கருப்பு 49
டாக்டர்: அம்மா உங்க சிட்டுவேஷன் புரியுது, ஆனா இது ஐசியூ. கண்ட்ரோல் யுவர்செல்ப்.
கல்யாணி நடுங்கும் குரலில்: என் மகனை காப்பாற்றுவதற்கு ஏதாவது செய்யுங்க டாக்டர்.... ப்ளீஸ்.... என்றாள்.
டாக்டர்: we are trying our level best... மீதி அவன் கையில.... என்று மேலே பார்த்து சொல்லிவிட்டு நகர்ந்தார்.
நர்சுகள் அவரை பின் தொடர்ந்தார்கள்.
கல்யாணி இறுகிப்போன முகத்துடன் சிறிது நேரம் உறைந்து நின்றிருந்தாள். அவள் கண்ணீர் தாரை தாரையாக வழிந்து கொண்டு இருந்தது. பின்னர் கண்ணீரை துடைத்துக் கொண்டு, நேராக அகல்யாவை நோக்கி சென்றாள்.
என்ன செய்யப் போறாளோ என்று அனைவரும் பதறிப் போய் பார்க்க,
"இப்போ உனக்கு திருப்தியா? சந்தோஷமா? உன்னைத்தானே காலம் பூரா நினைச்சுகிட்டு இருந்தான். சம்மந்தம் பேச நான் வந்தப்ப, சொந்தக்காரங்க வந்தப்ப, நீ சரின்னு சொல்லிருந்தா இதெல்லாம் நடந்திருக்குமா? பெரிய பேரழகின்னு மனசுல நினைப்பா உனக்கு? வேண்டாம்னு எங்களை மூஞ்சில அடிச்சு அனுப்புனது மட்டுமில்லாம, இப்போ உனக்காக, உன் ஊருக்கு வந்து இவ்வளவு கஷ்டப்பட்டு, எல்லாம் செஞ்சப்புறமும், அவனை நாய் மாதிரி அடிச்சு விரட்டிருக்கீங்க. எல்லாம் உன் மனசுல இடம் பிடிப்பதற்காக செஞ்சான். உங்க மனசுல கொஞ்சமாவது ஈரம் இருந்தா இப்படி நடந்துருப்பீங்களா நீல்லாம் உருப்படுவியா? நல்லா இருப்பியா?...
என்று கொந்தளித்துப் பேசி, அவளை நோக்கி பாய்ந்தாள்.
திருமுடியும், மற்றவர்களும் கல்யாணியை பிடித்து இழுத்து, சமாதானப்படுத்தினார்கள்.
அகல்யா சுவரில் தலையை முட்டிக்கொண்டு அழுதாள். "இப்படில்லாம் எனக்கு நடக்கும்னு தெரியாது அத்தை. நான் வேணும்னு செய்யல. தெரிஞ்சிருந்தா இப்படி நடந்திருப்பேனா? என்னையும் மீறி நடந்துருச்சு. எல்லாரும் என்ன மன்னிச்சிடுங்க...."
தன்னைத் தானே தண்டிக்க வேண்டும் என்று நோக்கத்தில், ணங் ணங் என்று தலையை இன்னும் வேகமாக சுவரில் முட்டினாள்.
ராமன் வாத்தியார்:
"அகலை புடிங்கப்பா... அவளுக்கு ஏதாவது ஆயிரப்போகுது"
ஹேமாவும் ராகினியும் அவளை நோக்கி ஓடிச் சென்று அவளை பிடித்தார்கள். மற்றவர்கள் கல்யாணியை சமாதானப்படுத்திக் கொண்டு இருந்தார்கள்.
காரிடரில் கோபமாக டக் டக் என்று வந்த நர்ஸ், ரசாபாசமாகி இருந்த சூழ்நிலையை பார்த்து,
"இது என்ன ஹாஸ்பிடலா? சந்தை கடையா? சைலன்ஸ்..? என்று கல்யாணியை பார்த்து கத்தினாள்.
அகல்யா கட்டுப்படுத்த முடியாமல் அழுது கொண்டிருப்பதை பார்த்த நர்சுக்கு பாவமாக இருந்தது.
அட்மிட் ஆயிருக்கும் பேஷண்ட் ஹிஸ்டரியை விசாரிக்கும் போது காதல் சமாச்சாரம் என்று ஹாஸ்பிடல் ஊழியர்களுக்கு தெரிந்து போயிருந்ததால், அனைவருக்கும் எப்படியாவது நல்லபடியா நடக்க வேண்டுமே என்ற மனிதாபிமான துடிப்பு.
15 நிமிடத்திற்கு பிறகு,
ஐ சி யு வில் இருந்து வெளிப்பட்ட மற்றொரு நர்ஸ்,
"பேஷண்ட் கண்ணு முழிச்சிட்டாரு. அகல்யா யாரு... சித்ரா யாரு... அவங்க கூட பேசணும்னு பிரியப்படுகிறார்..."
இருவரும் கண்ணை துடைத்துக்கொண்டு ஐசியு விற்குள் நுழைவதற்காக தயாராக, மற்றவர்களும் நுழைய முற்பட்டார்கள்.
"அவர் இன்னும் அபாய கட்டத்தை தாண்டல. ஏதோ முக்கியமா சில வார்த்தை பேசணும்னு சொன்னார்ன்கிறதால, அவங்களை மட்டும் கூப்பிட்டேன். எல்லாரும் கூட்டமா வந்தீங்கன்னா ஒன்னும் பண்ண முடியாது. டாக்டர் என்னை தான் திட்டுவாரு...", என்று காட்டமாக சொன்னாள்.
