வர்ணம் - 23
அனுமந்தை இபி சப் ஸ்டேஷன்
EB ஆபீஸ் காம்பவுண்டுக்கு வெளியே பைக்கை நிறுத்திவிட்டு ரிஷாந்த், ஆபீஸ்க்குள் நுழைந்தான். ஆபீசுக்கு வெளியே பரபரப்பாக தெரிந்த தலைகளை விட்டு விட்டு... வெட்டியாக ஏதாவது தலைகள் தெரிகிறதா என்று பார்த்தான். 60% வழுக்கையான தலை ஒன்று வெட்டியாக, யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்தது. அவனை நெருங்கி, அனுமந்தை கிரசன்ட் தெரு இபி லைன் யார் பார்க்கிறா என்று விசாரித்தான்.
"ஒரு நிமிஷம் லைன்ல இரு சரவணா.... நம்ம ஆரோக்கியராஜி தான் பாக்குறாப்படி... உள்ள JE கூட பேசிட்டு இருக்காரு. இப்ப வருவாரு.", என்றான். சொல்லிவிட்டு, மறுபடியும் போனில் சுவாரஸ்யமாக பேச ஆரம்பித்தான்.
ரிஷாந்த் ஆபிசுக்கு வெளியவே வெயிட் பண்ணி கொண்டிருந்தான்.
ஈபி பில் கட்ட வருபவர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. வேலை எதுவுமே இல்லை என்றாலும், பாதி பேர் பரபரப்பாக வந்தார்கள், போனார்கள்.
கொஞ்ச நேரத்தில்,
"இதோ வர்றாரே அவருதான்...", என்று கை நீட்டி ஆளை காண்பித்தான், போனில் பேசிக் கொண்டிருந்தவன்.
ரிஷாந்த் ஆளைப் பார்க்க, வத்தலாக ஒருவன் வந்தான். பேரில் மட்டும் தான் ஆரோக்கியராஜ்க்கு ஆரோக்கியம் இருந்தது.
ரிஷாந்த் அவனிடம்,
"சார் உங்ககிட்ட கொஞ்சம் தனியா ஒரு விஷயம் பேசணும்..."
காம்பவுண்ட் ஓரமாக, வேப்பமரத்தடியை நோக்கி இருவரும் சென்றார்கள்.
"சொல்லுங்க... எனக்கு வேலை இருக்கு" என்றான் ஆரோக்கியராஜ், கவர்மெண்ட் எம்பிளாய்சுக்கே உரிய எரிச்சலுடன்.
"அனுமந்தை தாண்டி, ஈசிஆர் ரோட்ல, கிரசன்ட் தெருவில் இருக்கிற பண்ணை வீட்லருந்து ஈபி ஆபிஸ்க்கு யாராவது கால் பண்ணாங்கன்னா, எனக்கு கால் பண்ணி, நீங்க தகவல் தெரியப்படுத்தனும். அதுக்கு என்ன ஃபார்மாலிட்டி நீங்க எதிர்பார்க்கிறீர்களோ, உங்களுக்கு நான் செஞ்சிடறேன் ...", என்று சொல்லிவிட்டு பாக்கெட்டில் பணத்தை எடுப்பதற்காக கையை வைத்தான்.
ஆரோக்கியராஜ்: புரியல... அவங்க வீட்டிலிருந்து எதுக்கு ஈபி ஆபிஸ்க்கு கால் பண்ண போறாங்க?
ரிஷாந்த்: கரண்ட் கட்டாயி ரொம்ப நேரம் வரலன்னா, கால் பண்ணுவாங்க இல்லையா? அப்படி பண்ணாங்கன்னா இன்பார்ம் பண்ண முடியுமா?
ஆரோக்கியராஜ் கோவமாக, "யார் நீங்க??? என்ன நினைச்சுட்டு இருக்கீங்க??? அவங்க வீட்லருந்து ஈபி ஆபீசுக்கு கால் பண்ணா, உங்களுக்கு நான் எதுக்கு தகவல் சொல்லணும்?"
ரிஷாந்த்: அதுக்கு இல்லண்ணா.... ஒருத்தருக்கு உதவி செய்வதற்காக தான் கேட்கிறேன். என்ன விஷயம்னு முழுசா கேளுங்க... உங்களுக்கு கேட்கிற பொறுமை இருந்தா நான் நிச்சயமா சொல்றேன். அதுக்கப்புறம் சொல்லுங்க. சும்மா செய்ய வேண்டாம். நீங்க கேக்குறத நான் பண்றேன்.
