாவது வாய்ப்பு இருக்கா..” என்று இருவரையும் பார்த்து கேட்டான்.
 
 
“எனக்குத் தெரிஞ்ச வரை எதுவும் இருக்க வாய்ப்பிலைன்னு தான் நினைக்கறேன்..” என்ற சஷாங்கை யோசனையாகப் பார்த்தவன், “சரி விடுங்க எதுவா இருந்தாலும் ஈவ்னிங் தெரிஞ்சுடும்..” என்றதோடு முடித்துக் கொண்டான்.
 
 
**********
 
 
அடுத்த இருபது நிமிடங்களில் அம்ருவை சந்திக்கப் பிரபலமான ஆடை ஆபரண வடிவமைப்பாளர் ஷிவானி வந்து இருந்தார். பெரிய நடிகைகள், மாடல்கள் மற்றும் விஐபிகளுக்கு மட்டுமே வடிவமைக்கும் நபர் இவர் பல முறை பல்வேறு நிகழ்ச்சிகளில் விருது வாங்கும் போது அம்ரு அதைக் கண்டு இருக்கிறாள்.
 
 
அப்படிப்பட்டவர் தன் முன் வந்து நின்று உனக்கு என்ன மாதிரி ஆடைகள் வேண்டும் என்று கேட்கவும், திகைத்து போய் நின்றிருந்தவளுக்கு அதற்கு என்ன பதில் சொல்வது என்றே புரியவில்லை.
 
 
அம்ருவின் திகைப்பை கண்டு, எப்படி வேண்டும் என்று சொல்ல தெரியாமல் முழிப்பதாக எண்ணி தன் தயாரிப்பில் உள்ள சில மாடல்களைக் கொண்ட கேட்லாக்கை அம்ருவிடம் கொடுத்தார் ஷிவானி.
அந்த இடைப்பட்ட சில நிமிடங்களிலேயே நடப்பது என்ன என்று கண்டு கொண்ட அம்ருவும் அதில் இருந்த ரொம்பவே பளபளப்பாகவும் சற்று கிளாமராகவும் இருந்த உடைகளை எல்லாம் தவிர்த்து விட்டு அவளுக்கு வேண்டியது என்று சல்வாரையும் சேலையையும் கூறி இருந்தாள்.
 
 
அதில் அம்ருவை ஆச்சர்யமாகப் பார்த்த ஷிவானி, “ஆனா சார்..” என்று ஏதோ சொல்ல தொடங்கவும், “இதுல இருக்கறது போல எல்லாம் நான் போட மாட்டேன்.. நான் சொன்னது போலச் சில டிரஸ்ஸை வேணும்னா சார் சொன்னது போல ரெடி செஞ்சு கொடுங்க..” என்றாள்.
 
 
அதை ஒரு சிறு தோள் குலுக்களோடு ஆமோதித்தவரும் அடுத்து அதற்கேற்ற ஆபரணங்களைத் தேர்ந்தெடுக்கச் சொல்ல.. அதிலுமே அம்ரு அந்த உடையின் நிறத்துக்கு ஏற்ப சில அழகிய ரசனையோடான சிறு ஆபரணங்களையே தேர்ந்தெடுத்தாள்.
 
 
அம்ருவையே வித்தியாசமாகப் பார்த்த ஷிவானி, ஷௌர்யாவிடம் வந்து அம்ருவின் தேர்வை சுட்டி காண்பித்து அதற்கான ஒப்புதலையும் அதில் அவன் கூறிய சில மாற்றங்களையும் குறித்துக் கொண்டு இரண்டு மணி நேரத்தில் தருவதாகச் சொல்லி விடைபெற்றார்.
 
 
அதன் பின் அழகு கலை நிபுணர் வந்து அம்ருவை அது இது என்று ஒரு வழியாக்கி கொண்டிருந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் அம்ருவால் அவரைச் சமாளிக்க முடியாமல் போகச் சாட்சிகாரன் காலில் விழுவதை விடச் சண்டைகாரன் காலில் விழுவதே மேல் என்ற எண்ணத்தோடு ஷௌர்யாவை தேடி சென்றாள்.
 
 
“சார், அவங்க என்னென்னமோ சொல்றாங்க.. எனக்கு அதெல்லாம் வேண்டாம் சார்.. அப்படி எல்லாம் செஞ்சு எனக்குப் பழக்கமில்லை.. நானே லைட்டா மேக்கப் போட்டு ரெடி ஆகிக்கறேன்..” என்றாள் கெஞ்சுதலாக.
 
 
“பழக்கமில்லையா..?!! அன்னைக்கு நான் பார்த்தப்போ அப்படித் தெரியலையே, சும்மா என் முன்னே ஆஸ்கார் அளவுக்கு எல்லாம் நடிக்காம போய் ரெடி ஆகற வேலையைப் பாரு..” என்று ஷௌர்யா முடித்துக் கொள்ளவும், “சார், அன்னைக்கு நான் அப்படி டிரஸ் செய்ய ஒரு காரணம் இருந்தது..” என்று புரிய வைக்க முயன்றாள்.
 
 
“இன்னைக்கும் ஒரு காரணம் இருக்கு.. உன்னை அழகுபடுத்திப் பார்க்க எனக்கும் எந்த ஆசையும் இல்லை..” என்று முகத்தில் அடித்தது போல் சொன்னவன் மீண்டும் தன் வேலையில் மூழ்கி விட்டான்.
இந்த முறையும் வெற்றிகரமாகத் தோல்வியைத் தழுவியவள் இவையெல்லாம் நடைப்பெற்றுக் கொண்டிருந்த விருந்தினர் அறைக்குத் தலையைத் தொங்க போட்டுக் கொண்டு வந்தாள்.
 
 
அதே நேரம் ஷிவானியிடமிருந்து உடைகளும் அதற்கேற்ற அணிகலன்களும் வந்து சேர்ந்து விட்டு இருக்க.. அழகுக்கலை நிபுணி அதற்குத் தகுந்தது போல் அம்ருவை தயார் செய்யத் தேவையான சாதனங்களை மட்டும் கொடுத்து விட்டு வெளியேறி இருந்தார்.
 
 
அவற்றை எடுத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்றவள், குளித்துத் தயாராகத் தொடங்கினாள். இதெல்லாம் ஏன் எதற்கு என்று தெரியா விட்டாலும் அதை அறிந்து கொள்ளும் முயற்சியைக் கூட அம்ரு தொடங்கவில்லை. அமைதியாக ஷௌர்யா சொன்னதை மட்டும் செய்து விட்டால் அவனின் சீண்டல்களும் குத்தல் பேச்சும் குறையும் என்பது போன்ற மனநிலைக்கு வந்து விட்டு இருந்தவள் அதையே பின்பற்ற தொடங்கி இருந்தாள்.
 
 
அம்ரு கேட்டு இருந்தது போல ஆனால் அதிலும் சில விலையுயர்ந்த அழகிய வேலைபாடுகளோடு கண்ணைக் கவரும் விதத்தில் வந்திருந்த பத்துச் சேலைகளில் இருந்து ஒன்றை எடுத்து அணிந்து கொண்டவள், அதற்கேற்ற ஆபரணங்களை அணிந்து இடையைத் தாண்டி படர்ந்து இருந்த கூந்தலை உச்சியில் மட்டும் கிளிப் போட்டு அப்படியே விரித்து விட்டு இருந்தாள்.
 
 
ஓரளவு ஒப்பனை செய்து தயாராகியவள், சமயலறையில் பிசியாக இருக்க.. அப்போதே வீடு திரும்பி இருந்த ஷியாம் அம்ருவை கண்டு திகைத்து நின்றான். தன்னருகில் கேட்ட காலடி சத்தத்தில் அம்ரு பின்னால் திரும்பி பார்க்க..
 
 
“வாவ் பாபி.. யூ லுக் கார்ஜியஸ் டுடே..” என்று உண்மையான சந்தோஷத்தில் கூச்சலிட்டான். அதற்கு ஒரு மென்னகையை மட்டுமே பதிலாகத் தந்தவள், தன் பணியை மீண்டும் தொடர்ந்தாள்.
 
 
“இப்போ எப்படி இருக்கீங்க தெரியுமா..?! என் கண்ணே பட்டுடும் போல இருக்கு.. எங்க ராஜாக்கு ஏத்த ராணி நீங்க தான்.. அவ்வளவு அம்சமா இருக்கீங்க.. இத்தனை நாள் இந்த அழகை எல்லாம் எங்கே ஒளிச்சு வெச்சு இருந்தீங்க பாபி..” என்றவன் “இப்படி ஏதோ செய்வாங்களே..?!” அது எப்படி..?” என்று அம்ருவின் முகத்திற்கு அருகில் தன் கைகளைக் கொண்டு சென்று திருஷ்டி எடுக்கத் தெரியாமால் தடுமாறினான்.
 
 
அவனை ஒரு புன்னகையோடு பார்த்தவள், ஷியாம் முகத்தை வழித்து நெட்டி முறித்துக் காட்டவும், “எஸ் இதே தான்..” என்று அதே போல அம்ருவுக்குச் செய்தவன், “நீங்க ஏன் இத்தனை நாளா இப்படி டிரஸ் செய்யலை.. சோகமா டல்லா டிரஸ் செஞ்சது எல்லாம் போதும் இனி இப்படியே இருங்க..” என்றான்.
 
 
“இது இன்னைக்கு நாடகத்துக்காக நான் போட்டு இருக்க வேஷம்.. அது தான் ஒரிஜினல்.. நாடகம் முடிஞ்சதும் வேஷத்தை கலைச்சிடணும்..” என்ற அம்ருவின் பதிலில் அதுவரை புன்னகையைப் பூசி இருந்த ஷியாமின் முகம் கவலையைத் தத்தெடுத்துக் கொண்டது.
 
 
அதைக் காண முடியாமல் ஷியாமை நெருங்கிய அம்ரு, “இதுல நீ வருத்தப்பட என்ன இருக்கு..” என்று கேட்கவும் “நீங்க இங்கே மனசுக்கு பிடிச்சு சந்தோஷமா இல்லைன்னு எனக்கு நல்லாவே தெரியும்.. ஆனா பாபி உங்களுக்கு எந்த வகையிலும் என்னால உதவ முடியாது..” என்றவனின் குரலில் நிஜமான வருத்தம் தெரிந்தது.
 
 
“எனக்கு அது நல்லாவே புரியுது ஷியாம்.. நான் உன்னைத் தப்பவே நினைக்கலை..” என்று அம்ரு கூறவும் அங்கு ஷௌர்யா வரவும் சரியாக இருந்தது. அதன் பின் இருவரும் அந்தப் பேச்சை விடுத்து வேறு வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினர்.
 
 
அடுத்தச் சில நிமிடங்களில் சந்தீப் தன் தம்பி தங்கையோடு வந்து விட்டிருந்தான். மூவரையும் பெரிதான ஆரவாரம் எல்லாம் எதுவும் இல்லாமல் ஒரு சிறு தலையசைப்பின் மூலமே வரவேற்று இருந்தான் ஷௌர்யா.
 
 
“என்ன வர்மா இது, இப்படிச் சொல்லாம கொள்ளாம கல்யாணம் செஞ்சு இருக்க..?” என்று சந்தீப் துவங்கவும், “யாருக்கும் சொல்லிட்டு தான் செய்யணும்னு எனக்கு என்ன அவசியம் சந்தீப்..?” என்றிருந்தான் ஷௌர்யா.
 
 
“அதுக்கில்லை.. உனக்குக் கல்யாணம்னா எவ்வளவு பெரிய விஷயம், அதைப் போய் இப்படி ரகசியமா..” என்று சந்தீப் போட்டு வாங்க முயல, “அப்படி ஒண்ணும் என் கல்யாணம் ரகசியமா நடக்கலையே சந்தீப்.. சட்டப்படி ரிஜிஸ்டர் செஞ்சு முறைப்படி தாலி கட்டி தானே நடந்தது..?!” என்று பதிலளித்து அவர்களைத் திகைக்கச் செய்திருந்தான் ஷௌர்யா.
 
 
சட்டபடி ரிஜிஸ்டர் செய்யப்பட்டு இருக்கும் என்பதை அவர்கள் யாருமே எதிர்பார்த்து இருக்கவில்லை. சூர்யா மேல் உள்ள கோபத்தில் அவனின் தங்கையைக் கொண்டு வந்து வைத்திருப்பதாகவும் ஜாஷாவை தவிர்ப்பதற்காக இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வதாகவுமே எண்ணிய சந்தீப் அதைத் தன் கண்களால் உறுதிபடுத்திக் கொள்ளவே இன்று இங்கு வந்தது.
 
 
ஆனால் அதற்கு வாய்ப்பே அளிக்காமல் முதல் பந்திலேயே சந்தீப்பை அவுட் ஆக்கி இருந்தான் ஷௌர்யா. “இப்போ ஜாஷா வந்து சொல்லலைனா எங்களுக்குமே விஷயமே தெரிஞ்சு இருக்காது.. நம்ம பிசினஸ் சர்க்கிள்ல இருக்கவங்க யாருக்குமே இது பத்தி தெரிஞ்சு இருக்காதே.. ஒரு ரிசப்ஷன் வெச்சு இருக்கலாமே வர்மா..” என்று ஷௌர்யாவின் மனம் அறிய முயன்றான் சந்தீப்.
 
 
“என் கல்யாணம் என்பது என்னோட பர்சனல்.. இதை எதுக்கு மத்தவங்களுக்கு நான் தெரியபடுத்தணும்..” என்று கிண்டலாக ஷௌர்யா கேட்கவும், அவன் அருகில் அதுவரை இவர்களைக் கொஞ்சமும் கவனிக்காதது போல அமர்ந்திருந்த ஷியாம் சிரித்தே விட்டான். அவனைச் சஷாங்கும் ஜாஷாவும் முறைத்துக் கொண்டிருக்க.. ஷியாம் அவர்களைக் கொஞ்சமும் கண்டு கொள்ளவே இல்லை.
 
 
அப்போது அம்ரு அனைவருக்கும் சேர்த்து ஜூஸ் எடுத்துக் கொண்டு வந்தாள். அதைக் கண்டு வேகமாக எழுந்து சென்று ஷியாம் அதை வாங்கிக் கொள்ள.. “உனக்கு எத்தனை முறை சொல்றது ஹனி.. இந்த வேலையெல்லாம் நீ செய்ய வேண்டாம்னு சொன்னா கேட்டா தானே..” என்றவன் இயல்பு போல அம்ருவின் கையைப் பற்றி இழுத்துத் தன்னருகில் அமர வைத்துக் கொண்டான்.
 
 
“நமக்கு எல்லாம் அவங்க கையால செஞ்சா தான் பாபிக்கு திருப்தியா இருக்கும் பய்யா.. இதுல மட்டும் பாபி உங்க பேச்சை கேட்கவே மாட்டாங்க..” என்று அம்ருவுக்குப் பதில் ஷியாம் விளக்கமளித்தான்.
 
 
அம்ரு கிட்டத்தட்ட ஷௌர்யாவின் மேல் சாய்ந்தது போல ஒட்டி உரசிய நிலையில் அமர நேர்ந்தாலும் சற்று நேரத்துக்கு முன் சமையலறையில் அவன் எச்சரித்துச் சென்றது நினைவில் இருக்கவே முகம் மாறாமல் அம்ரு புன்னைகையைத் தத்தெடுத்து இருந்தாள்.
 
 
ஷியாம் அனைவருக்கும் ஜூஸ் கொடுத்து முடித்து இயல்பு போல் ஒன்றை எடுத்து அம்ருவிடம் கொடுத்தவன் அவள் அருகில் சென்று அமர்ந்து கொண்டான். அம்ருவின் வலக்கை ஷௌர்யாவிடம் சிக்கி இருந்தது. அப்படியே காதல் கணவனாக மாறி, கரத்தோடு கரம் கோர்த்து சந்தீப்போடு பேசியவாறே ஷௌர்யா அமர்ந்து இருக்க..
 
 
மற்றொரு கையில் ஜூஸ்ஸோடு அமர்ந்து இருந்தவள் ஷியாமோடு ஏதோ மெல்லிய குரலில் பேசிக் கொண்டு இருப்பதும் அவன் வார்த்தைக்கு வார்த்தை பாபி போட்டு பேசுவதும் என்று இருந்த காட்சிகளைக் காண காண ஜாஷாவுக்குக் கோபம் கொந்தளித்துக் கொண்டு வந்தது.
 
 
இத்தனை வருடங்களில் ஒருமுறை கூடத் தன்னிடம் நின்று பேசி புன்னகைக்காதவனின் இந்தச் செய்கை அவளைக் கொந்தளிக்கச் செய்து கொண்டிருக்க.. மூவருக்கும் இடையிலான இந்த இயல்பான நெருக்கம் சந்தீப்பை ஆழ்ந்த யோசனையில் ஆழித்தியது.
 
தொடரும்..
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா 

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 month ago
Posts: 104
Topic starter  

ஹாய் டியர்ஸ்

"உன்னை அமுதவிஷமென்பதா..!!" கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

UAV - 9

https://kavichandranovels.com/community/comments-and-discussions/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%85%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%ae%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%be-comment-thread/

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா

This post was modified 2 weeks ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 month ago
Posts: 104
Topic starter  
விஷம் – 10
 
அம்ரு வந்ததிலிருந்து ‘சூப்பர் பிகரா இருக்கா, இவளையா சப்பை பிகர்ன்னு ஜாஷா சொன்னா..?!’ என்பது போன்று அளவெடுப்பது போலப் பார்த்துக் கொண்டிருந்தான் சஷாங். ஜாஷாவும் அதே போலத் தான் அம்ருவை வெறித்துக் கொண்டிருந்தாள் ‘இவள் காலையில் நான் பார்த்தவள் தானா..?! அப்போ இப்படி இல்லையே’ என்றே இருந்தது அவள் பார்வை.
 
 
ஆனால் இது போல எல்லாம் அம்ருவின் வெளி தோற்றத்தை பற்றிய கவலை கொஞ்சமும் இல்லாமல் சந்தீப் முழுக்க முழுக்க அவர்களிடம் தெரிந்த அன்னியோன்யத்தை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்தான்.
 
 
சந்தீப்புக்கு கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கும் மேலாக ஷௌர்யாவை தெரியும். அவனின் பல நடவடிக்கைகளுக்கு இன்றளவும் காரணம் காண்பது முடியாத காரியம் தான் என்றாலும் ஷௌர்யாவின் சில உடல் மொழிகளைக் கொண்டே அவனின் விருப்பு வெறுப்புகளைப் புரிந்து கொள்ள முடியும்.
 
 
அப்படி அவன் அதிகம் வெறுக்கும் ஒன்று பெண்கள் உடனான நெருக்கம். இவன் விலகி சென்றாலும் விடாது தொடர்ந்து தொல்லை செய்பவர்களிடம் தயவு தாட்சண்யம் எல்லாம் சிறிதும் இல்லாமல் முகத்தில் அடித்தது போன்ற வார்த்தைகளின் மூலம் அப்பெண்களிடமே அதைத் தெரிவித்தும் விடுவான்.
 
 
அப்படிபட்டவன் ஜாஷாவையே எத்தனை முறை இனி இங்கு வர கூடாது என்று வீட்டிலிருந்து விரட்டி இருக்கிறான் என்பது வரை சந்தீப்புக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் இன்று வரை அவன் அதையெல்லாம் தெரிந்தது போலக் கூட ஷௌர்யாவிடம் காண்பித்துக் கொண்டது கிடையாது.
 
 
அதே போல ஷௌர்யா நினைத்து இருந்தால் ஒரே நொடியில் ஜாஷாவின் வரவை காட்ஸின் மூலம் எப்போதோ தடுத்து இருக்கலாம். தன் மேல் உள்ள நட்புக்காகவும் அவனைத் தாண்டி என்ன செய்துவிடப் போகிறாள் என்ற எண்ணத்திலுமே தான் இத்தனை நாள் அவளை ஒரு பொருட்டாகக் கூட எண்ணவில்லை என்பதும் அவன் அறிந்ததே.
 
 
இந்த மற்ற யாருக்கும் காட்டப்படாத தனக்கு மட்டுமே ஷௌர்யா கொடுக்கும் அந்த ஒரு சதவிகித மென் தன்மையைக் கொண்டே மெல்ல மெல்ல காய் நகர்த்தித் தன் தங்கையின் ஆசையை நிறைவேறி வைக்க எண்ணினான் சந்தீப்.
 
 
அதைத் தன் உடன் பிறப்புகள் அவசரபட்டது போல் ஷௌர்யாவின் அதிரடி குணம் உடனடியாகச் செயல்படுத்த விடாமல் செய்திருக்க.. பொறுமையாக நிதானமாகச் செயல்பட நினைத்து இருந்தான். ஆனால் அதற்கும் இடையில் நடந்த சில விஷயங்கள் தடையாக இருக்கவே, இப்போதைக்கு எதையும் செய்து மேலும் வம்பை இழுத்துக் கொள்ள வேண்டாமென்றே அமைதி காத்தான்.
 
 
இன்று அதற்கு எல்லாம் சேர்த்து மொத்தமாக மூடுவிழா நடத்தப்பட்டுவிட்டது புரிந்தாலும் அதை அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொள்ளச் சந்தீப்பால் முடியவில்லை. இன்னும் ஏதோ ஒன்று அவன் மனதை உறுத்தி கொண்டே தான் இருக்கிறது.
 
 
இத்தகைய சிந்தனையில் சந்தீப் ஆழ்ந்து இருக்க.. “காலையில் இவ இப்படி இல்லையே.. எங்களை ஏமாத்த தான் இந்த வேஷமா..?! நான் இதையெல்லாம் நம்ப மாட்டேன்..” என்று ஆத்திரத்தோடு ஒலித்தது ஜாஷாவின் குரல். அதில் கண்டிக்கும் பார்வையோடு சந்தீப் திரும்பி ஜாஷாவை பார்க்க.. அவளோ அம்ருவை மட்டுமே ஆத்திரமாக முறைத்து கொண்டிருந்தாள்.
 
 
அவளைக் கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் “காலையில் என்னோட பேசும் போது நீ என்ன டிரஸ் போட்டு இருந்தே..?” என்று சந்தீப்பை பார்த்து கேட்டான் ஷௌர்யா.
 
 
“ஏன்.. எதுக்கு.. கேக்கற வர்மா..?” என்று புரியாமல் சந்தீப் லேசாகத் தடுமாற, “சும்மா தான்” என்றான் ஷௌர்யா. “காலையில் நான் லைட் ப்ளு ஸ்லீவ்லெஸ் டீஷர்ட்.. க்ரே ஷார்ட்ஸ் போட்டு இருந்தேன் வர்மா..” என்றான் அடுத்து ஷௌர்யா உதிர்க்க போகும் வார்த்தைகளுக்காகக் காத்திருந்து.
 
 
ஒரு நக்கலான புன்னகையில் அவனை ஏறிட்ட ஷௌர்யா “இப்போவும் அதே டிரஸ்லேயே வந்து இருக்கலாமே சந்தீப்.. ஏன் சேன்ஞ் செஞ்சுகிட்ட..?” என்றான்.
 
 
“அது வெளியே வரும் போது எப்படி அதுலேயே வர முடியும்..” என்று சந்தீப் எதற்கு இது என்று புரியாமல் விழிக்கவும், “எக்ஸாட்லி.. இப்போ வீட்டுக்கு வரவான்னு அனுமதி கேட்டு நீங்க வந்ததால நாங்க எல்லாம் அதுக்குத் தயாரா இருந்தோம் சந்தீப்.. இந்த இங்கிதம் எல்லாம் தெரியாம உன் தங்கை திடீர்னு வந்து நின்னா எப்படி..? அப்போ நாங்க எங்களுக்கு எது வசதியோ அப்படித் தானே இருப்போம்..?! நல்லவேளை அப்படிச் சொல்லாம திடீர்னு வந்து குதிச்சும் எசகுபிசகா இல்லாம போனாங்களேன்னு தான் நியாயமா உன் தொங்கச்சி சந்தோஷபட்டுக்கணும்.. ஏன்னா நாங்க புதுசா கல்யாணம் ஆனவங்க பாரு..!!” என்று அனைத்தையும் கேலி குரலிலேயே கூறினான் ஷௌர்யா.
 
 
சந்தீப் எதை எதிர்பார்த்து ஜாஷாவை கண்டிக்கும் பார்வை பார்த்தானோ அதைக் கொஞ்சமும் ஏமாற்றாமல் ‘என் அனுமதி இல்லாமல் என் வீட்டுக்குள் நுழைய உனக்குத் தகுதி இல்லை’ என்று அவன் பாணியில் கொடுத்து இருந்தான் ஷௌர்யா.
 
 
இதில் ஜாஷா முகம் கறுத்துப் போனது. எத்தனையோ முறை சந்தீப் இதைப் பற்றி ஜாஷாவை கண்டித்து இருக்கிறான். ஷௌர்யா வீட்டில் வைத்து யாரையும் சந்திப்பதை விரும்பவே மாட்டான் என்று அறிந்தே அவளைத் தடுக்க நினைத்தான்.
 
 
ஆனால் அப்போதெல்லாம் ‘அது என் வீடு நான் வாழ போற வீட்டுக்கு போக யார் எனக்கு அனுமதி கொடுக்கணும்..?!’ என்ற அளவுக்கு அதிகமான முட்டாள் தனமான நம்பிக்கையே அவளை இதையெல்லாம் கேட்கவிடாமல் செய்திருந்தது.
 
 
இந்தச் சூழ்நிலையை எப்படி இயல்பாக்குவது என அவசரமாகச் சந்தீப் திட்டமிட்டுக் கொண்டிருக்கையில் “அண்ட் ஓன் மோர் திங் சந்தீப்..” என்ற ஷௌர்யாவின் அழுத்தமான குரல் ஒலிக்கவும் பதட்டத்தோடு அவனை ஏறிட்டுப் பார்த்தான் சந்தீப்.
 
 
“ஹனி என்னோட வொய்ப்.. வர்மா குடும்பத்தோட மருமகள்.. அவளை மரியாதை இல்லாம பேசற உரிமை யாருக்கும் கிடையாது, புரியுதா யாருக்கும்..” என்று அதில் அளவுக்கு அதிகமான அழுத்தத்தைக் கொடுத்தவன், “உன் தங்கை இப்போ பேசினதுக்கே என் பாணியில் நான் பதிலடி கொடுக்காம விடறது உனக்காக மட்டும் தான்..” என எச்சரிக்கும் தொனியில் முடித்தான்.
 
 
“ஹே.. ஹே.. வர்மா அவ சின்னப் பொண்ணு ஏதோ தெரியாம கோபத்துல பேசிட்டா.. இனி இப்படி எதுவும் நடக்காம நான் பார்த்துக்கறேன்..” என்று சந்தீப் சமாதனம் செய்ய முயன்று கொண்டு இருக்க.. “அப்படி என்ன இவ..” என்று வெறுப்பும் ஆத்திரமுமாக இடையில் புகுந்தாள் ஜாஷா.
 