கல்யாணி கடுப்பானாள்.
"அவனோட இந்த நிலைமைக்கே இவளுக தான் காரணம். இவங்களை எப்படி பாக்குறதுக்காக அனுப்புறது?"
நர்ஸ்: அதெல்லாம் எனக்கு தெரியாதுமா. அவர் தான் கடைசியா எதோ பேசணும்னு பிரியப்பட்டாரு. அனுப்புறீங்கன்னா அவர் கூப்பிட்ட ரெண்டு பேர் மட்டும் உள்ள வாங்க, இல்லன்னா ஆள விடுங்க.
எல்லோரும் கல்யாணியை சமாதானப்படுத்த,
அகல்யாவும், சித்ராவும், உள்ளே நுழைந்தார்கள். கூடவே நைசாக திருமுடியும் நுழைந்தான். நர்ஸ் அவனை வெளியே அனுப்ப முயற்சி செய்ய,
"என்ன நர்ஸ் அக்கா நான் ஒருத்தன் தானே... அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க", என்று ஐஸ் போட்டு, அவள் முடியாது என்று சொல்வதற்குள் நுழைந்து விட்டான்.
ஐசியு வின் முதல் பெட்டில் ரிஷி படுக்க வைக்கப்பட்டிருந்தான்.... தலையை சுற்றிக் கட்டு. கை கால்களில் பேண்டேஜ்கள். அதன் முகப்பில் ரத்த தீற்றல்கள். மற்ற பெட்டுகளை திரை மறைத்திருந்தது. ரிஷி பெட்டுக்கு அருகே ventilator மெஷின்... உயிரை நிறுத்திப் பிடிக்கும் அதன் டியூப்புகளும், ஆக்சிஜன் மாஸ்க்கும் அவன் பேசுவதற்காக கழட்டி வைக்கப்பட்டிருந்தன. பக்கத்து மானிட்டர் திரையில் துடிப்புகள்.
நல்ல வேளையாக ரிஷியின் முகத்தில் காயம் இல்லை. ஆனால் அவனின் வழக்கமான சிரிப்பு தொலைந்து போய் முகம் பூராவும் நோயாளிகளுக்குரிய தளர்ச்சி.
உள்ளே நுழையும் போதே நர்ஸ் அவர்களைப் பார்த்து,
"யாரும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ண கூடாது. பாசிட்டிவா பேசுங்க...", என்று சொல்லி தான் விட்டிருந்தாள்.
மூவரும் பெட் அருகே வந்தார்கள். ரிஷி கண்களை திறந்து அவர்களைப் பலவீனமாக பார்த்தான். அகல்யாவை பார்த்ததும் உயிரற்ற அவன் கண்களில், லேசான மினுமினுப்பு தோன்றி மறைந்தது. மெலிதாக சிரித்தான்.
அவன் சிரிப்பில் எக்கச்சக்க வலி.
ரிஷி உடைந்த குரலில்: வந்துட்டியா... உன்னை பார்க்காமல் போயிருவேன்னு நெனச்சேன். நல்ல வேளையா வந்துட்டே. ஒரே ஒரு தடவை உன் வாயால என்னை காதலிக்கிறேன்னு நீ சொல்லணும்.. அதை நான் கேட்கணும். அதுதான் என் கடைசி ஆசை... "
பேச முடியாமல் திக்கித் திணறி பேசி முடித்தான்.
சித்ராவும் திருமுடியும்... அகல்யாவை பார்க்க, அகல்யா மார்புக்கு குறுக்காக கைகட்டி கொண்டு,
"சாரி, சாகப் போற உங்ககிட்ட ஐ லவ் யூ சொல்றதுங்குறது சரியான ஒரு வழிமுறை கிடையாது... நீங்க ஆசைப்பட்டதை நான் செஞ்சிட்டேன்னா, அந்த மன திருப்தியில் நீங்க செத்துப் போயிருவீங்க... அதனால் முதல்ல உயிர் பொழச்சி வாங்க... அதுக்கப்புறம் பார்க்கலாம்..", என்று கடுமையாக பதிலளித்தாள்.
ரிஷி முகத்தில் துல்லியமான அதிர்ச்சி.
சித்ராவை பார்த்து, "என்ன இது... உங்க அக்காவுக்கு மனசுல கொஞ்சம் கூட ஈரமே கிடையாதா? நீயாவது நடந்த உண்மைல்லாம் சொல்லு. சாக போறவன் கடைசி ஆசையாக கேட்கிறேன். இது கூட செய்ய மாட்டியா?"
சித்ரா விட்டேத்தியாக: அக்கா சொன்னது சரிதானே... சாக போறவங்க கடைசி ஆசையை நிறைவேற்றினால், அந்த சந்தோஷத்தில் செத்துற மாட்டீங்களா? எல்லாத்துக்கும் நீங்க தானே காரணம்... வேற எந்த உண்மையை சொல்லணும்?... என்றாள்.
அவள் குரலில் தெனாவட்டு தென்பட்டது.
அடிப்பாவிகளா!!!
ரிஷிக்கு அவர்கள் நடவடிக்கை கொஞ்சம் கூட புரியவில்லை. கர்ப்ப விஷயத்தைப் பற்றி, சித்ரா சொன்னால் தானே மற்றவர்கள் நம்புவார்கள். இவள் சொல்ல மாட்டேங்குறாளே!!
அடுத்ததாக நின்ற திருமுடியைப் பார்த்தான்.