ஆரோக்கியராஜ் ரிஷாந்த்தை மேலும் கீழுமாக பார்த்தான்: பணம் கொடுத்துட்டா, எதையும் சாதிச்சிடலாம்னு நினைப்பா?
என்ன விஷயமா இருந்தாலும், EB ரூல்ஸ்க்கு புறம்பா நடக்க மாட்டேன்.
வத்தல் கணக்கா இருந்துட்டு ரூல்ஸ் பேசுறானே என்று ரிஷாந்த் கடுப்பாக,
"ரூல்ஸ்க்கு புறம்பா இதுல என்ன இருக்கு? அவங்க வீட்டிலிருந்து கால் வந்துச்சுனா எனக்கு தெரியப்படுத்துங்கன்னு சொல்றேன். அது மட்டும் போதும்.
ஆரோக்கியராஜ்: நான்தான் முடியாதுன்னு சொல்லிட்டேனே. தேவையில்லாம சும்மா தொந்தரவு பண்ணிட்டு இருந்தீங்கன்னா, போலீசுக்கு போன் பண்ணுவேன்.
ஜானி: ஸ்டாப்... ஸ்டாப்...ஸ்டாப் இது தேறாது. திரும்ப வந்துரு.
ஆரோக்கியராஜிடம் ஏதோ பேசப்போன ரிஷாந்த், ஓவர்லாப்பில் ஜானியின் வாய்ஸ் கேட்டு, பேச்சை நிறுத்தினான். சீன் freeze ஆனது.
32 X இல் ஃபாஸ்ட் பேக்வேர்ட் செய்த வீடியோ டேப் போல், பின்பக்கமாக செல்ல, ரிஷாந்த் பின்பக்கமாக வேகமாக நடந்தான்.
இபி ஆபிஸை விட்டு, பின்பக்கமாக நடந்தபடி வெளியே வந்தான். பைக்ல ஏறினான், பைக்கை பேக்வேர்ட்சில் ஓட்டி சென்றான்.
ஜானி முன்னால் வந்து நின்றான்.
ஜானி: அந்த சீன் வேண்டாம், டெலிட் பண்ணிடலாம். இப்படியே போய் பேசினா... நிச்சயமா EB காரன் ஓவரா பேசுவான். அதனால வேற ஐடியா பண்ணலாம்.
ரிஷாந்த்துக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை.
ஜானி: ஒண்ணுமில்ல....அது என்னோட இமேஜினேஷன். Forget it.
ரிஷாந்த்: வேற என்ன பாஸ் பண்றது?
ஜானி: என்ன பண்றது? சாமி தான் கண்ண தொறக்கணும்.
மொபைல் ஆஸ்பத்திரி கடையில், கஸ்டமர் யாரும் இல்லாமல், தூங்கிக் கொண்டிருந்த சாமி கண்ணை திறந்தான்.
அவன் போன் அடித்துக் கொண்டிருந்தது. கால் ஃபிரம் ஜானி, எடுத்துப் பேசினான்.
ஒரு மணி நேரம் கழித்து,
வெறும் சாமி... சப்இன்ஸ்பெக்டர் ஆறுசாமியாக மாறி இருந்தான். ட்ராமா கம்பெனியிலிருந்து எடுத்து வந்த போலீஸ் டிரசை சாமி போட்டிருக்க, ஈபி ஆபீஸ் முன்னால் நின்றிருந்தான்.
போன் பேசிக் கொண்டிருந்தவன்: அதோ வர்றாரே, அவர்தான் சார் ஆரோக்கியராஜ்.
ஏற்கனவே ரிஷாந்த் பார்த்த... அதே காய போட்ட வத்தல்.
சாமி ஆரோக்கியராஜிடம், "உங்க கூட கொஞ்சம் தனியா பேசணும்..."
"பேசலாம் சார்... வாங்க."
இருவரும் வேப்பமரத்தடியில் ஒதுங்கினார்கள்.
"பாண்டியில் முதலியார் பேட்டை போலீஸ் ஸ்டேஷன் தெரியுமா?"
"தெரியாது சார்.."
"அப்ப.... நான் அங்கருந்து தான் வரேன்..."
"சொல்லுங்க சார். என்ன வேணும்??"