 
அதில் கோபத்தோடு திரும்பி தன் தங்கையை முறைத்த சந்தீப் “ஷட்அப்ப்ப்ப்ப்..” என்று கத்தினான். அம்ருவின் முன் தனக்கு அவமானம் நடந்துவிட்டது போல உணர்ந்தவள் கோபமாக அந்த இடத்தை விட்டு வெளியேறினாள்.
 
 
இங்கு இத்தனை களேபரங்கள் நடந்து கொண்டு இருக்க.. அதை எல்லாம் கொஞ்சமும் கவனிக்காமல் அம்ருவின் மேலேயே கவனமாக அமர்ந்து இருந்தான் சஷாங். ஷியாமோடு பேசிக் கொண்டு இருந்தாலும் சஷாங்கின் இந்தப் பார்வை தன் மேல் பதிவதை திரும்பி பார்க்காமலே உணர்ந்து இருந்தவளுக்குச் சில நிமிடங்களுக்கு மேல் அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் போனது.
 
 
அதில் அம்ரு லேசாக நெளிய துவங்கவும், அவளின் கை ஷௌர்யாவிடம் சிறைபட்டு இருந்ததால் அந்த அசைவை உணர்ந்து திரும்பி பார்த்தவன், அம்ருவின் தவிப்பான நிலையைக் கண்டு யோசனையாகப் பார்வையைத் திருப்ப.. அங்கு லிட்டர் கணக்கில் ஜொள்ளு விட்டவாறே சஷாங் அமர்ந்து இருப்பது தெரிந்தது.
 
 
அதே நேரம் தான் ஷியாமும் அம்ருவின் நிலையைக் கவனித்து இருந்தான் ஏதாவது செய்து அம்ருவை இந்தச் சூழ்நிலையில் இருந்து விடுவிக்க அவன் எண்ணுவதற்குள்,
“என்ன சஷாங்.. வழக்கமா வந்ததும் உங்க ஆசிர்வாதம் வேணும் பய்யான்னு நான் தடுக்கத் தடுக்க விடாம காலில் விழுவே.. இன்னைக்கு என்னாச்சு, இனி என் ஆசிர்வாதம் உனக்கு வேண்டாமா..?” என்று விழிகள் பளபளக்க கேட்டிருந்தான் ஷௌர்யா.
 
 
அதுவரை தன் பணி ஜொள்ளுவிட்டு கிடப்பதே என்பது போல் வேறு எதைப் பற்றிய கவலையும் இல்லாமல் அமர்ந்து இருந்தவன் திடீரெனத் தன் பெயர் ஒலிக்கப்பட்டத்தில் ஒன்றும் புரியாமல் திகைத்து திருதிருத்தான். பின் ஓரளவு துண்டு துண்டாகத் தன் காதில் விழுந்த வார்த்தைகளை ஒட்டி கோர்த்து ஒருவழியாகப் புரிந்து கொண்டவன், இனி விழுந்து நடித்து என்ன பயன் எனத் தோன்றினாலும் அதை வெளியில் காண்பித்துக் கொள்ள முடியாமல் “அச்சச்சோ பய்யா.. உங்க ஆசிர்வாதம் எப்பவும் எனக்கு வேணும்.. இன்னைக்கு உங்க மேரேஜ் நியூஸ் கேட்ட ஷாக்ல வந்தேனா அதான் மறுந்துட்டேன்..” என்று போலி பணிவோடு எழுந்து வந்தான்.
 
 
சஷாங் தன் பாதத்தைத் தொட்டு விட்டு நிமிரவும், “பாபிகிட்டேயும் ஆசிர்வாதம் வாங்கிக்கோ..” என்ற அழுத்தம் கலந்து ஷௌர்யாவின் குரல் ஒலித்ததில் நிமிர்ந்து பார்த்தவன், அந்த முகத்தில் இருந்து எதையும் கண்டுபிடிக்க முடியாமல் அப்படியே நின்று இருந்தான் சஷாங்.
 
 
“ஹனி இவனும் உனக்கு நம்ம ஷியாம் மாதிரி தான்.. மனசார ஆசிர்வாதம் செய்..” என்று ஷௌர்யா அம்ருவிடம் கூறிக் கொண்டு இருக்க.. இங்குச் சஷாங்கின் முகமோ அஷ்டகோணலாக மாறியது. அதைக் கண்டு பார்வையாலேயே சொன்னதைச் செய் என்பது போலச் சந்தீப் கட்டளையிட்டான்.
 
 
சஷாங்கோ முடியாது என்பது போல் முரண்டு பிடிக்க.. இவை அனைத்தையுமே காணாதது போல் அமர்ந்திருந்த ஷௌர்யா “என்ன ஆச்சு சஷாங்..?” என்றான் வேண்டுமென்றே சீண்டும் குரலில்.
 
 
அதில் “நத்திங் பய்யா” என்று வெளியில் இழுத்துப் பிடித்த புன்னகை உதட்டோடு கூறியவன், அம்ருவின் பாதத்தைத் தொட குனிய அவளோ இதெல்லாம் கொஞ்சமும் பழக்கமில்லாததால் பதறி கால்களைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டு விலகி எழுந்து நின்றாள்.
 
 
“நான்.. நான் சாப்பிட ரெடி செய்யச் சொல்லி இருந்தேன்.. அது ரெடி ஆகிடுச்சான்னு பார்த்துட்டு வரேன்..” என்று அங்கிருந்து ஓடியே போனாள். இந்தச் சந்தர்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த சந்தீப், “வர்மா கொஞ்சம் தனியா பேசணும்..” என்றான்.
 
 
“ம்ம் சொல்லு..” என்று ஷௌர்யா சாய்ந்து அமர, சந்தீப்பின் பார்வை அங்கிருந்த ஷியாமின் மேல் பதிந்து மீண்டது. ஆனால் அதைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் ஷௌர்யா அமர்ந்து இருக்க.. ஷியாம் தானாகவே எழுந்து கொண்டான்.
 
 
இப்போது சஷாங்கின் மேல் ஷௌர்யாவின் பார்வை அழுத்தமாகப் பதியவும், அவனுக்கும் எழுந்து செல்வதைத் தவிர வேறுவழி இல்லாமல் போனது. இவர்கள் அமர்ந்து இருந்த பக்கத்தின் அருகில் இருந்த கதவின் வழியே வகை வகையான பூ செடிகள் இருந்த இடத்திற்குச் சென்ற சஷாங்கின் மனம் கொதித்துக் கொண்டு இருந்தது.
 
 
ஷௌர்யா வேண்டுமென்றே தன்னை அம்ருவின் காலில் விழ செய்தது அவனுக்குத் தெளிவாகப் புரிந்தாலும் அதை எதிர்க்கவோ மறுக்கவோ முடியாமல் போன தன் நிலையை எண்ணி எழுந்த வெறுப்போடு இங்கும் அங்கும் ஆத்திரத்தோடு நடை பயின்று கொண்டிருந்தான்.
 
 
சுற்றிலும் அழகுற மலர்ந்து மணம் வீசிக் கொண்டிருந்த மலர்களோ அதன் அழகோ சஷாங்கை ஒரு சதவிகிதம் கூடக் கவரவில்லை. ‘எவ்வளவு திமிர்.. ஒவ்வொரு முறையும் இப்படித் தான் ஏதாவது செய்து தொடர்ந்து எங்களை அவமானம் செய்வதையே வழக்கமா வெச்சு இருக்கான்.. இந்தத் திமிரை எல்லாம் அடக்கத் தான் அழகா திட்டம் போட்டுக் கொஞ்சம் கொஞ்சமா அதைச் செயல்படுத்திட்டு இருந்தேன்.. ஆனா அதுல இவ்வளவு பெரிய ஓட்டை இருக்குன்னு தெரியாம போச்சு.. இல்லைனா இந்த நேரத்துக்கு அவன் என் காலில் வந்து விழுந்து இருப்பான்..” என்று பொருமி கொண்டே நடை பயின்றவனின் கண்கள் எதேச்சையாக ஜன்னலில் பதிய.. அங்கு உணவு மேசையில் அம்ரு நின்று இருப்பது தெரிந்தது.
 
 
தயாராக இருந்த உணவு பொருட்களை எல்லாம் அழகாக எடுத்து அடுக்கி வைத்து கொண்டிருந்தவளின் ஒவ்வொரு செய்கையையும் கண்களால் அளவெடுத்துக் கொண்டிருந்தான் சஷாங்.
 
 
அதே நேரம் இங்குச் சந்தீப் “இந்தக் கல்யாணம் அவசியம் தானா வர்மா..?” என்று சிறு தயக்கத்தோடான குரலில் கேட்டு இருந்தான். “ஏன் சந்தீப் நான் கல்யாணம் செஞ்சுக்கக் கூடாதா என்ன..?” என்று அசராமல் கேள்வியைச் சந்தீப் பக்கமே ஷௌர்யா திருப்பினான்.
 
 
“நான் அப்படிச் சொல்ல வரலை.. உனக்குக் கல்யாணம் செய்யற எண்ணமே இல்லை.. அப்படி இருக்கும் போது இப்படித் திடீர்னு கல்யாணம் அதுவும் யாருக்கும் சொல்லாம அவசர கல்யாணம்.. அதுவும் சூர்ய நாராயணன் தங்கச்சியை..” என்று சந்தீப் இழுக்கவும், “எனக்குக் கல்யாணம் செய்யற எண்ணமே இல்லன்னு இவ்வளவு தெளிவா தெரிஞ்சு வெச்சு இருந்த நீ ஏன் உன் தங்கை என்னைச் சுத்தி வந்து தொல்லை கொடுத்தப்போ தடுக்கலை சந்தீப்..?” என்றிருந்தான் ஷௌர்யா.
 
 
இப்போது சந்தீப்புக்கு தான் பறித்த குழியில் தானே தடுக்கி விழுவது போன்ற நிலை. “அது.. அது.. நான் சொன்னேன் வர்மா.. ஆனா அவ அதை அவர் சொல்லட்டும்னு சொல்லிட்டா.. நீயும் அப்படி எதுவும் சொல்லலையா அதான்..” என்று எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் தடுமாறினான் சந்தீப்.
 
 
“ஓ ரியலி..” என்று ஏகத்தளமாக ஷௌர்யாவிடமிருந்து வார்த்தைகள் வந்து விழுந்தது. “உனக்கே நல்லா தெரியும் சந்தீப்.. நான் என் பாணியில் சொல்லி இருந்தா எப்படி இருக்கும்னு.. நான் அப்படிச் செய்யாததுக்குக் காரணம் நீதானும் உனக்கு ரொம்பவே நல்லா தெரியும்.. அண்ட் இதைப் பத்தி உன்கிட்ட நான் பலமுறை மறைமுகமா எச்சரிச்சும் இருக்கேன்..” என்றவனின் வார்த்தைகளில் அனல் பறந்தது.
 
 
“ஒகே ஒகே வர்மா.. நான் தான் அப்போ அதைச் சிரீயஸா எடுத்துக்கலை.. தப்பு என் மேலே தான்.. ஆனா நீ இப்படி இந்தப் பொண்ணைக் கல்யாணம்..” என்றவனின் வார்த்தைகளை முடிக்கக் கூட விடாமல் “என் வொய்ப் பத்தி நீ பேசறது இதுவே கடைசியா இருக்கட்டும்.. எனக்குப் பிடிச்சு இருந்தது கல்யாணம் செஞ்சேன், தட்ஸ் ஆல்.. எதிரியோட தங்கச்சி மேலே லவ் வர கூடாதுன்னு சட்டம் ஏதாவது இருக்கா என்ன..?!” என்றான்.
 
 
“அப்படி எதுவும் இல்லை தான்.. ஆனா அவன் செஞ்ச தப்புக்கு எதுவும் தண்டனை இல்லையா.. அவன் தங்கைக்காக அப்படியே விட்டுடுவியா..?! இல்லை பழி வாங்க தான் இந்தக் கல்யாணமா..? பழி வாங்க தானா அதுக்குக் கல்யாணம் வரைக்கும் போகணுமா..?” என்றான் அடுக்கடுக்காக.
 
 
“எப்போ அவன் தங்கச்சியை நான் கல்யாணம் செஞ்சேனோ அப்போவே இது எங்க குடும்ப விஷயமா மாறிடுச்சு சந்தீப்.. இனி இதுல என்ன செய்யணும், எப்படிச் செய்யணும்னு எல்லாம் நான் பாத்துக்கறேன்..” என்றதோடு சந்தீப்பின் மற்ற எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்காமல் முடித்துக் கொண்டான் ஷௌர்யா.ஷௌர்யாவின் அந்தத் தொனியை இத்தனை வருட பழக்கத்தில் நன்றாக அறிந்து இருந்தவனும் முகம் கறுத்து தலை குனிந்து கொண்டான்.
 
 
என்ன தான் அம்ரு அழகு நளினம் என்று பார்ப்பவர்களின் மனதை கவருவது போல் இருந்தாலும் ஷௌர்யாவின் குணத்தைப் பல வருடங்களாக அறிந்திருந்த சஷாங்கிற்குச் சின்னச் சின்ன விஷயத்தில் கூட ஸ்டேடஸ் பார்க்கும் அவன் இப்படி ஒருத்தியை தன் நிலையில் இருந்து பல படிகள் கீழ் இறங்கி காதலித்துத் திருமணம் செய்திருக்க வாய்ப்பே இல்லை என்றே தோன்றியது.
 
 
அங்கு அமர்ந்திருந்த போது கூட, ஷௌர்யா மட்டுமே நெருக்கம் காண்பித்துப் பேசியது போலும் இவள் அமைதியாக இருந்தது போலவும் தோன்ற.. நேரடியாக அம்ருவிடமே பேசி பார்ப்பது தான் சரி என்று சஷாங்கிற்குத் தோன்றவும், அம்ருவோடு தனியாகப் பேச ஒரு சந்தர்ப்பம் கிடைத்த சந்தோஷத்தோடு அங்கிருந்த கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.
 
 
அதற்குள் அனைத்தையும் எடுத்து வைத்து முடித்து இருந்த அம்ரு புவனாவிடம் டீ போட சொல்லி விட்டு திரும்ப, அவளின் இடையில் அழுத்தமாகக் கரம் பதித்து ஒரு சுழற்று சுழற்றி அருகில் இருந்த தூணுக்குப் பின்னால் கொண்டு சென்று நிறுத்தி இருந்தான் ஷௌர்யா.
 
 
இந்தத் திடீர் தாக்குதலில் மிரண்டு கத்த நினைத்தவள் அது ஷௌர்யா என்று உணர்ந்து மேலும் மிரண்டு போய்த் திறந்த வாய் மூடாமல் நின்றிருந்தாள். “அவ்ளோ ஷாக் எல்லாம் வேணாம்.. ஷாக்கை குறை, அண்ட் உனக்கு அவ்வளவு சீன் எல்லாம் கிடையாது புரியுதா.. உன் ஆக்டிங் எவ்வளவு கேவலமா இருந்ததன்னு சொல்றதுக்கு உதாரணமா உன்கிட்ட விசாரணை கமிஷன் நடத்த ஒருத்தன் வந்து இருக்கான்.. அதான் அவன் முன்னே இப்படித் தனியா தள்ளிட்டு வந்தேன்.. அங்கே இருந்து நாம என்ன செய்யறோம்னு எல்லாம் பார்க்க முடியாது.. அவன் மட்டமான புத்திக்கு எதையாவது கற்பனை செஞ்சுக்கட்டும்.. கொஞ்ச நேரம் அசையாம நில்லு..” என்றான் கேஷ்வலாக.
 
 
எவ்வளவு தான் மனதை அனைத்திற்குமாக ஒருவாறு தயார் செய்து கொண்டு அவனின் வார்த்தைகள் மனதை வலிக்கச் செய்ய விடக் கூடாது என்ற உறுதியோடு நின்றாலும் இது போலச் சில நேரங்கள் அம்ருவின் கட்டுப்பாட்டையும் மீறி மனதை ரொம்பவே காயபடுத்தி விடுகின்றன.
 
 
இப்போதும் அது போலத் தான் உணர்ந்தாள் அம்ரு. “நீங்க உங்க விருப்பத்துக்கு எல்லாம் வெச்சு விளையாட நான் என்ன பொம்மையா..?” என்றாள் மெல்லிய குரலில்.
 
 
“நோ.. நோ.. பொம்மையை வெச்சு விளையாட மட்டும் தான் முடியும் அது நம்ம சொல்ற எதையும் செய்யாது.. நீ நான் சொல்றதை மட்டுமே செய்ய ப்ரோக்ராம் செய்யப்பட்ட ரோபோ.. தனியா யோசிக்கவோ நடக்கவோ முற்றிலும் தடா..” என்று அதே போன்ற சன்ன குரலில் கூறினாலும் அதில் ஒரு அழுத்தம் இருந்தது.
 
தொடரும்..
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா 
 
 

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 month ago
Posts: 104
Topic starter  

ஹாய் டியர்ஸ்

"உன்னை அமுதவிஷமென்பதா..!!" கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

UAV - 10

https://kavichandranovels.com/community/comments-and-discussions/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%85%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%ae%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%be-comment-thread/

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா

This post was modified 2 weeks ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 month ago
Posts: 104
Topic starter  
விஷம் – 11
 
அந்தப் பெரிய தூணின் பின்னே இவர்கள் இருவரும் நெருங்கி நிற்கும் நிலையைத் தொலைவில் இருந்து பார்க்கும் யாரும் ஷௌர்யா சொன்னது போல மட்டுமே நினைக்க முடியும். எவனோ ஒருவன் தன்னைப் பற்றி இப்படி ஒரு கோணத்தில் சிந்திப்பான் என்ற எண்ணமே அம்ருவுக்குப் பிடித்தமின்மையை வெளிபடுத்தக் காரணமாக இருந்தது.
 
 
அம்ருவின் இந்த அப்பட்டமான பிடித்தமின்மைக்குக் காரணம் தன் கணவனோடு சேர்த்து தான் தன்னை அவ்வாறு எண்ணுகிறார்கள் என்று எளிதாக ஏற்றுக் கொண்டு அதைக் கடந்து போகக் கூடிய அளவுக்குக் கூட இன்னும் ஷௌர்யா அவள் மனதில் கணவனாகப் பதியவில்லை என்பதே.
 
 
அம்ரு முகத்தைச் சுருக்கி பேசிய விதத்தில் இருந்தே இதைச் சரியாகக் கணித்து இருந்தான் ஷௌர்யா. அதனாலேயே அப்படி ஒரு பதிலையும் தந்து இருந்தான்.
 
 
பத்து நிமிடங்களுக்குப் பிறகு அங்கிருந்து வெளி வந்தவன், அப்போதே சஷாங் அங்கு இருப்பதைப் பார்ப்பது போன்ற பாவனையில், “என்ன சஷாங் இங்கே..?” என்றான். “நத்திங் பய்யா.. சும்மா அப்படியே தோட்டத்துக்குப் பக்கம் வந்தேன்..” என்றவன் வேகமாக விலகி சென்றுவிட்டான். அதில் ஒரு கிண்டலான புன்னகையோடு திரும்பி அம்ருவை பார்த்தவன், ஹாலுக்குச் சென்றான்.
 
 
அடுத்தச் சில நிமிடங்களில் சந்தீப் அண்ட் கோ விடைபெற்று சென்று விட.. “அந்த ஜாஷாவை அவாய்ட் செய்யத் தான் இதுன்னு எனக்குத் தோணலை பய்யா..! நீங்க நினைச்சு இருந்தா அதுக்கு ஒரு நொடி போதும், ஆனா யாருக்கும் கொடுக்காத இடமும் இவ்வளவு கேள்வியும் கேட்க எப்படி விட்டீங்க அவரை..?!” என்ற ஷாமின் கேள்வியில் தன் போக்கில் மாடி ஏறிக் கொண்டு இருந்த ஷௌர்யாவின் நடை தடைப்பட்டது.
 
 
திரும்பி ஷியாமை பார்த்து மர்மமாகப் புன்னகைத்தவன் ஒரு கண்சிமிட்டலோடு நகர்ந்து விட்டான். அதுவே ஷியாமுக்கு இதற்குப் பின் ஏதுவோ இருப்பதைச் சொல்லாமல் சொல்ல.. அவனும் ஒரு தலையசைப்போடு நகர்ந்து விட்டான்.
 
 
இப்படியே ஷௌர்யா தன் விருப்பத்துக்கு எல்லாம் அம்ருவை வளைப்பதும் அவளும் அதில் துளி விருப்பமும் இல்லாமல் போனாலும் எதிர்த்து என்ன ஆகப் போகிறது என்ற மனநிலையில் அமைதியாகச் செய்வதுவுமாக ஒரு வாரம் கடந்து இருந்தது.
 
 
அன்று மாலை ஷௌர்யா மற்றும் ஷியாம் வரவேற்பறை சோபாவில் அமர்ந்து இருந்தனர். ஷௌர்யா கடமையே கண்ணாகத் தன் வேலையில் மூழ்கி இருக்க.. ஷியாம் அன்று காலை முதல் படித்துக் கொண்டிருந்ததால் சற்று மனதை மாற்ற எண்ணி அங்கிருந்த பெரிய திரையில் யூடியூப்பில் பாட்டு சம்பந்தமான வீடியோக்களைக் கை போன போக்கில் மாற்றி மாற்றி வைத்து பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
 
 
அப்போது அங்கு வந்த அம்ரு இருவருக்கும் சிற்றுண்டி கொடுத்திருந்த தட்டை எடுத்துக் கொண்டு திரும்பி செல்லவும், “பாபிஈஈஈ.. இது.. இது நீங்க தானே..?” என்ற ஷியாமின் ஆர்வமான குரலில் திரும்பியவள், அவன் கை காண்பித்த திசையில் திரும்பி பார்க்க.. அங்குத் தீபாவளிக்கு முதல் நாள் இவள் பங்கேற்று இருந்த நிகழ்ச்சி யூடியூப்பில் ஓடிக் கொண்டு இருந்தது.
 
 
ஷியாமின் குரலில் ஷௌர்யாவும் நிமிர்ந்து எதிரில் இருந்த திரையைப் பார்த்திருக்க.. அதில் அன்று இரவு ஷௌர்யா பார்த்த போது அம்ரு அணிந்திருந்த அதே சேலையிலும் ஒப்பனையிலும் ஆடிக் கொண்டிருந்தாள்.
 
 
“நீங்க டான்சரா பாபி..” என்று ஆச்சர்யத்தோடு கேட்டவன், மீண்டும் அந்த வீடியோவை முதலில் இருந்து பார்க்கும் ஆவலில் மறுபடி வைத்தான். “ம்ம்” என்று மட்டும் சொன்னவள் திரையில் பார்வையைப் பதிக்க.. “இது என்ன ப்ரோக்ராம்..? எப்போ நடந்தது பாபி..?” என மேலும் அதைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆசையில் கேட்டான்.
 
 
“இது மாதர்சங்கம் ஒண்ணு அவங்களோட பத்தாவது ஆண்டு விழாவை நடத்தினாங்க.. அதுக்காகச் செஞ்ச ப்ரோக்ராம், தீபாவளிக்கு முதல் நாள் ஈவ்னிங் நடந்தது.. எங்க ப்ரோக்ராம் தான் கடைசியா இருந்தது.. அது முடிய நைட் பத்துமணி ஆகிடுச்சு..” என்று விளக்கமளித்தாள்.
 
 
அதே நேரம் அங்குப் பாடல் ஒலிக்கத் தொடங்கியது..
 
 
கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா -உன்
கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா -பழம்
பாட்டோடுதானா அது ஏட்டோடு தானா
நாள் தோறும் பாடும் ஊமைகள் தானா
 
 
படித்து முடித்துப் பல கனவுகளுடன் தன் எதிர்காலத்தைத் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் பெண்ணுக்கு திடீரென வீட்டில் திருமண ஏற்பாடு நடைபெறுவதும் அதைத் தடுக்க நினைத்து அவள் எடுக்கும் அத்தனை முயற்சிகளுக்கும் ஒட்டு மொத்த குடும்பமும் எதிராக நின்று அவளை மனதளவில் பாசத்தையும் மற்ற பிள்ளைகளின் வாழ்க்கையையும் காரணம் காண்பித்து ஒத்துக் கொள்ள வைப்பதுமாகக் காட்சி தொடங்கியது.
 
 
சாத்திரங்கள் பெண் இனத்தை மூடி மறைத்ததம்மா -அந்த
ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா
சாத்திரங்கள் பெண் இனத்தை மூடி மறைத்ததம்மா -அந்த
ஆத்திரத்தில் பாரதிக்கும் மீசை துடித்ததம்மா
 
 
வீடாளும் பெண்மை இங்கே நாடாளும் காலம் வந்தும்
ஊமைகள் போலவே என்றும் ஓயாமல் கண்ணீர் சிந்தும்
ஏனென்று கேட்கதான் இப்போது ஆள் இல்லை
சம நீதி கேட்கின்ற சட்டங்கள் ஏன் இல்லை
 
 
உலகமெல்லாம் விடிந்த பின்னும்
உங்களின் இரவுகள் விடியவில்லை
 
 
பிறந்த வீட்டின் கட்டாயத்தினால் மன வாழ்க்கையை ஏற்றுக் கொள்பவள், புகுந்த வீட்டு மனிதர்களையும் கணவனையும் நம்பி தன் வாழ்வை துவங்க.. அங்கோ அவளை வேலை செய்யும் எந்திரம் போலும் தங்களின் அதிகாரத்தைப் பின் பற்ற படைத்தது போலுமே நடத்தினர்.
 
 
இதன் இடையே அவள் ஆசைப்பட்டுக் காத்திருந்த வேலைக்கான உத்தரவு வந்து சேர.. உலகமே தன் வசம் ஆனது போன்ற மனநிலையோடு அதைத் தன் கணவனிடம் பகிர்ந்து கொள்பவளுக்கு அதில் அவள் சேர கூடாது என்ற மறுப்பே கிடைத்தது.
 
 
அதில் அதிர்ந்து அழுது கெஞ்சி என்று அப்பெண் துடித்துக் கதறி தன் இத்தனை வருட படிப்பும் உழைப்பும் வீணாய் போகுமென்ற மன்றாடலுக்கும் விடையாய் “உனக்காக வேணா சம்மதிக்கறேன்.. ஆனா நீ இந்த வேலையில் சேர கூடாது.. வேற வேலை தேடிக்கோ..” என்று அவன் முடித்துக் கொள்ள..
அதிர்வோடு ஏன் என்றவளுக்கு, அதில் உன் வருமானம் என் வருமானத்தை விட அதிகம்.. நீ எனக்கு மேலே இருக்கக் கூடாது.. எப்போவும் எனக்குக் கீழே தான் இருக்கணும்..” என்றிருந்தான் கணவன்.
 