"திருமுடி!!! இந்த பொண்ணுங்களுக்காகவா இவ்வளவு கஷ்டப்பட்டேன்! மச்சான்றதுக்காக சொல்ல வேண்டாம்... அட்லீஸ்ட் யாரோ ஒரு இளைஞன், உயிருக்கு போராடிட்டு இருக்கான்... கடைசி ஆசையா கேட்கிறான். அதுக்காகவாவது ஒரு மனிதாபிமானத்தோடு என் கோரிக்கையை நிறைவேற்ற கூடாதா? உண்மைல்லாம் சொல்லக்கூடாதா... நீயாச்சும் சொல்லு?"
திருமுடி அவன் சொன்ன அதே மாடுலேஷனை பிடித்து,
"யா....ரோ ஒரு இளைஞன்... உயிருக்கு போராடிட்டு இருக்கான்னா.... கடைசியா கேக்குறதல்லாம் நிறைவேற்ற முடியுமா? புடிச்சிருந்தா தானே செய்ய முடியும்.. அவங்க சொல்றது சரிதான்... எனக்கும் ஒரு உண்மையும் தெரியாது" திருமுடி குரலில் புதைந்திருந்த தொனி, கட்சி மாறிட்டேன் என்று சொல்லாமல் சொல்லியது.
என்னடா நடக்குது இங்க!!!
ரிஷி தளர்ந்து போய்: யாருக்குமே மனிதாபிமானம் கிடையாதா?
மூவரும் ஒன்று சேர்ந்து கிடையாது என்றார்கள், ஒரே குரலில், உரத்த குரலில்.
கதவைத் திறக்கப்படும் சத்தம் கேட்க, அனைவரும் திரும்பி பார்த்தார்கள்.
உள்ளே ஓடி வந்த கல்யாணி, "எப்பா, சாமி...ரீல் அந்து போச்சு... போதும் நிறுத்திக்க.... இதுக்கு மேலயும் ஆக்டிங்கை போடாத", என்று சொல்லிவிட்டு,
அகல்யாவை பார்த்து, கையெடுத்து கும்பிட்டாள்.
"என்னை மன்னிச்சிடுமா... தயவுசெய்து கோபப்படாதே. எல்லாம் உங்களை சேர்த்து வைப்பதற்காக தான்....",
ரிஷி ஜெர்க்காகி: என்ன... எப்படி..? என்று கேட்க,
கல்யாணி திரும்பி பார்க்காமல், அவசர அவசரமாக வெளியே நடையை கட்டினாள்.
டீச்சரிடம் பொய் சொல்லி கையும் களவுமாக மாட்டிக் கொண்ட சிறுவன் போல், களை இழந்தவனாக எழுப்பி உட்கார்ந்து, மூவரையும் திருட்டு முழியுடன் பார்த்தான். தலையில் போட்டுருந்த கட்டை மெதுவாக அவிழ்த்தான். வெறும் கட்டு. தலை நன்றாகத் தான் இருந்தது.
கண்களில் லிட்டர் கணக்கில் கேப்மாரித்தனம். உடல் மொழியில் கிலோ கணக்கில் மொள்ளமாரித்தனம்.
"நான் போட்டதிலேயே கொஞ்சம் கஷ்டமான கெட்டப் இது தான்...', என்றான் தர்மசங்கடமாக சிரித்தபடி...
அவனைப் பார்த்துக் கொண்டிருந்த மூவர் முகத்திலும் சிரிப்பு இல்லை. முறைப்பு.
டர் என்று டேப் ரிக்கார்டர் ரீவைண்டு செய்யும் சத்தம். கொஞ்ச நேரத்துக்கு முன்னால்,
அகல்யாவை பரிதாபமாக பார்த்த நர்ஸ், அவளருகில் ரகசியமாக வந்து,
"அக்கா ICUவில் இருக்கிற உங்க ஆளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆக்சிடென்ட் ஆனதுல கால்ல லேசான சுளுக்கு மட்டும்தான். சின்ன சின்ன வெட்டு, சிராய்ப்பு அவ்ளோதான். இந்த ஹாஸ்பிடல் சீப் டாக்டர் அவர் பிரண்டுங்கரதால, எல்லாரும் சேர்ந்து நடிச்சுட்டு இருக்காங்க. எங்களையும் cooperate பண்ண சொல்லிட்டாரு... நீங்க தலையை சுவர்ல மோதிட்டு அழுவதை பார்த்துட்டு, மனசு கேட்காம சொல்லிட்டேன். தயவு செய்து என்னை மாட்டி விட்ராதீங்க...", என்றாள்.
கட் பண்ணினா,
இடுப்பில் கை வைத்த படி முறைத்துக் கொண்டு அகல்யாவும் சித்ராவும் நிற்க... திருமுடி ரூமுக்குள் எங்கேயோ சுற்றி பார்த்து, குளுக்கோஸ் பாட்டில் மாட்டும் ஒரு கம்பியை அடிப்பதற்காக தூக்கிக் கொண்டு வந்தான்.
அகல்யா: சாரு,கெட்டப்பை மாத்தி, பெயரை மாத்தி, ஊரை மாத்தி, இல்லாத பிராடுத்தனத்தையும் எல்லாம் பண்ணுவாரு. நாங்க ஒரு அஞ்சு நிமிஷம் நடிக்க கூடாதா?
சித்ரா: எப்பா... எப்பா... வாய தொறந்தாலே பொய்... முடியலடா சாமி.
திருமுடி: எய்யா போதும்யா.. உன்னை ஒன்னும் சொல்ல முடியாது, உன்ன பெத்தாளே... அந்த மகராசி. அவ கால்ல விழுந்து கும்பிடணும்.