"அனுமந்தை ஈசிஆர் ரோட்ல, கிரசென்ட் தெருவில் இருக்கிற பண்ணை வீட்ல, பாண்டிச்சேரி enforcement directorateல இருந்து ஆபிஸர்ஸ் ரெய்டு பண்ண போறாங்க. கிரசன்ட் கம்பெனிகாரங்க வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்து வச்சிருக்கிறதா கம்ப்ளைன்ட். அதனால போன் கனெக்சன், கரண்ட் கனெக்சன் எல்லாத்தையும் கட் பண்ணிடுவோம். உங்க ஆபீசுக்கு, கரண்ட் இல்லைன்னு கம்ப்ளைன்ட் எதுவும் வந்துச்சுன்னா... நீங்க எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். எனக்கு தகவல் மட்டும் தெரிவியுங்கள் போதும்..."
வருமான வரி சோதனை என்றால், கரண்ட் கனெக்சனை எதற்கு கட் செய்ய வேண்டும் என்று ஆரோக்கியராஜ்க்கு லேசாக சந்தேகம் தோன்ற....
ஆரோக்கியராஜ்: ஓகே சார்... ஆனால் எதுக்குன்னு புரியலையே.
சாமி அவனை விரைப்பாக ஒருமுறை பார்த்து விட்டு, கைமுஷ்டியை முறுக்கி கொண்டான்.
"அதிகாரிகள் எதுக்கோ செய்ய சொல்றாங்க. அதுக்கு காரணம் இருக்கும். அவங்களுக்கு பாதுகாப்பு, உதவியும் செய்ய வேண்டியது எங்களுடைய பொறுப்பு. அதனால தான், நானே வந்து நேரடியாக உங்க கிட்ட பேசுறேன். Raid முடிஞ்சதும், எல்லா கனெக்சனும் கொடுத்துருவாங்க, நீங்க கவலைப்பட வேண்டாம். நீங்க இதுக்கு உதவி பண்ணீங்கன்னா... வரக்கூடிய குடியரசு தின விழாவில் உங்களுக்கு மெடல் கிடைக்கும்... பேப்பர்ல போட்டோவும் வரும்."
ஆரோக்கியராஜ் உற்சாகமாக எஸ் சார் என்றான்.
சாமி: ஆனால் விஷயம் பரம ரகசியமா இருக்கணும். எந்த காரணத்தைக் கொண்டும் வெளியே கசிஞ்சிரக்கூடாது. புரியுதா??
ஆரோக்கியராஜ் yes sir என்று மறுபடியும் சொல்வதற்குள், ஓவர்லாப்பில் ஜானியின் குரல் கேட்டது.
"மறக்காம அவன் போன் நம்பரை வாங்கிட்டு, உன் போன் நம்பர் குடுத்துட்டு வா..."
சாமி மேல் பக்கமாக தலையை தூக்கி பார்த்து, சரிப்பா என்றான்
ஆரோக்கியராஜ்,"யாருகிட்ட சார் பேசுறீங்க?"
சாமி என்ன பதில் சொல்வதென்று யோசிக்க,
ஆரோக்கியராஜே பதில் சொல்லிக் கொண்டான்.
"ஓகே ஓகே... அதிகாரிகள் யாராவது ரகசிய மைக்ரோபோன்ல லைன்ல இருப்பாங்க... நாம பேசுறத கூட ஓட்டு கேட்டுட்டு இருக்கலாம். உங்களுக்கு வேலை இருக்கும். நீங்க கிளம்புங்க. நீங்க சொல்ற மாதிரியே பண்ணிறேன் சார்..."
சாமி: வெரி குட்...
சாமி அவன் போன் நம்பரை வாங்கிக்கொண்டு, அங்கிருந்து கிளம்பினான். வெளியே மெயின் ரோட்டுக்கு வந்தான். பைக்கில் ரிஷாந்த் காத்திருந்தான்.
அவனை நோக்கி வந்த சாமி, "எப்படி நம்ம ஆக்டிங்???", என்று கேட்க,
ரிஷாந்த்: இங்கருந்து பேச வேண்டாம். வீட்டுக்கு போயிடலாம் வாங்க.
இருவரும் ஐயர் வீட்டை நோக்கி கிளம்பினார்கள்.
வீட்டில் ஜானி அவர்களுக்காக காத்திருந்தான். இருவரும் நடந்த விஷயத்தை சொன்னார்கள்.