 
கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா -உன்
கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா -பழம்
பாட்டோடுதானா அதன் ஏட்டோடுதான
நாள் தோறும் பாடும் ஊமைகள் தானா
 
கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா -உன்
கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
 
 
அதைக் கண்டு சிரிப்பதா அழுவதா எனப் புரியாத மனநிலையில் கிடைத்திருக்கும் வாய்ப்பை இழக்க மனமில்லாமல் கணவன் சொன்னது போலவே தன் தகுதியை குறைத்துக் கொண்டு ஒரு சாதாரண வேலையில் சேர்கிறாள்.
 
 
பாய் விரிக்கும் பெண்மை என்ன காதல் பதுமைகளா -தினம்
ஏவல் செய்ய ஆடவர்க்குக் காவல் அடிமைகளா
பொன்னள்ளி வைத்தால் தானே பூமாலை தோளில் ஏறும்
இல்லாத ஏழையர்கெல்லாம் பொல்லாத தனிமை கோலம்
 
 
எரிகின்ற நேரத்தில் அணைக்கின்ற கை இல்லை
சொல்கின்ற வார்த்தைகள் ஒவ்வொன்றும் பொய் இல்லை
கனவுகளில் மிதந்தபடி
கலங்குது மயங்குது பருவக்கொடி
 
 
ஆனால் அதிலும் அவளை நிம்மதியாக இருக்க விடாமல், அவளின் உடையில் துவங்கி வைக்கும் போட்டு வரை தினம் தோறும் கணவனின் குறுக்கிடும்.. அதன்படி நடந்து கொண்டாலும் நாள்தோறும் சந்தேகம் என்னும் ஈட்டி கொண்டு இரவில் குத்தி கிழிக்கும் வார்த்தைகளும் என்று நரக வாழ்க்கை வாழ்கிறாள்.
 
 
இவையே அவளின் மனதை ரணமாக்கி தன் சுயத்தைத் தொலைத்து நடமாட செய்திருக்க.. அதற்கும் மேலாக மாமியார் நாத்தனார் என்ற இரு பெண்கள் அமர்ந்த இடத்திலிருந்து வேலை ஏவி கொண்டு வீட்டின் மொத்த வேலைகளையும் அவளின் மேல் சுமத்தி விட்டு வேடிக்கை பார்த்தனர்.
 
 
அதற்கும் மேலாக அவளின் வருமானத்தையும் பிடுங்கி வைத்துக் கொண்டு தினசரி செலவுக்கு மட்டும் கொடுப்பது என்றெல்லாம் கொடுமைகள் தொடர.. ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல் தன் தாயை சந்தித்து அழுது கதறியும் கூட “உனக்குப் பின்னால் இருக்கும் தங்கையின் வாழ்க்கையை மனதில் வைத்துச் சகித்துக் கொள்” என்பதோடு அவர் முடித்துக் கொண்டு விடுவார்.
 
 
அனைத்தையும் தாங்கி கொண்டு வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருந்தவள், ஒரு நாள் அலுவலகத்தில் மயங்கி சரிய.. உடன் இருப்பவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்ததில் அவள் கருவுற்று இருப்பது உறுதியாகும்.
 
 
இவள் மயக்கம் தெளியாமல் இருப்பதனால் உடன் வந்த அலுவலகத் தோழர் அவளின் கணவனுக்கு அழைத்து விவரம் பகிர.. பெரிதாக ஆர்வம் எதுவும் காட்டாமல் தொடர்பு அந்தப் பக்கம் துண்டிக்கப்பட்டு இருக்கும்.
 
 
பின் மாலைக்கு மேல் சற்று தேறி மற்றவர் உதவியை மறுத்து அவர்களுக்குச் செலவு செய்த பணத்தைக் கூடத் திரும்பத் தர முடியாத நிலையில் மன்னிப்பு கோரி அவகாசம் கேட்டு தானே ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தவளை குடும்பமாகச் சேர்ந்து வார்த்தைகளில் வதைத்து குத்தி கிழிப்பர்.
 
 
அதிலும் ஒருபடி மேலே போய் “போன் செஞ்சானே அவன் தான் இந்தக் குழந்தைக்கு அப்பனா..?!” என்ற கேள்வி கணவனிடமிருந்து வரவும் வெகுண்டு எழுந்தவள், அருகில் இருந்த கிரிக்கெட் பேட்டை எடுத்து “ஆமா டா ஆமா..” என்று ஆவேசத்தோடு கணவனையும் தடுக்க வந்த மற்றவர்களையும் தாக்கி விட்டு,
 
 
“இத்தனை நாள் நான் விட்டு கொடுத்துப் போனது எல்லாம் என்னைக்காவது ஒரு நாள் என்னைப் புரிஞ்சுக்குவீங்க என்ற எதிர்பார்ப்பில் தானே தவிர, உங்களுக்குப் பயந்து இல்லை.. ஆனால் நான் பணிய பணிய, அதையே என் பலகீனமாக நினைத்து நீங்க எல்லாம் உங்க அட்டூழியத்தின் அளவை அதிகமாக்கி கொண்டே போவீங்கனா இனியும் பணிய நான் தயாரா இல்லை.. போதும்.. இதுவரை என் குடும்பத்துக்காக.. பெற்றவர்களுக்காக.. கூடப் பிறந்தவர்களுக்காகன்னு எல்லாம் பார்த்து நான் என் வாழ்க்கையைத் தொலைத்தது போதும்.. மற்றவர்களுக்காகன்னு மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தால் என் வாழ்க்கையை நான் எப்போ வாழ்வது.. இனி என் வாழ்க்கை என் விருப்பபடி மட்டும் தான்..” என்று ருத்ரதேவியாக மாறி ஆத்திரத்தோடு உரைத்தவள் வீட்டை விட்டு வெளியேறி தன் படிப்புகேற்ற வேலையை அமைத்துக் கொண்டு தன் விருப்பப்படி உடை அலங்காரம் என்று வாழ துவங்குவதில் முடிந்தது அந்த அழகிய நாட்டிய நாடகம்.
 
 
கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா -உன்
கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா
பெண் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சோடுதானா -பழம்
பாட்டோடுதானா அதன் ஏட்டோடுதான
நாள் தோறும் பாடும் ஊமைகள் தானா
 
கண்ணின் மணியே கண்ணின் மணியே போராட்டமா -உன்
கண்களில் என்ன கண்களில் என்ன நீரோட்டமா..
 
 
அந்த வீடியோ முடியவும், “வாவ்... வாவ்..” என்று எழுந்து நின்று கைதட்டி சந்தோஷித்தான் ஷியாம். அந்த நிகழ்வு முழுவதையுமே தன் முகபாவனைகளிலும் கண்களாலும் நளினங்களாலும் கட்டி வைத்து இருந்தாள் அம்ரு.
 
 
ஒவ்வொரு காட்சியிலும் அவள் உணர்த்திய ஒவ்வொரு பாவத்திலும் நடிப்பென்று நம்ப முடியாத திகைப்போடு உறைந்து போய்ப் பார்த்து கொண்டிருந்தவன், “கூஸ்பம்ப்ஸ் மூமென்ட் பாபி.. வாவ் சான்ஸே இல்லை.. இப்போ நடந்தது நடிப்புன்னு என்னால நம்பவே முடியலை..” என்று பாராட்டி தள்ளினான்.
 
 
அதையும் ஒரு சிறு புன்னகையோடான தலையசைப்பிலேயே பெற்றுக் கொண்டவளிடம் “அதெப்படி அவ்வளவு சீக்கிரம் அத்தனை டிரஸ் மாத்தினீங்க..?” என்றான் ஷியாம் ஆர்வமாகக் கேட்க. “அது ஒண்ணு மேலே ஒண்ணுன்னு போட்டு இருப்போம், சின்ன மியூசிக் போட்டு ஒரு கேப் கிடைக்குமில்லை... அப்போ பேக் ஸ்டேஜ் போய் ரிமூவ் செஞ்சிடுவோம்..” என்றாள்.
 
 
“இது முழுக் கான்சப்ட் யாரோடது பாபி..? செம்மையா இருக்கு..” எனக் கேட்டான். “அந்த மாதர்சங்கம் இது போலப் பெண்களின் பிரச்சனையை முன் நிறுத்தி கான்சப்ட் எடுக்கச் சொன்னாங்க.. மத்ததெல்லாம் நாங்க தான்..” என்றாள்.
 
 
“அது உங்க ட்ரூப்பா..?”
 
 
“இல்லை முகுந்த்தோடது, எங்க ட்ரூப் பேரே முகுந்த் டான்ஸ் கம்பெனி தான்.. அவரும் நானும் தான் அங்கே ஸ்டார் டான்சர்ஸ்..”
 
 
“முகுந்த்..?”
 
 
“எனக்குக் கணவரா நடிச்சாரே அவர்..”
 
 
“ஓ அவரா.. வாவ் அவரும் செம்ம பர்பார்மென்ஸ்.. நானே கேக்கணும்னு நினைச்சேன்.. உங்க ஆக்டிங் அப்படி ரசிக்க முடிஞ்சதுனா அதுக்குக் காரணமே அவர் உங்களைக் கொடுமைபடுத்தினது எல்லாம் அவ்வளவு ரியலா இருந்ததனால் தான்.. கிடைச்ச அந்தச் சின்னக் கேப்ல விஷயத்தை உணரவும் வெச்சு, எங்களை அதைக் கண்டு கொந்தளிக்கவும் வெச்சதே பெரிய சாதனை தான்..”
 
 
“ம்ம்ம்.. அவருக்கு டான்ஸ்னா அப்படி ஒரு பைத்தியம்.. சாப்பாடு தூக்கம் பார்க்காம உழைப்பாரு..”
 
 
“சூப்பர் சூப்பர் பாபி.. உங்க மத்த பர்பார்மென்ஸ் எல்லாம் எங்கே பார்க்கலாம்..?”
 
 
“முகுந்த் டான்ஸ் கம்பெனின்னு யூடியூப் சேனல் இருக்கு பாரு.. அதிலேயே எல்லாம் இருக்கும்..” என்றவளுக்கு நடனத்தைப் பற்றிப் பேச துவங்கியதில் இருந்து முகத்தில் அத்தனை ஒளி வந்து போனது.
 
 
“அவருக்கு மட்டும் இல்லை.. உங்களுக்கும் டான்ஸ் அப்படித் தான் போலேயே..?” என்று ஷியாம் வம்பிழுத்தான். “ஆமா ஷியாம்.. எனக்கும் டான்ஸ்னா பைத்தியம் தான்.. சின்ன வயசில் இருந்தே சந்தோசம், துக்கம், கோபம், எதுவா இருந்தாலும் எனக்கு டான்ஸ் தான்..” என்று விழிவிரிய பேசி கொண்டிருந்தவள் தன் உயிரான நடனத்தைப் பற்றிப் பேச துவங்கியதில் சுற்றும் முற்றும் மறந்தே போனாள்.
 
 
“உங்க உழைப்பும் டெடிகேஷனும் கொஞ்சமும் வீண் போகலை பாபி.. பாருங்க, டென் மில்லியன் வியூஸ்.. எவ்வளவு கமெண்ட்ஸ் வந்து இருக்கு பாருங்க..” என்று ஷியாம் அதையெல்லாம் சுட்டி காட்டவும் அம்ருவுக்கு ஆனந்தத்தில் கண்கள் கலங்கி போனது.
 
 
அதன் பின் இரவுக்கான உணவை தயாரிக்கச் சென்று விட்டாள் அம்ரு. ஷியாமை சென்று சாப்பிட அழைத்து விட்டு ஷௌர்யாவை அழைக்க அவனின் பகுதிக்குள் நுழைந்தவளின் செவியைத் தீண்டியது “அமிர்த வர்ஷினி..” என்ற ஷௌர்யாவின் அழுத்தமான் அழைப்பு.
 
 
அதில் எப்போதும் பேரை சொல்லி அழைக்காதவன் இன்று இத்தனை அழுத்தத்தோடு அழைத்ததில் உண்டான பதட்டத்தோடு வேகமாக விரைந்தவள் மூடி இருந்த அறையின் கதவை லேசாகத் தட்டினாள்.
“கம் இன்” என்று அதே அழுத்தத்தோடு அனுமதி கிடைக்கவும், கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவள் அடுத்த நொடி, “அவுச்” என்று வலது காலை தூக்கி பிடித்துக் கொண்டு இடதுகாலை பிடிமாநாத்துக்காக ஊன்ற.. மீண்டும் அவளிடமிருந்து “ஆஆஆ” என்ற அலறல் எழுந்தது.
 
 
அம்ருவின் அலறலுக்குப் பிறகு சாவகாசமாகத் திரும்பி அவளைப் பார்த்தவன், “ஓ எஸ் இதைச் சொல்ல தான் கூப்பிட்டேன்.. தெரியாம கை தவறி உடைஞ்சுடுச்சு.. கிளீன் செய்..” என்றான்.
 
 
அங்கு இரு கால்களிலும் கண்ணாடி துணுக்குகள் குத்தி கொண்டு நிற்கவே முடியாமல் தடுமாறி கதவின் மீது சாய்ந்து காலை ஒருபக்கமாகத் திருப்பி நின்றிருந்தவள், ஷௌர்யாவையும் அந்த உடைந்து இருந்த கண்ணாடியையும் கண்களில் வலியோடு பார்த்தாள்.
 
 
சரியாகக் கதவை திறந்தவுடன் கால் வைக்கும் இடத்தில் கண்ணாடி கிளாஸ்கள் மற்றும் ஜக் எல்லாம் உடைந்து இருந்தது. அதிலும் ஒன்றுக்கும் மேற்பட்டவை அதுவும் சரியாக ஒரே இடத்தில் உடைந்து இருப்பது தானாகத் தெரியாமல் நடந்தது என்று கூறினால் சின்னக் குழந்தை கூட நம்பாது.
 
 
அவனையே சில நொடிகள் பார்த்தவள் அப்படியே மடிந்து அமர்ந்து பாதத்தைப் பதம் பார்த்து இருந்த துணுக்குகளை வலியை பொறுத்துக் கொண்டு கண்ணீர் வழிய காலில் இருந்து எடுக்க முயன்று கொண்டிருக்க.. பொறுமையற்று அம்ருவின் பக்கம் திரும்பிய ஷௌர்யா “உன் வெட்டி வேலை எல்லாம் அப்புறமா செஞ்சுக்கோ.. சீக்கிரம் அதைக் கிளீன் செய்.. இது டின்னர் டைம் நான் கீழே போகணும்.. வழியில் இப்படி இருந்தா நான் எப்படிப் போறது..” என்று எரிந்து விழுந்தான்.
 
 
அதில் அவன் ஷூ காலையும் தன் வெற்று காலையும் மாறி மாறி பார்த்தவள் பதிலேதும் பேசாமல், வலியோடும் லேசான ரத்த கசிவோடும் அறையைச் சுத்தம் செய்யத் துவங்கினாள்.
 
 
அம்ருவையே இமைக்காமல் சில நொடிகள் கண்கள் மின்ன பார்த்தவன், “ஓ காட்.. உனக்கு ஒரு வேலை ஒழுங்கா செய்யத் தெரியாதா..?! பாரு எப்படி அசிங்கமா உன் ரத்தத்தால் தரையைக் கரையாக்கற.. இட்டாலியன் மார்பல்ஸ் ரெட் தெரியுமா உனக்கு..?! அது சரி உன்கிட்ட போய் இதெல்லாம் கேக்கறேன் பாரு..” என்று சிடுசிடுத்துக் கொண்டிருந்தான் ஷௌர்யா.
 
தொடரும்..
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா 
 
 

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 month ago
Posts: 104
Topic starter  
விஷம் – 12
 
 
கண்ணீரும் ரத்தமும் விடாமல் கசிந்து கொண்டு இருக்க.. பல்லை கடித்து அதைப் பொறுத்துக் கொண்டே தன் பணியைத் தொடர்ந்து கொண்டிருந்தாள் அம்ரு. அவளையே விழிகளில் வெறியோடு பார்த்த ஷௌர்யா “ஓய்.. போண்டா டீ.. உனக்கு டான்ஸ் ரொம்பப் பிடிக்கும்னு சொன்னே இல்லை.. சந்தோசம், துக்கம், கவலை, எதுவா இருந்தாலும் அதுக்கு டான்ஸ் தான்னு சொன்னே இல்லை.. இப்போ நீ என்ன மூட்ல இருக்கேன்னு எனக்குத் தெரியலை, ஆனா எப்பவும் போல முகம் கேவலமா தான் இருக்குன்னு வெச்சுக்கோ.. இப்போ நீ இருக்கச் சிசுவேஷனுக்குச் செட் ஆகற மாதிரி ஒரு ஆட்டம் போடேன்..” என்று சீண்டும் குரலில் கூறினான்.
 
 
அவனை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் கடமையே கண்ணாக அம்ரு இருக்க.. “ஓ, பேமண்ட்டுக்கு ஆடற கூட்டம் இல்லை நீ..? லைக் திண்டுக்கல் ரீட்டா.. சிம்மக்கல் சித்ரா.. இப்படி அறையும் குறையுமா பேனர் வெச்சு மிட் நைட்ல ஒதுக்குபுறமா ஆடுவாங்களே அப்படியாஆஆ..? நானும் ஆட்டம் பிடிச்சா நீ எதிர்பார்க்கறதை விடச் சில்லறையை வாரி இறைக்கறேன்.. போடு ஒரு ஆட்டம்..” என்றான்.
 
 
அதுவரை அவனின் சீண்டலை பொறுத்துக் கொண்டு இருந்தவளால் தான் உயிராய் நினைக்கும் ஒன்றை பற்றி அப்படித் தர குறைவாய் பேசுவதை அதற்கு மேல் தாங்க முடியாமல் போனது. ”பிளீஸ்.. ஏன் இப்படி ஒரு கலையை அவமதிக்கறீங்க..” என்றாள் கெஞ்சுதலோடு.
 
 
“கலை..” என்று நம்ப முடியாத எதையோ கேட்டது போல் முகபாவனையைக் காண்பித்தவன், “இந்தச் சிசுவேஷனுக்கு ஏற்றது போல நான் ஒரு பாட்டு சொல்லவா..? நீ எங்கேஏஏஏ என் அன்பேஏஏஏ..?! இந்தப் பாட்டைப் பாடி நீ ஆடினா.. ஒரே கல்லுல இரண்டு மாங்காய்.. ஒண்ணு உன் கண்ணாளனை நினைச்சு ஏங்கி தவிச்சு துடிச்சுக் கதறலாம், கேட்டா நடிப்புன்னு சொல்லலாம்.. அதே போல இந்தக் கண்ணாடி துண்டெல்லாம் வீணாவும் போகாது.. எப்படி..?!!” என்றான் எகத்தாளமாக.
 
 
‘இவனிடம் எல்லாம் பேசுவதே வீண்..’ என்ற எண்ணத்தோடு தன் ஷாலை இரண்டாகக் கிழித்து இரு கால்களிலும் ரத்தம் கசிந்து தரையைக் கறையாக்காதவாறு கட்டிக் கொண்டவள், தன் வலியையும் மீறி முடிந்த அளவு வேகமாக அந்த இடத்தைச் சுத்தம் செய்து முடித்து வெளியேறினாள்.
 
 
ஒவ்வொரு அடியையும் தாங்க முடியாத வலியோடும் வேதனையோடும் எடுத்து வைத்து படியை நெருங்கியவள், அதுவரை இழுத்து பிடித்து வைத்திருந்த வலியை வெளிக்காட்டாத மனவலிமை சுத்தமாக வடிந்து போய் இருக்க.. அப்படியே மடங்கி அமர்ந்தாள்.
 
 
காலில் இருந்த கட்டை பிரித்து அங்குக் குத்தி கொண்டிருந்த கண்ணாடி துண்டை ஒவ்வொன்றாக வலியை பொறுத்துக் கொண்டு எடுத்துக் கொண்டு இருந்தாள் அம்ரு. அதே நேரம் எதிர் புறம் இருந்த படியில் இருந்து இரவு உணவுக்காக இறங்கி கொண்டிருந்த ஷியாமின் பார்வையில் இவை படவும், முதலில் அம்ரு அங்கு அமர்ந்து என்ன செய்து கொண்டு இருக்கிறாள் என்று புரியாமல் கவனித்தவனுக்குக் காலில் இருந்து வழிந்து கொண்டு இருக்கும் ரத்தம் தெரிய பதட்டத்தோடு வேகமாக அங்கு விரைந்தான்.
 
 
“அச்சோ என்னாச்சி பாபி..” என்று பதறி காலை பிடிக்கப் போனவனைப் பதிலேதும் சொல்லாமல் ஒரு சிறு புன்னகையோடு தவிர்த்தவள், தானே அதை எடுக்க முயன்றாள். ஆனால் காலை மடித்து எடுப்பது சற்றுச் சிரமமாக இருக்கவே, அவள் தடுமாற..
 
 
சட்டென அம்ருவின் காலை பிடித்துத் தன் மடி மேல் வைத்துக் கொண்டு ஷியாம் அவளின் காலை பரிசோதிக்கத் தொடங்கினான். அம்ரு அதை அனுமதிக்காமல் மறுத்து காலை இழுத்துக் கொள்ளப் போராட.. ”பிளீஸ் பாபி.. நான் ஒரு டாக்டர் தான், அமைதியா இருங்க..” என்றவனின் கெஞ்சுதலான குரலில் அம்ருவின் மறுப்பு நின்று போனது.
 
 
இரண்டு கால்களிலும் குத்தி கொண்டிருந்த கண்ணாடி துகள்களைப் பார்த்தவுடனேயே ஷியாமுக்கு ஓரளவு என்ன நடந்து இருக்கும் என்பது புரிந்து போனது. கண்களில் வலியோடு அம்ருவை பார்த்தவன், “சாரி பாபி..” என்றான்.
 
 
எதற்கு இந்த மன்னிப்பு என்று அம்ருவும் கேட்கவில்லை.. ஷியாமும் விளக்கவில்லை. வேகமாக விரைந்து தன் மெடிக்கல் கிட்டை எடுத்துக் கொண்டு வந்தவன், அம்ருவின் இரு காலிலும் குத்தி இருந்த துகள்களை எல்லாம் நீக்கி மருந்திட்டு கட்டு போட்டான்.
 
 
“இரண்டு நாள் நடக்காம காலில் தண்ணீர் படாம பார்த்து இருங்க பாபி.. சரி ஆகிடும்.. தினமும் நானே கட்டு மாற்றி மருந்து போட்டு விடறேன்..” என்றவனுக்கு ஒரு தலையசைப்பை மட்டுமே பதிலாகக் கொடுத்தாள்.
 
 
அதே நேரம் இவர்களைக் கடந்து இங்கு எதுவுமே நடக்காதது போல் இறங்கி சென்று உணவு மேசையில் அமர்ந்தான் ஷௌர்யா. அதைக் கண்டதும் அம்ரு அவளறியாமலேயே வேகமாக எழுந்து அங்குச் செல்ல முயல, அதை அறிந்து “பாபி பிளீஸ் நீங்க இருங்க.. நான் பார்த்துக்கறேன்..” என்று தடுக்க முயன்ற ஷியாமை ஒரு வேதனையான புன்னகையோடு பார்த்தவள், வேண்டாமென்ற தலையசைப்போடு பாதத்தைக் கீழே வைக்க முடியாமல் தத்தி தத்தி நடந்து சென்றாள்.
 
 
அன்று மட்டுமல்ல அடுத்தடுத்த நாட்களிலும் கூடத் தன் வலியை காரணமாக வைத்து எந்த ஒரு வேலையையும் புறம் தள்ளவோ புறக்கணிக்கவோ செய்யாமல் தன் வழமை போல் அனைத்தையும் செய்து கொண்டிருந்ததாலோ என்னவோ ஷௌர்யாவின் அடுத்தக் கட்ட தண்டனை என்று எதையும் அம்ரு அனுபவிக்க நேராமல் போனது.
 
 
ஒரு வாரத்தில் தொடர்ந்து ஷியாமின் அக்கறையான கவனிப்பில் அம்ருவின் பாதங்கள் நன்றாகவே தேறி இருந்தன. அன்று காலை முதலே அம்ரு மிகவும் சோர்ந்து போன மனநிலையில் தான் இருந்தாள். ஏனெனில் அன்று சூர்யாவின் பிறந்தநாள். தன் ஒரே உறவான உடன்பிறப்பின் நினைவு வந்து அவளை ரொம்பவே சோர்ந்து போகச் செய்தது.
 
 
**************
 
 
இங்குச் சூர்யாவும் தன் தங்கையைத் தான் நினைத்துக் கொண்டிருந்தான். தாய் இறந்த பிறகு தந்தைக்குத் தந்தையாகத் தாய்க்குத் தாயாக நின்று எந்த ஏக்கமும் வராத அளவுக்கு வளர்த்து ஆளாக்கி இருந்தார் அவர்களின் அப்பா மணிவண்ணன்.
 
 
சிறு வயதிலேயே தாயை இழந்தாலோ என்னவோ அந்தச் சிறு வயதில் இருந்தே மிகவும் பொறுப்பான பக்குவப்பட்ட பெண்ணாகத் தான் வளர்ந்தாள் அம்ரு. சூர்யாவே சில நேரங்களில் சோர்ந்து போகும் போது கூடத் தங்கை என்ற ஸ்தானத்தைக் கடந்து இன்னொரு தாயாக நின்று தைரியம் அளிப்பவள் அவள்.
 
 
அதையும் கடந்து அம்ரு தன் தகப்பனுக்கே கூட அவர் கலங்கும் பல நேரங்களில் ஆறுதல் கூறி தாங்கி இருக்கிறாள். அப்படிப்பட்டவளை காணாமல் எங்குப் போனாள் என்ன ஆனாள் எனத் தெரியாமல் இத்தனை நாட்களாக என்பது தவிப்பது ஒரு அண்ணனாக மட்டுமல்ல அம்ருவின் ஒரே உறவாகக் கூட அவனால் சமாளிக்க முடியாத ஒன்றாகவே இருந்தது.
 
 
எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் தங்கையின் துணை இருந்தால் அதை எளிதாக எதிர் கொண்டு இருக்க முடியும் சமாளித்து இருக்க முடியும் என்று எண்ணியவனுக்கு இங்கு அவளே இல்லை என்பது தான் மிகப் பெரிய பிரச்சனையாகத் தோன்றியது.
 
 
அவனருகில் அதே போலச் சோர்ந்து போய் அமர்ந்து இருந்த முகுந்துக்கும் வீட்டில் அவனின் தாயின் மூலம் தொடர்ந்து அழுத்தங்கள் தரப்பட்டுக் கொண்டே இருந்தன. ஒரு பக்கம் அம்ருவை பற்றி இத்தனை நாட்கள் ஆகியும் எதையுமே கண்டு பிடிக்க முடியவில்லையே என்ற தவிப்பும் மற்றொரு பக்கம் அவளைத் தேட தேவையில்லை என்றும் அப்படியே தேடி இனி அம்ரு கிடைத்தாலும் கூட அவளைத் தன் வீட்டு மருமகளாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று தினமும் செல்வி கூறிக் கொண்டே இருந்தார்.
 