ரிஷி கட்டிலில் இருந்து மெதுவாக எழும்பி, அனைவரையும் அடி கண்ணால் பார்த்தபடி, நின்றான்.
"அது வந்து... வந்து... நீ கோவத்துல பேசி அனுப்பிட்டியா... ஒருவேளை... சித்ரா பயத்துல உண்மைய சொல்லாம மறைச்சுட்டா, என்ன பண்றதுன்னு தெரியல. அதான் இப்படி ஒரு டிராமா போட்டேன்... ஒரு பரிதாபத்துல, உனக்கும் கோபம் போயிரும்ல. ஒரு நப்பாசையில..."
சொல்லியபடியே ரிஷி கதவை நோக்கி ஓடுவதற்காக தயாராக, அகல்யாவும் சித்ராவும் அவனை சாத்துவதற்காக கைகளை ஓங்கினார்கள்.
திருமுடி கம்பியோடு அவனை நோக்கி பாய்ந்தான்.
ரிஷி திருமுடியை நோக்கி சென்று கம்பியை பிடிக்க, இருவரும் இரண்டு பக்கமாக கம்பியை பிடித்து, ஹேய் ஹேய் என்று சவுண்ட் போட்டு தள்ளினார்கள். பின்பக்கமாக வந்த அகலும் சித்ராவும் அவனைப் பிடிக்க முயல,
ரிஷி திருமுடியை டபாய்த்து, கபடி மேட்சில் ரெய்டு வருபவனை தள்ளிவிட்டு ஓடுவதைப் போல், திருமுடியை தள்ளிவிட்டு, கதவை திறந்து வெளியே ஓடினான்.
"டேய் நில்ரா...."
மூவரும் அவன் பின்னால் வெளியே ஓடி வந்தார்கள்.
திருமுடி: புடிங்க அவன...
ஐ சி யூ முன்னால் சிறிய கூட்டம். அதற்குள் வெளியே எல்லோருக்கும் விஷயம் கசிந்து விட... அனைவரும் முகத்திலும் வருத்தம் மறைந்து போய், ஆபத்து எதுவும் இல்லாததால் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டார்கள்.
ரிஷி செய்த விளையாட்டுதனத்தினால், அவர்களுக்கு கோபம் மட்டுமே மிஞ்சியிருந்தது.
செல்ல கோபம்.
வந்திருந்த சொந்தக்காரர்கள் அவனை வளைத்து பிடிக்க, திருமுடி ஓடிவந்து ரிஷி கையைப் பிடித்தான். ரிஷி திமிரினான். அனைவருக்கும் சந்தோஷ உற்சாகம்.
"விடாதீங்க புடிங்க' என்ற குரல்கள்.
ஆயா, நர்ஸ்கள், வார்டு பாய்ஸ் உட்பட எல்லோரும் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ரிஷி பின்னால் பிடித்துக் கொண்டிருந்த இருவரையும் நெட்டி தள்ள, இருவரும் பிடியை விட்டு விலகினார்கள். முன்னால் நின்ற திருமுடியை சைடில் தள்ளி விட்டான்.
தள்ளிவிடப்பட்ட திருமுடி ஓரமாக நின்றிருந்த, 50 வயது ஆயா மேல் மோதாமல், லாவகமாக தாண்டி சென்று, அவளுக்கு பின்னால் மெத்து மெத்து என்று நின்றிருந்த icu நர்ஸ் மேல், நல்ல நயமாக போய் மோதினான்.
ICU முன்னால் இருந்த காரிடரில் ஓடினான் ரிஷி.
அனைவரையும் விலக்கிவிட்டு ஓடியவன்... அப்படியே ஸ்தம்பித்து நின்றான்.
அவனுக்கு முன்னால், அகல்யா கையைக் கட்டிக் கொண்டு நின்றிருந்தாள்.
இருவரும் புதிதாக பார்ப்பது போல், பார்த்துக் கொண்டார்கள்.
அவள் கண்களை அகல விரித்தாள். உதட்டை மடித்து, இமைகளை படபடத்தாள். கண்களில் கண்ணீரின் பளபளப்பு.
நிச்சயமாக இது ஆனந்த கண்ணீர் தான்.
ரிஷியிடம் வெளிப்பட்ட விளையாட்டுத்தனமும் வெட்டி பரபரப்பும் அடங்கியது. பெட்டி பாம்பாய் அடங்கி, அவளை நோக்கி அமைதியா சென்றான். அவளும் அவனை நோக்கி சென்றாள்.
ரிஷி கண்களிலும் காதல் சுரந்தது.
இருவரும் ஒருவரை ஒருவர் நெருங்கினார்கள்.
கைகளை கோர்த்து கொண்டார்கள்.
ரிஷி புன்னகையால் அவளை நனைத்தான். அகல் யாரைப் பற்றியும் கவலைப்படவில்லை.
எல்லோரும் ஆர்வமாக அவர்களை பார்த்துக் கொண்டிருக்க,
ரிஷியும் அகலும் ஆழமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, அவள் முகம், அந்த கண்களில் தெரிந்த கனிவு, காதல், கண்ணீர், சிவந்த அதிரங்களில் மலர்ந்தும் மலராமல் இருந்த புன்முறுவல்...
இவ்வளவு குளோசப்ல அகலை இப்போதுதான் பார்க்கிறான்.
இருவரின் கண்களுக்குள் இருவரும் துழாவி பார்த்து, காணாமல் போன ஜில்லையும் குமாரையும் தேடி கண்டுபிடித்தார்கள்.