ரிஷாந்த்; கிரிதர் ஆபிசுக்கு கிளம்பிட்டானா?
ஜானி ஒரு மணி நேரத்துக்கு முன்னால தான், பண்ணை வீட்லருந்து ஒரு கார் போச்சு... உள்ள யார் இருந்தாங்கன்னு தெரியல. இப்பதான் லோகேஷ்க்கு போன் பண்ணி கேட்டேன். அவன் அங்க தான் இருக்கிறதா கன்ஃபார்ம் பண்ணினான்.
ரிஷாந்த்: அப்ப இதுதான் நல்ல டைம். வேலையை ஆரம்பிச்சிடலாம்.
ஜானி சாமியை பார்த்து,
"மெயின் ரோட்ல இருக்கிற டிரான்ஸ்பார்மரில் பியூஸ் கட்டையை புடுங்கிட்டு, மெயின் போஸ்ட்ல ஏறி, பண்ணை வீட்டுக்கு போற கரண்ட் கட் பண்ணி விடனும். நீ போஸ்ட் ஏறுவேன்னு தெரியும். அதனால தான் உன்னை கூப்பிட்டேன்..."
சாமிக்கு இப்போது தான் விஷயமே புரிந்தது.
"ஓஹோ!!! வெயிட் பண்ணி பார்ப்பாங்க. ரொம்ப நேரம் கரண்ட் வரலன்னா உடனே ஈபி ஆபிஸ்க்கு கால் பண்ணுவாங்க. அந்த வத்தல் நமக்கு கால் பண்ணி விஷயத்தை சொல்லுவான். சொன்னதும், நான் லைன் மேன் மாதிரி, வீட்டுக்குள்ள போகணும். அதானே.... அய்யய்யோ!!! நான் உள்ள போக மாட்டேன். எனக்கு பயமாருக்கு."
ஜானி: கவலைப்படாதடா!!! முதல்ல போஸ்ட்ல ஏறி செக் பண்ற மாதிரி நடி... . நாங்க ரெண்டு பேரும் வந்து உன்கிட்ட எதார்த்தமா பேச்சு கொடுப்போம். செக்யூரிட்டி பாக்குற வரைக்கும் ஆக்டிங்கை போடுவோம். போஸ்ட்ல பிரச்சனை இல்ல, வீட்ல தான் எங்கயோ அடிச்சிட்டு போயிருக்குன்னு நைசா பேசி உள்ள போயிடலாம். நாங்க ரெண்டு பேரும் கூட வருவோம்... பயப்படாதே.
சாமி: நீங்க வர்றது தாண்டா இன்னும் பயமாருக்கு.
ரிஷாந்த்: என்ன சாமி, நாம அப்படியா பழகிருக்கோம்.... என்று அவனை போய் கட்டிப் பிடித்து, மார்ல, கக்கத்துல கிச்சு கிச்சு மூட்டினான்.
சாமி: ஐயோ!!! நிறுத்துடா. பசங்களையே இவன் இப்படி தடவுறானே... பொண்ணுங்கன்னா என்னா தடவு தடவுவான்?
ரிஷாந்த் நல்ல பையன் போல் அப்பாவியாய் முகத்தை வைத்து, கையை கட்டிக் கொண்டு நின்றான்.
சாமி: எப்பா... விடுறா சாமி. நான் வர்றேன்... வர்றேன். ரொம்ப ஆக்டிங்கை போடாத.
ஜானி: வா, ஃபர்ஸ்ட் மெயின் ரோட்டுக்கு போயி பியூஸ் புடுங்கிட்டு, கரண்ட் கட் பண்ணி விடுவோம்.
ரிஷாந்த் உற்சாகமானான்.
"அப்பாடா!!! இன்னைக்கு எப்படியும் சுசியை பார்த்து பேசிரலாம். பாவம் என்ன நிலைமையில் இருக்கிறாளோ, பேசிறலாம்ல அண்ணா?"
ஜானி: முயற்சி பண்ணி பாப்போம். வீட்டுக்குள்ள போயிரலாம். அங்க என்னென்ன பிரச்சனை இருக்கோ... யாருக்கு தெரியும்? அவன் தங்கச்சி உள்ளதான இருக்கிறா. அவளை சமாளிக்கணுமே.
மூவரும் மெயின் ரோட்டுக்கு கிளம்பினார்கள்.
தொடரும்