 
இவையெல்லாம் மேலும் மேலும் முகுந்தை மனதளவில் ரொம்பவே பாதிக்கச் செய்து கொண்டிருந்தது. அப்போது காவ்யாவிடமிருந்து சூர்யாவுக்கு அழைப்பு வந்தது. சூர்யா அதை எடுத்ததும் “ஹாப்பிப் பர்த் டே” என்றவளின் குரல் வெகு தயங்கி தயங்கியே வெளி வந்தது.
 
 
காவ்யாவுக்கும் இது வாழ்த்து கூறி கொண்டாட வேண்டிய நேரமில்லை என்று நன்றாகவே புரிந்தது. ஆனாலும் தங்கள் திருமணத்துக்குப் பின் வரும் முதல் பிறந்தநாள் என்பதால் அவளால் வாழ்த்து கூறாமலும் இருக்க முடியவில்லை.
 
 
காவ்யாவின் வாழ்த்தை கேட்ட பின்பே தேதியை நினைவு கூர்ந்தான் சூர்யா. “நீ சொல்ற வரை எனக்கு இது நியாபகமே இல்லை வியா.. இதுவே அம்ரு இருந்து இருந்தா எப்படி எல்லாம் பத்து நாள் முன்னேயே திட்டம் போட்டு இருப்பா தெரியுமா..?!” என்றவனின் கண்கள் கலங்கி போனது.
 
 
மனமோ சென்ற வருடம் அவன் வீட்டளவிலேயே தான் என்றாலும் அதை எவ்வளவு சந்தோஷமாகக் கொண்டாடினாள் அம்ரு என்பதும் நினைவுக்கு வந்தது. அதில் அவனை அறியாமலேயே கண்ணீர் வழிய அமர்ந்து இருந்தவனை “நீங்க அம்ரு விஷ் செய்யக் கூட இல்லையேன்னு பீல் செய்வீங்கன்னு தான் விஷ் செஞ்சேன்.. இந்த நேரத்துல கூட அம்ரு பத்தின கவலை இல்லாம இருக்கேன்னு நினைச்சுக்காதீங்க..” என்று தன் நிலையைப் புரிய வைக்கும் முயற்சியில் காவ்யா பேசிக் கொண்டிருக்கும் குரல் கலைத்தது.
 
 
“பரவாயில்லை வியா.. நீ அங்கே ஒகே தானே..” என்றவனுக்குத் தன்னை நம்பி வந்தவளை இங்கு வந்த நாள் முதலாகக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டோமே என்ற குற்றவுணர்வு எழுந்தது.
 
 
அப்படியே இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் கூறி ஒருவர் மற்றவரை தேற்றி என்று சிறிது நேரம் பேசி விட்டு அழைப்பை துண்டித்த சூர்யாவை கேள்வியாகப் பார்த்தபடி அமர்ந்து இருந்தான் முகுந்த். அப்போதே இதுவரை காவ்யாவை பற்றி முகுந்திடம் எதுவும் கூறாதது நினைவு வரவும், மெல்ல தயங்கி தயங்கி அனைத்தையும் சொல்லி முடித்தான் சூர்யா.
 
 
முதலில் சூர்யா சொன்னதைக் கேட்டு நம்ப முடியாத திகைப்பில் அமர்ந்து இருந்தவன் “இதெல்லாம் நிஜமா சூர்யா..” என்றான் இன்னும் அதிர்ச்சி விலகாமலேயே. “ம்ம்” என்று மட்டும் குனிந்தவாறே தலையசைத்தவன், ஒரு சிறு இடைவெளிக்கு பிறகு, “எனக்கு அம்ரு காணாம போனதுக்குப் பின்னால வியாவோட அண்ணன் இருப்பாரோன்னு ஒரு அசைக்க முடியாத சந்தேகம் இருக்கு முகுந்த்.. அதனால தான் போலீஸ் கூடக் கேஸ் எடுக்க மாற்றாங்களோன்னு கூடத் தோணுது..” என்றான் யோசனையாக.
இப்போது கேள்வியாகச் சூர்யாவை பார்த்தவன், “வர்ஷாவுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்..?!” என்று புரியாமல் குழம்ப.. வியாவோட அண்ணா என்று தொடங்கிச் சூர்யா உச்சரித்த பெயரை கேட்டு மிரண்டு விழித்தான் முகுந்த்.
 
 
****************
 
 
அம்ரு தன் அத்தனை வேலைகளையும் முடித்துக் கொண்டு வந்து தனக்கான அறையில் முடங்கியவள் சென்ற வருடம் சூர்யா பிறந்தநாளின் போது வீட்டிலேயே கேக் செய்து இரவு அதை வெட்டி சந்தோஷமும் குதுகலமுமாகக் கொண்டாடியதை எல்லாம் எண்ணி பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள்.
 
 
“மறுபடியும் இப்படி ஒரு நாள் என் வாழ்க்கையில் வருமான்னு தெரியலை சூர்யா.. அவ்வளவு ஏன் உன்னை மறுபடி பார்க்கவோ பேசவோ வாய்ப்பு கிடைக்குமான்னு கூடத் தெரியலை..” என்று மெல்லிய குரலில் தன் வேதனையை வெளியிட்டவளுக்கு, சென்ற வருடம் கொண்டாட்டத்தின் போது எடுத்த வீடியோ நினைவுக்கு வந்தது.
 
 
அவசரமாகத் தேடி தன் அலைபேசியை எடுத்தவள், அதை ஓட விட்டாள். சூர்யாவின் நெருங்கிய நண்பர்களையும் தன் நண்பர்களையும் அழைத்து அன்று விருந்து சமைத்து கொண்டாடியதை எல்லாம் முகுந்த் காணொளியாகப் பதிந்து அம்ருவுக்குப் பகிர்ந்து இருந்தான்.
 
 
அதை இன்று காணும் போதே தன் இழப்பு எவ்வளவு பெரிது என்று அம்ருவுக்குப் புரிந்தது. அப்படியே அந்தக் காணொளி முடிந்து அடுத்தக் காணொளியாக அன்றே டிக்டாக் போலப் பதிவு செய்யப்பட்ட விடீயோ கண்ணில் படவும் அதை ஓட விட்டு இருந்தாள் அம்ரு.
 
 
வா வா டியரு பிரதரு
பார்த்தா செதறும் சுகரு
அண்ணன் ஒருத்தன் இருந்தாலே போதும்
அதுவே தனிப் பவரு
 
எங்க அண்ணன் எங்க அண்ணன்
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்
தங்கை பாசத்தில் அவனைத்தான்
அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே
 
 
எங்க அண்ணன் எங்க அண்ணன்
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்
தங்கை பாசத்தில் அவனைத்தான்
அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே
 
 
என்று சூர்யாவின் தோளில் கை போட்டு தலையைச் சாய்த்துக் கொண்டு அம்ரு பாட..
 
 
என் வீட்டுத் தலைவி
இந்த ஜில்லாவோட அழகி
அண்ணன்காரன் அன்றாடம் நனையும்
அன்பான அருவி
என் தங்கை மை தங்கை
வெள்ளை மனசு கொண்ட நல்ல தங்கை
அண்ணன் பாசத்தில் அவளைத்தான்
அடிச்சுக்க யாருமே இல்லையே இங்க
 
 
எனத் திரும்ப அம்ருவின் கன்னத்தைப் பற்றிக் கொஞ்சி கொண்டே சூர்யா பாடுவது போல் பதிவாகி இருந்தது. அதைக் கண்ட நொடி அடக்கமாட்டாமல் அழுது கதறியவள், “மிஸ் யூ சோ மச்..” என்று கண்ணீர் மல்க கூறியவாறே அந்தத் திரையில் தெரிந்த சூர்யாவுக்கு அழுந்த முத்தமிட்டாள்.
 
 
சரியாக அதே நேரம் அந்த அறையைக் கடந்த ஷௌர்யாவின் கண்களில் இந்தக் காட்சி விழவும், முதலில் அவள் யாரிடமோ பேசி கொண்டிருப்பதாக எண்ணி ஆத்திரமானவன், பின் அந்த அலைபேசியை அம்ரு நெஞ்சோடு அணைத்துக் கொண்டு அழுவதைக் கண்டு வேகமாக அவளை நெருங்கினான்.
 
 
திடீரெனத் தன் கைகளில் இருந்து அலைபேசி பறிக்கப்பட்டதில் திகைத்து நிமிர்ந்தவள் அங்கு நின்றிருந்தவனையும் அவன் கண்களில் தெரிந்த கனலையும் கண்டு உடல் பதற எழுந்து நின்றாள்.
 
 
“ஓ.. காதல் மன்னன் கூட ரொமான்ஸா..” என்றவாறே அலைபேசியைத் தூக்கி எறிந்தவன், அப்போதே அதில் ஓடிக் கொண்டிருந்த காணொளியை பார்த்து அதில் இருந்த சூர்யாவை கண்டு கேள்வியாக அம்ருவை பார்க்க.. “இன்னைக்கு எங்க அண்ணனோட பர்த்டே..” என்றாள் நடுக்கமான குரலோடு.
 
 
“ம்ஹும்.. அதுக்கு என்ன செய்யலாம், பொது விடுமுறை ஏதாவது விடச் சொல்லலாமா..?!” என்று நக்கல் செய்தவனை அழுகையோடு பார்த்தவள், பதிலேதும் பேசாமல் அமைதி காத்தாள்.
 
 
“உனக்கு உங்க அண்ணனை ரொம்பபபப பிடிக்குமா..?” என்று திடீரென உணர்வுகளற்ற குரலில் ஷௌர்யா கேட்கவும், இதற்கு என்ன பதில் சொல்வது என்று பொருள் விளங்கா பார்வையில் அவனை ஏறிட்டு பார்த்தவள், அப்படியே அமைதி காக்க..
 
 
“பிடிக்குமா பிடிக்காதா..?!” என்று மீண்டும் அழுத்தத்தோடு ஷௌர்யா கேட்கவும் அம்ருவின் பொறுமை மற்றொரு முறை உடைந்தது. “இதென்ன கேள்வி..? அதெப்படி பிடிக்காம போகும்..? என் அண்ணன் அவன், அவனை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.. ஏன் உங்களுக்கு ஷியாமை பிடிக்காதா.. பிடிக்கும் தானே, அப்படித் தான் இதுவும்.. எனக்கு என் சூர்யாவை ரொம்ப ரொம்பப் பிடிக்கும்..” என்று படபடவெனக் கொட்டினாள்.
 
 
அம்ருவின் கோபம் படபடப்புகெல்லாம் கொஞ்சமும் மதிப்பளிக்காத ஒரு முகப் பாவனையோடு அவளை அளந்தவன், “சோடா.. பொன்னாடை.. ஏதாவது வேணுமா..?” என்றான்.
 
 
அம்ரு அப்போது இருந்த உணர்ச்சிகரமான மனநிலையில் ஷௌர்யாவின் கேலி புரியாமல் போக.. திருதிருத்து கொண்டிருந்தாள். அதைப் பற்றியெல்லாம் கண்டு கொள்ளாமல் “உனக்குப் பிடிக்கும் சரி.. உங்க நொண்ணனுக்கு எப்படி..?” என்றான்.
 
 
“என்ன தான் சார் உங்க பிரச்சனை..? சூர்யாக்கு நான்னா உயிர்.. எனக்காக என்ன வேணா செய்வான்.. போதுமா..” என இன்னுமும் தன் கொதி நிலையில் இருந்து இறங்கி வராமலேயே தன் வார்த்தைகளையும் உணர்வுகளையும் எப்போதும் போல இப்போதும் கொஞ்சமும் மதிக்காமல் கேள்வி எழுப்புபவனிடம் பதிலளித்தாள்.
 
 
ஆனால் ஷௌர்யா அதையும் கூடத் தூசு தட்டுவது போன்ற மனநிலையில் தட்டி விட்டு விட்டு மீண்டும் “அப்போ ஏன் அவன் கல்யாணத்துக்குக் கூட உன்னை உங்க நொண்ணன் கூப்பிடலை.. சரி அது கூட வேணா பா, அட்லீஸ்ட் கல்யாணம் ஆனதையாவது உனக்குச் சொன்னானா..!!” என்றவனின் குரலில் அம்ருவை சீண்டி மறுபடியும் அழ விடும் நோக்கம் மட்டுமே இருந்தது.
 
 
ஆனால் அம்ரு அழுவதற்குப் பதிலாக ஷௌர்யாவை நம்பகத்தன்மை சிறிதும் இல்லாத பார்வையில் தான் பார்த்து கொண்டிருந்தாள். அவளின் அந்தப் பார்வையை என்ன என்பது போன்று விழி உயர்த்தி ஷௌர்யா பார்த்திருந்தான்.
 
 
“உங்களுக்கு என் அண்ணாவோட என்ன பிரச்சனை சார்.. ஏன் அவனை என்கிட்டயே தப்பா காட்ட முயற்சி செய்யறீங்க.. என் கூடப் பிறந்தவனைப் பற்றி எனக்குத் தெரியாதா..?! அவன் என்ன செய்வான், என்ன செய்ய மாட்டான்னு என்னால எங்கே இருந்தாலும் சொல்ல முடியும்.. அவனை என்கிட்ட தப்பா காட்ட நினைக்கற உங்க முயற்சி எப்பவும் பலிக்காது.. இதை விட்டுடுங்க, அப்பறம் இன்னும் ஒண்ணு நீங்க என் அண்ணா மேலே தான் கோபமா இருக்கீங்கன்னு நான் பார்த்தவரை எனக்குப் புரியுது, ஆனா அது நிச்சயமா நீங்க ஏதோ தப்பா தான் புரிஞ்சுகிட்டு இருக்கீங்கன்னு என்னால உறுதியா சொல்ல முடியும்.. என் சூர்யாவுக்கு யாரையும் எப்பவும் ஹர்ட் செய்யத் தெரியாது..” என்று எப்படியாவது புரிய வைத்து விட முயன்றாள்.
 
 
ஆனால் அவளின் அத்தனை முயற்சியும் விழலுக்கு இறைத்த நீரானது. “ஹ்ம்ம், குட் டிரை.. நீ இந்தக் குத்தாட்டம் போடறதை தவிர, ஆன்லைனில் இந்தச் சோப்பு டப்பா எல்லாம் கூட விக்கறீயா என்ன..? ஹப்பா என்னமா கேன்வாஸ் செய்யறே, பட் நீ ஒண்ணு மறந்துட்ட போண்டா டீ.. நான் அன்னைக்கே சொன்னேன் எனக்கு எதிரியா இருக்கக் கூட ஒரு தகுதி வேணும்னு.. அண்ட் உங்க நொண்ணனை தப்பா சொல்லி உன்னை நம்ப வெச்சு எனக்கென்ன ஆகப் போகுது மேடம்.. உங்க பிசினஸ் என் கைக்கு வர போகுதா..?! இல்லை உங்க குடும்பத்துக்குச் சொந்தமான கோடிக்கணக்கான சொத்தை என் பேரில் எழுத போறீங்களா..?! உங்களுக்கு இருக்கறதே அந்த இன்னைக்கோ நாளைக்கோன்னு இடிஞ்சு போகத் தயாரா இருக்க ஒரே ஒரு வீடு தான்..” என்று எகத்தாளமாகக் கேட்டவன், “தன் அலைபேசியில் இருந்த சூர்யாவின் கல்யாண புகைப்படத்தை அம்ருவின் முன் நீட்டினான்.
 
 
அசட்டையாக அதன் மேல் பார்வையைத் திருப்பியவள், அங்குக் கண்ட சூர்யா காவ்யாவின் கழுத்தில் மாங்கல்யம் அணிவிக்கும் காட்சியில் நம்ப முடியாமல் திகைத்து விழி விரித்தாள். அவளின் அந்தப் பாவனையைக் கண்டு இத்தனை நாளில் முதல் முறையாக வாய் விட்டு சிரித்தவன், “இப்போ உங்க நொண்ணன் மேலே இருந்த ஜேசிபி வெச்சு இடிச்சாலும் அசைக்க முடியாதுன்னு ஸ்ட்ராங்கா இருந்த அந்த நம்பிக்கை எங்கே போச்சு.. இப்போவும் இருக்கா இல்லை சொல்லாம கொள்ளாம அப்படியே ஓடி போச்சா..?!” என்று அவள் மனநிலை தெளிவாகத் தெரிந்தும் வம்புக்கு இழுத்தான்.
 
 
ஆனால் ஷௌர்யாவின் வார்த்தைகளில் சிறிதும் கவனமில்லாமல் அவன் கையில் பிடித்திருந்த புகைப்படத்திலேயே பார்வையைப் பதித்து இருந்தவளுக்குத் தன் கண்ணால் காண்பதை கொஞ்சமும் நம்பவே முடியவில்லை.
 
 
சூர்யா எப்படிபட்டவன் என்பதை அவளுக்கு யாரும் எடுத்து சொல்ல வேண்டிய அவசியமே இல்லாத அளவுக்கு அவனின் ஒவ்வொரு அசைவையும் பற்றித் தெரிந்து வைத்து இருந்தவளுக்குச் சூர்யாவின் வாழ்வில் நடந்து முடிந்திருக்கும் இவ்வளவு பெரிய விஷயம் தெரியாமல் போனது மிகப் பெரிய அதிர்ச்சி தான்.
 
 
அம்ருவின் முன் ஒற்றைக் காலை மடித்துச் சற்று குனிந்தவன் தன் வழக்கமான சொடக்கொலியை எழுப்பவும், திகைப்பு மாறாமல் திரும்பி பார்த்தாள்.
 
 
“என்ன உன் நம்பிக்கை இப்போ பலமா ஆட்டம் காணுது போல..?!” என்று கேட்டவனின் குரலில் நக்கல் சற்று அதிகமாகவே தொக்கி நின்றது. “இப்படி நீ எதிர்பார்க்காதது இன்னும் நிறைய இருக்கு.. அதெல்லாம் தெரிய வரும் போது கொஞ்சம் முன்னே மூச்சை பிடிச்சிட்டு பேசினீயே அதெல்லாம் கேட்டுட்டு இருந்த எனக்கு எவ்வளவு காமெடியா இருந்து இருக்கும்னு உனக்கும் புரியும்.. வரட்டாஆஆஆஆ..” என்று அம்ருவை கேலி செய்தவன் கதவை நோக்கி சென்றான்.
 
 
கதவருகில் சென்று நின்றவன், “உன் அன்பு அண்ணன், அந்தப் பாச மலர் கல்யாணம் செஞ்சு இருக்க உன் அண்ணியை உனக்கே அறிமுகபடுத்தி வைப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் போண்டா டீ.. ஏன் மகிழ்ச்சின்னு நீ கேக்கவே இல்லையே, உன் நம்பிக்கை இங்கே தூள் தூளா போச்சே அந்தச் சந்தோஷத்தை கொண்டாட வேணாமா..?!” என்றவன், “காவ்யாஆஆஆ.. உன் நொண்ணன் உனக்குக் கொடுத்த பல்ப்க்கு அது தான் பேரு..” என்றுவிட்டு வெளியேறி விட்டான்.
 
 
கண்ணால் கண்டதையும் காதால் கேட்டதையும் இன்னும் உண்மை என்று நம்ப முடியாத அதிர்வில் அப்படியே உறைந்து போய் அமர்ந்திருந்தவளின் மனதில் “காவ்யா” என்ற பெயரே மீண்டும் மீண்டும் எதிரொலித்துக் கொண்டு இருந்தது.
 
 
அவள் எவ்வளவு யோசித்துப் பார்த்தும் இந்தப் பெயரை பற்றிச் சூர்யா தன்னிடம் பேசியது போன்ற நினைவு கூட அம்ருவுக்குக் கொஞ்சமும் இல்லை. எதையும் தன்னிடம் மறைக்காமல் பகிர்ந்து கொள்பவன் என்று எண்ணி இருந்தவன், இப்படி ஒரு பெண்ணை யாருக்கும் தெரியாமல் மணம் முடிக்கும் வரை சென்று இருக்கிறான் என்றால் அது காதலாக மட்டுமே இருக்க முடியும் என்று தெளிவாக உணர்ந்தவளுக்கு ‘அதைப் பற்றித் தன்னிடம் ஏன் மறைத்தான்..?’ என்ற கேள்வி பெரிதாக எழுந்தது.
 
 
இதே நினைவிலேயே வெகு நேரம் அமர்ந்து இருந்தவளுக்குத் திடீரென அந்த எண்ணம் தோன்றவும், வேகமாக ஷியாமை தேடி ஓடினாள். தன் அறையில் படித்துக் கொண்டு இருந்தவன், அறை வாயிலில் வேகமாக வந்து நின்று மூச்சு வாங்குபவளை கண்டு பதட்டத்தோடு எழுந்து வந்தான்.
 
 
“என்னாச்சு பாபி..?” என்றவனின் முகம் பார்த்தவள், “ஷி.. ஷியாம்.. உனக்கு.. காவ்.. காவ்யான்னு யாரையாவது தெரியுமா..?!” என மூச்சு வாங்க கேட்டபடி எதிர்பார்ப்போடு அவன் முகத்தையே இமைக்காமல் பார்த்திருந்தாள்.
 
 
அம்ருவின் மனதில் ஒருவேளை அனைத்துக்கும் இது தான் அடிநாதமாக இருக்குமோ என்ற எண்ணம் ரொம்பவே ஆழமாக இருந்தது. அதனாலேயே ஷியாமை தேடி ஓடி வந்திருந்தாள்.
 
 
“காவ்யாஆஆஆ...” என்று யோசனையோடு இழுத்து அம்ருவின் முகம் பார்த்தவன், “சாரி பாபி எனக்கு அப்படி யாரையும் தெரியலையே.. ஏன் என்னாச்சு பாபி..?” என்றவனைச் சோர்ந்து போய்ப் பார்த்தவள், அப்படியே அங்கே மடங்கி அமர, அவளின் நிலை உணர்ந்து அம்ருவின் அருகில் மண்டியிட்டவன், “நீங்க ஏதோ பெருசா எதிர்பார்த்து என்னைத் தேடி வந்து இருக்கீங்கன்னு புரியுது.. ஆனா சாரி பாபி நீங்க சொல்ற எந்தப் பெயருமே எனக்கு இதுக்கு முன்னே கேட்ட பெயரா கூட இல்லை.. உங்களுக்கு எந்த வகையில் உதவ முடியும்னு கூட எனக்குப் புரியலை..” என்று அம்ருவை தேற்ற முயன்று கொண்டிருந்தான் ஷியாம்.
 
தொடரும்..
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா 
 
 

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 month ago
Posts: 104
Topic starter  

ஹாய் டியர்ஸ்

"உன்னை அமுதவிஷமென்பதா..!!" கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

UAV - 11 & 12

https://kavichandranovels.com/community/comments-and-discussions/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%85%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%ae%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%be-comment-thread/

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா

This post was modified 1 week ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 month ago
Posts: 104
Topic starter  
விஷம் – 13     
                    
காவ்யா யார் என்று தெரியாது என்று சொன்னதும் அம்ருவின் முகத்தில் வந்தமர்ந்த வேதனையைக் கண்டு ஷியாம் பெரிதும் வருந்தினான். ஆனால் அவளுக்கு உதவலாம் என்றால் அம்ரு கேட்கும் எந்த ஒரு தகவலும் அவனுக்குத் தெரியவில்லையே..!
 
 
ஷௌர்யாவிடம் சென்று ஷியாம் கேட்டால் ஒருவேளை இதற்கான பதில் கிடைக்கலாம் தான் என்றாலும் அப்படியெல்லாம் இதுவரை ஷௌர்யாவை எதிர்த்துக் கேள்வி கேட்டு அவனுக்குப் பழக்கமில்லை என்பதால் அமைதி காத்தான்.
 
 
ஆனால் அம்ருவையும் அதற்காக அப்படியே விட மனமில்லாமல் அடுத்து வந்த நாட்களில் இன்னும் முன்பை விட அதிகமாக அவளோடு நேரம் செலவழிக்கத் தொடங்கினான். அதில் தனக்குள்ளேயே சுருண்டு கொண்டிருந்தவளின் இயல்பு குணம் அவ்வபோது ஷியாமிடம் மட்டும் எட்டி பார்க்க தொடங்கியது.
 
 
சிறு வயதில் இருந்தே நிறைய நண்பர்களோடு பழகி வளர்ந்தவள் என்பதால் ஷியாமோடு இயல்பாகப் பழகுவது அம்ருவுக்கும் எளிதாக இருந்தது. அம்ருவின் மன ஆறுதலுக்காக அவளோடு அதிகம் வம்படிக்கத் தொடங்கிய ஷியாமுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் அவனே அறியாமல் அவனின் மன வலிக்கு மருந்தாகி போனாள் அம்ரு.
 
 
எத்தனை வலியும் வேதனையுமான நாட்களைக் கடந்து கொண்டு இருக்கிறான் என்பது அவன் அறிந்ததே. ஆனால் அவனே அறியாமல் அதை ஆற்றும் மருந்தாகத் தன் அன்பான அணுகுமுறையின் காரணமாக மாறி இருந்தாள் அம்ரு.
 
 
“பாபி பசிக்குது.. பாபி பசிக்குது..” என்று தன் முன் இருந்த தட்டில் தாளம் போட்டு பாடியவாறு அமர்ந்திருந்தவனுக்கு “இதோ நீ கேட்ட நெய் ரோஸ்ட் ரெடி..” என உள்ளே இருந்து குரல் கொடுத்தாள் அம்ரு.
 
 
“அந்த வெங்காயம் கேரட் எல்லாம் தூவி.. உள்பக்கமா ஒரு நாலு கரண்டி நெய் விட்டு மேலாக்கா இட்லி பொடி தூவி வெளி பக்கமா ஒரு எட்டு கரண்டி நெய் விட்டு நான் கேட்டது போலத் தானே சுட்டு இருக்கீங்க..” என்று வடிவேலு மாடுலேஷனில் ஷியாம் கேட்டான்.
 
 
“ஆமாம்மா ஷியாமுக்கு ஒரு ஊத்தப்பம்ம்ம்ம்...” என்று உள்ளிருந்து அதே பாணியில் குரல் கொடுத்தவாறே மொறுமொறு நெய் ரோஸ்ட்டோடு வெளியில் வந்தவளின் புன்னகை முகம் அங்கு அமர்ந்து இருந்தவனைக் கண்டதும் அப்படியே மறைந்தது.
 
 
அமைதியாகக் கொண்டு வந்து ஷியாமின் தட்டில் வைத்தவள், வடகறியை எடுத்து பறிமாறிவிட்டு அடுத்தத் தோசையை எடுத்து வருவதாக விரலசைவிலேயே சொல்லி விட்டு நகர்ந்தாள்.
 