ரிஷி: ஜில்லு.....
அவன் குரல் ஏகத்துக்கு தழுதழுத்தது.
அகல்யா: குமார், நீங்க ஜில்லு ஜில்லுன்னு சொன்னப்பவே நாம் சுதாரிச்சிருக்கணும்.. தப்பு பண்ணிட்டேன்.
அவள் கண்களில் துளிர்த்த கண்ணீரை துடைத்து விட்டான்.
அகல்யா: ஆனா எனக்கு தாமஸ் வாத்தியாரை விட... குமார் தான் பிடிக்கும்... ஐ லவ் யூ குமாரு...ஐ லவ் யூ..ஐ லவ் யூ..ஐ லவ் யூ... என்று திரும்பத் திரும்ப,
தழுதழுத்தபடி சொல்லி, அவனை இறுக கட்டிப்பிடித்தாள்.
அவனும் பதிலுக்கு கட்டியணைக்க, அகல்யாவின் அனைத்து சோகமும், கோபமும், தாபமும் கண்ணீரும், அவன் அணைப்பில் கரைந்து போனது.
மாலையில் ஒவ்வொரு பூவாய் பூக்கிற மாதிரி, ஒவ்வொரு பட்டாம்பூச்சியாய் சிறகை விரித்து சுத்தி சுத்தி பறந்தன. அனைத்தும் அவர்களை விட்டு சென்ற பட்டாம்பூச்சிகள், மறுபடியும் வந்து சேர்ந்தன.
"என்ன மன்னிச்சிடுங்க, மன்னிச்சிடுங்க" என்று அவள் மனமுருக சொல்ல, இடது கையால் அவள் தலையில் தட்டி கொடுத்து, அவள் முகத்தை அவன் மார்புக்குள் அழுத்தி பொத்திக்கொண்டான். அவளால் மேற்கொண்டு வாயைத் திறந்து மன்னிப்பு கேட்க முடியவில்லை. கேட்கவும் தேவையில்லை.
பார்த்துக் கொண்டிருந்த அனைவர் கண்களிலும் நீர்க்கசிவு.
இருவரும் மாற்றி மாற்றி ஆசை தீர கட்டி தழுவி கொண்டார்கள். முன் எப்போதும் அனுபவிக்கிறாத ஒரு பூர்ண சந்தோஷம். அகல்யாவை திக்கு முக்காட வைத்தது.
ஹேமாவுக்கும், மற்றவர்களுக்கும் மகிழ்ச்சி குறைந்து, வெட்கம் நிறைந்தது.
ஓரமாக நின்றிருந்த சித்ராவும், கார்த்தியும் ஆளுக்கொரு பக்கமாக ஓடி சென்று "அக்கா... மாமா" என்று அவர்கள் இருவரையும் சேர்த்து கட்டித் தழுவி கொண்டார்கள்.
ICU நர்ஸ் தோளில் கை வைத்த திருமுடி,
"சக்சஸ்... சக்சஸ்" என்று கத்தினான்.
நர்ஸ் அவன் தோளில் வைத்திருந்த கையை தட்டி விட்டு, "வெட்டிடுவேன்" என்று அவனைப் பார்த்து சிக்னல் காண்பித்தாள்.
மேட்டு வீட்டுக்காரிகளின் பாச அணைப்பில் இருந்து, ரிஷி விடுபடவே இல்லை.
அவர்களும் இனிமேல் அவனை விட போவதில்லை.
தொடரும்
50
நிறைவுரை
இரண்டு வாரத்துக்கு பிறகு,
ரஸ்தா காடு மெயின் ரோடு டீக்கடையில் ஏதோ மகத்தான ஹாசியத்தை கேட்டது போல், அனைவரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
பைக்கில் வந்த ரிஷியும், திருமுடியும், பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு டீக்கடையை நோக்கி சென்றார்கள்.
அவர்கள் போய் சேர்வதற்குள், இரண்டு வாரத்துக்குள் நடந்த சம்பவங்கள் ஒரு அவசரமான recap
டாக்டர் கிருஷ்ணகுமாருக்கு நன்றி செல்வதற்காக தாமஸ், மன்னிக்கவும், ரிஷி, அவர் ரூமுக்குள் செல்ல... அவனை பார்த்து பெரிய கும்பிடு போட்டார்.
"என்ன மாப்பி? நாம அப்படியா பழகிருக்கோம்..."
கிருஷ்ணகுமாரின் கோபத்துக்கு காரணம், லோக்கல் சேனல் நியூஸில் "நாகர்கோவில் ஹாஸ்பிடலில் இளைஞரின் ருசிகரமான காதல். சினிமா பாணியில் கிளைமாக்ஸ்..", என்கிற தலைப்பில் வந்த செய்தி தொகுப்பு.
"தயவு செய்து இனிமே வேற எதுக்காகவும் இந்த ஹாஸ்பிடல் பக்கமே வந்துராத..."
இதுதான் அவன் போகும் போது, டாக்டர் சொன்ன கடைசி வார்த்தை.
ரஸ்தாகாடு சம்பவம் பண்ணுவதற்காக வேலையை விட்டுவிட்டு தான் ரிஷி வந்திருந்தான். மறுபடியும் சென்னைக்கு அவன் வேலைக்கு போவதாக அபிப்பிராயமே இல்லை...