 
அம்ரு மட்டுமல்ல அதுவரை அவளிடம் வம்பிழுத்துக் கொண்டிருந்த ஷியாமுமே கூட அந்தக் குறும்பெல்லாம் காணாமல் போய் இருக்க.. அம்ருவின் கை மணத்தில் அவன் மிகவும் விரும்பி உண்ணும் நெய் ரோஸ்ட்டை ரசித்து ருசித்துக் கொண்டிருந்தான்.
 
 
இவையெல்லாம் கண்ணில் பட்டாலும் அதை எல்லாம் கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் தன் வழக்கமான இறுக்கமான முகபாவனையோடு அமர்ந்து பிரெட்டில் வெண்ணையைத் தடவி உண்டு கொண்டிருந்தான் ஷௌர்யா.
 
 
அடுத்தடுத்து என அம்ரு கொண்டு வந்து வைக்க வைக்கச் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஷியாம், போதும் எனவும் “இன்னும் ஒண்ணே ஒண்ணு ஷியாம்..” என்று அம்ரு விழிகளைச் சுருக்கி கூறி சென்ற விதத்தில் ஷியாமுக்கு அவனின் அன்னையின் நினைவு வந்தது.
 
 
அதில் லேசாகக் கலங்க துவங்கிய கண்களை அருகில் இருந்த ஷௌர்யாவுக்குத் தெரியாமல் மறைத்தவன், தலையைக் குனிந்து கொண்டான். ஆனால் அதை ஷியாம் மறைப்பதற்கு முன்பே கண்டு கொண்ட ஷௌர்யா லேசாகப் பார்வையைத் திருப்பி அவனைப் பார்த்தாலும் தெரிந்து கொண்டது போல் காண்பித்துக் கொள்ளவில்லை.
 
 
அதே நேரம் அம்ரு இருவருக்குமான சூடான பாணத்தோடு வந்து அதை அவரவருக்கு முன் வைத்தாள். அதற்கு மேல் அங்கிருந்தால் சற்று எமோஷனலாக வாய்ப்பிருப்பதை உணர்ந்து தன் பூஸ்ட்டோடு தன் அறைக்கு எழுந்து சென்றுவிட்டான் ஷியாம்.
 
 
அதன் பின் அம்ரு சமயலைறையே உலகம் என்பது போல உள்ளேயே இருந்து கொண்டாள். ஷௌர்யா இதைப் பற்றி எல்லாம் எந்தக் கவலையும் இல்லாமல் தன் கிரீன் டீயை குடித்து விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
 
 
ஏனோ அன்று முழுவதும் வேலை விடாமல் தொடர்ந்து கொண்டே இருந்ததில் சற்று ஓய்வாகத் தோட்டத்தில் சென்று அமர்ந்தாள் அம்ரு. அந்த மாலை நேரத்துத் தென்றலும் கூட அம்ருவை கொஞ்சமும் குளுமை படுத்தவில்லை. காலையிலிருந்து விடாமல் செய்த வேலைகளினால் உடல் முழுக்க வலி வாட்டி எடுத்தது.
 
 
அவளுக்கு வேலை ஒன்றும் புதிதல்ல. சிறு வயதிலிருந்தே அனைத்தையும் தானாக முன் வந்து ஏற்றுச் செய்யத் தொடங்கியவள் தான் அம்ரு. ஆனால் இவ்வளவு பெரிய மாளிகையில் இத்தனை ஆட்கள் இருந்தும் செய்ய வேண்டிய வேலையை எல்லாம் கொஞ்சமும் ஓய்வோ சரியான நேரத்துக்கு உணவோ இல்லாமல் செய்து இருந்தது தான் அம்ருவின் இவ்வளவு சோர்வுக்கும் காரணம்.
 
 
விழிகள் திறந்து இருந்தாலும் காட்சிகள் எதுவும் கண்ணிலும் படவும் இல்லை கருத்திலும் பதியவில்லை. தனக்கு ஏன் இந்த நிலை என்று இன்று வரை புரியாத கேள்வி, யார் இவன் எதற்கு இதெல்லாம் என்ற பெருங்குழப்பம் மனதை முழுதாக ஆக்கிரமித்து இருக்க அப்படியே எங்கோ வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் அம்ரு.
 
 
கடந்த சில நாட்களாகப் பழக்கப்பட்டுப் போய் இருந்த சுடு சொற்களுக்கும் மனதை குத்தி கிழிக்கும் வார்த்தைகளுக்கும் நேர்மாறாக மனகண்ணில் வந்து புன்னகைத்தான் முகுந்த். அவனோடான இந்த நான்கு வருட பழக்கத்தில் அவனிடம் பணியில் இருப்பவர்களைக் கூட முகுந்த் அதிர்ந்து பேசி அம்ரு பார்த்ததில்லை.
 
 
எப்போதும் எதையும் அடுத்தவர் மனம் புண் படாதவாறு மென்மையான புன்னகையோடே வெளிபடுத்துபவன், அதற்காக அவன் வேலையில் விட்டு கொடுப்பவனோ அவன் எதிர்பார்த்த அளவு சிறப்பாக வரவில்லை என்றால் விட்டு விடுபவனோவெல்லாம் இல்லை.
 
 
ஆனாலும் ஆத்திரப்பட்டு மிரட்டி மட்டுமே ஒரு விஷயத்தைச் செய்ய வைக்க முடியும் என்பதில்லை என்று அம்ருவின் கண் முன் நிரூபித்தவன். எந்த நிகழ்ச்சிக்காகவும் பாடல்களைக் குழுவாக அமர்ந்து தேர்வு செய்யும் போதும் முதலில் அம்ருவின் என்னவோ நினைவுக்கு வருவது கண்ணன் சம்பந்தப்பட்ட பாடல்களே.
 
 
அது இப்போது என்று இல்லை.. சிறுவயதில் இருந்தே ஏனோ கண்ணனை அழைக்கும் பாடல்கள் என்றால் அது பக்தியிலா காதலிலா தாய்மையிலா என்றெல்லாம் பிரித்தறிய முற்படாமல் அதை ரசிக்க மட்டுமே அவளுக்குத் தெரியும்.
 
 
முகுந்த் இவளிடம் காதலை சொல்லி காத்திருந்த காலங்களில் இது போன்ற ஏதாவது பாடலை அம்ரு பரிந்துரைக்க நேர்ந்தால் மெல்ல மற்றவருக்குக் கேட்காத குரலில் “அது என்ன கண்ணன் அவ்வளவு ஸ்பெஷல்.. இது வெறும் கடவுளுக்குத் தானா..” என்று இதழில் தொக்கி நிற்கும் குறும்பு புன்னகையோடு கேள்வி கேட்பான்.
 
 
எப்போதும் போல் கடைசியாகப் பார்த்த அன்றும் இதே கேள்வியோடு அவன் தன் முன் வந்து நின்றது நினைவு வரவும், அதுவரை இருந்த உணர்வற்ற நிலை மாறி கண்கள் அவளை அறியாமலே கலங்கியது. அமைதியே உருவாய் ஒருவனைப் பார்த்து பழகி, அவனே வாழக்கை துணை என்று முடிவாகி இருக்கையில் அமைதி என்ற வார்த்தை என்ற ஒன்று இருப்பதே தெரியாத ஒருவன் தன் வாழ்வில் நுழைந்து நிகழ்த்தும் அனைத்தையும் கண்டு மிரண்டு போய் உள்ளாள் அம்ரு.
 
 
அழுந்த விழிகளை மூடி தன்னைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றவளின் இதழ்கள் அவளின் அனுமதி இல்லாமலே முகுந்தின் காதலையும் காத்திருப்பையும் ஒன்றுமில்லாமல் செய்துவிட்டதை எண்ணி இதெல்லாம் அவளின் அனுமதி இல்லாமலேயே தான் என்றாலும் அதற்குப் பொறுப்பேற்று மானசீகமாக “ஐ ம் சாரி.. ரியலி சாரி முகுந்த்..” என்று முணுமுணுத்தது.
 
 
“வாவ்” என்று வெகு அருகில் கேட்ட குரலிலும் கைதட்டல் ஒலியிலும் தன் நினைவு கலைந்தவள் திடுக்கிட்டு நிமிர அம்ருவின் நினைப்பை கொஞ்சமும் பொய்யாக்காமல் அவளைப் பாடாய்படுத்தும் அசுரனே அங்கு நின்றிருந்தான்.
 
 
அம்ரு சிறு பதட்டத்தோடு எழுந்து நிற்கவும், “தி கிரேட் ஷௌர்ய வர்மனோட ஓய்ப்.. அவளின் முன்னாள்.. ம்ஹும் இந்நாள்.. அதுவும் இல்லையே.. புருஷன் இருக்கும் போது இன்னொருத்தனை காதலன்னு சொன்னா அதுக்குப் பேரு என்னவோ சொல்லுவாங்களே.. ஆங்.. தன் கள்ளகாதலனோடு கனவில் டூயட் பாடிக் கொண்டிருந்தார்..” என்று ஏற்ற இறக்கத்தோடான குரலில் சில இடங்களில் மட்டும் அழுத்தம் கொடுத்துக் கூறினான் ஷௌர்யா.
 
 
அதில் தன் இரு காதுகளையும் கைகளால் பொத்தி கொண்டு, “பிளீஸ்ஸ்ஸ்..” என்று மன்றாடும் குரலில் அம்ரு அழுகையோடு நிறுத்த.. “வெறும் டூயட் தானா.. இல்லை, அதுக்கும் மேலே..?!!” என்று அவளின் முகத்தருக்கே குனிந்து கேட்டப்படி சிறு இடைவெளி விட்டவன், “உன் முகத்துல வந்து போன கனவும் கனிவும் வேறு கதை இல்லை சொல்லுது..” என்று மேலும் மேலும் அவளை ரணபடுத்திக் கொண்டிருந்தான் அவன்.
 
 
“ஐயோ பிளீஸ்.. ஏன் இப்படீல்லாம் பேசறீங்க..? என்னைபத்தி என்ன தெரியும் சார் உங்களுக்கு..?! எதுவுமே தெரியாத என்னைப் பத்தி எப்படி இப்படித் தர குறைவா உங்க இஷ்டத்துக்குப் பேச முடியுது..? நான் யாரு.. எப்படிப்பட்டவள்.. என்னோட பழக்கவழக்கங்கள் என்னென்னன்னு கூட உங்களுக்குத் தெரியாதே..!! அப்படி இருக்கும் போது இவ்வளவு கேவலமான எண்ணம் என்னைப் பத்தி உங்க மனசில் எப்படி வரும், அவ்வளவு ஏன் என் பேரை கூட என்கிட்ட கேட்டு தானே நீங்க தெரிஞ்சுகிட்டீங்க..?” என்று அழுகையோடே என்றாலும் அந்த வார்த்தைகளின் வலி தாங்காமல் கேட்டே விட்டாள் அம்ரு.
 
 
“ம்ஹும்.. ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம்.. அதே போல நீ யாரு.. உன் குடும்பம் எப்படிபட்டதுன்னு தெரிஞ்சுக்க ஒரு விஷயம் போதாதா..?” என்றவன் என்ன சொல்ல வருகிறான் என்று சுத்தமாக அம்ருவுக்குப் புரியவில்லை.
 
 
ஷௌர்யாவை மலங்க மலங்க விழித்தவாறே அம்ரு பார்த்துக் கொண்டிருக்க.. இன்னும் நன்றாக அம்ருவின் எதிரில் வந்து நின்றவன், “இந்த அழுகை எல்லாம் பார்த்து உண்மைன்னு நம்ப நான் முட்டாள் இல்லை.. சோ உன் முயற்சி அட்டர் பிளாப்.. வேற ஏதாவது டிரை செஞ்சு பாரேன்..!” என்றான் கேலி குரலில்.
 
 
அவ்வளவு நேரமும் பல விஷயங்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தவள் அந்த வேதனையிலிருந்து வெளி வருவதற்குள் ஷௌர்யா வந்து மனதை நோகடித்து இருந்ததால் இப்போது இவன் எதைப் பற்றிப் பேசுகிறான் என்ற குழப்பமே அவளிடம் பெரிதாக இருக்க.. “என்ன..” என்று ஏதோ கேட்க தொடங்கியவளை இடைவெட்டினான் ஷௌர்யா.
 
 
“என்ன செய்யணும்னு என்கிட்டேயே கேக்கறீயா.. ஹ்ம்ம், சொல்லிடுவோம்..” என்றவன், அவளை ஒரு விஷம பார்வையில் பார்த்தவாறே “தீ குளியேன்..” என்றான் தன் லைட்டரை பற்ற வைத்து அவளின் முன் நீட்டியவாறு.
 
 
“ஆஹாங்..” என்று நிஜமான அதிர்வோடு விழிகளை விரித்த அம்ருவை ஒரு ஏளனத்தோடு பார்த்தவன், “நான் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவள்னு இவ்வளவு நேரம் மூச்சை பிடிச்சிட்டு பேசின தானே.. அதுக்குப் பதிலா அந்தக் காலத்துல சிம்பிளா சீதா மாதா செஞ்சது போலத் தீக்குள் இறங்கி உன்னை நிரூபிக்க முயற்சிக்கலாமே..” என்றான்.
 
 
ஷௌர்யாவின் வார்த்தைகள் கொடுத்த பயத்தை விட அவன் கையில் இருந்த நெருப்பே அம்ருவுக்கு அதிகப் பயத்தைக் கொடுத்தது. இப்போது வரை ஷௌர்யாவின் செயல்கள் எதற்குமே ஏன் எதற்கு எப்போது எப்படி என்பது போன்ற வரையறைகள் வகுக்க முடிந்ததில்லை எனும் போது இதையும் எளிதாக அம்ருவால் பார்க்க முடியவில்லை.
 
 
அதை அவன் எப்போது வேண்டுமானாலும் தன் மேல் போடும் வாய்ப்பு உள்ளது என்று உணர்ந்து மிரண்ட பார்வையில் அம்ரு பார்த்திருக்க.. “அங்கே சீதா மாதா தன்னைக் கடத்தின ராவணன் தன்னைத் தொடலைன்னு ராமனுக்கு நிரூபிக்க அப்படிச் செஞ்சாங்க.. ஆனா இங்கே கதையே வேற.. இங்கே உன்னைக் கடத்தின ராவணனுக்கே நீ நிரூபிக்க முயற்சிக்கற.. ஹா ஹா... டோட்டல் டைம் வேஸ்ட்...” என்று இடிஇடியெனச் சிரித்தவன் அங்கிருந்து விலகி சென்றான்.
 
 
ஷௌர்யாவின் இந்த நடவடிக்கையிலும் குழம்பி எப்போதும் போல் புரியாத புதிராக இருப்பவனின் முதுகையே வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் அம்ரு.
 
 
மாலை மங்க தொடங்கி இருந்த நேரம் ஹாலில் இருந்த தொலைபேசி வெகு நேரமாக அடித்துக் கொண்டிருந்தது. வேகமாக வந்து அதை ஷியாம் எடுக்கவும், அந்தப் பக்கம் சந்தீப் பேசினான். “வர்மா இல்லையா..?! ரொம்ப நேரமா அவன் மொபைலுக்குக் கூப்பிட்டுப் பார்த்துட்டேன்.. எடுக்கலை..” என்றதும் தன் கையில் இருந்த கார்ட்லஸுடன் வெளி வாயிலுக்குச் சென்று பார்த்த ஷியாம் அங்கு ஷௌர்யாவின் கார் நிற்பதை கண்டு “லைன்ல இருங்க..” என்று சந்தீப்பிடம் கூறியவன், அம்ருவிடம் சைகையிலேயே ஷௌர்யாவை பற்றிக் கேட்டான்.
 
 
அவள் நீச்சல்குளம் இருக்கும் பக்கம் கையைக் காண்பிக்கவும், அங்குச் சென்றான் ஷியாம். “பய்யா.. லைன்ல சந்தீப் இருக்காரு..” என்று அங்கு ஷியாம் கூறுவது இங்கு நின்றிருந்த அம்ருவுக்குத் தெளிவாகக் கேட்டது.
 
 
ஷௌர்யாவிடம் வேலை பார்க்கும் பிரபுவையே மரியாதையாக அண்ணா என்றழைக்கும் ஷியாம் தன் மரியாதைக்குரிய அண்ணனின் நண்பனை பெயர் சொல்லி அழைப்பது அம்ருவின் புருவத்தைச் சுருங்க செய்தது.
 
 
‘இங்கே இவங்க செய்யற எது புரிஞ்சு இருக்கு..!’ என மெல்ல முணுமுணுத்தவள், தன் வேலைகளைத் தொடர்ந்தாள். ஷியாமின் குரல் கேட்டு அவனருகில் வந்தவன் விரல் அசைக்கவும், அழைப்பை ஸ்பிக்கரில் போட்டான் ஷியாம்.
 
 
“எஸ் சந்தீப்..” என்ற ஷௌர்யாவின் எரிச்சலான குரலிலேயே தன் இந்தத் தொந்தரவு அவனுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை என்று உணர்ந்த சந்தீப், “நான் மொபைலுக்கு நிறைய முறை கூப்பிட்டேன் வர்மா..” என்று தயங்கி இழுத்தான்.
 
 
“விஷயம் என்ன..?” என்று ஷௌர்யா வளவள பேச்சுக்கு இங்கு நேரமில்லை என்று சொல்லாமல் சொல்ல.. “அது நாளைக்கு லலித் கல்யாணத்துக்கு..” என்றவன் ஒரு சிறு இடைவெளி விடவும், இந்தப் பக்கமிருந்து சந்தீப்பை சொல்ல சொல்லி ஊக்காமல் அமைதியே காத்தான் ஷௌர்யா.
 
 
“வர்மா அது நான் நாளைக்கு.. நான் இன்னைக்கு நைட் சுவிஸ் கிளம்பறேன்.. அந்தப் பிரஷித் அண்ட் கோ டீல் இருக்கு..”
 
 
“ம்ம்”
 
 
“அதான் நாளைக்கு என்ன செய்யறதுன்னு..?!”
 
 
“....”
 
 
“மிஸ்டர் ஜெயின் வீட்டு விசேஷம்.. அவர் கூப்பிட்டும் நாம போகலைனா..?!”
 
 
“....”
 
 
“வர்மாஆஆ.. லைன்ல இருக்கீயா..?!”
 
 
“ம்ம்.. சொல்லு..” என அழுத்தமான குரலில் பதிலளித்தான் ஷௌர்யா.
 
 
“அதான்..”
 
 
“அதான்..”
 
 
“இல்ல.. எனக்குப் பதிலா.. என் சார்பா..”
 
 
“ம்ம்”
 
 
“ஜாஷாவும் சஷாங்கும் வருவாங்க..”
 
 
“ஓஹோ”
 
 
“அவங்களும் பிசினஸ் சர்க்கிள் கொஞ்சம் பழகணும் இல்லையா..?!”
 
 
“டெப்பெனட்லி..”
 
 
“உன்னை நம்பி தான் வர்மா அவங்க இரண்டு பேரையும் அனுப்பறேன்.. சின்னப் பசங்க கொஞ்சம் பார்த்துக்கோ..”
 
 
“நான் கிரீச் நடத்தறேன்னு உனக்கு யாரோ தப்பா சொல்லி இருக்காங்கன்னு நினைக்கறேன் சந்தீப்..” என்ற ஷௌர்யாவின் வார்த்தைகளில் அந்தப் பக்கம் பேசிக் கொண்டிருந்தவனின் முகம் கறுத்தது என்றால் இங்குப் போனை ஷௌர்யாவுக்காகப் பிடித்தப்படி மண்டியிட்டு இருந்த ஷியாமுக்குச் சிரிப்பு பிரீட்டது.
 
 
“வர்.. வர்மா.. நான் அப்படிச் சொல்லலை.. உன் கைடன்ஸ்..” என்று மீண்டும் சமாளிக்கும் விதமாகச் சந்தீப் தொடங்கவும்,
 
 
“பிரண்ட்ஸ் கூட ஊர் உலகம் எல்லாம் சுத்த தெரிஞ்ச உன் உடன் பிறப்புகளுக்கு என் கைடன்ஸ் எல்லாம் அவசியமே இல்லை சந்தீப்.. அவங்க இந்த மூணு நாளை ஈஸியா ஹாண்டில் செய்வாங்க.. அண்ட் எனக்கும் அதுக்கெல்லாம் டைம் இருக்காது பாத்துக்கோ.. நானே ஹனிமூன் போக டைம் இல்லாம பல கமிட்மென்ட்ல இருக்க இந்த நேரத்துல கிடைச்சு இருக்க இந்த நல்ல வாய்ப்பை எப்படி மிஸ் செய்ய முடியும் சொல்லு.. எனக்கு நிறையயயயய முக்கியமான வேலை இருக்கு..” என்றான் கேலி குரலில்.
 
 
“நீ.. நீ.. தனியா வரலையா வர்மா..?” என்று சந்தீப் அந்தப் பக்கம் அதிர்வது அப்பட்டமாக அவன் குரலிலேயே தெரிந்தது. “வொய் ஷூட் ஐ சந்தீப்..?” என்று கேட்டவனுக்கு என்ன பதில் அளிப்பது என்று தெரியாமல் திகைக்க வேண்டியது இப்போது சந்தீப்பின் முறையானது.
 
 
அன்று ஷௌர்யாவின் வீட்டில் இருந்து போன பின் ஜாஷாவுக்கு அவனும் எவ்வளவோ எடுத்து சொல்லி பார்த்துவிட்டான். ஆனால் அவளோ அதையெல்லாம் கேட்டால் தானே. இன்னும் ஒரே ஒரு முயற்சி மட்டும் செய்து பார்ப்பதாகக் கண்ணீரோடு கெஞ்சிய தங்கைக்கு மறுக்க மனமில்லாமல் தான் சம்மதித்தான் சந்தீப்.
 
 
அதன்படி முன்பே திட்டமிட்டு இருந்தது போல் அவர்கள் மட்டும் விழாவில் கலந்து கொண்டு ஷௌர்யாவோடு தங்களின் நெருக்கம் சற்று அதிகம் என்று மற்றவர்கள் முன் காண்பித்துக் கொண்டு அதை வைத்தே அங்குக் கிடைக்கும் ஏதோ ஒரு சந்தர்பத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதே ஜாஷாவின் திட்டம்.
 
 
ஆனால் சந்தீப் அறிந்து இருந்தவரை இதில் எதையும் செய்ய என்ன அதை நோக்கி நகரக் கூட அங்கு ஷௌர்யா இடம் கொடுக்கப் போவதில்லை என்று தெளிவாகப் புரிந்துக் கொண்டிருந்தவன் எடுத்து சொல்லி பார்த்தும் அதைக் கேட்க ஜாஷாவும் அவளுக்குச் சாதகமாகத் தாளம் போடும் சஷாங்கும் தாயாராகவே இல்லை.
 
 
அதான் வாய்ப்பு கிடைத்து இருந்தால் என் கனவு நிறைவேறி இருக்கும் என்று அவள் அழுது கரைய கூடாதே என்று அந்தக் கடைசி வாய்ப்பையும் கொடுக்க நினைத்து இருந்தான் சந்தீப்.
 
 
“எஸ்.. எஸ்.. நீ ஏன் தனியா வரணும்..” என்று தடுமாற்றத்தோடான குரலில் சமாளித்து அதன் பின் எதையோ உளறி என்று சற்று நேரம் பேசி விட்டுப் போனை வைத்து இருந்தான் சந்தீப்.
 
 
மீண்டும் ஷௌர்யா தன் நீச்சலை தொடர.. “சோ இது தான் அன்னைக்கான நாடகத்துக்குப் பின்னே இருக்க ரீசனா பய்யா..” என்று சரியாகக் கணித்துக் கேட்டு இருந்தான் ஷியாம்.
 
 
அதில் தலையை மட்டும் திருப்பி ஷியாமை பார்த்த ஷௌர்யா ஒரு புன்னகையோடு தன் நீச்சலை தொடர்ந்தான். அதுவே அன்றைய தன் குழப்பத்துக்கான விடையைச் சொல்லி விட.. அங்கிருந்து நகர்ந்த ஷியாம் பின் திரும்ப ஷௌர்யாவை நெருங்கினான்.
 
 
“பய்யா.. ஒண்ணு கேக்கட்டுமா..?” என்று தயங்கி இழுத்தவனை, திரும்பி பார்த்த ஷௌர்யா நீந்தி வந்து தாவி ஏறி ஷியாமின் அருகில் அமர்ந்தான். அதுவே ஷௌர்யாவின் சம்மதத்தைச் சொல்ல போதுமானதாக இருக்க.. “சந்தீப் செய்யறது உங்களுக்குப் பிடிக்கலைன்னு பல விஷயங்களில் எனக்குத் தெளிவா புரியுது.. அப்பறம் ஏன் பய்யா உங்க பாணியில் அவருக்குப் பதில் கொடுக்காம ஏதோ அவர் போக்கிலேயே போறது போல நடந்துக்கறீங்க.. நீங்க யாருக்கும் இவ்வளவு இடம் கொடுத்து நான் பார்த்தது இல்லை பய்யா.. என்ன டா எப்பவும் நம்மை எந்தக் கேள்வியும் கேக்காதவன் இப்போ இதெல்லாம் கேக்கறானேன்னு என்னைத் தப்பா நினைக்காதீங்க பய்யா, எனக்குச் சமீபமா நம்மளை சுத்தி நடக்கற எதுவுமே புரியலை.. ஆனா நீங்க எனக்கு ரொம்ப முக்கியம், உங்களுக்கு எதுவும்...” என்று கவலை குரலில் பேசிக் கொண்டிருந்தவனின் தோளில் மென்மையாகத் தட்டி புன்னகைத்தான் ஷௌர்யா.
 
 
“உனக்கு என்கிட்ட எல்லா உரிமையும் இருக்கு ஷியாம்.. இப்போ நீ என் மேலே இருக்க அக்கறையினால் கேட்டது கூட எனக்குப் பிடிச்சு இருக்கு.. இந்த உரிமை வேற யாருக்கும் இல்லை.. அண்ட் சந்தீப் பத்தி சொல்லணும்னா, ரொம்ப நாளைக்கு அப்பறம் நான் என்னை நெருங்கவிட்ட ஒரு ஆள் அவன்.. அந்த நட்புக்கான உரிமையை அவன் என்கிட்ட எடுத்துக்கறான், அதில் இது போல அடிக்கடி தம்பி தங்கை பாசம் தான் அவன் கண்ணை அளவுக்கு அதிகமாகவே மறைக்கும்.. அவங்களுக்காகக் கொஞ்சமும் யோசிக்காம எதையாவது செஞ்சு என்கிட்ட மாட்டிகிட்டு முழிப்பான் அவ்வளவு தான்.. அதையும் அவன் செய்யறது எனக்குப் பிடிக்கலைன்னு உடனடியா வார்த்தையிலோ இல்ல செயலிலோ நான் காட்டிடுவேன்.. மத்தப்படி இதுவரை அவன் லிமிட்டை அவன் என்கிட்ட தாண்டினது இல்ல ஷியாம்.. அண்ட் அவன் என்கிட்ட எடுக்க நினைக்கற உரிமை ஒரு நண்பன்கிட்ட இயல்பா எடுக்கறது தானே.. நான் தான் எப்பவும் போல ஒரு லிமிட்குள்ள தள்ளி நிக்கறேன்.. அவன் இல்லை.. நீ சொன்னது போல அவனுக்கு நான் கொடுக்கற சலுகை எல்லாம் அவன் அந்த லிமிட்க்குள்ள இருக்க வரை தான்.. அதை அவன் மீறினா அப்போ மத்தவங்க பார்க்கற வர்மாவை தான் அவனும் பார்ப்பான்..” என்று கூறியவனுக்கு அதைச் சந்தீப் எப்போதோ கடந்துவிட்டது தெரியவில்லை பாவம்..! அது தெரிய வரும் போது..!!
 
 
இத்தனை நாள் ஷியாமின் மனதை அறித்துக் கொண்டிருந்த கேள்விக்கு விடை கிடைத்து விட்டாலும் அடுத்து ஷௌர்யா சந்தீப்பிடம் கூறியதை வைத்து யோசிக்கும் போது நாளை அம்ருவையும் கூட அழைத்துச் செல்லும் என்னமோ என்ற சந்தேகம் தோன்றியது.
அதற்கு ஏற்றது போல எங்கே என்ன என்ற எந்தத் தகவலையும் கூறாமல் அம்ருவை மூன்று நாளுக்குத் தேவையான உடையோடு கிளம்பச் செய்து இழுத்து சென்று அந்த டெஸ்டிநேஷன் வெட்டிங்கில் இறங்கினான் ஷௌர்யா.
 
தொடரும்..
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா 

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 month ago
Posts: 104
Topic starter  

ஹாய் டியர்ஸ்

"உன்னை அமுதவிஷமென்பதா..!!" கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

UAV - 13

https://kavichandranovels.com/community/comments-and-discussions/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%85%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%ae%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%be-comment-thread/

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா

This post was modified 1 week ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 month ago
Posts: 104
Topic starter  
விஷம் – 14
 
தொழில்துறையில் பலரின் மரியாதைக்குரியவரான ஜெயின் அவரின் ஒரே மகனின் திருமணத்தை இளம் தலைமுறையினரின் விருப்பத்துக்கு ஏற்ப மூன்று நாள் திருமணமாகச் சொகுசு கப்பலில் ஏற்பாடு செய்திருந்தார்.
 
 
அவர்களின் முறைப்படி மெஹந்தி சங்கீத் என எல்லாச் சடங்கையும் இதிலேயே நடத்த திட்டமிட்டு இருந்தார். இந்த மூன்று நாள் நடுகடலில் நடக்க இருக்கும் திருமணத்திற்குத் தான் தன் மனையாளோடு வந்து இறங்கி இருந்தான் ஷௌர்யா.
 
 
வழக்கம் போல் தன்னைத் தயார் செய்து எங்கு அழைத்துச் செல்கிறான் எனத் தெரியாமலே கப்பலில் வந்து இறங்கி இருந்தாள் அம்ரு. அரசல்புரசலாக ஷௌர்யாவின் திருமணம் பற்றிக் கேள்வி பட்டுத் தொழில் வட்டத்தில் கிசுகிசுக்கப்பட்டுக் கொண்டிருந்த ஒன்றை கண் முன்னே அது நிஜம் தான் என்று தெளிவுபடுத்துவது போல் வந்து இறங்கியவனைப் பெரும் ஆரவாரத்தோடு வரவேற்று இருந்தார் ஜெயின்.
 
 
“சோ பைனலி ஒரு நல்ல முடிவுக்கு வந்து சிங்கிள் சிங்கமா இருந்த நீ மிங்கிள் ஆகிட்ட..” என்று சந்தோஷத்தோடு ஷௌர்யாவின் தோள் தட்டி உண்மையான உள்ளார்ந்த அன்போடு வரவேற்று இருந்தார் ஜெயின்.
 
 
அவரின் மீது எப்போதுமே ஒரு மதிப்பும் மரியாதையும் கொண்டுள்ள ஷௌர்யா மனதார அவரைப் பார்த்துப் புன்னகைத்தான். தன் வயதுக்கும் தகுதிக்கும் ஏற்றது போல எப்போதும் பெருந்தன்மையோடு நடந்து கொண்டு யாரின் தனிப்பட்ட விஷயங்களைப் பற்றிய ஆராய்ச்சியிலும் இறங்காமல் இருப்பவரின் மேல் ஷௌர்யாவுக்கு ஒரு மரியாதை எப்போதுமே மனதில் உண்டு.
 
 
அதை இன்று வரை அவன் அவரிடம் கூட வெளிபடுத்தியது இல்லை. ஆனால் அவர் அதை அறிந்தே இருந்தார். இந்த வயதிலேயே தான் இன்று இருக்கும் இடத்தைப் பிடித்தவனான ஷௌர்யா என்றால் அவருக்கும் ஒரு தனிப்பட்ட பிரியம் உண்டு. இவருக்காக மட்டுமே தன் முத்தான மூன்று நாளை பற்றிக் கவலைபடாமல் வந்திருக்கிறான் ஷௌர்யா.
 
 
அங்கிருந்து நகர முயன்றவனை “என்ன மிஸ்டர் எஸ்வி இப்படி யாருக்கும் தெரியாம கல்யாணம் முடிச்சிட்டீங்க..? மிஸ்டர் ஜெயின் பாருங்க அவர் மகனுக்கு எப்படிக் கல்யாணம் ஏற்பாடு செஞ்சு இருக்காரு, நம்ம சர்க்கிள்ல மோஸ்ட் எலிஜிபில் பேச்சுலர் தான்.. அப்படிப்பட்ட நீங்க அப்போ இதை விட எப்படிக் கிராண்டா செஞ்சு இருக்கணும்..” என்று கேட்டார் ரெட்டி.
 
 
“கல்யாணம்ன்றது என்னோட பர்சனல்.. அதை எப்போ செய்யணும்.. எப்படிச் செய்யணும்னு நான் தான் முடிவு செய்யணும் மிஸ்டர் ரெட்டி..” என்று ஷௌர்யா கூறியதும் “அதுக்கில்லை மிஸ்டர் எஸ்வி.. உங்களுக்குப் பொண்ணு கொடுக்க நம்ம சர்க்கிள்ல பொண்ணு வெச்சு இருக்க எல்லாருமே நான் நீன்னு போட்டு போடறாங்க.. அப்படிப்பட்ட உங்க கல்யாணம் இப்படி யாருக்குமே சொல்லாம நடந்துடுச்சே.. அதைத் தான் ரெட்டி சொல்ல வராரு.. நீங்க ஒரு பார்ட்டி இல்ல கெட் டூ கெதர் போல வெச்சு எல்லாருக்கும் சொல்லிட்டீங்கனா இதெல்லாம் சரி ஆகிடும்..” என்று அங்கிருந்தவர்களில் ஒருவர் கூறினார்.
 
 
“யாரோ என் பர்மிஷன் இல்லாம எனக்குப் பொண்ணு கொடுக்க நினைச்சதுக்கு நான் ஏன் பார்ட்டி வெக்கணும் மிஸ்டர் குமார்..?” என்று இதழ் சுழித்து ஷௌர்யா கேட்கவும், “அது அப்படி இல்லை மிஸ்டர் எஸ்வி.. இப்போ உங்களுக்குக் கல்யாணம் முடிஞ்சது இன்னும் முறையா யாருக்கும் தெரியாது இல்லையா.. காத்து வாக்கில் தான் செய்தி பரவுது, நாங்களே நேரில் பார்க்கற வரை இதையெல்லாம் கொஞ்சமும் நம்பலை.. கல்யாணமே வேணாம்னு சொல்லிட்டு இருந்த அவரு அப்படி எல்லாம் செஞ்சு இருக்க மாட்டாரு.. அதான் முறையா நீங்களே சொல்லிட்டா அவங்க எல்லாம் உங்களை மாப்பிள்ளை ஆக்கிக்கும் கனவில் இருந்து வெளியே வருவாங்களேன்னு சொன்னேன்..” என்றார் ரெட்டி.
 
 
“அதான் நீங்க எல்லாம் இருக்கீங்களே.. நீங்களே இதை உங்களுக்குக் காத்து வாக்கில் வந்த செய்தி போலவே இதையும் கூடக் காத்து வாக்கில் பத்து நிமிஷத்தில் பரப்பிட மாட்டீங்க..?!” என்றவன் அம்ருவை அழைத்துக் கொண்டு நகர்ந்தான்.
 
 
அங்கிருந்தவர்கள் எல்லாம் வயதில் மூத்தவர்கள். தங்கள் மகனையோ மகளையோ தொழிலில் அமர வைக்கக் கூடிய அளவுக்கான பிள்ளைகளை வைத்திருப்பவர்கள். அவ்வளவு ஏன் ரெட்டிக்கே கூடத் தன் மகளை ஷௌர்யாவுக்குக் கொடுக்கும் எண்ணம் இருந்தது.
 
 
அது சம்பந்தமாகச் சென்ற வருடம் ஷௌர்யாவிடம் பேசி முதலில் அவன் நாசுக்காக மறுத்து அதை இவர் புரிந்து கொள்ளாமல் மீண்டும் பேசி அவன் திட்டவட்டமாகத் தன் விருப்பமின்மையைத் தெரிவித்தும் கூட அதையும் புரிந்தும் கொள்ளாமல் ஏற்றுக் கொள்ளாமல் எப்படியும் திருமணம் செய்யப் போகிறான் அது தன் மகளாக இருந்தால் தொழிலிலும் பணத்திலும் அந்தஸ்த்திலும் பெருமையாக இருக்கும் என்று எண்ணினார்.
 
 
அவர் தன் பல வருட அனுபவத்தில் எத்தனை பேரை எப்படி எப்படியெல்லாம் சரிகட்டி தன் வார்த்தைக்குக் கட்டுப்பட வைத்திருப்பார்.. அதே போல் ஒன்றை ஷௌர்யாவை தொழிலில் மட்டுமே புலி என்று அறிந்திருந்தவர் அவனின் உண்மையான குணம் பற்றித் தெரியாமல் ஒன்றை முயன்று அது சொதப்பலாகி ஒரு பெரிய தொழிலதிபர்களுக்கான கூட்டத்தில் இருக்கும் போதே அனைவரின் முன்னும் ஷௌர்யாவால் அவமானப்பட்டு நின்றார்.
 
 
அதன் பின் அவரை எல்லாருமே சற்றுக் கேலியாகப் பார்ப்பது வழக்கமாகி போனது. அடுத்த மாதத்திலேயே வெளிநாட்டில் தன் மகளுக்கு மணம் முடித்து இருந்தாலும் ஒரு கோபம் ஷௌர்யாவின் மேல் அவருக்கு உள்ளுக்குள் கனன்று கொண்டே தான் இருந்தது.
 
 
அதுவே அவனின் திருமண விஷயம் கேள்விப்பட்டவுடன் இப்படி யாருக்கும் தெரிவிக்கப்படாமல் நடக்க வேண்டுமென்றால் உள்ளே என்ன நடந்து இருக்குமோ என்று தோன்ற, அதை வைத்தே ஷௌர்யாவின் மேல் வேறு மாதிரியான பிம்பத்தை உருவாக்க முயன்றார்.
 
 
ஆனால் அவர் சொல்ல வருவதை நம்பத் தான் அங்கு யாருமே தயாராக இல்லை. பெண்களின் விஷயத்தில் மட்டுமல்ல மற்ற எந்த விஷயத்திலும் கூட விரல் நீட்டி குறை சொல்லவோ குற்றம் சாட்டவோ முடியாத அளவுக்கான நடவடிக்கையே ஷௌர்யாவுடையது.
 
 
அதில் தோல்வியைத் தழுவியவர், ஒருவேளை பெண்ணிடம் எதுவும் குறை இருக்குமோ என்று அறிய முயன்று முடியாமல் இருந்த நேரத்தில் தான் தம்பதி சமயேதராகக் காட்சி அளித்து இருந்தான் ஷௌர்யா.
 
 
அவர் எதிர்பார்த்தது போல எந்தக் குறையும் இல்லாமல் அம்சமாக நின்றிருந்த அம்ருவை கண்டு அதைத் தாங்கிக் கொள்ள முடியாமலும் ஷௌர்யாவை அப்படியே விட்டுவிட முடியாமலும் தான் ஏன் இந்த ரகசிய திருமணம் என்பது போல் பேச்சை துவங்கி வைத்தார்.
 
 
அப்போதாவது அருகில் இருப்பவர்களில் யாராவது வந்து சேர்ந்துக் கொள்வார்கள் ஷௌர்யாவை ஒரு வழியாக்கலாம் என்று எண்ணி அவர் செய்த முயற்சி மீண்டும் தோல்வியையே தழுவி இருந்தது.
இங்கு ஷௌர்யாவோடு சென்று கொண்டிருந்த அம்ருவின் மனதோ, “இவன் எல்லார்கிட்டேயும் இப்படித் தான் திமிரா இருப்பான் போல..!!” என்று எண்ணியது.
 
 
அவனோடு வீட்டிலிருந்து முதல் முறையாக வெளியில் வந்து இருப்பவளுக்கு ஷௌர்யாவின் பழக்க வழக்கங்களைப் பற்றி எல்லாம் தெரியவில்லை பாவம். இதுவரை தன்னிடமும் ஷியாமிடமும் பழகியதை மட்டுமே பார்த்திருந்தவள் ஷியாமிடம் அவன் அன்பாக இருப்பதைக் கண்டு தன்னிடம் மட்டுமே இப்படி நடந்து கொள்வதாக நினைத்திருந்தாள்.
 
 
ஷௌர்யா தனக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குள் அம்ருவோடு நுழைய.. அது ஐந்து நட்சத்திர தரத்தில் சூட் ரூம் போல் இருந்தது. இதுவரை இப்படியெல்லாம் பார்த்திராதவள் அதைக் கண்டு விழி விரித்தாள். கப்பலே அம்ருவுக்குப் புதிது எனும் போது அதில் இப்படி அறைகளே பிரம்மாண்டமாக வீடு அளவுக்கு இருப்பது எல்லாம் அவள் கனவில் கூட எண்ணியதில்லை. அதுவே அவளின் ஆச்சர்யத்திற்குக் காரணம்.
 
 
“என்ன கல்யாணமே இப்படி ஒரு கப்பல்ல நடக்குதே.. அப்போ அவங்க வீடு வசதி எல்லாம் எப்படி இருக்கும்னு தோணுமே..?! பேசாம அவனைக் காதல்ன்ற பேர்ல நடிச்சு ஏமாத்தி இருக்கலாம்னு தோணுதா..?!” என்று அவளின் விழி விரிப்பை கண்டு அதை வேறு மாதிரி புரிந்து கொண்டு ஏளன இதழ் சுழிப்போடு கேட்டான் ஷௌர்யா.
 
 
இதுவரை கண்டிறாத ஒன்றை ஆச்சர்யத்தோடு பார்த்ததற்கு அவன் சுமத்திய குற்ற சாட்டு வழக்கம் போலவே வலிக்கச் செய்தாலும் அதை வெளிகாட்டி கொள்ளாமல் அமைதியாக நகர்ந்துவிட்டாள் அம்ரு.
 
 
ஷௌர்யாவும் சிறிது நேரத்தில் குளித்து உடை மாற்றிக் கொண்டு வெளியேறி விட.. வந்திருப்பது திருமணம் என்று அவனின் பேச்சில் இருந்து புரிந்து அம்ருவும் ஓரளவு அதற்கு ஏற்றது போல் குளித்துத் தயாரானாள்.
 
 
அன்று மாலை தான் மெஹெந்தி என்பதால் பெண்கள் எல்லாம் ஒரு கூட்டமாக அமர்ந்து பேசுவதும் ஆண்கள் எல்லாம் இங்கும் தொழிலை பற்றி அலசி கொண்டிருப்பதுமாக நேரம் சென்றது.
 
 
அங்கு அமர்ந்திருந்தாலும் ஷௌர்யா தன் கருத்தை எங்கும் பதிவு செய்யாமல் அவர்களின் பேச்சை மட்டும் காதில் வாங்கிக் கொண்டே தன் அலைபேசியில் மூழ்கி இருந்தான்.
 
 
அறையில் இருந்த அம்ருவுக்கோ இது தான் முதல் கடல் பயணம் என்பதால் அந்த உப்பு காற்றின் வாசமும் கப்பலின் அசைவினால் உண்டான ஆட்டமும் ஒத்துக் கொள்ளாமல் போய் வாந்தி மயக்கம் என அவஸ்த்தைக்கு உள்ளாகியது.
 
 
தொடர் வாந்தியின் காரணமாக வெகு நேரம் சோபாவில் சுருண்டு கிடந்தவள், ஏனோ மூச்சை முட்டுவது போல் இருக்கவே இதற்கு எனச் செய்ய வேண்டும் எப்படி இதை எதிர்கொண்டு சமாளிக்க வேண்டும் எனக் கேட்டு தெரிந்து கொள்ளக் கூட ஆள் இல்லாததால் தானாகவே சற்று வெளிக்காற்றைச் சுவாசிக்க எண்ணி அறையிலிருந்து வெளியே வந்தாள்.
 
 
மாலை மெஹந்தி துவங்கி விட.. அந்தக் கப்பலின் திறந்தவெளி மேல்தளத்தில் இளவட்டங்களின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று அங்கே பார்ட்டி களை கட்டிக் கொண்டிருக்க, இரவின் இருளையும் கடல் அலையின் ஓசையையும் மீறி அதன் அமைதியை கிழித்துக் கொண்டு அலறிக் கொண்டிருந்தது இசை. ஒவ்வொருவரும் தங்களை மறந்து அதில் மூழ்கியிருக்க.. ஷௌர்யா மெல்ல அங்கிருந்து விலகி தன் தொழில் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தையில் மூழ்கி இருந்தான்.
 
 
இந்த ஆட்டமோ பாட்டமோ கொண்டாட்டமோ அந்த இரவின் அழகோ இல்லை கடலின் அமைதியோ பளபளக்கும் ஒளி விளக்குகளின் ஜாலங்களோ என எதுவும் பாதிக்காத இரண்டு ஜீவன்கள் அங்குச் சற்று தள்ளி இருளில் ஓரமாக நின்றிருந்தன.
 
 
ஒன்று ஷௌர்ய வர்மன் இதெல்லாம் எனக்கு அவசியம் இல்லாதது என்பது போல அங்கும் தன் கையில் இருந்த அலைபேசியில் தொழில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான் என்றால் மற்றொன்று அவனின் பழிவாங்கும் படலத்தின் நாயகி அமிர்தவர்ஷினி.
 
 
அவளின் பால் வண்ண மேனிக்குக் கச்சிதமாகப் பொருந்தி இருந்த அடர் ஆரஞ்சு நிற டிசைனர் சேலையில் தொலைவில் தெரிந்த கடலை வெறித்துக் கொண்டு திரும்பி நின்றிருந்தவளின் விரித்து விடப் பட்டு இருந்த கூந்தலும் ஒற்றையாய் பின் செய்து விடப்பட்டிருந்த சேலைத் தலைப்பும் காற்றில் அலைபபாய்ந்து கொண்டிருந்தது அவளின் மனதைப் போலவே.
 
 
அங்கு வந்து இருந்த 5 தோழிகளைக் கொண்ட குழுவில் இருந்த ஒரு பெண்ணின் பார்வை ஆரம்பம் முதலே ஷௌர்யாவையே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. அவர்கள் மணப்பெண்ணின் தோழிகள் என்பது ஓரளவு முன்பே ஷௌர்யா கணித்திருந்தான்.
 
 
அவன் எங்குச் சென்றாலும் அவளின் பார்வை அவனைத் தொடர்வதை அவனும் உணர்ந்தே தான் இருந்தான். ஆனால் அவனுக்குத் தான் பெண்கள் என்றாலே வெறுபாயிற்றே, இது போல எத்தனையையோ பார்த்தவன் ஒதுக்கி தள்ளி கடந்து வந்தவன் என்பதால் சற்றும் அதைக் கண்டு கொள்ளாமல் தன் பணியில் மூழ்கி இருந்தவனை விழுங்குவது போல் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் அவள்.
 
 
இங்கு வந்தது முதலே அவளின் பார்வையையும் ஆசையையும் பார்த்துக் கொண்டிருந்த தோழிகள் அவளைச் சென்று தனியே நிற்கும் ஷௌரியாவிடம் பேசுமாறு மெல்ல தூண்டிவிட, முதலில் மறுத்து தயங்கியவள்... பின் அவர்களின் தூண்டுதலின் பேரில் ஓரளவு தைரியம் வரப்பட்டுக் கைகளைப் பிசைந்தவாறே ஷௌர்யாவிடம் சென்று பேச எண்ணி அவனைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தயக்கமும் வெட்கமுமாக நெருங்கிக் கொண்டிருந்தாள்.
 
 
இதைக் கண்டு கொள்ளாதது போல் பேசிக் கொண்டு நின்றிருந்தாலும் ஷௌர்யாவுக்குத் தன்னைச் சுற்றி நடப்பது அனைத்தும் தெரிந்தே இருந்தது. அதில் சலிப்போடு பார்வையைத் திருப்பயவன் தன் இடப்பக்கமாகச் சற்றுத் தொலைவில் இருந்த வளைவின் அந்தப் பக்கமாக நின்று கொண்டு இருந்த அம்ருவை அப்போதே கண்டான்.
 
 
தன்னுடைய இன்றைய நிலையையும் வாழ்க்கையையும் எண்ணி கொண்டிருந்தவளுக்கு இந்தத் தொடுவானம் போலவே அதுவும் முடிவில்லாமல் நீண்டு கொண்டே போகுமோ என்ற எண்ணம் தோன்ற அப்படியே தன்னை மறந்து நின்றிருந்தவளின் கைகளை ஒரே எட்டில் நெருங்கி தன் இடது கையால் பிடித்துச் சுண்டி இழுத்து ஒரு சுழற்று சுழற்றி தன்னோடு சேர்த்து அவளைப் பின்னால் இருந்து அணைத்துக் கொண்ட ஷௌர்யா வலது கையில் இருந்த அலைபேசியில் "கால் யூ லேட்டர்...” என்றவாறே அதை அணைத்து தன் பேண்ட் பாக்கெட்டில் போட்டபடியே இரு கைகளைக் கொண்டும் அவளைத் தனக்குள் சிறை செய்திருந்தான்.
 
 
என்ன நிகழ்கிறது என்று உணர்வதற்கு முன்பே அம்ரு ஷௌர்யாவின் கை சிறையில் சிறைப்பிடிக்கபட்டிருக்க.. அவளின் கழுத்து வளைவில் தன் முகத்தைப் புதைத்தவன் அந்தக் குளுமையான இரவை வெப்பமயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.
 
 
இதைக் கண்டு அப்படியே அதிர்வில் உறைந்து நின்றிருந்த அந்தப் பெண்ணின் கண்களிலிருந்து தாங்க முடியாத வலியோடு கண்ணீர் பொங்கி பெருகி வழிந்து கொண்டிருந்தது. அப்போதே அம்ருவின் கழுத்தில் மின்னி கொண்டிருந்த மாங்கல்யமும் நெற்றி வகிட்டில் தீட்டப்பட்டு இருந்த குங்குமமும் உரிமையாய் அவளின் மேல் பதிந்து இருந்த ஷௌரியாவின் கரங்களும் வார்த்தைகளின் தேவை இல்லாமலே அனைத்தையும் அவளுக்குப் புரிய வைத்து இருந்தது.
 
 
அவளின் நிலையை உணர்ந்து தோழிகள் அவளைச் சமாதானப்படுத்த வேண்டி அங்கிருந்து அழைத்துச் சென்ற அடுத்த நொடி தான் சொல்ல நினைத்ததை வார்த்தைகளின் விரயமின்றிச் செயல்களில் உணர்த்தி முடித்து இருந்தவன், அம்ருவை உதறித் தள்ளியதில் நிலை குலைந்து கீழே விழுந்து கிடந்தவளை பற்றிக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் “யூ ஆர் தி டூல் ஜஸ்ட் டூல்.. ஐ யூஸ் டூ ப்ரோடக்ட் மை ஸெல்ப்... கற்பனை குதிரையை அதுக்குள்ளே அவிழ்த்து விடாதே...” என்று கூறிவிட்டு வேகமாக அங்கிருந்து நகர்ந்தான்.
 
 
எப்போதும் போலவே ஏன் வந்தான்..?! எதற்கு வந்தான்..?! ஏன் அப்படி நடந்து கொண்டான்..?! என்றும் எதுவும் தெரியாமல் இங்கு வந்தது முதல் அனுபவித்த உடல் உபாதை வேறு சோர்வுற செய்திருந்ததால் உடனே எழுந்து கொள்ளக் கூட முடியாமல் போனதில் ஷௌர்யாவின் இந்தச் செயல்களுக்கான யோசனைகளைத் தள்ளி வைத்து விட்டு எழுந்து கொள்ள முயன்று கொண்டிருந்தாள் அம்ரு.
 
 
எதிர்பக்கம் இருந்த தன் அறைக்குச் செல்ல திரும்பிய ஷௌர்யா மேலே பார்ட்டி நடந்த இடத்திலிருந்து ஜாஷா இறங்கி வருவதைக் கண்டு அப்படியே நின்றவன், வேகமாகத் திரும்பி அம்ரு உணரும் முன்னரே அவளின் கை பற்றிச் சுண்டி இழுத்ததில் அதைக் கொஞ்சமும் எதிர்பார்த்திராதவள், அவன் மேல் வந்து வேகமாக வேரறுந்த கொடி போல மோதி நின்றாள்.
 
 
ஜாஷா இங்கு வந்தது முதல் ஷௌர்யாவோடு தனித்துப் பேசும் நேரத்தை எதிர்பார்த்து தான் சுத்தி கொண்டிருந்தாள். ஆனால் அவனோ இளவட்டங்களுக்கு இடையில் அமராமல் பெரிய தலைகளின் நடுவே அமர்ந்திருந்தான்.
 
 
அங்குப் போய் ஷௌர்யாவிடம் வலிய பேசுவது மற்றவர்களின் பார்வையில் தவறாகத் தெரியும் என்றே அமைதியாகச் சுற்றிக் கொண்டிருந்தாள் ஜாஷா. அவளுக்கு இதைப் பற்றியெல்லாம் எப்போதுமே கவலை கிடையாது தான் என்றாலும் கிளம்புவதற்குள் சந்தீப் அத்தனை முறை தொழில் வட்டத்தில் பெயரை கெடுத்து விடக் கூடாது என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தி அனுப்பி இருந்ததே அவளைச் சற்று நிதானிக்கச் செய்தது.
 