முனி பிரச்சினை முடியும் வரைக்கும், மேட்டு வீட்டில் தான் தங்கி இருக்கிறான். அவர்கள் நிலத்தில் அறுப்பு சமயம் என்பதால் அன்றைக்கு இரவே கல்யாணி தூத்துக்குடி கிளம்பி விட்டாள். வயசு பெண்கள் இருக்கும் வீட்டில் தங்குவதற்கு அவன் தான் கூச்சப்பட்டானே தவிர, பெண்கள் மூவருக்கும் எந்த கூச்சமும் இல்லை.
உண்மையான தாமஸ் வாத்தியாரை ஹவுஸ் அரெஸ்டில் இருந்து ரிலீஸ் செய்யும் போது, ரிஷியும் அகல்யாவும் ஜோடியாக அவன் காலில் விழ... கொலைவெறியில் இருந்தவன் ஜோடியாக மன்னிப்பு கேட்டதும், கேஸ் எதுவும் கொடுக்காமல் மன்னித்து விட்டான்.
ஊர் பூராவும் கலெக்ஷனை போட்டு, முனி கோவிலை சரி செய்து, பூஜைகள் நடத்தி, முனியை ஓரளவுக்கு சாந்தப்படுத்தி வைத்திருந்தார்கள். ஆனால் இரவில் முனி ஓட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.
இருவரும் டீக்கடையை நெருங்கியதும்,
சகாயராஜ் திருமுடியை பார்த்து முறைத்தபடி,
"வாங்க வாத்தியாரே, உட்காருங்க... உங்க சேதி எல்லாம் கேள்விப்பட்டோம். நீங்க செஞ்சது தப்பா இருந்தாலும், எந்த நோக்கத்துக்காக செஞ்சீங்கன்னு இருக்குல்ல. ரொம்ப சந்தோஷம். ஆனால் ஒரே ஒரு வேண்டுகோள். இந்த பய கூட இனிமே சேர்ந்து சுத்தாதீங்க... உங்க நல்ல பேரை கெடுத்துருவான்."
திருமுடி கையைக் கட்டிக் கொண்டு பவ்யமாக உட்கார்ந்து இருந்தான். சந்தனமேரி ஊரை காலி செய்து கொண்டு போய் ஒரு வாரம் ஆகி இருந்ததால், சந்தன காற்று பாட்டை அவனால் பாட முடியவில்லை.
திருமுடி: என்ன சித்தப்பு, நான் அப்படிப்பட்டவனா?
சந்தனமேரி இல்லாததால், சகாயராஜிடம் பழைய கண்டிப்பு வந்திருந்தது.
"நீ எப்படிப்பட்டவன்னு எனக்கு நல்லா தெரியும்ல. ஒழுங்கு மரியாதையா நடக்கல. தோல உரிச்சு தொங்கவிட்டுருவேன்"
அந்தோணி: உங்க பிரச்சனையை விடுங்கப்பா.. (ரிஷியை பார்த்து) நீங்க வாத்தியார் இல்லனாலும், எங்களுக்கு எப்பவுமே வாத்தியார் தான். நீங்க வந்ததுனாலதான் ஊர்ல பிரச்சினைகள் ஓரளவுக்கு சரியாச்சு. ஆனா இன்னும் முனி ஓட்டத்தைத் தான் நிறுத்த முடியல.
ரிஷி: அத பத்தி பேச தான் வந்தேன். அதுக்கும் ஒரு வழி இருக்கு. முனி கோயிலருந்து இடது பக்கமாக கடற்கரைக்கு போற ரூட்ல, நான் சொல்ற இடத்துல, வெட்டி முறிச்சான் இசக்கிக்கு ஒரு கோயில் கட்டினோம்னா முனி ஊருக்குள்ள வர முடியாது. அதோட ஓட்டம் வேற பக்கமா திரும்பிடும். என் சொந்த செலவுல, நானே சின்னதா ஒரு கோயில் கட்டி தரேன்.
அமிர்தம் ஆச்சரியமாக: இசக்கி கோவில் கட்டுனா முனி ஓட்டம் இருக்காதுன்னு எதை வச்சு சொல்றீங்க?... என்று கேட்க,
ரிஷி: நீங்க சொன்னத வச்சு தான்.. ஏற்கனவே முனி ஓட்டம் இருந்த பாதையில் இருளாயி கோவில் கட்டியதால் தானே, டைவர்ட் ஆகி முனி ஓட்டம் ஊருக்குள்ள வந்துச்சுன்னு நீங்கதானே சொன்னீங்க. இருளாயி கோயில் கட்டினதால முனி ஓட்ட பாதை டைவர்ட் ஆகும்னா.... இசக்கி கோயில் கட்டுனா ஊருக்குள்ள நுழையவே முடியாது. அதனுடைய பாதை வேறு பக்கமா திரும்பிடும். இசக்கி முனியை எதிர்ப்பதை நானே நேரடியா பார்த்தேன்... என்று அன்றிரவு நடந்த சம்பவத்தை விளக்கினான்.
அவன் சொல்லி முடித்ததும், ஜோசப் உட்பட டீக்கடையில் இருந்த அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
சகாயராஜ்: சார் சொல்றது சரியா தானே இருக்கு...
அனைவரும் அவர்களுக்குள்ளே பேசி, எசக்கிக்கு கோயில் கட்டிருவோம் என்று ஏகமனதாக ஒரு முடிவுக்கு வந்தார்கள்.
அன்றிரவு பத்து மணி,
மேட்டு வீடு சிட் அவுட்
கார்த்தி சன் மியூசிக் பார்த்துக் கொண்டிருக்க, ரிஷி சிட்அவுட்டில் சித்ரா மற்றும் அகல்யாவுடன் பேசிக் கொண்டிருந்தான்.