 
அப்படியே சுற்றிக் கொண்டிருந்தவள் தான் இளவட்டங்களின் பார்ட்டியில் ஐக்கியமாகிவிட அந்தச் சந்தர்ப்பத்தில் தான் ஷௌர்யா அங்கிருந்து நகர்ந்து இருந்தான். அவனை அங்குக் காணாமல் தேடி ஒவ்வொரு தளமாகப் பார்த்துக் கொண்டே ஷௌர்யாவின் அறை இருக்கும் தளத்தை நோக்கி வந்து கொண்டிருந்தாள் ஜாஷா.
 
 
அதிலுமே கூட அவளுக்கு ஒரு குறை உண்டு. ஷௌர்யாவின் அறை இருக்கும் தளத்திலோ அவனின் அறைக்கு அருகிலோ அவளுக்கு அறை கிடைக்கவில்லை. இங்கு விவிஐபிகளுக்கு மட்டுமே அறை ஒதுக்கப்பட்டு இருந்தது.
 
 
அதற்கு அடுத்தத் தளத்தில் தான் மற்றவர்களுக்கு அறை கொடுக்கப்பட்டு இருந்ததால் ஜாஷா மறைமுகமாக எவ்வளவு முயற்சி செய்தும் இங்கு வர முடியவே இல்லை.
 
 
இப்போதும் பார்வையைச் சுழற்றி தேடிக் கொண்டே வந்ததால் ஜாஷா பார்ப்பதற்குள் ஷௌர்யா அவளைக் கவனித்து இருந்ததால் அழகாக ஜாஷாவை தவிர்க்க அம்ருவை கையாண்டான்.
 
 
தன் மேல் வந்து விழுந்து மார்பில் முகம் புதைத்து கொண்டிருந்தவளை கண்டு சந்தர்பத்திற்காகக் காத்திருந்து அதைப் பயன்படுத்திக் கொள்வதாக எண்ணி வெளியே தெரியாதவாறு பல்லை கடித்துக் கொண்டே இடையோடு சேர்த்து இறுக்கிக் கொண்டு வெளி தோற்றத்துக்கு ரொமான்ஸ் மன்னனாக மாற முயன்றான் ஷௌர்யா.
 
 
ஆனால் திடீரென இழுக்கபட்டதில் ஷௌர்யாவின் மேல் வந்து மோதியவள், அவளுக்கு இருந்த உடல் உபாதைகளின் காரணமாக அந்த அதிர்வில் அப்படியே மயங்கி இருந்தாள்.
 
 
இதை அறியாத ஷௌர்யா தன் மேல் வேண்டுமென்றே வந்து இந்த வாய்ப்பை பயன்படுத்தி இழைவதாக எண்ணி பொங்கிய ஆத்திரத்தை அப்படியே வெளியே காட்டாமல் புன்னகை தவழும் முகமாகவே அம்ருவை அணைத்துக் கொண்டிருந்தான்.
 
 
அதே நேரம் ஷௌர்யாவை கண்டிருந்த ஜாஷா வேகமாக ஓடி வந்தவள், அப்போதே அவன் அம்ருவை அணைத்துக் கொண்டு இருப்பதைக் கண்டு ஆத்திரத்தோடு முறைத்தாள். தன் பின்னால் நெருக்கமாக ஜாஷா நிற்பதை உணர்ந்த ஷௌர்யா, மார்பில் முகம் புதைத்திருந்த அம்ருவை மேலும் தன்னோடு சேர்த்து இறுக்கி கொண்டே புது மணத் தம்பதிக்கே உரிய காதல் வசனங்களைக் கிசுகிசுப்பான குரலில் அம்ருவின் காதில் பேசினான்.
 
 
அது ஒரு எழுத்து மாறாமல் பின்னால் நின்றிருந்தவளுக்கும் கேட்டதில் கோபமும் வெறுப்புமாக இவர்களைப் பார்த்துக் கொண்டு இருந்தவள் கடந்த ஒரு மாதமாக இந்தத் திருமணத்தில் தன் திட்டத்தை அரங்கேற்றி தன் திருமணத்தை இதிலிருந்து முடிக்க எண்ணி இருந்தவளின் கனவு கண் முன்னேயே கலைந்தது போல் ஜாஷாவுக்கு இருந்தது.
 
 
ஷௌர்யா தன் இந்தப் பேச்சுக்கே அவள் இங்கிருந்து விலகி சென்று விடுவாள் என்றெண்ணி இருக்க.. அவளோ கொஞ்சமும் அசையாமல் அங்கேயே நின்று முறைத்துக் கொண்டிருக்கவே.. இதற்கு மேல் இந்த நாடகத்தைத் தொடர பொறுமையற்றவன், அதிரடியாக அவளை விரட்ட எண்ணி காதல் கணவனாக மாறி அம்ருவை தன் கைகளில் ஏந்திக் கொண்டு வேகமாகத் தங்கள் அறைக்குள் நுழைந்தான்.
 
 
இந்தக் காட்சியைக் கண்ட ஜாஷாவுக்கு அதற்கு மேல் அங்கு நிற்க முடியாத அளவுக்குத் துக்கம் பொங்கி வர, ஏதோ தன் கணவனின் துரோகத்தைக் கண்ட மனைவி போல் வாயை மூடி அழுது கொண்டே அங்கிருந்து ஓடினாள்.
 
 
அறைக்குள் நுழைந்த ஷௌர்யா அந்தச் சூட்டின் படுக்கையறை வரை செல்ல கூடப் பொறுமையற்று, கதவை தன் காலால் மூடிய வேகத்தோடே கையில் இருந்த அம்ருவை தொப்பென்று கீழே விட எண்ணி கைகளை விளக்கி கொண்டான்.
 
 
அந்த வேகத்திலும் சத்தத்திலும் தடுமாறி விழவோ இல்லை எதையாவது பிடித்துக் கொண்டு விழாமல் இருக்கவோ போராட வேண்டியவள் அப்படியே கீழே வீசபட்ட பந்தை போல் ஷௌர்யா எறிந்த வேகத்தில் கீழே சென்றாள்.
 
 
இந்த வித்தியாசத்தை நொடியில் கவனித்த ஷௌர்யா நெற்றி சுருங்க அம்ருவின் முகத்தைப் பார்த்த நொடி நிலைமை என்ன என்பதைக் கணித்து இருந்தவனின் கரம் உயர்ந்து அவளின் கரத்தை பற்றி நிறுத்தி இருந்தது.
 
 
அதில் கால்கள் மடங்கி விழ இருந்தவள் ஷௌர்யாவின் கரம் கொடுத்த அழுத்தத்திலும் இழுக்கப்பட்ட வேகத்திலும் தரையில் எறியப்பட்ட பந்து மீண்டும் கைக்கு வந்து சேர்வது போல் ஷௌர்யாவை நோக்கியே வந்தவள், அவன் ஒற்றைக் கையிலேயே அவளின் கையைப் பிடித்து இருந்ததால் பிடிமானம் சரியாக இல்லாமல் தரைக்கும் அவனுக்கும் இடையில் ஊசலாடினாள்.
 
 
இத்தனை செயல்களுக்கு இடையிலும் அம்ருவின் முகத்தை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்தவன், அவள் இழுக்கப்பட்ட விதத்திற்கும் வேகத்திற்கும் சிறு முகச் சுழிப்பாவது மயங்கியது போல் நடிப்பவர்களின் முகத்தில் வெளிப்படும்.. ஆனால் அம்ருவின் முகத்தில் அப்படி எதுவும் தெரியாமல் போனதே அது நடிப்பு இல்லை உண்மையான மயக்கம் தான் என்று ஷௌர்யாவுக்குப் புரிய.. அதை அறிந்துக் கொள்ளவே அம்ருவை விழாமல் பிடித்திருந்தவன், நின்றிருந்த கோணத்தில் இருந்து லேசாக திரும்பி அப்படியே தன் பிடியை சட்டென விளக்கி கொண்டதில் அங்கிருந்த சோபாவில் சென்று விழுந்தாள் அம்ரு.
 
 
அதன் பின் அடுத்த நொடி அங்கு நிற்கவோ அவளைப் பற்றிக் கவலைப்படவோ கூடச் செய்யாமல் அதே வேகத்தில் வெளியேறி இருந்தான் ஷௌர்யா. ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் ஷௌர்யா உள்ளே வந்த போதும் அம்ரு அதே நிலையிலேயே தான் கிடந்தாள்.
 
 
ஒரு பொறுமையற்ற பார்வையில் அவளைப் பார்த்தவன், அங்கிருந்த தண்ணீரை எடுத்து அவள் மேல் கொட்டி கவிழ்க்க.. பதறி எழுந்தாள் அம்ரு. “இங்கே நீ படுத்து ரெஸ்ட் எடுக்க வரலை.. ஒரு கல்யாணத்துக்கு வந்து இருக்கோம், அங்கே எல்லாரும் உன்னைக் கேக்கறாங்க.. உலக அழகியான உன்னை நான் மறைச்சு வெச்சு இருக்கேனாம்..!! அப்படியெல்லாம் இல்லைன்னு காட்ட, இன்னும் பத்து நிமிஷத்தில் நீ கிளம்பி இருக்கணும்..” என்றவன், குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
 
 
ஷௌர்யா கிளம்பி வெளியேறியதும், அவசரமாகக் குளித்துக் கிளம்பிக் கொண்டிருந்தாள் அம்ரு. அப்போது உடை மாற்றும் அறையின் கதவை வேகமாகத் தள்ளிக் கொண்டு ஷௌர்யா உள்ளே நுழைய.. பாதி உடுத்தி இருந்த சேலையோடு நின்றிருந்தவள், பதறி மீதியை எடுத்து தன் மேல் போட்டுக் கொண்டாள்.
 
 
அம்ருவையும் அவளின் செய்கையையும் ஒரு ஏளன பார்வையில் அளந்தவன், “ஆமா நீ பெரிய அதிரூப சுந்தரி.. உன்னை அரையும் குறையுமா பார்க்க தான் நான் ஓடி வரேன்..” என்று அருவருப்போடு முகம் சுழித்தவாறே அவளுக்கு அருகில் இருந்த அலங்கார மேசை மேல் இருந்த தன் அலைபேசியை எடுத்துக் கொண்டு திரும்பியவன், அவளை மேல் இருந்து கீழாக ஒரு துச்சமான பார்வையில் அளந்தவாறே “இந்த உலகத்தோட கடைசிப் பொண்ணா நீ இருந்தா கூட, நீ எனக்கு வேண்டாம்..” என்று வெறுப்போடு உதிர்த்து விட்டு வெளியேறி இருந்தான்.
 
 
அவனின் அதிரடி வரவிலேயே அதிர்ந்து இருந்தவள், அடுத்தடுத்த நிகழ்வுகளில் சிலையாகி இருந்தாள். முதலில் அம்ரு பயந்து பதறியதற்குக் காரணம் எல்லாப் பெண்களுக்குள்ளும் இருக்கும் ஒரு எச்சரிக்கை உணர்வினாலேயே என்றாலும் தாழிடப்பட்ட கதவு திறந்து கொண்டதென்றால் அது சரியாகத் தாழிடபடவில்லை என்பது புரிய.. ‘எங்கே இதையும் வேண்டுமென்றே தான் செய்ததாக எண்ணி வார்த்தைகளில் வதைப்பானோ..!’ என்ற அச்சமே பெரிதாக இருந்தது.
 
 
ஆனால் அம்ரு பயந்தது போல் எதுவும் நடக்காமல் வேறு வகையிலேயே பேசி சென்று இருந்தான் ஷௌர்யா. உண்மையைச் சொல்ல போனால் அவன் கடைசியாக உதிர்த்து விட்டு சென்ற வார்த்தைகள் ஒரு மனைவியாக அம்ருவை காயபடுத்துவதற்குப் பதில் நிம்மதி பெருமூச்சு விடவே செய்திருந்தது.
 
தொடரும்..
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா 
This post was modified 1 week ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 month ago
Posts: 104
Topic starter  

விஷம் – 15

ஒரு மாதத்திற்கும் மேல் ஆகியும் இன்னும் மாயமான அம்ருவை பற்றி எதுவுமே கண்டுபிடிக்க முடியாமல் சுற்றி அலைந்து சோர்ந்து போய் சூர்யாவும் முகுந்தும் அந்த மதியவேளையில் உணவகத்தில் அமர்ந்திருந்தனர்.

 

முகுந்தின் முகத்தில் தெரிந்த களைப்பை கண்டே சூர்யா வற்புறுத்தி சாப்பிட அழைத்து வந்திருந்தான். இருவருமே இத்தனை நாளில் அலையாத இடமில்லை தேடாத வழியில்லை ஆனால் அம்ருவை கண்டுபிடிக்கும் மார்க்கம் மட்டும் இன்று வரை கிடைக்கவே இல்லை.

 

எங்குப் போனாலும் எந்தப் பக்கம் திரும்பினாலும் அது முட்டு சந்தாகவே இருந்தது. இனி அம்ரு கிடைப்பாளா என்ற கேள்வியையும் கடந்து இங்குத் தங்கள் நிலையே இப்படி இருக்கையில் இதற்கு பின்னால் நிச்சயமாக யாரோ இருப்பது தெரிய, தங்களை இப்படி எந்த வகையிலும் அடி எடுத்து வைக்க விடாமல் செய்யும் பலம் பொருந்தியவர்களின் கைகளில் சிக்கி இருக்கும் அம்ருவின் நிலை என்ன என்று எண்ணி பார்க்க கூட இருவருக்கும் பயமாக இருந்தது.

 

இதைப் பற்றிய பேச்சின் நடுவே சாப்பாடு கூட இருவருக்கும் உள்ளே செல்ல மறுத்தது. சூர்யாவுக்கு அவன் பணி புரியும் இடத்திலிருந்து அழைப்புகள் வேறு தினமும் வந்து கொண்டே இருந்தன. ஒரு மாதத்திற்கு மேல் விடுமுறை எடுத்து விட்ட நிலையில் அவனாலும் எதுவும் செய்ய முடியாத நிலை தான்.

 

ஆனாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படக் கூட நேரமில்லாமல் அவனின் மனம் முழுக்க உடன்பிறந்தவளை பற்றிய கவலையே நிறைந்து இருந்தது. சூர்யா காவ்யாவை கூட நேரில் சந்தித்து இருபது நாட்களுக்கும் மேலாகி இருந்தது.

 

அந்த அளவுக்கு இவர்கள் இருவருமே இரவு பகல் பாராமல் அம்ருவை தேடி அலைந்துக் கொண்டிருந்தனர். இப்போதும் அதைப் பற்றிய பேச்சினூடே தான் பெயரளவுக்கு உணவை உண்டுக் கொண்டிருந்தனர்.

 

முகுந்த் கை கழுவ எழுந்து சென்ற இடைவெளியில் அவனின் அலைபேசி அடிக்கத் தொடங்கியது. மேசை மேல் இருந்ததின் மேல் பார்வையைத் திருப்பிய சூர்யா அழைப்பது முகுந்தின் அம்மா என்று அறிந்து அவரோடு இங்கு வந்த பிறகு இதுவரை பேசவில்லை என்பது அப்போதே நினைவு வர, அதை எடுத்திருந்தான் சூர்யா.

 

சூர்யா ஹலோ என்பதற்கு முன் அலைபேசி எடுக்கபட்டதை உணர்ந்து “இன்னும் அந்த வீணா போனவளை தேடி தான் சுத்திட்டு இருக்கீயா நீ.. உனக்கு எத்தனை முறை சொன்னாலும் அறிவே வராதா முகுந்த்..?! இனி அவளைத் தேடி என்ன செய்யப் போறே, ஒரு மாசம் கழிச்சு அவ கிடைச்சாலும் நான் இந்த வீட்டு மருமகளா அவளை ஏத்துக்க மாட்டேன்னு சொல்லியும் இன்னும் அவளை ஏன் டா தேடிட்டு இருக்கே.. அவ காணாம தான் போனாளோ இல்லை யார் கூடவாவது ஓடி போனாளோ அதைப் பத்தி எல்லாம் எனக்குக் கவலையே இல்லை.. உன் கனவு லட்சியம்னு சாப்பிட கூட நேரமில்லாம ஓடிட்டு இருந்தீயே அந்த டான்ஸ் கம்பெனியை கூட இப்போ மறந்துட்டு அவளைத் தேடி அலைஞ்சுட்டு இருக்க.. எப்படி எல்லாம் உன்னை ஏமாத்தி மயக்கி வெச்சு இருக்கா பாரு.. இதெல்லாம் கொஞ்சமும் நல்லா இல்லை முகுந்த்.. போனவ எங்கேயோ போயிட்டா.. இனி நீ உன் வாழ்க்கையைப் பாரு..” என்று கோபத்தோடு செல்வி கத்த தொடங்கி இருந்தார்.

 

இதில் உச்சபட்சமாக அதிர்ந்து இருந்த சூர்யா பதிலேதும் பேசாமல் அலைபேசியை அணைத்து இருந்தான். மற்றவர்கள் பேசும் போதே வலி கொடுக்கும் வார்த்தைகள் உறவென்று நம்பி இருந்தவரின் வாய் மொழியாகக் கேட்க நேர்ந்ததில் வலியின் அளவு அதிகமாகியது.

 

அப்படியே தனக்குள்ளேயே மூழ்கி யோசித்துக் கொண்டிருந்தவனின் அருகில் வந்தமர்ந்த முகுந்த் அழைத்ததெல்லாம் சூர்யாவுக்குக் கேட்கவே இல்லை. இரண்டு முறை அழைத்துப் பார்த்த முகுந்த் சூர்யாவின் தோள் பற்றி உலுக்கியதில் திடுக்கிட்டு திரும்பியவன், “நான் காவ்யாவோட அண்ணனை போய்ப் பார்க்கலாம்னு இருக்கேன் மச்.. முகுந்த்..” என்றான்.

 

சூர்யாவின் வார்த்தையில் திடுக்கிட்டிருந்த முகுந்த், இடையில் வெளிப்பட்ட அழைப்பில் இருந்த தடுமாற்றத்தை எல்லாம் கண்டு கொள்ளும் நிலையிலேயே இல்லை.

 

“உனக்கென்ன பைத்தியமா சூர்யா..?! யார் கண்ணுல படக் கூடாதுன்னு நினைச்சிட்டு இருக்கியோ.. அவரைப் பார்க்கவே போவீயா..?! உன் மிசஸுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்..!” என்று படபடத்தான்.

 

“என்ன என் உயிர் போகுமா முகுந்த்.. போகட்டும், நான் செஞ்ச தப்புக்கு என் தங்கை ஏன் டா தண்டனை அனுபவிக்கணும்.. அம்ரு பாவம் மச்.. அவளுக்கு நான் காதலிக்கற விஷயம் கூடத் தெரியாது, அவளை என்ன கொடுமை படுத்தறாங்களோ பயமா இருக்கு.. “ என்றான் கவலையான குரலில்.

 

“இதுக்கா மச்சான் இத்தனை நாள் நீ பயந்து ஒளிஞ்சு சுத்தின.. இன்னும் நீங்க சரியா சேர்ந்து வாழ கூட இல்லையே சூர்யா.. அவசரப்படாதே.. வர்ஷா அங்கே தான் இருக்காளான்னு கூட நமக்கு இன்னும் தெரியாது.. பொறுமையா இரு..” என எப்படியாவது சூர்யாவை அங்குச் செல்லாமல் தடுத்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் பேசினான் முகுந்த்.

 

“அந்த ஒரே ஒரு சந்தேகத்தை மனதில் வெச்சு தான் இப்போ வரை தேடிட்டு இருக்கேன் முகுந்த்.. நீயே சொல்லு, அம்ரு தானா எங்கேயாவது போய் இருக்க வாய்ப்பிருக்கா..!!?”

 

“இல்லை தான்..”

 

“போலீஸ் ஏன் கேஸ் எடுக்கலை..?!”

 

“தெரியலை..”

 

“யார் மூலமாவாவது முயற்சி செய்யலாம்னா முடியுதா..!?”

 

“இல்லை..”

 

“நாம தேடாம இருந்தோமா..?!”

 

“இல்லை..”

 

“அவ மட்டுமில்லை அவளைப் பத்தின தகவலாவது கிடைச்சுதா..?!”

 

“ம்ஹும்..”

 

“அப்படிப் போக அவ என்ன மாயாவியா..?!”

 

“...”

 

“சொல்லு முகுந்த்..”

 

“இல்லை..”

 

“இத்தனையும் சொல்லலையா இதுக்குப் பின்னே பெரிய கை ஏதோ இருக்குன்னு..?!”

 

“ம்ம்ம்..”

 

“எனக்குக் குடும்பத் தகராறோ சொத்து தகராரோ இல்லை மச்.. முகுந்த்.. இன்னும் சொல்ல போனா எதிரின்னு சொல்ல கூட யாரும் இல்லை.. இப்போ என் மேலே கோபமா இருக்க ஒரே ஆள் காவ்யாவோட அண்ணன் மட்டும் தான்.. பேசி பார்த்துடலாம்னு முடிவு செஞ்சிட்டேன் முகுந்த்..” என்றான்.

 

இதில் முகுந்துக்குமே பெரும் சந்தேகம் இருந்து கொண்டு தான் இருந்தது என்றாலும் சூர்யாவை உடனே அனுப்பி வைக்க மனம் வரவில்லை. “உன் வொய்ப்கிட்ட சொல்லிட்டியா சூர்யா..?” என்றான்.

 

“ம்ஹும்.. சொன்னா பயப்படுவா.. அங்கே போனா என்னை ஏதாவது செஞ்சிடுவாங்கன்னு அழுவா.. வேண்டாம் அவளுக்கு இது தெரியவே வேண்டாம்..”

 

“உளறாதே சூர்யா.. அவங்களுக்குத் தெரியாம நீ அங்கே போறது எனக்குச் சரியா படலை.. அவங்ககிட்ட சொல்லு, ஒருவேளை அவங்க உனக்கு ஏதாவது உதவ முடியலாம் இல்லையா.. அவங்க அண்ணன்கிட்ட எப்படிப் பேசணும்னு கூடச் சொல்லி கொடுப்பாங்க.. இல்லைனா அவங்களையும் கூடவே கூட்டிட்டு போ..”

 

“என்ன தான் நாம பேசினாலும் அவர் கேக்கணுமே முகுந்த்.. அதுக்கு அவருக்குப் பொறுமையே கிடையாது.. எப்பவும் அவர்கிட்ட பேச்சே இல்லை வீச்சு தான், இதெல்லாம் உனக்குத் தெரியாதா என்ன..?! அதான் வியா அவ விஷயத்தைப் பத்தி அவர்கிட்ட சொல்லாம என்னைத் தேடி கிளம்பி வந்துட்டா..”

 

“இவ்வளவு விவரம் தெரிஞ்சும் எப்படி மச்சான் அவர் தங்கச்சியை லவ் செஞ்ச..?!” என்ற முகுந்த்தின் குரலில் கேலி மட்டுமல்ல நிஜமறியும் ஆவலும் இருந்தது.

 

“லவ் இதெல்லாம் பார்த்தா முகுந்த் வரும்.. ஆனாலும் நான் எல்லாமே யோசிச்சு தான் கடைசி வரை என் மனசை வியாகிட்ட சொல்லவே இல்லை.. ஆனா திடீர்னு என்னைத் தேடி என்னை நம்பி அவ்வளவு தூரம் வந்து நின்றவளை என்னால மறுக்கவோ திருப்பி அனுப்பவோ முடியாது முகுந்த்.. ஏன்னா அவகிட்ட சொல்லலையே தவிர, மனசு முழுக்க அவ தான் இருந்தா.. இங்கேயே இருந்தா அவ கண்ணு முன்னே வரும் ஒவ்வொரு முறையும் என் மனசை கட்டுபடுத்த ரொம்பவே போராட வேண்டி இருக்குன்னு தான் வந்த வாய்ப்பை தவறவிடாம அந்த வேலையில் போய்ச் சேர்ந்தேன்.. ஆனா நீ வார்த்தையில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை உன் மனசு எனக்குத் தெரியும்னு வியா வந்து நின்னப்போ அதிர்ச்சியையும் மீறி எதையோ சாதிச்ச உணர்வு தான் அதிகமா இருந்தது..” என்ற நீண்ட விளக்கம் அளித்தவனின் மனதை ஒரு காதல்வயபட்டவனாக முகுந்தால் நன்றாகவே புரிந்து கொள்ள முடிந்தது.

 

“இவ்வளவு காதல் கொண்டு உன்னைத் தேடி வந்தவங்ககிட்ட சொல்லாம அங்கே போகணும்னு நினைக்கறீயே அது உனக்கே சரின்னு படுதா சூர்யா... நாளைக்கு இதனால உனக்கு ஏதாவது ஆச்சுனா அவங்களுக்கு யார் பதில் சொல்றது.. எதுவா இருந்தாலும் உன் வொய்ப் சம்மதம் இல்லாம செய்ய வேண்டாம் மச்சான்.. அது நல்லதாவே இருந்தாலும் அவங்களுக்குச் சொல்லிடு.. நீ இப்போ வர்ஷாவை பத்தி மட்டுமில்லை அவங்களைப் பத்தியும் யோசிக்கணும்..” என சூர்யாவின் தோளில் கை போட்டு தட்டி கொடுத்தவாறே கூறினான் முகுந்த்.

 

இதையெல்லாம் பேசியபடியே இருவரும் வெளியே வந்து முகுந்தின் காரை நெருங்கவும், காவ்யாவிடமிருந்து சூர்யாவுக்கு அழைப்பு வந்தது. முகுந்தை திரும்பி பார்த்தவன், ஒரு தயக்கத்தோடே அதை எடுக்கவும் “எங்கே.. எங்கே.. இருக்கீங்க சூர்யா..?” என்று அழுகையோடு ஒலித்தது காவ்யாவின் குரல்.

 

***********

 

அழகிய சிகப்பு வண்ண சேலையில் தேவதை போல் தயாராகி வந்த அம்ருவை கல்லோ மண்ணோ என்பது போல் மட்டுமே பார்த்து வைத்த ஷௌர்யா அவளோடு சேர்ந்து அனைவரும் கூடி இருந்த இடத்திற்குள் நுழைந்தான்.

 

அங்கு மெஹெந்தி நடந்து கொண்டிருக்கப் பெண்கள் எல்லாம் முழங்கை வரை மருதாணி இட்டுக் கொண்டு வளைய வந்து கொண்டிருந்தனர். மிசஸ் ஜெயின் ஷௌர்யாவை கண்டதும் புன்னகையோடு முன் வந்து வரவேற்று அழைத்துச் சென்று அமர வைத்தார்.