ரிஷி: காவண வீட்டை வித்து, உங்களைல்லாம் செட்டில் பண்ணனும்னு தாத்தா ரொம்ப பிரியப்பட்டுருக்கிறார். அவர் ஆசைப்படி காவண வீட்டை வித்துரலாம். நமக்கு இவ்வளவு பெரிய வீடு போதும். அது போக தூத்துக்குடியில் இன்னொரு வீடு இருக்கு. நிலம் இருக்கு. எக்ஸ்ட்ரா காவண வீடு தேவையில்லை தான். இத கொடுத்துட்டு பணத்தை சித்ரா பேர்லையும், கார்த்தி பேரிலும் பிக்சட் டெபாசிட் போட்டுடுறேன்.
அவன் சொல்வதற்கு இனிமேல் மறுப்பு எதுவும் அவர்கள் சொல்லப் போவதே இல்லை.... என்பதை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.
மூவரும் தன்னைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது புரிந்தது போல்...
காவண வீடு அவர்களை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தது.
பேசிக் கொண்டிருந்த அகல்யா எதார்த்தமாக காவண வீட்டை பார்க்க, அதிர்ந்தாள். இரண்டு வீட்டுக்கும் நடுவே இருக்கும் செடிவேலி அருகே ஏதோ ஒரு கருப்பு உருவம் நின்றிருப்பது போல் தோன்றியது.
அகல்யா துணுக்குற்று போய் கூர்ந்து பார்த்தாள். உண்மைதான்... ஏதோ ஒரு உருவம், இருட்டுக்குள் நின்றபடி அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தது.
அகல்யா திடுக்கிட்டாள்.
என்னடா இது?? மறுபடியும் முதல்ல இருந்தா?
அகல்யா காவண வீட்டையே பார்த்துக் கொண்டிருப்பதை ரிஷி பார்த்ததும்,
"என்னாச்சு?" என்று கேட்க,
அகல்யா: அங்கே யாரோ இருட்டுக்குள்ள நிக்கிற மாதிரி இருந்துச்சு. நான் பார்த்ததும், காணல.... என்று கிசுகிசுத்தாள்.
ரிஷி: அங்க யாரு வரப்போறா?? முனி வருவதற்கு வாய்ப்பே இல்லை. அன்னைக்கு நடந்த சம்பவத்தை தான் நான் உங்ககிட்ட சொன்னனே! இது முனிவோட்ட நேரமும் இல்லையே.
ரிஷி திரும்பி காவண வீட்டை பார்த்தபடி பேசி கொண்டிருக்க, அதற்குள்ளாக சித்ரா வீட்டுக்குள் சென்று டார்ச் லைட் எடுத்து வந்து, ரிஷியிடம் கொடுத்தாள்.
ரிஷி டார்ச் லைட் அடித்து பார்க்க, வேலி செடிகள் அசைந்தது போல் தோன்றியது.
"இருங்க, போய் பாத்துட்டு வரேன்...."
அகல்யா: "இருட்டுல தனியா போக வேணாம்... நானும் வரேன்."
"என்ன பெரிய இருட்டு! அங்க தானே இவ்வளவு நாளா குப்பை கொட்டிக்கிட்டு இருந்தேன். நான் போய் பார்த்துட்டு வரேன்..."
ரிஷி சிட்டவுட்டில் இருந்து இறங்கி, இடது பக்கமாக திரும்பி காவண வீட்டை நோக்கி நடந்தான்.
சித்ரா: இல்ல, இல்ல... இந்த விஷயத்துல, நாங்க சொல்றத தான் நீங்க கேட்கணும்... என்று சொல்லிவிட்டு இருவரும் அவன் கூடவே வந்தார்கள்.
முனி சம்பவத்துக்கு பிறகு, அவனை மேட்டு வீட்டுக்காரிகள் தனியா எங்கேயுமே அனுப்புவதில்லை.
அன்றைக்கு இரவு, இசக்கி வெளிப்பட்டு முனியை விரட்டி விட்ட சம்பவத்தை பார்த்த பிறகு, காவண வீட்டை பூட்டி போட்டதுதான்.. அகல்யா கொடுத்த சிறுவயது பரிசு பொருட்களை எடுப்பதற்காக ஒரே ஒரு தடவை உள்ளே போனானே தவிர, அதன் பிறகு ரிஷியும் அந்த பக்கமே போகவில்லை.
காவண வீட்டின் முன்னால் ஒரே ஒரு பல்ப் மட்டும் நைட் டூட்டி பார்த்துக் கொண்டிருந்தது.
வீட்டை சுற்றிய இடங்களில் இருள் சூழ்ந்திருந்தது. டார்ச் லைட்டின் வெளிச்சம் காவண வீட்டை சுற்றி ஊர்ந்து நகர, தடதடவென ஏதோ மெல்லிய அதிர்வுகள்.
காவண வீடு அவர்களுக்கு தெரியாமல் எதையோ மறைத்து வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தது.
அகல்யாவுக்கு என்னமோ சரி இல்லை என்று தோன்ற, அவன் கையை பிடித்து இழுத்தாள்.
"மச்சான், வேணாம் வந்துருங்க. காலையில பாத்துக்கலாம்.."
சித்ராவும், "ஆமா மச்சான் வந்துருங்க", என்று கூப்பிட, மூவரும் மேட்டு வீட்டை நோக்கி நடந்தார்கள்.
அகல்யா: காவண வீட்டை விக்கிறதை பற்றி பேசினாலே, அதுக்கு என்னமோ பைத்தியம் புடிச்சிருது.. என்று கமெண்ட் அடித்துக் கொண்டே செல்ல அவர்களுக்கு பின்னால், காவண வீடு இருட்டுக்குள் சிலிர்த்து நிமிர்ந்தது.
இரவு... நிலவு... மேட்டு தெரு... மரங்கள்...
இசக்கி திரிசூலத்தை ரிஷியை நோக்கி குறி பார்த்தபடி, ரத்த நாக்கை சுழட்டி, கண்களில் குரோதம் மிளிர,
"ஏம்ல... எனக்கு நேர்ந்து விட்ட வீட்டை விக்கிறதுக்கு யோசனை பண்ணிட்டு இருக்கீங்களா? நீங்க வான்னா வரணும், போன்ன்னா போகணுமா? வகுந்துருவேன் வகுந்து... " என்று சொல்லிவிட்டு திரிசூலத்தை அவனை நோக்கி உயர்த்த...
திடுக் என்று ஹாலில் படுத்திருந்த ரிஷி தூக்கத்திலிருந்து முழித்துக் கொண்டான். உடம்பெல்லாம் வியர்வையில் ஊறிப் போயிருந்தது.
ஓஹோ கனவா?
மொபைலை எடுத்து டைம் பார்த்தான். மணி இரவு 3.
பின்பக்க ரூமில் இருந்து யாரோ டக் டக் என்று நடந்து வரும் சத்தம் கேட்க, ரிஷி திரும்பி பார்த்தான். அகல்யா பதட்டமாக வந்து கொண்டிருந்தாள்.
ரிஷி: என்னம்மா ஆச்சு? தூங்கலையா?
அகல்யா பதட்டமாக வந்து அவனருகே உட்கார்ந்து, "மச்சான், ரொம்ப பயமா இருக்கு. என் கனவுல இசக்கி வந்து...." என்று அவனுக்கு வந்த அதே கனவை சொன்னாள்.
ரிஷி ஆச்சரியமாக, "உனக்கும் இதே கனவு தான் வந்துச்சா?"
"உங்களுக்கும் இதே கனவு தான் வந்துச்சா?" என்று கதவோரமாக சித்ரா குரல் கேட்டது. அவளும் பதட்டமாக நின்றிருந்தாள்.
அகல்யா முகத்தில் அச்ச ரேகை.
"எல்லாருக்கும் ஒரே கனவா?"
சித்ரா: ஆச்சரியமா இருக்கே.
ரிஷி ஏதோ யோசித்துக் கொண்டிருந்தான்.
அகல்: காவண வீட்டை விக்கிற ஐடியாவை இதோட விட்டுடலாம்... இனிமே எந்த பிரச்சனையும் வேண்டாம். யாரையும் இழப்பதற்கு நான் தயாராக இல்லை. இசக்கிக்கு நேர்ந்து விட்டது நேர்ந்து விட்டதாகவே இருக்கட்டும்..
சொல்லிவிட்டு ரிஷியை அவள் பார்க்க,
அவன் முகத்தில் எந்த சலனமும் இல்லை.
மறுநாள் காலை,
பொழுது விடிந்ததும் விடியாததுமாக, திருமுடி அடித்து பிடித்து மேட்டு வீட்டின் கேட்டை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.
அப்போதுதான் எழும்பி, சோம்பல் முறித்துக் கொண்டு வெளியே வந்த ரிஷி,
திருமுடி வருவதை பார்த்ததும்,
"என்ன திருமுடி, என்ன விஷயம்?"
திருமுடி, இரவு அவனுக்கு வந்த இசக்கி கனவை பற்றி பரபரப்பாக சொன்னான்.
ரிஷி சத்தமாக சிரித்து விட்டு, "கவலைப்படாதே, எங்களுக்கும் இதே கனவு தான் வந்துச்சு.. காவண வீட்டை விக்கிறது சம்பந்தமா நேத்து பேசுனதுனால வந்திருக்கும். எல்லாம் பாத்துக்கலாம்... Dont worry"
திருமுடி அவனைக் கடுப்பாக பார்த்துவிட்டு,
"அதுக்கு... உங்க பேமிலிக்கு தானே வரணும்.. எனக்கு ஏன் கனவு வந்துச்சு?..."
ரிஷி குறும்பாக, "நம்ம குடும்பத்துக்கு எல்லாமே நீ தானே திருமுடி... உன் கிட்ட கலந்துக்காம ஒரு விஷயமும் பண்ண மாட்டோம்ல..", என்று ஜோராக, காவண வீட்டுக்கு கேட்கிற மாதிரி, அதைப் பார்த்து, சத்தமிட்டு சொல்ல...
அடப்பாவி!!!
திருமுடி ஜெர்க்காகி,
"எலேய் உனக்கு முனி கூடவும், இசக்கி கூடவும் விளையாடுறதே ஒரு பொழப்பா போச்சு. போங்கல போக்கத்த பசங்களா!!! நேரா இசக்கி கோவிலுக்கு போய், கற்பூரம் ஏத்தி, இந்த ஃபேமிலிக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சத்தியம் பண்ணிட்டு தான், மறு வேலை... ஆத்தா இந்தா வந்துடுறேன்", காவண வீட்டை நோக்கி, சத்தமிட்டு சொன்னான்.
ரிஷி ஏதோ சொல்வதற்காக வாய் எடுக்க,
திருமுடி திரும்பி கூட பார்க்காமல்,
துண்ட காணும், துணிய காணும் என்று ஓட ஆரம்பித்தான்.
நிறைவடைந்தது