 

பின் அம்ருவை மெஹெந்தி இட்டுக் கொள்ள அவர் வந்து அழைக்க.. அவளோ தயங்கி சிரித்து “தனக்கு அது ஒத்துக் கொள்ளாது..” என்று மறுத்தாள். அதை ஏற்றுக் கொண்டு அவரும் விலகிவிடவே.. அங்கிருந்த பெண்கள் குழு கொஞ்சம் கொஞ்சமாக அம்ருவை நெருங்கி பேச தொடங்கியது.

 

அவர்களின் கேள்விக்கெல்லாம் ஷௌர்யா மற்றவர்களிடம் சொல்லிய பதிலை நினைவு வைத்தே அதே போல் பேசி சமாளித்துக் கொண்டிருந்தாள் அம்ரு.

 

மெல்லிய குரலிலேயே அம்ரு பதிலளித்துக் கொண்டிருந்ததும் அருகிலேயே ஷௌர்யா அமர்ந்திருந்ததும் அவர்களுக்குச் சற்றுச் சங்கடமாக இருக்க அவளை வேறு பக்கமாகக் கடத்தி செல்ல முயன்றனர்.

 

ஆனால் இவர்களின் பேச்சில் கவனம் இல்லாதது போல் அலைபேசியில் மூழி இருக்கும் பாவனையில் அமர்ந்திருந்த ஷௌர்யாவின் ஒரு கரத்தில் அம்ருவின் ஒரு கரம் அவளின் சேலை முந்தியின் மறைவில் சிறைபட்டிருந்தது அவர்களுக்குத் தெரியவில்லை பாவம்.

 

அவர்களின் அழைப்புக்கு தயங்கி ஷௌர்யாவை ஓர கண்ணால் பார்த்து விட்டு வரவில்லை என்பது போன்று அம்ரு தலையசைத்தது அவர்களுக்கெல்லாம் அவனை விட்டு விலகி வர தயங்குவதாகப் படவே, “ஹே புது மணத் தம்பதி பா.. காதல் ஜோடிகளைப் பிரிக்கப் பார்க்கறீங்க..” என்று கேலி செய்து அவர்களுக்குள்ளாகவே சிரித்துக் கொண்டனர்.

 

அதில் கலந்து கொள்ளாமல் அம்ரு தலை குனிந்து கொண்டது அவர்களுக்கு வெட்கமாகப் படவே அதையும் கேலி செய்து சிரித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்து சேர்ந்தார் பட்டேலின் மனைவி ரூபல்.

 

ஷௌர்யாவின் திருமண விஷயம் கேள்வி பட்டதிலிருந்தே அனைவருக்கும் ஒரு ஆர்வம் ஏற்பட்டு இருந்தது. அது இன்று அவன் மனைவியோடு வந்து கலந்து கொண்டிருக்கிறான் என்பதை அறிந்த பின் பல மடங்காக உயர்ந்து அவளோடு பேசி பழகி நட்பை ஏற்படுத்திக் கொள்ளும் ஆவலாக மாறி இருந்தது.

 

இங்குப் பல தொழிலதிபர்களின் வீட்டு பெண்களுக்குள் ஒரு நல்ல நட்பு வெகு நாளாகவே உருவாகி இருந்தது. அடிக்கடி இல்லை என்றாலும் சந்திக்கும் சந்தர்பங்களில் எல்லாம் சந்தோஷமாகப் பேசி பழகி என்று கொண்டாடி மகிழ்வார்கள்.

 

இதில் இதுவரை ஷௌர்யாவின் குடும்பத்தினர் என்று யாரும் பங்கேற்றது இல்லை. அவன் எப்போதுமே தொழில் வேறு குடும்பம் வேறு என்பதில் உறுதியாக இருப்பவன், இப்போது அதைக் கடந்து அவன் மனைவியோடு வந்து இருப்பதால் இந்தச் சந்தர்பத்தைப் பயன்படுத்தி ஷௌர்யாவின் குடும்பத்தோடு நட்புறவு ஏற்படுத்திக் கொள்ள அனைவரிடமும் ஒரு ஆர்வம் இருந்தது.

 

இதையெல்லாம் சற்று தள்ளி கை முழுக்க மெஹந்தியோடு அமர்ந்திருந்த ஜாஷா வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். இவர்களோடெல்லாம் நட்புக் கொண்டாட ஜாஷா எத்தனையோ முறை முயன்று இருக்கிறாள். ஆரம்பத்தில் நன்றாகவே பழகியவர்கள் தான் என்றாலும் எப்போதும் அவளிடம் வெளிப்படும் அதீத அலட்டல் பேச்சும் ஆடம்பர பிரியமும் அவர்களை நெருக்கமாகப் பழக விடாமல் சற்று தள்ளியே நிற்க செய்து இருந்தது.

 

அதற்காக யாரும் ஜாஷாவோடு பேசாமல் எல்லாம் இருப்பதில்லை. சுருக்கமான பேச்சோடு முடித்துக் கொண்டு நகர்ந்து விடுவர். இன்றும் இப்படித் தான் செய்திருந்தனர். தானாகச் சென்று பேசிய போதும் விலகி செல்பவர்கள் எல்லாம் இன்று அம்ருவை தேடி சென்று பேசி கொண்டு இருப்பது அவளின் காதில் புகையை வர வைத்தது.

 

“இந்த மரியாதை எல்லாம் அந்த மேனாமினுக்கிக்கா.. எல்லாம் வர்மா பொண்டாட்டின்னு தான்.. இதுக்குத் தானே நான் ஆசைப்பட்டேன்.. இல்லைனா அந்தச் சிடு மூஞ்சு பின்னே சுத்தணும்னு எனக்கு என்ன வேண்டுதலா..!!” என்று புலம்பியவள், அம்ருவை முறைக்கத் துவங்கினாள்.

 

“மிசஸ் வர்மா.. உங்களை நான் எங்கேயோ பார்த்து இருக்கேன்.. ரொம்பப் பரிச்சயமான முகமா இருக்கு..” என்று ரூபல் சொல்லவும், அவரை நிமிர்ந்து பார்த்த அம்ருவுக்கு அவரை எங்கும் பார்த்ததாக நினைவே இல்லை.

 

“நீங்க என்னை எங்கேயாவது பார்த்து இருக்கீங்களா..?! உங்களுக்கு நியாபகம் வருதா..?!” என்று அவர் கேட்டதும் யோசனை எதுவும் இல்லாமல் மறுப்பாகத் தலை அசைத்தாள் அம்ரு.

 

“ஓ.. ஆனா நான் உங்களை நிச்சயமா எங்கேயோ பார்த்து இருக்கேன்.. இந்த முகம் மறக்க முடியாத முகமா எனக்குத் தோணுது..” என்று யோசனையான முகபாவத்தோடே அம்ருவை உற்று நோக்கியவாறே பேசிக் கொண்டிருந்தவர், “யாஹூ..” என்று திடீரெனக் கையை மடக்கி துள்ளி குதித்து “நீங்க.. நீங்க.. அமிர்தவர்ஷினி தானே.. போன வருஷம் காலேஜில் நடந்த இண்டர்காலேஜ் காம்படிஷன்ல டான்ஸ்க்குப் பர்ஸ்ட் பிரைஸ் வாங்கினீங்க.. அம் ஐ ரைட்..” என்றார்.

 

அவர் சொல்ல சொல்ல சிறு ஆச்சர்யத்தோடு பார்த்துக் கொண்டிருந்தவளின் தலை ரூபல் பேசி முடித்த அடுத்த நொடி சம்மதமாக ஆடியது. அதில் ஒரு முறை நிமிர்ந்து அம்ருவை பார்த்த ஷௌர்யா மீண்டும் தன் அலைபேசியில் மூழ்கி போனான்.

 

அம்ரு சென்ற வருடமே கல்லூரியை முடித்து இருப்பவள் என்பது அவனுக்குப் புதுத் தகவல். இதற்கு முன்பும் அவளைப் பற்றி எதுவும் அவனுக்குத் தெரியாது.. அவளை மணம் முடித்த பின்னும் தெரிந்து கொள்ள அவன் எண்ணவில்லை.

 

“எஸ்.. எஸ்.. எஸ்..” என உற்சாக மிகுதியில் சிறு பிள்ளை போலக் குதித்தவர், “அதான் சொன்னேனே.. மறக்க முடியாம பதிஞ்சு போன முகம்னு.. அன்னைக்கு என்னால் உங்க கூடப் பேச முடியலை.. வாவ் என்ன அழகா ஆடினீங்க.. அந்த நளினமும் உங்க முகப் பாவமும் ஒரு பீட் கூட விடாம நீங்க ஆடின அந்தச் சிவ தாண்டவம்... அப்பப்பா.. இப்போ சொல்லும் போதும் பாருங்க கூஸ்பம்ப்ஸ்..” என்று சிலாகித்துப் பாராட்டி கொண்டிருந்தார் ரூபல்.

 

அதில் இத்தனை பேரின் முன்பு பாராட்டபடவே சங்கடமாக நெளிந்தவள், மெல்லிய குரலில் நன்றியை தெரிவித்தாள். “அன்னைக்கு என் பொண்ணு அங்கே வயலின் பிளே செஞ்சா.. அதுக்காக நாங்க வந்து இருந்தோம்.. பக்கத்து ரூம்ல தான் அவ பர்பார்மென்ஸ், அதையும் கடந்து அந்தப் பாட்டும் அதுக்கு ஆடியன்ஸ் இடையே எழுந்த கூச்சலும் தான் என்னை உங்க ஹாலுக்கு இழுத்து வந்தது.. வழக்கமா என் பொண்ணு பர்பார்ம் செஞ்சு முடிக்கற வரை எங்கேயும் அசைய மாட்டேன்.. அன்னைக்கு நல்லவேளை எல்லாம் ஒன்ஸ் மோர் கேட்டாங்க.. இல்லைனா உங்க அற்புதமான டான்ஸை முழுசா பார்க்க முடியாம போய் இருக்கும்.. உங்களைப் பார்த்து பாராட்ட நினைச்சேன்.. ஆனா டைம் அமையலை.. அதான் இப்போ சொல்றேன், எப்பவும் இப்படியே ஆடி எல்லாரையும் மெய் மறக்க செய்யணும் நீங்க.. இதெல்லாம் அத்தனை சீக்கிரம் எல்லாருக்கும் வந்துடாது.. உங்களுக்கு அந்தக் கலைவாணி அருள் இருக்கு.. இன்னைக்கும் அந்தத் தாண்டவம் என் கண்ணுலேயே இருக்கு..” என்று புகழ்ந்து தள்ளி விட்டார் ரூபல்.

 

அன்றே அந்த டான்ஸிற்குப் பின் அங்கிருந்தவர்களின் பாராட்டு மழையில் போதுமானவரை அம்ரு நனைந்து இருந்தாலும் இன்று பல்வேறு மன வலியிலும் தனிமையிலும் அவள் உழன்று கொண்டிருக்கும் இந்நிலையில் இந்த வார்த்தைகள் அம்ருவை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.

 

மீண்டும் மீண்டும் சிறு புன்னகையோடு நன்றி தெரிவித்தவளுக்குத் தன் அருகில் இருப்பவனை எண்ணி சந்தோஷத்தை கூட வெளிபடுத்தத் தயக்கமாக இருந்தது.

 

ரூபல் சொல்லியதை கேட்டு ஆர்வமான மற்றவர்கள் அதைப் பற்றி விசாரித்து அறிந்து கொண்டு அம்ருவை பாராட்டியதோடு இப்போது ஆடவும் சொல்லி வற்புறுத்த தொடங்கினர்.

 

ஆனால் அவளின் ஒரு கை சிறை பட்டிருந்ததில் இருந்த அழுத்தமே அவளைச் சரி எனச் சொல்ல விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது. அம்ருவும் முடியாது என்று நேரிடையாகச் சொல்லாமல் எப்படி எப்படியோ பேசி சமாளித்துக் கொண்டிருக்க.. அவர்களோ விடாமல் கேட்டுக் கொண்டே இருந்தனர்.

 

இதையெல்லாம் சற்று தள்ளி அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த ஜாஷா கடுப்பின் உச்சத்தில் இருந்தாள். ‘ஆமா இந்த அம்மா பெரிய நாட்டிய பேரொளி பத்மினி.. எல்லாம் ஆடு ஆடுன்னு கெஞ்சறதும் அந்தம்மா மிஞ்சறதும் ஹப்பப்பா.. முடியலைடா சாமி.. ஏதோ பொண்ணுங்களைப் பார்த்தாலே ஏலியன் போல அவங்களைப் பார்த்து முகத்தைத் திருப்பிட்டு போறவன், இப்படிச் சுத்திலும் கோபியர் உட்கார்ந்து இருக்க மாயக் கண்ணன் போல எப்படி உட்கார்ந்து இருக்கான் பாரு.. எல்லாம் இவ மயக்கம்.. அப்படி என்ன சொக்கு போடி போட்டாளோ..!!’ என மனதிற்குள் கொதித்துக் கொண்டிருந்தாள். (அட ஏன் மா.. நீ வேற..?! அங்கே நடக்கறது தெரியாம..!!)

 

அதே நேரம் அங்கு வந்த மிசஸ் ஜெயின் விஷயம் அறிந்து அவரும் அம்ருவை ஆட சொல்ல.. ஓரளவுக்கு மேல் மறுப்பது இத்தனை பேரின் முன்பு மரியாதையாக இருக்காது எனப் புரிந்து வெட்கத்தோடு தலை குனிபவள் போல் அமர்ந்திருந்தவளின் தவிப்பான உடல் மொழி அவளின் கரத்தை தன் ஆளுமையின் கீழ் வைத்திருந்தவனுக்கு நன்றாகவே புரிந்தாலும் ஷௌர்யா கொஞ்சமும் அசைந்தானில்லை.

 

இதைக் கண்டு மேலும் கடுப்பாகி விறுவிறுவென எழுந்து வந்த ஜாஷா, “அந்த டைம் அவங்களுக்கு யாராவது சொல்லி கொடுத்து இருப்பாங்க ஆண்டி.. பாவம் இப்போ மறந்து போய் இருக்கும் இல்லை.. அதுமட்டுமில்லை அவங்க இங்கே நம்மளை மாதிரி இது போல எல்லாம் பார்த்து பழகி இருக்க மாட்டாங்க இல்லை, அதான் ஷையா பீல் செய்யறாங்களோ என்னவோ..!! வாங்க நாம எல்லாம் சேர்ந்து நம்ம சர்க்கிளில் எப்படி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமா பழகணும்னு ஒரு டெமோ காட்டலாம்.. அவங்க அதைப் பார்த்துக் கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கட்டும்..” என்று அம்ருவுக்கு ஆதரவாகப் பேசுவது போலவே தேன் தடவிய வார்த்தைகளில் அவளை மட்டம் தட்ட முயன்றாள்.

 

இதில் அங்கிருந்த பலருக்கு ஜாஷாவின் மேல் கோபம் எழுந்தது. ஆனால் அம்ருவோ அதற்கும் கூடப் பெரிதாக எதிர்வினை ஆற்றாமல் ஒரு சிறு மென்னகையோடே தலை குனிந்து இருந்தாள்.

 

அங்கிருந்த இளம் பெண்களில் சிலர் ஜாஷாவின் இந்தத் தேவையற்ற வார்த்தைகளைப் பிடிக்காமல் திரும்பக் கொடுக்க முயல, அதே நேரம் அம்ருவின் சிறை பட்டிருந்த கரம் ஷௌர்யாவால் விடுவிக்கப்பட்டது. இதை நம்ப முடியாமல் அம்ரு திகைப்போடு திரும்பி ஷௌர்யாவை பார்க்க.. அவனோ தலையைக் கூட நிமிர்த்தவில்லை.

 

ஆனாலும் இவ்வளவு நேரம் பிடித்திருந்த கரம் விடுவிக்கபட்டதின் காரணம் புரியவும், அப்பெண்கள் பேசுவதற்கு முன் எழுந்து நின்றவள், “இங்கே கல்யாணத்தில் ஆடறது போலப் பாட்டு அது இல்ல.. கொஞ்சம் எமோஷனல் சாங், அதான் யோசிச்சேன் ஆண்டி.. மத்தப்படி எனக்கு ஆடுவதில் எந்தத் தயக்கமும் இல்லை..” என்றாள்.

 

“வாவ்.. சூப்பர், இங்கே நாம சந்தோஷமா கொண்டாட தான் வந்து இருக்கோம் டா.. அது எப்படிக் கொண்டாடினா என்ன..?! உனக்குள் இப்படி ஒரு திறமை இருக்குன்னு எல்லாரும் பாராட்டும் போது நாங்களும் பார்க்க ஆசையா இருக்கு.. ஆடுடா.. என்ன பாட்டுன்னு சொல்லு, டிஜேவை போட சொல்றேன்..” என்றார் மிசஸ் ஜெயின்.

 

அதற்கு அம்ரு பதிலளிப்பதற்குள் “ஜடாடவி கலஜ்ஜல பிரவாஹபாவிதஸ்தலே..” எனச் சொல்லி இருந்தான் ஷௌர்யா. இதில் அம்ரு தான் நிஜமான அதிர்வோடு அவனைத் திரும்பி பார்த்து விழி விரித்தாள்.

 

இவர்கள் இங்குப் பேசிக் கொண்டிருந்த அந்த இடைவெளிக்குள் ரூபல் தன் மகள் பற்றிச் சொல்லி இருந்த ஒரே ஒரு தகவலை கொண்டு மற்ற அத்தனை விவரங்களையும் உள்ளங்கையில் அடங்கி இருந்த உலகத்தின் வழியே திரட்டி இருந்தான் ஷௌர்யா.

 

மற்றவர்களின் பார்வைக்குக் காதல் மனைவியைப் பற்றி அனைத்தையும் அறிந்த ஒரு கணவனாகவே ஷௌர்யா தெரிய.. இதை யாருமே பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. ஆனால் அம்ருவுக்கோ இது பெரும் திகைப்பையும் அதைவிட அதிகமான கேள்விகளையும் எழுப்பி இருந்தது.

 

அவளின் பார்வையை வேறு விதமாக எடுத்துக் கொண்ட அப்பெண்கள், “பாபி.. எஸ்வி பய்யா உங்க பிராபர்ட்டி தான்.. பொறுமையா எப்போ வேணாலும் சைட் அடிச்சுக்கோங்க.. இப்போ எல்லாரும் அங்கே உங்களுக்காக வெயிடிங் வாங்க..” என இழுத்து சென்றனர்.

 

அழகாக அதற்குள் அம்ரு ஆட ஏதுவாக நடுவில் இடம் விட்டு சுற்றிலும் அமர்ந்து பார்ப்பது போல் ஏற்பாடு செய்து விட்டார் மிசஸ் ஜெயின். நடுநாயகமாக வந்து நின்றவள், ஷௌர்யாவை ஏறிட்டு பார்க்க.. அவளுக்கு நேரெதிரே கால் மேல் கால் போட்டுக் கம்பீரமான தோரணையில் அமர்ந்து இருந்தவன், விழிகளை மூடி திறந்து அனுமதியளித்தான்.

 

தனியாக இருக்கும் இளம் பெண்ணுக்கு இச்சமூகத்தில் ஏற்படும் இன்னல்களையே கருவாகக் கொண்டு அம்ரு தன்னைச் சுற்றி பலர் நின்று சீண்டுவது போலவும், வம்பு செய்வது போலவும், அத்து மீறுவது போலவும், யாருமற்ற சுற்றுபுறத்தில் ஆட்கள் இருந்து இருந்தால் எப்படி அதை உடல் அசைவின் எதிர்ப்பிலும் முகச் சுழிப்பிலும் ஒதுங்கி செல்ல முயல்வதிலும் செய்வாளோ அப்படிப் பாடல் துவங்குவதற்கு முன் ஒலிக்கும் சில நொடி இசையிலேயே நடித்துக் காண்பித்தவள்,

 

பாடல் துவங்கவும் இம்மாதிரி தருணங்களில் எவ்வாறு பொறுத்து போகவோ பிறர் உதவியை நாடவோ செய்யாமல் தானாக எதிர் கொண்டு அவர்களை அடித்துச் சாய்க்க வேண்டும் என்று ஆட துவங்கினாள்.

 

ஜடாடவி கலஜ்ஜல பிரவாஹபாவிதஸ்தலே

கலேவலம்பிய லம்பிதாம் புஜங்கதுங்கமாலிகாம்

டமட் டமட் டமட்தமன்னி நாதவட்டமர்வயம்

சகார சந்த்ததாண்டவம் தனோத்து ந சிவ சிவம்

முதலில் தன்னைச் சுற்றி இருப்பவர்களை வீருக் கொண்டு எழுந்து ஒவ்வொருவராக அடித்து வீழ்த்தி முன்னேறுவது போலவும் அதைத் தடுக்க முயல்வது போலத் தன்னை நோக்கி முன்னேறுபவர்களைப் பார்வையாலேயே எரித்து பயந்து பின் வாங்க செய்வது போலவும் அழகிய அசைவுகளுடன் ஆட துவங்கியவள்,

 

ஜடா கடாஹ சம்பிரம பிரமணிலிம்பனிர்ஜரி

விலோலவிச்சிவல்லரி விராஜமானமுர்தனி

தகதகதக ஜ்வலல்லாட பட்டபாவகே

கிஷோரா சந்திரசேகரே ரதிஹ் பிரதிஷணம் மமா

 

இறுதியாகத் தன்னிடம் அத்துமீற முயன்றவனை ருத்ர தாண்டவம் ஆடியவாறே தன் காலடியில் போட்டுக் கையில் சூலாயுதத்தை உயர்த்தி பிடித்து முழு வேகத்தில் இறக்குவது போல் முடிந்தது பாடல்.

 

சிகப்பு நிற சேலையில் முடி விரித்து விடப்பட்டு விழி விரிய நாக்கு வெளியில் நீண்டு இருக்க.. அவள் சுற்றி சுழன்று ஆக்ரோஷமாக ஆடி முடித்த போது சுற்றி இருந்தவர்கள் எல்லாம் ஒரு அசைவற்ற நிலையிலேயே பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

சற்று நேரத்துக்கு முன்பு வரை அழகிய டிசைனர் சேலையில் மாடர்ன் உடையாகவும் அழகிய தலை அலங்காரமாகவும் தெரிந்த ஒன்றே இப்போது காளியின் அவதாரமாக மற்றவர்களின் கண்களுக்குத் தெரிந்தது. அந்த அளவிற்கு மேடையோ அதற்கான அலங்காரமோ உபகரணங்களோ எதுவும் தேவைபடாமல் தன்னை மட்டும் நம்பி அம்ரு அரங்கேற்றி இருந்த நடனம் அங்கிருந்தவர்களை மெய் மறக்க செய்து இருந்தது.

 

ரூபல் சொன்னது போல் தான் கூஸ்பம்ப்ஸ்ஸோடு பலரும் அமர்ந்து இருந்தனர். அதன் பின் தொடர் பாராட்டு மழையிலும் வாழ்த்து மழையிலும் நனைந்து கொண்டிருந்தாள் அம்ரு. ஆனால் ஆடுவதற்கு மட்டுமே விடுதலை கொடுத்தவன் போல் அதன் பின் அவளை மீண்டும் தன் கை வளைவிற்குள் கொண்டு வந்து இருந்தான் ஷௌர்யா.

 

இந்த முறை இன்னும் நெருக்கமாக மற்றவர்களின் முன் நிற்பது போன்ற தோற்றத்தில் அம்ருவின் இடையில் உரிமையாகக் கரம் பதித்துத் தன்னோடு சேர்த்து அணைத்தது போலவே நின்றிருந்தான் ஷௌர்யா.

 

அவனின் இந்த அளவுக்கு அதிகமான நெருக்கமும் தொடுகையும் அம்ருவை இயல்பாக இருக்கவிடாமல் செய்திருக்க.. நெளிந்து கொண்டே நின்றவளால் அதை அவளின் முகத்தில் கூடக் காண்பிக்காமல் இருக்க வேண்டிய கட்டாயம் வேறு.

 

அனைவரிடமும் புன்னகை முகமாகவே பதிலளித்துக் கொண்டிருந்தவள், உள்ளுக்குள் இயல்பாக இல்லை என்பது ஷௌர்யாவுக்கு மட்டுமே தெரிந்தது. அவளுக்கு இந்த தொடுகையும் நெருக்கமும் பிடிக்கவில்லை என்பது புரிந்ததில் அதுவே அனைத்தும் முடிந்து அறைக்குத் திரும்பும் வரை ஷௌர்யாவுக்கு அம்ருவை அதே நெருக்கத்தில் வைத்திருக்கச் செய்தது.

 

அறைக்குத் திரும்பிய பிறகும் வழக்கம் போல உடனே உதறி தள்ளி விலகாதவனை அம்ரு கேள்வியாகப் பார்க்க.. “இன்னைக்குத் தான் ஒரு விஷயம் கவனிச்சேன்.. நான் தொட்டா உனக்குப் பிடிக்கலை..” என்று அவளின் முகத்தைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே கூறியவன், சிறு இடைவெளிவிட்டான்.

என்ன சொல்ல வருகிறான் எனப் புரியாமல் அம்ரு பார்த்திருக்க.. “இந்தச் சினிமால எல்லாம் சொல்லுவாங்களே அப்படிக் கம்பளிபூச்சி ஊருவது போல இருக்கா..?!” என்றவன், அவளை ஏளன பார்வையோடு இன்னும் நெருங்கி, “அப்போ இனி கம்பளி பூச்சி மட்டுமில்லை பூரான், பல்லி, எல்லாம் ஊரும்.. கெட் ரெடி மை போண்டா டீ..” என்றதும் திக்கித்துப் போனாள் அம்ரு.

 

இதுவரை இப்படி ஒன்றை பற்றி யோசித்தே இல்லாதவள் என்பதால் சற்று அதிகமாகவே திகைத்து போயிருந்தாள் அம்ரு. இதுவரை இப்படி எதற்கும் பெரிதாக எதிர்வினை ஆற்றாதவளின் இந்தப் பயத்தோடான திகைப்பும் விழி விரிப்பும் ஷௌர்யாவுக்கு ஒரு சுவாரஸ்யத்தைக் கொடுத்தது.

 

“எங்கே இனி ஊற போற கம்பளி பூச்சிக்கு எல்லாம் உன் சிவ தாண்டவத்தையும் காளி அவதாரத்தையும் என்கிட்ட காட்டு பார்க்கலாம்..!!” என்று கேலியாக இதழ் வளைத்து அம்ருவை சீண்டினான் ஷௌர்யா.

தொடரும்..
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா 

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 month ago
Posts: 104
Topic starter  

ஹாய் டியர்ஸ்

"உன்னை அமுதவிஷமென்பதா..!!" கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

UAV - 14 & 15

https://kavichandranovels.com/community/comments-and-discussions/%e0%ae%89%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%85%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%ae%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%be-comment-thread/

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா

This post was modified 1 week ago by Kavi Chandra

   
ReplyQuote
Page 2 / 3

You cannot copy content of this page